அத்தியாயம்- 11

குழந்தை பிறந்ததிலிருந்து தன்னை இப்படி கூப்பிடவே இல்லாமல் இருக்கவுமே அவளுக்குமே கொஞ்சம் கவலை, பயம் தான் .கணவனுக்கு தன் மீது இருந்த ஆசை எல்லாம் நீங்கி விட்டதோ என்று ..மனதில் இல்லாமல் அவனிடம் கேள்வியும் கேட்கிறாள்..

“எங்கேங்க போகணும்.. அதிசயமா கூப்பிடுறீங்க..”

” ஆமாம் நீ எப்ப பாத்தாலும் அவனோடு தான் பொழுதைக் கழிக்கிறாய்.. எனக்கு மட்டும் உன்னை வெளியே எல்லாம் அழைத்துப் போக ஆசையா இருக்காதா.. என்ன சீக்கிரமா கிளம்பு.. எங்கே என்று சொன்னால் தான் வருவாயா.. முன்பெல்லாம் இப்படித்தான் செய்தாயா..”

” சரி சரி திரும்பவும் ஆரம்பித்து விடாதீங்க..”

“யாரு ஆரம்பிக்கிறாங்க என்று தான்டி தெரியல .. “சொல்லி விட்டு சிரிக்கிறான்.. என்னவோ மித்ராவுக்கு நல்ல மனநிலை போல ..அதனால் அவளும் பதிலுக்கு சிரித்து  அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு அவசரமாய் கிளம்புகிறாள் ..

மனைவி சிரிப்பதை பார்த்ததுமே அவளிடம் முக்கியமான ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று மனதில் பதிவு செய்து கொள்கிறான் .. போகும் போதே சொன்னால், எனக்கு செல்லும் வேண்டாம் …ஒன்றும் வேண்டாம், என்று சொல்வாள்..ஆனால் திரும்பி வரும்போது அவள் மனநிலை பார்த்து சொல்ல வேண்டும் ..கசப்பு மருந்து தான் ,ஆனால் வேறு வழி இல்லை .அவள் உடம்புக்கு நல்லது என்று கொடுத்து தான் ஆக வேண்டும் .. ஆனால் அதை எப்படி சொல்வது..என்று  அவன் தயங்குகிறான்..

அவளோ அவசரமாய் கிளம்பினாளே தவிர திரும்பவும் சென்று தூங்கும் மகனைப் பாவமாய் பார்க்கிறாள்.. “ஏங்க இவன் விழித்து விடப் போகிறான்.. கண் விழித்தால் என்னை காணோம் என்றால் அழ வேறு செய்வான் .. “என்றதும் எரிச்சல் ஆகிறான்..

“ஏன்டி நம்ம என்ன தனிக்குடித்தனமா செய்கிறோம் ..அம்மாவும் அப்பாவும் அவனுக்காக உயிரையே விடுகிறார்கள்.. அவர்களை நம்பி கூட விட மாட்டாயா..” இதை சொன்னதும் இவன் பேசுவது போதாது என்று அவர்களும் ஆரம்பித்து விடுவார்கள் என்று வாயை மூடிக் கொண்டு கிளம்பி விடுகிறாள் ..

ஆனாலும் அவளுக்கு அவளை விட்டும் செல்வதற்கு மனமே தான் இல்லை ..
அரவிந்த் காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட்டும் செய்து விட்டான் ..அவள் ஏறி வருவது மட்டும்தான் பாக்கி .. கதவருகே நின்று கொண்டு தயங்கிய படியே பேசுகிறாள்..

“நான் ஒன்று சொல்வேன் தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டீர்களே..”

