அத்தியாயம் 10
வசுந்தரா ஃபர்னிச்சர்ஸ்..
பல வருட காலமாக நிலைத்து நிற்கும் நேர்மையான கம்பெனிகளில் இதுவும் ஒன்று..
சிறுவயதிலேயே தீரனின் தந்தை அவர்களை விட்டு சென்றுவிட.. அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த படாதபாடு பட்டு விட்டார் வசுந்தரா ..
அந்த காலத்து ப்ளஸ் டூ என்பதால் கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டு குடும்ப செலவை சமாளித்துக் கொண்டிருந்தார் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல பணம் சேர்த்து தன் மகனை படிக்க வைத்து விட்டார் எப்படியோ..
பணம் தான் எல்லாம் என்று வாழ்ந்த காரணத்தினால் பணத்தின் மீது அதீத மோகம் கொண்டிருந்தான் தீரன்..
பணத்தை சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான் எளிதில் , அதுவும் விவேகமாக..!!
பட்டப்படிப்பை படித்து முடித்த பிறகு ஆரம்பத்தில் சின்னதாக பர்னிச்சர் கடை ஒன்றை தொடங்கினான்.
கடுமையான உழைப்பாளி என்ற காரணத்தினால் முதலாளி என்னும் எண்ணம் சுத்தமாக இல்லாமல் தானும் ஒரு உழைப்பாளி, ஒரு ஊழியன் என்னும் எண்ணத்தில் ஊழியர்களோடு ஊழியர்களாக இறங்கி நின்று வேலை செய்வான்.
அதன் விளைவு தான் இப்பொழுது ஏகப்பட்ட பிரான்ச்சுகள் உருவாகி இருக்கிறது..
இதோ ஓங்கி உயர்ந்து ஆறு மாடி கட்டிடமாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறதே இந்த வசுந்தரா ஃபர்னிச்சர்ஸ் , இது முழுக்க முழுக்க தீரனின் உழைப்பால் உருவானது..!!
தன் மகன் தலையெடுத்து விட்டான் இனி குடும்பத்தை அவனே பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை வரவும் வசுந்தராவும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்து விட்டார் ஆனால் அவருடைய மனதில் எப்பொழுதும் ஏதோ ஒரு வித சோகம் அப்பி கிடந்தது..
பெரிய கவலை ஒன்றும் இல்லை தன் மகன் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு எல்லோரை போலவும் அவனும் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார.. எப்பொழுதும் கம்பனி கம்பனி என்று ஓடிக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு கொஞ்சமாவது ஓய்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணினார்..
அது போக அவன் அவ்வப்பொழுது மது அருந்துவதும், மாதுக்களை தேடி செல்வதையும் காற்று வாக்கில் இந்த செய்திகளை அறிந்து வைத்திருந்தார்.
ஒவ்வொரு விஷயத்தையும் கேள்விபடும் பொழுது அவருக்கு மனம் வலிக்கத்தான் செய்தது..
ஆரம்பத்தில் எதுவும் அறியாமல் வெள்ளந்தியாக அவன் கூறும் பொய்களை நம்பிக்கொண்டிருந்தார்..
ஆனால் , சில தினங்களாகவே அவனுடைய நடவடிக்கை சரியில்லை என்பதை அறிந்து கொண்டவர்.. நம்பிக்கையான ஆள் ஒருவரை வைத்து அவனை கண்காணிக்க வைத்தார் , அதன் விளைவு அவனைப் பற்றிய முழு தகவலும் அவருடைய கைக்கு வந்து சேர்ந்தது..
அவனுடைய அனாவசிய பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்து கொண்டவர் அதிர்ந்து போனார் ஆரம்பத்தில்..!!
இப்படியே விட்டால் சரி வராது எப்படியாவது சீக்கிரமாக பெண் பார்த்து இவனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகுதான் அவருடைய கண்களில் அகமத்ரா அகப்பட்டாள்..!!
மித்ரா ஒன்றும் இவர்களுக்கு யாரோ எவரோ போன்ற உறவு கிடையாது நன்றாக தெரிந்தவள் தான்..
