காற்றினிலே வரும் கீதம் 12

​டைனிங் டேபிளில் அமர்ந்து யோசித்தபடி இருந்த மயூரியை, மரகதம் அவளின் சிவந்த முகத்தையும் பார்த்து, 

“என்ன மயூரி, காலையிலேயே குளிச்சு ரெடி ஆகிட்ட? அதுலயும் சேலை எல்லாம் கட்டி இருக்க!” என்றார்.

 “இன்னிக்கு சின்னதா ஒரு பங்க்ஷன் அத்தை, பிரண்ட்ஸ் எல்லாரும் சேலை கட்டலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்,” என்றாள். 

“நல்லா இருக்கு… உனக்கு இந்த கலர் ரொம்ப எடுப்பா இருக்கு மா,” என்றவர், அவளுக்குத் திருஷ்டி சுற்றி விரல்களுக்கு இடையே நெட்டி முறித்து. 

அவரைப் புன்னகையுடன் பார்த்தவள், “சரி சரி வாங்க சமைக்கலாம்,” என்றாள்.

 “நீ இரு, குளிச்சு கிளம்பி இருக்க , அப்புறம் வேலை செய்யலாம்,” என்றவரை மீறி மயூரி சமையலறைக்குள் சென்றாள். பேச்சும் சந்தோஷமுமாக வேலை நடந்தது.

​கொஞ்ச நேரம் கழித்து டைனிங் அறையில் இருந்து பேச்சுக் குரல் கேட்டதும் மயூரிக்கு மனது படபடத்தது. இத்தனை நாள் அவளும் அவனுக்கு நிகராக வாய் கொடுத்தவள், இப்பொழுது அவன் குரலுக்கே இப்படி அதிர்ந்து போகிறோமே என்று யோசித்துக் கொண்டிருக்க, மரகதம்,

 “வா மயூரி சாப்பிட்டு காலேஜ் கிளம்பணும்,” என்றார்.

 மயூரி தயங்கியபடி, “நான் அவர் கிளம்புற வரைக்கும் வெயிட் பண்ணி அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் அத்தை,” என்றாள். 

டைனிங் ஹால் நோக்கி நடந்தபடி அவளின் குரலில் ரஞ்சன் கூர் பார்வை செலுத்த, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பின்னோடு வந்த மரகதத்திற்கு மயூரியைக் கண்டு ஆச்சரியம். 

“என்ன மயூரி, உட்காரு….,” என்று கையை பிடித்து அமர வைத்தார்.

​அவள் தயக்கத்துடன் அமர்ந்து உணவைச் சாப்பிட்டாள். மரகதமோ, 

“ரஞ்சன், மயூரியை இன்னைக்கு நீ காலேஜ்ல டிராப் பண்ணிடு,” என்றார்.

 சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தவள், “அத்தை…ஏன்? நான் பஸ்ஸிலேயே போய்க்குவேன்,” என்றாள் தட்டுத்தடுமாறி. 

ரஞ்சன் அவளை நிமிர்ந்து கூர்மையாகப் பார்த்தவன், “ஏன் காலேஜ் தானே போற? இல்ல வெளிய ஊர் சுத்தப் போறியா?” என்றான். 

அவளை அழைத்துச் செல்லச் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லைதான், ஆனாலும் அவள் எப்படி மறுக்கலாம் என்ற கோபம். 

“அத்தை… நான் எப்பவும் போல போகிறேன்,” என்றாள்.

​அவன் பேசவே இல்லாதது போல, 

“என்ன மயூரி..?இன்னைக்கு சேலை எல்லாம் கட்டி அழகா கிளம்பி இருக்க. பஸ்ல இடிச்சு பிடிச்சு போறதுக்குள்ள உன் காட்டன் சாரி கசங்கிடும்,” என்றார் மரகதம். 

சாப்பிட்டு கொண்டிருந்தவன் பார்வை இப்பொழுது தாயின் விளக்கத்தில் அவள் அழகை ரசிக்கத் துவங்கியது. அவனைத் திரும்பிப் பார்த்த மயூரிக்கே அவன் பார்வை கூச்சத்தை ஏற்படுத்தியது. பார்வையை விலக்காமலே,

 “உங்க மருமகளை யார் பஸ்ல போக சொன்னது? தினமும் கார்லயே போக வேண்டியது தானே,” என்றான்.

மயூரி ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, “அப்போ ஏதோ இருக்கு, அதான் என் கூட வர பயப்படுற,” என்றான் கிண்டலாக.

​அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் ஏதாவது இருந்தா தான் பஸ்ல போகணுமா? என் பிரண்ட்ஸ் கூட ஜாலியா போகணும்னு நினைக்கக் கூடாதா?” என்றாள் அவனை முறைத்தபடி. 