” நீ தப்பாக சொன்னால் நான் அப்படி தான்டி நினைப்பேன் . “

“இல்லை நான் வரவில்லையே. அந்த செல்லையே ரிப்பேர் பார்த்து வைத்துக் கொள்கிறேனே ..இனிமேல் கோபம் வந்தால் எதையும் உடைக்க மாட்டேன்.. அமிர்தை விட்டு விட்டு வருவதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.. “

இப்பொழுது இவளிடம் தான் நினைத்ததை பற்றி கண்டிப்பாக பேசியே தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தவன் கோபத்தில் வேகமாக கார் காரினை ஓங்கி குத்துகிறான்.. அவன் கோபத்தை பார்த்ததும் பயந்து போனவள் சத்தம் காட்டாமல் ஏறி உட்காந்து விடுகிறாள் ..அப்படியும் அவன் கோபம் தீர்ந்த பாடில்லை ..வேகமாக காரை கிளப்பிக் கொண்டு போகிறான் ..

அவளுக்கு நன்கு புரிகிறது ..ஏன் கோபமாக இருக்கிறான் என்று.. சமாதானம் செய்வதாக எண்ணி எரியும் கொள்ளியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக எண்ணெயை ஊற்றுகிறாள்..

” ஏங்க எனக்கு மட்டும்தான் அவன் பிள்ளையா ..உங்களுக்கு இல்லையா. உங்களுக்கு எப்படி இந்த பாசமே இல்லாமல் போனது ..அவனை விட்டு விட்டு வருவதற்கு உங்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ.. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.. ஒரு வேளை நான் தான் வேறு மாதிரியாக இருக்கிறேனோ .. “

அவள் சொன்னதை வைத்தே அவளை அவன் தன் வலையில் சிக்க வைக்கிறான்..

“ஆமான்டி இப்ப நீ சொன்ன பார்த்தியா.. அதுதான் உண்மை .நீ கொஞ்சம் வேற மாதிரியாகத்தான் இருக்கிறாய்..பிள்ளை பெற்றவர்களெல்லாம் இப்படி இருபத்தி நான்கு மணி நேரமும் பிள்ளையையே பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.. உன்னை சொல்லி குற்றமில்லை. வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஒரு வேலையும் செய்ய விடாமல் அமிர்தனையே பார்த்துக் கொள்ள சொல்வதால்தான் இப்படி இருக்கிறாய்.. மற்ற வீடுகளில் போய் பார்.. வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு குழந்தையும் பார்த்துக் கொள்ளும் பெண்களை ..அப்படி இருந்திருந்தால் நீ இத்தனை ஈடுபடாய் இருந்திருக்க மாட்டாய் .முதலில்  அவனை விட்டு கொஞ்சம் விலகி இருந்து வாழ கற்றுக்கொள் ..அவனையும் இப்படியே சார்ந்து இருக்க பழக்கம் செய்து வீணடித்து விடாதே.. அவன் ஒன்றும் ஒட்டுண்ணி கிடையாது.. ” இதைச் சொன்னதுமே அவளுக்கு அழுகையாய் வருகிறது..

அழுதால் மேலும் பிரச்சனையாகும் என்று வந்த அழுகையை அப்படியே விழுங்கி சமாளித்து விடுகிறாள்.. ” சரிங்க இனி நீங்க சொல்வதை மாதிரி இருந்து பார்க்கிறேன் ..இப்பொழுது என்ன நான் என்ன கோபித்துக் கொண்டு திரும்பவா போய் விட்டேன் .உங்களோடு தானே வருகிறேன். நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ.. அதை வாங்கி கொடுங்கள் .. ” சொல்லி விட்டு அவன் தோளில் சாய்ந்து கொள்கிறாள்..

இப்போதுதான் அரவிந்துக்கு கொஞ்சம் நிம்மதியாகிறது.. முகத்தில் சிரிப்பு வருகிறது.. ஆசையாய் அழைத்துச் சென்றவன் விலை உயர்ந்த செல்லையே அவளுக்கு வாங்கி தருகிறான் ..