ஒரு காலத்தில் பக்கத்து பக்கத்து வீடு என்கிற அளவில் இரு குடும்பங்களும் நட்புணர்வோடு பழகிக் கொண்டுதான் இருந்தார்கள்.. ஆனால் காலப்போக்கில் அந்த நட்பு சற்று விலகிப் போய்விட்டது..
பேச்சுவார்த்தை கொடுக்கல் வாங்கல் இல்லை என்றாலும் ஒருவரை பற்றி இன்னொருவருக்கு நன்றாகவே தெரியும்..
ஆக மொத்தம் தெரிந்த குடும்பம் என்று சொல்லும் அளவில் தான் இவர்கள் இருந்தார்கள்..
எப்பொழுது மித்ராவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே அவளின் படிப்பிற்கும் பங்கம் ஏற்பட்டு விட்டது..!!
அகமத்ராவுக்கு தாய் கிடையாது தந்தை மட்டுமே.. சிறுவயதிலிருந்து அன்பை மட்டுமே பொழிந்து செல்லம் கொடுத்து வளர்க்கவில்லை அவளை..
வெறும் கண்டிப்பை மட்டுமே காட்டி கடுமையோடு நடந்து கொள்வார் அவளுடைய தந்தை..
கட்டிய மனைவி இல்லாத சமயத்தில் பெற்ற மகளை வைத்து எப்படி பாதுகாப்பது அவளை எப்படி வளர்ப்பது என்று யோசித்து, எங்காவது அவளை கொண்டு போய் விட்டு விடலாமா ஆசிரமத்தில்.. என்று கூட யோசித்தார்.
ஆனால் வேறு வழியின்றி ஊரார் பேச்சுக்கு ஆளாக வேண்டுமே என்கிற ஒரே காரணத்திற்காக போனால் போகட்டும் என்று அகமித்ராவை வளர்த்தார் திருவேங்கடம்.
மகளின் மீது அவருக்கு வேண்டுமானால் பாசம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தந்தை மீது அவளுக்கு அளவுகடந்த அன்பு இருந்தது..
அதனாலேயே படிக்கும் பொழுதே பார்ட் டைமாக பல கம்பெனிகளில் வேலை செய்து சம்பாதித்து அந்த காசில் படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டு வீட்டு செலவையும் சமாளித்தவள் மித்ரா..
இப்படி தன்னை தொல்லை செய்யாமல் இருந்து கொண்டால் அதுவே போதும் என்று நினைத்து விட்டார் திருவேங்கடம்..
பெரிய பெரிய கம்பெனிகளில் வாட்ச்மேன் டியூட்டி பார்க்கிறேன் பேர்வழி என்று விட்டு வேலையையும் ஒழுங்காக செய்யாமல் வருவோர் போவோரிடமும் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார் அவர்..
பிறகு இந்த குணத்தால் அவரை வேலை விட்டு தூக்கி விட.. இன்னும் குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டது..
அளவு கடந்த இந்த பழக்கத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு விட ஒரு கட்டத்தில் உயிருக்கே அபாயம் ஏற்பட்டுவிட்டது..!!
கிட்னியும் பெயிலியர் ஆகி இருக்க, ஒரு லிவரும் இப்பொழுது பாதிக்கப்பட்டு விட்டது இப்படியே விட்டால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று டாக்டர்கள் அனைவரும் கை விரித்து விட்டார்கள்..
முடிந்தால் கொஞ்ச நாள் மட்டும் வேண்டுமானால் உயிரோடு இருப்பதற்கு வழி செய்யலாம்.. ஆனால் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்று கூறிவிட்டார்கள்..
அதனால் முடிந்த மட்டும் தன் தந்தையை கொஞ்ச நாட்களாவது உயிருடன் இருக்க வைக்கலாம் என்று முடிவு செய்தவள்.. தான் வேலை பார்த்த கம்பெனிகள் , தெரிந்தவர்கள் என்று எல்லா இடத்திலும் கடன் கேட்டுப் பார்த்தாள் ஆனால் யாரும் தரவில்லை..