ரஞ்சனுக்கு அவளுடைய கோப விழிகள் கூட ரசனையாகத் தெரிந்தது. அவன் பார்வையில் இருந்து திரும்பி மரகதத்தைப் பார்த்தவள், “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவர் கூட போறேன் அத்தை, நாளைக்கு பிரியா வருவா,” என்றாள். 

மரகதம் சம்மதமாகத் தலையாட்டியவர், அவளின் கொள்கை தெரிந்ததால் அமைதியாக இருந்தார்.

​ஆனந்த் காரை எடுத்துக் கொண்டு வந்தான். ரஞ்சனின் கால்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக வாரம் ஒருமுறை காரை ஓட்டுவான். இடது காலுக்கு இன்னும் பலம் சேர வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி. 

ஆனந்த் அவனுடைய ஊன்றுகோலை வாங்கிக் கொள்ள, காரில் ஏறி அமர்ந்தவன் மிகத் திடமாக ஸ்டியரிங் வீலைப் பற்றினான். 

பின்னே வந்த மயூரி, “அத்தை, இவர் கார் ஓட்டலாமா?” என்றாள் ஐயத்துடன். 

“ம்ம்…கொஞ்சம் கொஞ்சமா பழகணும், கூடிய சீக்கிரம் கால்களுக்கு முழு பலம் வந்திடும்னு டாக்டர் சொல்லி இருக்கார்,” என்றார் மரகதம். 

மயூரி பின் இருக்கைக்குப் போக, ரஞ்சன் தடுத்தான். “ஆனந்த், பின்னாடி நீ ஏறு..இவளுக்கெல்லாம் என்னால டிரைவர் வேலை பார்க்க முடியாது,” என்றான்.

​காரின் அருகில் நின்று மரகதத்தைத் திரும்பிப் பார்த்தாள் மயூரி. மரகதம் ‘ஏறு’ என்பது போல கெஞ்ச, சலித்துக் கொண்டே அவன் அருகில் ஏறினாள் மயூரி. 

பேக்கை மடியில் வைத்துக்கொண்டு அவனை முறைத்தபடி அமைதியாக முன்னே பார்த்தாள். காரைக் கிளப்பினான் ரஞ்சன். கொஞ்ச தூரம் கோபமாக அமர்ந்திருந்த மயூரி, அவன் காரை லாவகமாகச் செலுத்தும் விதம் கண்டு ஆச்சரியமாக அவனை சற்றே திரும்பிப் பார்த்தாள். 

அவன் முழு கவனமும் சாலையில் இருக்க, பக்கவாட்டாகத் தெரிந்த அவன் பிம்பத்தை ரசித்துப் பார்த்தாள். அவன் இவ்வளவு அருகில் அமர்ந்திருக்க, அவன் போட்டிருக்கும் பெர்பியூம் வாசத்தை மெல்ல சுவாசத்தினுள் இழுத்து நிரப்பிக் கொண்டாள்.

​அவன் இவளை லேசாகத் திரும்பிப் பார்க்க, சட்டென்று திரும்பியவள் தலையைத் திருப்பாமலே பார்வையை மட்டும் அவன்புறம் திருப்பினாள். ஸ்டியரிங் வீலில் இருந்த அவன் விரல்கள் அவளை ரசிக்கச் செய்தது. சீராக வெட்டப்பட்ட நகங்களும், நரம்போடிய கரங்களும், அவளுக்குப் பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. 

ஒற்றைக் கை கியரிலும், மற்றொன்று ஸ்டியரிங் வீலிலும் அவன் காரைச் செலுத்தும் லாவகம் அவளை ரசிக்க வைத்தது. இவளைக் கவனித்தவன், 

“ஆனந்த்…காலையில் அம்மா கம் எதுவும் சாப்பிட கொடுத்துட்டாங்களா? வாயே திறக்காமல் இருக்கு,” என்றான் பார்வையைச் சாலையில் வைத்தபடியே. 

“அண்ணா பாவமே, ஜாக்கிரதையா கார் ஓட்டுறார்னு அமைதியா இருக்கேன்,” என்றாள்.

​ஆனந்த் இவர்கள் பேச்சுவார்த்தையில் சிக்காமல் போய் சேர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான். 

“ஏன், நான் என்ன மரண கிணறுலயா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன்?” என்றான் கிண்டலாக. 

“அண்ணா, என் காலேஜுக்கு பஸ்லயே போய்க்கிறேன்  வண்டியை நிறுத்தச் சொல்லுங்க,” என்றாள் கதவின் புறம் திரும்பி. 