கணவன் செய்வதை பார்த்ததும் அவர்களுக்கு மனம் நெகிழ்ந்து விடுகிறது ..மனம் விட்டு பேசுகிறாள்.. “நான் தான் பொழுதன்னைக்கும் செல்லை உடைக்கிறேன். இதில் ஏங்க புதிதாக வேற வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் .இதுவரையுமே நம்ம வீட்ல ஏழு செல் கிடக்கு ..அதை ரிப்பேர் செய்தால் என்ன .. “

“பரவாயில்லடி ரிப்பேர் செய்தால் திரும்பத் திரும்ப தான் வீணாகிப் போகும். புதிதாக வாங்கினால் குறைந்தது நான்கு வருடமாவது இருக்கும் இல்ல .ஆனா உன்கிட்ட என்னனு தெரியல .. “

“சாரிங்க இனிமேல் நானும் நல்லபடியா பாத்துக்குறேன் .. “

“நீ சொல்றத கேட்க நல்லா இருக்கு .. ஆனா திரும்ப கோபம் வந்தா செல்ல உடைக்காதடி .என் தங்கம் இல்ல.. சம்பாதிக்கிற காசெல்லாம் இதுலயே போகுதுடி .. ” மனைவியிடம் செல்லமாய் கெஞ்சுகிறான்..

” சரி சரி முயற்சி செய்கிறேன். ” என்றவள் சிரிக்கிறாள்.. அவளுக்கு பிடித்தது மாதிரி வாங்கிக் கொண்டு வருகிறாள். வந்ததுமே அவளுடைய சிம்மை அதில் போட்டு விடுகிறாள்..

அவன் ஆவலோடு காத்துக் கிடக்கிறான் …முதல் போனை தன்னிடம் தான் பேசுவாள் என்று .ஆனால் அவளோ புவனாவிடம் கதை பேசி விட்டு வைக்கவும் அவன் அதுவரையுமே முறைத்துப் பார்த்த படியே இருக்கிறான்…
அவளும் அப்போது தான் கணவன் முகத்தை கவனிக்கிறாள்.. கவனித்ததுமே , ‘அடியே வசமா மாட்டிக்கிட்ட ..தேவை இல்லாம சிக்கிக் கொள்ளாதே .., என்று தன்னை உஷார் செய்து கொள்கிறாள் ..

” ஏன்டி போனை வாங்கி கொடுத்தது நான் .எனக்கு கூட ஒரு ரிங் கொடுக்காமல் உன் தோழியிடம் முதலில் பேசுகிறாய் ..என்னை விட அவள் உசத்தியாய் போய் விட்டாளா..”

” அச்சச்சோ நீங்கள் இப்படி எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களா.. நான் தெரியாமல் செய்து விட்டேங்க.. நீங்கள் என் பக்கத்திலேயே இருந்தீர்களா ..அதனால்  எப்படி போன் வேலை செய்கிறது என்று பார்ப்பதற்காக உட்கார்ந்து இருக்கீங்க என்று எண்ணி விட்டேன்.. எல்லா கோட்டையும் அழித்து விட்டு முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் இருங்க இப்ப பாருங்க .. “என்று அவனுக்கு போன் செய்கிறாள் .

தன் மனைவி எப்பொழுதும் மகனையே பார்த்துக் கொண்டு  தன்னை கவனிக்காமல் விட்டதில் வருத்தமானவன் இப்பொழுது தன்னிடம் பழைய மாதிரி கலகலப்பாய் பேசவுமே புவனாவை,அவள் மீது வந்த கோபத்தை மறந்து விடுகிறான். இருவரும் ஒரே அறைக்குள் ஒரே சத்தமாய் பேசிக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ..அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டதும் அமிர்தன் கண் விழிக்கிறான் ..

குழந்தையை தூக்குவதற்கு வேகமாக போனவள் உடனே கணவன் ஏதாவது சொல்வானோ என்று அவன் முகத்தை பார்க்கிறாள்.. “ஏன்டி  நான் என்ன சொல்லப் போகிறேன்.. நம்முடைய பிள்ளையை தூக்குவதற்கு ..தூக்கிக் கொள்ளடி..” என்றதும் ஓடி சென்று தூக்கி கன்னம் நிறைய முத்தம் கொடுக்கிறாள்.. அவனும் அருகில் வந்து மனைவிக்கும் குழந்தைக்கும் முத்தத்தை கொடுக்கிறான்..