கடைசியாக அவள் உதவி என்று வந்து நின்ற இடம் தான் தீரன் இல்லம்..!!
ஏற்கனவே மித்ராவின் குடும்பத்தை பற்றி நன்றாக அறிந்திருந்த காரணத்தினால், வசுந்தரா வீடு தேடி வந்திருந்த அகமித்ராவை முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
தன் தந்தையின் சிகிச்சைக்கு பணம் கடனாக வேண்டும் என்று கேட்க..
தன் செலவுக்கே தன் மகனின் கையை எதிர்பார்த்து தான் இந்த வீட்டில் இருப்பதாகவும் மேலும் அவளுக்கு கடன் வேண்டும் என்றால் தன் மகனைப் பார்த்து அவனிடம் கேட்குமாறும் அவர் கூறி விட..
பிறகுதான் அவள் தீரனை நேருக்கு நேராக முதல் முறையாக சந்தித்தாள்..
தந்தையின் சிகிச்சைக்கு கடனாக பத்து லட்சம் பணம் தேவைப்படுகிறது உதவுங்கள் என்று வந்தவளின் பேச்சு அவன் காதில் விழுந்ததோ இல்லையோ.. அவளின் அசரவைக்கும் அழகும் , உணர்ச்சிகளை கிளறும் வண்ணம் எடுப்பாக இருக்கும் அங்கங்களும் அவன் கண்ணில் பளிச்சென்று விழுந்தது..!!
கண்களில் தேங்கிய கண்ணீரோடு உதவி என்று வந்து நின்றிருந்தவளின் அழகை மட்டுமே பார்த்தவன், அவளின் பேச்சை சரியாக கூட காதில் வாங்கினானோ இல்லையோ..
உடனே..
” உனக்கு என்ன 10 லட்சம் தானே வேணும் கண்டிப்பா தரேன்”, என்றான்.
அவன் சொன்ன பதிலை கேட்டதும் சந்தோஷம் அடைந்தவள்..
“ரொம்பவே நன்றிங்க சார்.. இந்த உதவியை நான் காலம் முழுக்க மறக்கவே மாட்டேன் நீங்க செஞ்ச உதவிக்கு ஈடாக நான் என்ன செய்யப் போறேன்னு எனக்கே தெரியல”, என்றாள் கண்ணீரோடு.
மேலும் கீழுமாக அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தவன்..
கையெடுத்து அவள் கும்பிட.. அவள் அழகை பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை சற்றே கீழே இறங்கியது..
லேசாக கை தூக்கிய காரணத்தினால் புடவையின் மாராப்பு கொஞ்சம் விலக .. அவளுடைய மஞ்சள் நிற இடை அவன் கண்ணை பறித்தது..
பட்டுப்போல வழவழப்பாக தெரிந்த அந்த இடையை அப்பொழுதே கைப்பற்றி தன் வசமாக்கிக் கொள்ள துடித்தது அவனுடைய மனம்..
கஷ்டப்பட்டு தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டவன், அப்பொழுது தான் சிந்தித்துப் பார்த்தான்..
எந்த பெண்ணிடமும் தோன்றாத ஒரு வித ஈர்ப்பு இவளிடம் மட்டும் தோன்றுகிறதே அதற்கு காரணம் என்ன?? எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே அடைந்து விட வேண்டும் என்கிற வேகம் மட்டுமே இருக்கும் ஆனால் இவளை பார்க்கும் பொழுது அந்த வேகத்தையும் தாண்டி வேறு ஏதோ ஒரு உணர்வு மனதிற்குள் தோன்றுகிறது..
அதற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை இப்போதைக்கு அதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம்.. இவள் வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அழுத்தமாக மனதில் தோன்றுகிறது அதுவே போதும்.. இவளை அடைந்துவிட வேண்டும் அதற்கு வழி பத்து லட்சம் என்றால் என்ன?? 10 கோடி என்றால் என்ன?? எல்லாவற்றையும் தூக்கி வீசி எரிந்து விட்டு இவளை அடைந்து விட வேண்டியது தான்.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளை நேருக்கு நேராக பார்த்து பேசத் தொடங்கினான்.