“நிறுத்தலாம் முடியாது ஆனந்த், வேணும்னா கதவைத் திறந்து குதிக்கச் சொல்லு,” என்றான் ரஞ்சன் 

அவளும் அவனைத் திரும்பி முறைத்தபடி அமர்ந்திருக்க, “உன் காலேஜ் எப்போ முடியும்? இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்குனு உங்க அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரே..?,” என்றான்.

 பதமாகப் பேசியது அவன் தானா..! என்று மயூரிக்குச் சந்தேகம் இருந்தாலும், அவனின் அமைதியான அணுகுமுறை அவளைப் பதில் கூற வைத்தது.

​”ஆமா, மே லாஸ்ட்டில்… முடிஞ்சிரும் ஏன் எதுக்கு கேட்டீங்க?” என்று கேட்டாள். 

“ம்ம்…சொல்றேன்…ஆமா..நீ என்ன படிக்கிற?” என்றானே பார்க்கலாம் மயூரி திகைத்தபடி, 

“அது கூட தெரியாமலா எனக்குத் தாலி கட்டுனீங்க?” என்றாள்.

 ஆச்சரியமாக அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமானாவன். “கல்யாணம் பண்ணிக்க இதெல்லாம் தெரிஞ்சுக்கணுமா என்ன? அப்படின்னா நான் என்ன படிச்சிருக்கேன், என்ன கம்பெனி வச்சிருக்கேன், என்னோட மன்த்லி டர்ன் ஓவர் எவ்ளோ இதெல்லாம் உனக்கு தெரியுமா?” என்றான். ‘கப் ‘என வாயை மூடிக்கொண்டவள்,

 “நான் பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிக்கிறேன்,” என்றாள்.

​அவள் கல்லூரி வந்து விடவே அவன் காரை நிறுத்தவும், விறுவிறுவென இறங்கி காரின் முன்னே சுற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தவன், “என்னடா உனக்கு நான் டிரைவரா? முன்னாடி வந்து உட்கார்,” என்றான் ஆனந்திடம்.

 ஆனந்த் வேகமாக முன்னே வந்து அமர, ரஞ்சன் காரைக் கிளப்பினான். கல்லூரி வாயிலில் பிரியாவைக் கண்டு புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த மயூரி அவனைத் திரும்பிப் பார்க்க, இருவரின் பார்வையும் பிரியாமல் பிரிந்தது. 

மயூரியின் பார்வையைக் கண்ட பிரியா கிண்டலாக அவளைப் பார்த்திருந்தாள். கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்த மயூரித் திரும்பிப் பார்க்க,பிரியா தலையை ஆட்டிக் கொண்டே சிரித்தவள்,

 “ம்ம்…ம்ம்..புரியுது, கண்ணாலேயே பேசிக்கிறீங்க… வில்லன் ஹீரோவா மாறியாச்சு போல,” என்றாள் பிரியா கேலியாக.

​மயூரி அவளைக் கூர்மையாகப் பார்த்து, “என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? நானே காலையில் அவர் கூட உயிரைக் கையில பிடிச்சுகிட்டு வந்து இருக்கேன். உனக்கு அந்தப் பீதி காதலா.. வா.. தெரியுது…!,” என்றாள் சந்தேகமாக. 

கலகலவென சிரித்த பிரியா, “பரவால்ல காலேஜுக்கு அவரே கூட்டிட்டு வந்திருக்கார். அப்போ அன்னிக்கு உன் மாமியார் பார்த்தப்போ பயந்துட்டேன், உங்க அப்பா அளவுக்கு மிஸ்டர் ரஞ்சன் மோசம் இல்லைனு தெரியுது,” என்றாள்.

 “யாரு உனக்கு வதந்தியைப் பரப்பி விட்டது? என் மாமியாருக்கு மட்டும் தான் விஷயம் தெரியும், அவங்களும் எப்பயும் போல அவங்களுக்கு தெரியாத மாதிரியே.. நடந்துக்கச் சொல்லி இருக்காங்க, அவ்வளவுதான்,” என்றாள் மயூரி ஏமாற்றத்துடன்.

​”ஐயோ என்னால முடியலடி, உன் மாமியாரே பெத்த புள்ளையைப் பார்த்து அவ்வளவு பயப்படுறாங்க. போதும் மய்யூ, இன்னையோட உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல, உன்னோட காலேஜுக்கு வந்துட்டு போறது கண்ணிவெடி மேல நிக்கிறது போலவே இருக்கு,” என்று விட்டு விறுவிறுவென கல்லூரிக்குள் சென்றாள் பிரியா. 