இப்பொழுது நாட்கள் ஆக ஆகத் தான்  அந்த சூட்சுமத்தை  மித்ரா கற்றுக் கொள்கிறாள்.. கணவனை எப்படி சரி கட்டுவது என்று..அவன் பேச்சைக் கேட்டு அவனை கொஞ்சம் கவனித்தால் பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது என்று புரிந்து கொள்கிறாள்..அதிலிருந்து கணவன் தான் முதலில் . அதற்கடுத்து தான் குழந்தை என்று இருக்கவும் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஓடுகிறது..

அதிலும் சில சமயம் அரவிந்துக்கு கோபமாக வருகிறது.. தான் வந்ததுமே  கொஞ்சிக் கொண்டு இருக்கும் குழந்தையை கீழே விட்டு விடுவதும் அவன் அழுவதும் அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை..

” ஏன்டி நான் இருபத்தி நான்கு மணி நேரமும் அவனையே பார்த்துக் கொள்ளாதே என்று தான் சொன்னேன் .. என்னை பார்த்ததும் கீழே இறக்கி விட சொல்லவில்லை .என் மீது உனக்கு அவ்வளவு பயமா என்ன ..இப்படி செய்தால் அவன் மனதில்  என்னை பற்றி தவறான எண்ணம் உண்டாகாதா.. நான் கொடுமைக்காரன். நீ மட்டும் தான் நன்றாக பார்த்துக் கொள்பவள் என்று தோன்றாதா ..இது மாதிரி செய்யாதே.. எனக்கு பிடிக்கவே இல்லை.. “

“ஐயோ நீங்க ஏங்க நான் எது செய்தாலும் தவறாகவே நினைத்துக் கொள்றீங்க.. நீங்க திட்டுவிங்களே என்று தான் வேகமாக இறக்கி விட்டேன்.. இனிமேல் இப்படி செய்ய மாட்டேங்க .. என்னை மன்னிச்சிடுங்க .. “இப்படி மன்னிப்பு கேட்பவளிடம் என்ன என்று வம்பு செய்வது ..

“சரி சரி நான் ஒன்று ஒன்றாய் சொல்லி சொல்லி தான் நீ திருந்த வேண்டும் என்று இல்லடி.. உனக்கே தெரிய வேண்டும் .. “

அவள் வருத்தத்துடன் இதைக் கூறுகிறாள்.. “அது என்னமோ தெரியல நான் அவனை விட்டு கொஞ்சம் விலகினாலும் அவன் என்னை விட்டு தூரப் போய் விடுவானோ என்று என் உள்மனம் சொல்கிறது .. எனக்கு  பயமாக இருக்கிறது..அதனால் தான் நான் இப்படி எல்லாம் செய்கிறேன்..ஒருவேளை கொஞ்சம் அவன் வளர்ந்து விட்டால், எனக்கு இந்த பயம் போய் இயல்பாக வாழ ஆரம்பித்து விடுவேனோ என்னவோ.. “

“உனக்கு இந்த பயம் இருந்தாலும் இல்லா விட்டாலும் மூன்று வயதிற்கு மேல்  ஸ்கூலில் சேர்த்து விட வேண்டியது தான்டி..அப்பொழுதுதான் உனக்கும் பழகும் .. ” இதை ஏன்டா இவளிடம் சொன்னோம் என்று இருக்கிறது ..

மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்து அவளுக்கு உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. பயத்தில் வாய்க்கு வந்ததை பிதற்றுகிறாள்..

” என் பையனை என்னை விட்டுப் பிரித்து விடாதீர்கள்.. நான் அவன் இல்லா விட்டால் இறந்து போய் விடுவேன்..” என்று ..

அரவிந்த் அடக்கடவுளே என தலையில் கை வைத்த படியே நொந்து போகிறான்..

தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page