அத்தியாயம் 8

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே கவிதாவுக்கு மனசு படபடப்பாக இருந்தது. காரணம் என்னவென்று தான் தெரியவில்லை. வீட்டு வேலைகளிலும் அவளால் முழுதாக ஈடுபட முடியவில்லை. காலையில் காபிக்கு பால் காய்ச்சும் போது பாலை பொங்கவிட்டு ஏதோ சிந்தனையில் மூழ்கிருந்தாள். அந்தப்பக்கமாக வந்த மாசிலாமணிதான் அடுப்பை அணைத்து விட்டு, கவிதா, கவிதா என்னாச்சு? பால் பொங்கி அடுப்பு அணைந்தது கூட பார்க்காமல் அப்படி என்னமா சிந்தனை? என்று கேட்க, அப்போதுதான் சுயநினைவு பெற்றவளாக அய்யயோ! பால் பொங்கிடுச்சா? என்று கேட்டவளாக கணவரை பார்க்க, உடம்பு ஏதாவது சரியில்லையா கவிதா? டாக்டரை போய் பாக்கலாமா? என்று அக்கறையாய் வினவ, அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. மனசு தான் சரியில்ல. காலையில் விழித்ததிலிருந்து மனசுக்குள்ள ஏதோ பயம் இருந்திட்டே இருக்கு. என்னனு தான் தெரியல. என்ன பயம் உனக்கு? நான் உன் பக்கத்திலே இருக்கேன், சிங்கம் மாதிரி இரண்டு பிள்ளைகள் நமக்காக இருக்காங்க, நாங்க உன்னை பார்துக்க மாட்டோமா? அப்புறம் எதுக்கு உனக்கு வீண் கவலை என்று தேற்ற , இருந்தும் கவிதாவின் முகம் தெளிவடையாததைக் கண்டு, அவள் மனதை மாற்றும் பொருட்டு , உனக்கு வயசாயிடிச்சி! நீ கிழவியாயிட்டே, உடம்பு தான் ஏதோ பண்ணியிருக்கும். போய் கொஞ்ச நேரம் ஓய்வெடு என்று கிண்டலடிக்க, நம்ம பிள்ளைகளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலே, பேரன் பேத்தியை கூட பார்க்கலே! அதுக்குள்ள உங்களுக்கு நான் கிழவி ஆயிட்டேனா, நான் கிழவின்னா நீங்களும் கிழவன் தான். அதை மனசுல வச்சிட்டு பேசுங்க என்று பொய் கோபத்துடன் முறைக்க, நானா கிழவன்! நீ சரினு ஒரு வார்த்தை சொல்லு, நம்ம பிள்ளைகளுக்கு ஒரு தங்கச்சி பாப்பாவை ரெடி பண்ணிறேன் என்று கூற, உடனே கவிதா, வெட்கத்தில் முகம் சிவந்து. இந்த வயசில என்ன பேச்சு இது? பிள்ளைகள் எழுந்து வெளியே வரும் நேரம் ஆகிடுச்சி, கிச்சனை விட்டு வெளியே போங்க என்று அவரை துரத்த, அவரும் புன்சிரிப்புடன் வெளியில் சென்று சோபாவில் அமர்ந்துக்  கொண்டார். கவிதா மனதிற்குள் இந்த மனுஷனுக்கு விவஸ்தையே இல்லப்பா என்று நினைத்துக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்.  

 

இரு பிள்ளைகளும் வேலைக்குச்சென்று விட மாசிலாமணியும் தனக்கு சிறு வேலை இருப்பதாக கூறி வெளியில் சென்று விட, கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். மீண்டும் அவள் மனதில் கவலை வந்து ஒட்டிக் கொண்டது. கோவிலுக்கு சென்று வரலாம் என்று பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு கிளம்பும்போது எதிர் வீட்டு சாருலதா வந்தாள். அக்கா என் பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டா, பெரியவங்க யாரும் பக்கத்தில் இல்லை. எனக்கு என்னென்ன சடங்கு சம்பிரதாயம் செய்யணும்னு தெரியாது. கொஞ்சம் வந்து உதவி செய்யிறீங்களா? என்று வந்து நிற்க, கவிதாவும் அவள் வீட்டுக்குச் சென்று அந்த பெண்ணுக்கு என்ன செய்யவேண்டும் என்று அனைத்தையும் சொல்லி கொடுத்து கூடவே இருந்து உதவி புரிந்து விட்டு மறுபடியும் வீட்டிற்கு வரும் போது மணி ஐந்தை நெருங்கியது. இப்படியே எப்படி கோவிலுக்கு செல்வது என்று குளித்து விட்டு கிளம்ப மாசிலாமணியும் வந்துவிடவே அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள். 