” இங்க பாரு நீ கேட்ட பத்து லட்சத்தை நான் உன்கிட்ட கொடுத்துவிடுகிறேன் அதற்கு நன்றி கடனா நீ திரும்பவும் எனக்கு வேறு ஒரு விஷயம் செய்யணும் முடியுமா உன்னால??”, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி திமிராக அவளைப் பார்த்து கேட்டான்.
“ நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் ”
இந்த ஒரு வார்த்தை போதுமே அவனுக்கு, அவனுடைய எண்ணங்களை சாதித்துக் கொள்ள.!!
இதழ் வளைத்து வெற்றி புன்னகை உதிர்த்துவிட்டு அவளை மேலிருந்து ஒரு பார்வை பார்த்தான்.
” என்ன சொன்னாலும் செய்வியா?? நல்லா யோசிச்சுக்கோ.. அப்புறம் முடியாதுன்னு மட்டும் சொல்லாத அப்படி முடியாதுன்னு நீ சொன்னா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல உனக்கு கொடுக்க வேண்டிய காசை நான் தராமல் விட்டுவிடுவேன் அவ்வளவுதான்..”, என்றான் தோள்களை குலுக்கி அசால்ட்டாக.
தன் தந்தைக்கு தன்னை பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த ஜென்மத்தில் அவர்தான் தன்னுடைய தந்தை என்று எண்ணிய பிறகு அவர் மீது அன்பு செலுத்தாமல் அவளால் இருக்க முடியவில்லை இதோ இப்பொழுது கூட உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் அவரைக் காப்பாற்ற தான் நினைக்கிறாள் இவள்.. ஆனால் இந்த நிலைமையில் கூட தன் மகளைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.. எங்கேயாவது போய் பணத்தை புரட்டி கொண்டு வந்து சேரு என்று திட்டி தான் அனுப்பி இருந்தார்.
அவர் திட்டுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல்.. அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எப்படியும் அவரைக் காப்பாற்றியே தீர்வேன் என்று உறுதியாக இருந்தவள் இதோ இப்பொழுது இவன் முன்பு வந்து நின்று விட்டிருக்கிறாள் உதவி வேண்டும் என்று..
அப்படி என்றால் அவன் கேட்பதை செய்துதானே ஆக வேண்டும்??
அவன் பேச்சுக்கு ஒப்புக்கொண்டால் அப்படி என்ன பெரிய விஷயம் கேட்டுவிடப் போகிறான் என்றுதான் அவனை பார்த்தாள் அவள்.
” 10 லட்சம் நான் உனக்கு குடுத்தா நீ பதிலுக்கு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்.. அதாவது உனக்கு சந்தோஷம் என்றால் என்ன அர்த்தம்னு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.. எந்த பொண்ணு கிட்டயும் எனக்கு வராத ஈர்ப்பு , ஒரு கிளர்ச்சி, உன் கிட்ட மட்டும் தான் வருது.. உன்னை பார்த்ததுமே வந்துடுச்சு.. ரொம்ப நாளா கஷ்டப்பட்டு தேடிக்கிட்டு இருந்த பதிலை ஏதோ இப்ப என் கண்ணு முன்னாடி சாதாரணமா பார்த்த மாதிரி ஒரு உணர்வு.. என்னுடைய கேள்விக்கான பதிலே நீதான்.. உன்ன முழுசா ஆராய்ச்சி பண்ணா தான் எனக்கு பதில் கிடைக்கும்னு தோணுது.. அதனால நீ எனக்கு வேணும்.. அதுக்கு விலை 10 லட்சம் உனக்கு ஓகேவா??”, என்று காய்கறியை விலை பேசுவது போல சாதாரணமாக விலை பேசினான் அவளை..!!
– தொடரும்..