மயூரியோ அவள் பின்னோடு, “ஏய் பிரியா நில்லுடி, பயப்படாத நான் இருக்கேன்,” என்று சென்றாள்.

​அன்று மாலை மயூரியும் பிரியாவும் எப்பொழுதும் போல சந்தோஷமாகச் சிரித்தபடி ரேடியோ ஸ்டேஷன் செல்ல கல்லூரியை விட்டு வெளியே வந்தவர்கள், வாயிலில் நின்ற காரைக் கண்டவுடன் திகைத்து நின்றனர். 

ஆம், காரின் மீது சாய்ந்து நின்று இவர்கள் புன்னகையுடன் வருவதைக் கண்டிருந்தான் ரஞ்சன். டிரைவர் இருக்கையில் ஆனந்த் அமர்ந்திருந்தான். மயூரிக்கு ஒரே மலைப்பாக இருந்தது. 

காலையில் நடந்த அந்தச் சிறிய நிகழ்வுக்காக இவ்வளவு கரிசனமா? இவன் ஏதும் அறிந்து கொண்டானா..? என்று யோசித்தபடி பிரியாவை அசடு வழிந்தபடி பார்த்தாள் மயூரி.

​பிரியாவோ மேலும் நக்கலாக, “போமா போ… உன் ஹீரோ உன்னைப் பிக்கப் பண்ண கா…த்துக்கிட்டு இருக்கார்,” என்றாள் மயூரியின் தோளில் இடித்து. 

அவளைத் திரும்பி முறைத்த மயூரி, “சோனாவுக்கு போன் பண்ணி நாளைக்கு காலையில ஸ்டேஷனுக்கு வந்து ஷோ பண்ணி தரேன்னு சொல்லு,” என்றாள் கோபமாக.

 “ஓகே… ஓகே..,” என்றாள் பிரியா சிரிப்புடன். அவளை முறைத்தபடியே ரஞ்சன் அருகே சென்றவள், 

“… நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க? உங்களுக்கு எதுக்கு கஷ்டம்…நான் பஸ்ஸிலேயே வந்து இருப்பேனே,” என்றாள் தயக்கமாக.

 “ஏன் இப்ப வீட்டுக்குத் தானே போகப் போற? எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு, அதான் போரப்பயே பிக்கப் பண்ணிட்டு போக வந்தேன். ஏன் வேற எங்கேயும் போகப் போரியா என்ன?” என்றான் கீழ் பார்வை பார்த்தபடி.

​”இல்லை…வீட்டுக்குத் தான்,” என்றவள் சுற்றி வந்து பின் இருக்கையில் ஏறினாள். 

அவன் முன்னே ஏறுவான் என்று எண்ணி அமர்ந்திருக்க, அவன் அவள் அருகே பின் இருக்கையில் ஏறினான். மயூரிக்குச் சற்று பதற்றமாக இருந்தது. 

ஷோவிற்குப் பேசத் தயார் செய்யும் நோட்டினை மெல்லத் தன் பையினுள் வைத்து, அதை அவள் மடியில் வைத்துக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். 

ஆனந்த் சீராகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். மயூரி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ரஞ்சன் வாகாகச் சாய்ந்து மயூரியைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

அவன் பார்வை அவள் உச்சந்தலையில் இருந்து அங்குலம் அங்குலமாக ஸ்கேன் செய்து கொண்டிருந்தது. காலையில் வைத்திருந்த பூ லேசாக முனை கருகி இருந்தது. தலைமுடிகள் கொஞ்சம் பறந்து கொண்டிருந்தது, ஆனால் அவள் புடவை மட்டும் அப்படியே கலையாமல் இருந்தது. முகத்தைக் கழுவி இருப்பாள் போலும், காலையில் இருந்த சந்தனக்கீற்று இல்லாமல் பளிச்சென இருந்தது.

​அவன் பார்வை அவளுக்கு  கூச்சமாக இருந்தாலும், எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் பார்வை கீழே இறங்கி பையைக் கட்டிக்கொண்டிருந்த அவள் விரல்களை ஆராய்ந்தது. 

பெரிய கூர் நகங்களுக்குப் பதிலாகச் சீராக வெட்டப்பட்டு மருதாணி இட்டிருந்த பிஞ்சு விரல்கள், அவன் பார்வை மேலும் இறங்கி, அவளுக்கும் அவனுக்கும் இடையே இருந்த அவள் புத்தகங்கள் மீது பட்டது. அதை கைகளில் எடுக்கப் போக, அவள் சட்டென்று திரும்பி, 

“அது…அது..என் ப்ராஜெக்ட்,” என்று சொல்ல,

 “தெரியும்,அப்படி உள்ள என்ன வச்சிருக்க?” என்று நிதானமாக அதை விரித்தான்.