 

கோவிலுக்கு சென்று அங்கே சர்வ அலங்காரத்துடன் தன் அபய கரங்களோடு அருளை பொழியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் அம்மனை பார்க்கையில் நான் இருக்கிறேன், பயப்படாதே என்று சொல்லுவது போல் கவிதாவிற்கு தோன்றியது.  கண் குளிர தரிசித்தாள். கோவிலை விட்டு வெளியே வருகையில் எதிரே இருக்கும் பேருந்து நிலையத்தில் கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே மாசிலாமணி என்ன ஆச்சு?ஒரே கூட்டமா இருக்கு , நீ இங்கேயே இரு கவிதா, நான் போய் என்னன்னு பார்த்திட்டு வரேன் என்று கிளம்ப, நானும் வரேன்ங்க என்று கவிதாவும் அவருடன் நடந்து சென்றாள். கூட்டத்தை விலக்கி பார்த்த மாசிலாமணி அப்படியே அதிர்ச்சியில் சிலையாக சமைந்து விட்டார். பின்னாடியே வந்த கவிதா என்னவென்று எட்டி பார்க்க அங்கே விக்னேஷ் தலைகுப்புற படுத்து கிடந்தான். கவிதா அவனருகில் வந்து அவனை திருப்பி விக்னேஷ், விக்னேஷ் என்று கத்தி அவனை எழுப்ப அவன் அசையவே இல்லை. கவிதாவுக்கு அவன் எழும்பாததை கண்டு படபடப்பில் மயக்கமே வருவது போல் இருந்தது. கணவனை உசுப்பி ஏங்க, ஆட்டோ கூப்பிடுங்க, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம். என் பிள்ளை பேச்சு மூச்சே இல்லாமே கிடக்கிறானே? என்னாச்சுனே தெரியலயே? என்று புலம்பிக் கொண்டே முழு மயக்கத்திற்கு சென்றுவிட்டாள். மாசிலாமணி மனைவியின் புலம்பலில் சுய உணர்வு பெற்று அவளின் நிலையையும் கண்டு வேதனையுற்று ஆட்டோவை கூப்பிட்டு அங்கு இருக்கும் ஆட்களின் உதவியுடன் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். போகும் வழியிலேயே கௌரிக்கும் போன் செய்து விஷயத்தை தெரிவிக்க, கௌரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அண்ணன் குடிப்பாரா? நான் ஒரு தடவை கூட அவர் குடித்து பார்க்கவில்லையே! சுய நினைவற்று குடிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது என்று நினைத்தவாறே, நான் உடனே வரேன் அப்பா! என்று கூறி தன் இரு சக்கர வாகனத்தில் விரைந்து சென்றான்.    

 

விக்னேஷை ஐ.சி.யு வில் அனுப்பிவிட்டு கவிதாவையும் மற்றொரு ஸ்டெச்சரில் அழைத்து போக, மாசிலாமணி தவிப்போடு வெளியில் நின்றுக்கொண்டிருந்தார். கவிதாவுக்கு சாதாரண மயக்கம் என்பதால் சிறிது நேரத்திலேயே கண் விழித்தார். செவிலியர் வந்து மாசிலாமணியிடம் உங்க மனைவி கண் விழிச்சிட்டாங்க. போய் பாருங்க. அவங்களுக்கு பி.பி. அதிகமா ஆனதால்  தான் மயக்கம் வந்திருக்கு. அதிகமா பேச வைக்காதிங்க, என்று கூறிவிட்டு செல்ல,மாசிலாமணி உள்ளே சென்றார். கவிதா அவரை பார்த்ததும், எல்லாமே என் தப்பு தாங்க. அவன் என்கிட்ட பேசனானாலும் நான் அவன்கிட்ட போய் பேசியிருக்கணும். அவனை அப்படியே விட்டு இருக்கக்கூடாது. அவன் மனசுல என்ன கஷ்டம்னுனாலும் என்கிட்ட சொல்ற அளவுக்கு அவன்கிட்ட நான் நெருங்கி பழகியிருக்கணும். அவனை அப்படி பார்க்கும் போது என் அடிவயிறே கலங்குதே என்று ஈன குரலில் அழ, உணர்ச்சிவசப்படாதே கவிதா, அமைதியாய் இரு. விக்னேஷிக்கு ஒன்னும் ஆகாது. என்று ஆறுதல் கூற கவிதாவும் சற்று சமாதானம் ஆகி ஊசி, மாத்திரையின் உபயத்தால் கண் அயர்ந்தாள். மனைவிக்கு ஆறுதல் கூறிய அவருக்கு தன்னை தேற்றிக்கொள்ள முடியவில்லை. மகனின் நிலமையை  நினைத்து அவருக்கு உள்ளுக்குள்  பயமாகத்தான் இருந்தது. உடல் முழுதும் வேர்வை சிந்தி மிகவும் சோர்வாக காணப்பட்டார். நாம் பயப்படக்கூடாது. நாமே பயந்தால் நம்ம குடும்பத்துக்கு யார் ஆறுதல் சொல்றது? தைரியமாக இருக்கணும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு வெளியில் இருக்கும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டார். 

 