​ஸ்பைரல் பைண்டிங் செய்து இருந்த அந்தப் பெரிய புத்தகத்தைப் பிரித்தான். முன்னட்டையில் பெரிய பெரிய எழுத்துகளில் ‘எம். மயூரி’ என்று அச்சிடப்பட்டிருந்தது. கீழே அவள் செய்யும் ப்ராஜெக்ட்டின் தலைப்பு இருக்க, அதையும் வாசித்தவன் பக்கங்களைப் புரட்டினான். 

பக்கங்கள் சில சென்றதும் அதில் ஒரு சாக்லேட் பேப்பர் இருக்க, அதைக் கையில் எடுத்து அவளைப் பார்த்தான். 

“அது… அது…” என்றவள், “என் பிரண்டு அவள் பர்த்டேக்கு கொடுத்தது, லாஸ்ட்டா சேர்ந்து செலிப்ரேட் பண்ணது,ஞாபகமா…” என்றாள். 

அவன் கைகளில் இருந்து அதை வாங்கக் கைகளை நீட்டிய படி, அவன் அதை பின்னே இழுத்துச் சலிப்பாகத் தலையை ஆட்டினான். அவளோ அவனைக்  பார்த்தபடி கையைப் பின்னே இழுத்துத் தலைகுனிந்து மீண்டும் நேராக அமர்ந்தாள்.

​”இதெல்லாம் புக்குக்குள்ள வைப்பாங்களா?” என்றவன் அதை அவள் அருகே கீழே வைத்தான். 

அதை வேகமாக எடுத்துத் தன் பையினுள் பத்திரப்படுத்திக் கொண்டாள். மீண்டும் சில பக்கங்கள் திருப்ப, அதில் 100 ரூபாய் தாள் ஒன்று இருந்தது. அதையும் கையில் எடுத்தவன் அவளைப் பார்த்து, 

“புக்குல படிக்கிறதைத் தவிர எல்லாமே இருக்கு,” என்றான்.

 “அது…” என்று அவள் இழுக்க,

 “ஏன் பர்ஸ் இல்லையா உன்கிட்ட? புக்ல போய் பணத்தை வச்சிருக்க, மிஸ் ஆகிட்டா?” என்றான் கண்டிப்புடன். 

“மிஸ் ஆகிடக் கூடாதுனு தான் அதுல வச்சிருக்கேன்,” என்றாள் சின்னக் குரலில்.

​”வாட்?” என்றான் சற்று ஆச்சரியமாக. 

“எங்க காலேஜ்ல பர்ஸ்ல பணம் வச்சா தொலைஞ்சுரும், அதான் புக்ஸ்ல வச்சிருப்போம்,” என்றாள் தயங்கி. 

“ம்ம்…அறிவாளிகள் தான்,” என்றவன் மேலும் பக்கங்களில் இருந்த ப்ராஜெக்ட்டை வாசித்தவன் புருவங்கள் உயர்ந்தது.

 “இவ்ளோ டீடைல்ஸ் நீயே கலெக்ட் பண்ணியா? இல்லை ஏதோ ஒரு சீனியரோடதை காப்பி பண்ணி இருக்கியா?” என்றான் நக்கலாக. 

அவ்வளவு நேரம் அவனை ரசித்தபடி இருந்தவள், இந்தக் கேள்வியில் அவனை முறைத்தபடி அவன் கைகளில் இருந்து நோட்டைப் பிடுங்கியவள், 

“எனக்கு மூளை இல்லை என்று நினைத்தீர்களா? இதுல இருக்க எல்லாமே நான் கலெக்ட் பண்ணது,” என்றாள் ரோஷமாக.

​”சீரியஸ்லி… ஹ்ம்..ஓடிப்போறவ இவ்வளவு பெர்பெக்ட்டா ப்ராஜெக்ட் ரெடி பண்றதை என்னால நம்ப முடியலையே,” என்றான் மேலும் எள்ளலாக ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபடி

 அவனை அவள் திரும்பி  பார்க்கவும், வீட்டில் கார் நிற்க்கவும் சரியாக இருந்தது. கதவைத் திறந்து கொண்டு தன் ஊன்றுகோலை எடுத்து இறங்கத் தயாரானவனை சொடுக்கிட்டு அழைத்தாள் மயூரி. 

அவளின் இந்தச் செயல் ரஞ்சனை கொதி நிலைக்குக் கொண்டு சென்றது. அவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை நீங்கி முகம் இறுகியது அவனுக்கு.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page