சிறிது நேரத்தில் கௌரியும் அங்கு வந்து விட அம்மாவும் அண்ணனும் இப்ப எப்படி இருங்காங்கப்பா?  உங்க அம்மாவுக்கு பி.பி. ஏறிடிச்சினு மாத்திரை குடுத்து தூங்க வச்சிருங்காங்க. அவளுடைய அழுகையைத்தான் என்னாலே தாங்க முடியல, விக்னேஷுக்கு உள்ளே சிகிச்சை நடந்துட்டு இருக்கு.  இன்னும் டாக்டர் வெளியில் வந்து எதுவும் சொல்லல என்று கலவர முகத்துடன் தந்தை கூறியதை கேட்ட கௌரி அவரை ஆதரவாய் அணைத்துக்  கொண்டு அண்ணன்னுக்கு ஒன்னுமில்லைப்பா. நீங்க பயப்படாதீங்க என்று கூறி அவரை கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு அமர வைத்து தானும் அவர்  பக்கத்தில் அவர் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வரவும் இருவரும் எழுந்துக்கொண்டு அவர் என்ன சொல்வாரோ என அவர் முகத்தையே பார்க்க,  கவலைப்படாதீங்க! உயிரை காப்பாத்திட்டோம். இனி அவருக்கு எந்த ஆபத்தும் இல்ல . அவர் தூக்க மாத்திரையை மதுவில் கலந்து சாப்பிட்டிருக்காரு. நல்லவேளை, அவர் மாத்திரை சாப்பிட கொஞ்ச நேரத்திலேயே இங்கு கொண்டு வந்ததாலே காப்பாத்த முடிஞ்சுது, ரொம்ப நேரம் ஆயிருந்த அவர் உயிருக்கே ஆபத்து ஆகியிருக்கும்.இப்போ போய் அவரை பாக்கலாமா டாக்டர்? என்று கௌரி கேட்க, இப்போ அவரு மயக்கத்தில் இருக்காரு. என்னதான் நாங்க அவர் குடிச்சத எல்லாத்தையும் வெளியே எடுத்திருந்தாலும் தூக்க மாத்திரையின் effect கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதனாலே நாளைக்கு தான் அவர் கண் முழிப்பாரு. நீங்க அவரை தொந்தரவு செய்யாமல் போய் பாருங்க. என்று கூறிவிட்டு டாக்டர் சென்றதும் கௌரியும் மாசிலாமணியும் சென்று பார்த்தார்கள். கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க வேரற்ற மரமாய் படுத்து இருந்த விக்னேஷை பார்த்ததும் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது. கௌரியால் தன் அண்ணனை அந்த கோலத்தில் பார்க்கவே முடியவில்லை விக்னேஷ் அவனிடத்தில் சரியாக பேசாவிட்டாலும் கௌரி எப்போதும் தன் அண்ணனையே சுற்றி சுற்றி வருவான். அவனுடைய மிடுக்கான நடை, நேர்த்தியாக அவன் உடுத்திக் கொள்ளும் உடை, வேலையில் அவன் காட்டும் பொறுப்பு என்று அனைத்தும் கௌரிக்கு மிகவும் பிடிக்கும். இன்று தன் அண்ணனை இந்த நிலையில் காண அவன் மனம் பொறுக்கவில்லை. துக்கம் தாங்காமல் உடனே வெளியில் வந்துவிட்டான், அவன் பின்னாடியே மாசிலாமணியும் வந்தார். அப்பா, தூக்க மாத்திரை சாப்பிடற அளவுக்கு அண்ணனுக்கு அப்படி என்னப்பா கஷ்டம் வந்திச்சு? என்று கேட்க, எனக்கும் தெரியலப்பா. அவன் ஏதாச்சும் பேசினால்தானே நமக்கு தெரியத்துக்கு, அவன் யார்கிட்ட தான் மனசு விட்டு பேசறான்? என்று சோகத்துடன் கூற, நான் அண்ணன் கிட்ட பேசறன்பா, அவர் மனசில என்னதான் இருக்குதுனு தெரிஞ்சிட்டு என்னால முடிந்த உதவியை செய்வேன்ப்பா என்று ஆறுதல் கூற, அவன் மறுபடியும் இந்த மாதிரி பண்ணாதவண்ணம் பார்த்து பேசுப்பா என்று கூறி தளர்வுடன் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டார். இரவு வீட்டுக்கு செல்லாமல் கௌரியும் மாசிலாமணியும் மருத்துவமனையிலேயே இருந்து விட்டனர். மறுநாள் பொழுது விடிந்ததும் கவிதா முதலில் எழுந்து தன் பிள்ளையை பார்க்கவேண்டும் என்று அடம் பிடிக்க, கௌரி தன் தாய் தந்தையுடன் விக்னேஷுசை பார்க்க செல்ல அப்போதுதான் கண் விழித்த விக்னேஷ் இவர்களை பார்த்ததும், என்னை ஏன் காப்பாத்துனீங்க? என்னாலே மானத்துடன் வாழத்தான் முடியல, சாவக்கூட முடியலையே என்று முகம் இறுகி கூற, கவிதா, ஏன் விக்னேஷ் இப்படி பேசற? ஏன் நாங்கயெல்லாம் உன் கூட இல்லை. என்ன மனசு கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லுப்பா, கண்டிப்பா நாங்க அதை தீர்த்து வைக்கிறோம் என்று கூற, விக்னேஷ் மௌனமாக இருந்தான். உடனே கௌரி அம்மா, அப்பா நீங்க கொஞ்சம் வெளியில் இருங்க நான் பேசுறேன் என்று அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு விக்னேஷிடம் பேச ஆரம்பித்தான்.அண்ணா, இதுவரைக்கும் நீ என்னப்பத்தி என்ன நினைச்சிட்டுஇருக்கே என்பது எனக்கு தெரியாது. எனக்கு அது பத்தி கவலையும் இல்லை. ஆனா நான் உன்னுடைய தம்பி அண்ணா. உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உனக்கு என்னதான் கஷ்டம்னு என்கிட்ட சொல்லு. நான் கண்டிப்பா உனக்கு உதவி செய்வேன். ப்ளீஸ் அண்ணா. இனிமேல் நீ இது மாதிரி எல்லாம் செய்யக்கூடாது நாங்க எல்லோரும் எப்படி பதறிட்டோம் தெரியுமா? உங்க மேல எங்க எல்லோருக்கும் பாசம் உண்டு என்று அவன் கண்கலங்கி கூற, விக்னேஷ் முதல் முறையாய் அவனை தன் தம்பியாய் பார்த்தான். இவனுக்கு நான் ஒன்றும் செய்யவே இல்லையே, இவனை வெறுக்கத்தானே செய்வேன். அப்படி இருந்தும் ஏன் என் மேல் இவனுக்கு இத்தனை பாசம்  என்று நினைத்துக் கொண்டே அவனை பார்க்க, தயவு செஞ்சு என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லு அண்ணா. நான் கண்டிப்பா உனக்கு என்னாலான உதவி செய்வேன் என்று கூற விக்னேஷ் கூற ஆரம்பித்தான்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
829 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page