வண்டிக்குள் நுழைந்த அகல்யா, பேருந்து உள்ளே காலியாக இருந்தது. ஒரு ஈ காக்கா கூட இல்லை. “என்ன பாஸ்… வண்டியில யாருமே இல்லையே? நாம ரெண்டு பேர் மட்டும்தானா?” எனச் சந்தேகமாகக் கேட்டாள்.
ஆகாஷிற்குத் தூக்கி வாரிப் போட்டது. “தனிமை வேணும்” என்று அவன் கேட்டது என்னவோ உண்மைதான், ஆனால் இப்படி ஒரு ஆள் கூட இல்லாமல் பஸ் நின்றால் அகல்யாவுக்குச் சந்தோஷத்தை விடச் சந்தேகம் தான் வரும் என்று அவனுக்குத் தோன்றியது.
“அது… அது வந்து… இனிமேல்தான் வருவாங்க போல அகல்யா. இது புது வண்டி இல்லையா, அதான் இன்னும் கூட்டம் ஏறல,” எனச் சொல்லிச் சமாளித்துவிட்டு, அவளுக்குத் தெரியாமல் சீட்டுக்கு அடியில் மொபைலை எடுத்துச் சித்தார்த்திற்கு ஒரு அவசர மெசேஜ் தட்டினான்…
“டேய் சித்தா, பஸ்ல நாங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தா அவ பயப்படுவாடா! சீக்கிரம் கம்பெனிக்கு யாரையாவது ஏற்பாடு பண்ணி, சாதாரணப் பயணிகள் மாதிரி அடுத்த ஸ்டாப்ல ஏத்தி விடு… அவசரப்படவும்!”
அகல்யா ஜன்னல் ஓரம் அமர்ந்து, “பாஸ், எனக்கு என்னவோ பயமா இருக்கு. ஒருவேளை வண்டி கிளம்பத் தாமதமாகும் போலயே?” எனத் தவிப்புடன் கேட்க,
“கவலைப்படாத அகல்யா… இப்போ பாரு, அடுத்த சிக்னல்ல வண்டி நிறையப் பேர் ஏறுவாங்க,” என ஆகாஷ் நம்பிக்கையூட்டினான்.
அவன் சொல்லி முடிப்பதற்குள், பேருந்து மெதுவாக நகரத் தொடங்கியது. வழியில் ஓரிரு நிறுத்தங்களில் சித்தார்த் ஏற்பாடு செய்த பயணிகள் கையில் பைகளுடன் ஏறத் தொடங்கினார்கள்.
இப்போதுதான் அகல்யாவுக்கு நிம்மதி வந்தது. “நல்லவேளை பாஸ், ஆட்கள் வந்துட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் பயமே வந்துடுச்சு,” எனச் சிரித்தாள்.
ஆகாஷ் ஒரு நிமிடம் மனதுக்குள் சித்தார்த்திற்கு நன்றி சொல்லிக்கொண்டான். ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசத் தொடங்க, நீண்ட தூரப் பயணம் இனிமையாக ஆரம்பித்தது. நிலவின் வெளிச்சத்தில் அகல்யாவின் முகம் இன்னும் அழகாகத் தெரிந்தது.
பேருந்து சென்னை எல்லைகளைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் சீறிப் பாயத் தொடங்கியது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்தப் பேருந்துக்குள் ஒரு மெல்லிய அமைதி நிலவியது. வெளியிலிருந்த இரைச்சல்கள் அனைத்தும் கண்ணாடியைத் தாண்டி உள்ளே நுழைய முடியாமல் தவித்தன.
வண்டிக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டு, காலடியில் இருக்கும் நீல நிற இரவு விளக்குகள் மட்டும் ஒரு ரகசியமான சூழலை உருவாக்கியிருந்தன.
அகல்யா ஜன்னல் வழியாகப் பின்னோக்கி ஓடும் மரங்களையும், விளக்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தாள். ஏசி-யின் குளிரில் அவள் மெல்ல நடுங்குவதை கவனித்த ஆகாஷ்.
“அகல்யா… குளிருதா?” என அவன் மெல்லிய குரலில் கேட்க,
“கொஞ்சம்… ஆனா பழகிடும் பாஸ்,” என்றாள்.
ஆனால் ஆகாஷ் சற்றும் யோசிக்காமல், தன் டிராவல் பேக்கிலிருந்து ஒரு மெல்லிய போர்வையை எடுத்து அவளிடம் நீட்ட, “இந்தா… இதைப் போத்திக்கோ. குளிரோட தூங்கினா நாளைக்கு அங்க போனதும் டயர்ட் ஆகிடுவ,” என்றான் அக்கறையுடன்.
அவள் அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, சீட்டில் சற்று வசதியாகச் சாய்ந்தாள். வண்டியின் மெல்லிய அசைவும், ஏசி-யின் குளிர்ச்சியும் அவளைத் தூக்கத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றன. மெல்ல மெல்ல அவளது கண்கள் செருகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், அவளையும் அறியாமல் அவளது தலை மெதுவாகச் சரிந்து ஆகாஷின் தோளில் தஞ்சம் புகுந்தது.
அகல்யாவின் தலை தன் தோளில் பட்ட அந்த நொடி… ஆகாஷின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. உலகத்தையே விலைக்கு வாங்கத் துடிக்கும் அந்தப் பெரும் பணக்காரனுக்கு, அந்தத் தருணம் தன் ஒட்டுமொத்த சொத்துக்களையும் விட அதிக விலைமதிப்பற்றதாகத் தெரிந்தது.
அவளது கூந்தலின் மெல்லிய நறுமணம் அவன் சுவாசத்தை நிறைத்தது. அவன் அசையாமல் அப்படியே சிலையானான். “இந்த நிமிடம் இப்படியே நின்றுவிடக் கூடாதா? இந்தச் சாலை ஒருபோதும் முடிந்துவிடக் கூடாதா?” என அவனது மனம் ஏங்கியது.
“எல்லாரும் பிசினஸ் கிளாஸ்ல பறந்தா தான் சொர்க்கம்னு சொல்றாங்க… ஆனா, ஒரு பழைய பஸ்ல, பிடிச்சவ தோள்ல சாஞ்சு தூங்குறதுல இருக்கிற சுகம் எதுலயுமே இல்லடா சித்தா!” என மனதுக்குள் தன் நண்பனை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
திடீரென வண்டி ஒரு வேகத்தடையில் ஏறிக் குதித்தபோது, அகல்யா லேசாகக் கண் விழித்தாள். தன் தலை அவன் தோளில் இருப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள்.
“ஐயோ… சாரி பாஸ்!.. நான் தூக்கத்துல அப்படியே சாஞ்சுட்டேன்,” எனப் பதறினாள்.
ஆகாஷ் சிரித்துக்கொண்டே, “பரவாயில்லை அகல்யா. உன் தலை ரொம்பக் கனம்னு நினைச்சேன், ஆனா இப்பதான் தெரியுது அது முழுக்கக் கனவுகள் தான் இருக்குன்னு. அப்படியே சாய்ஞ்சுக்கோ… எனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லை,” என்றான் குறும்பாக.
அகல்யா வெட்கத்துடன் சிரித்துவிட்டு, “அப்படி இல்லை பாஸ்… நீங்க என் பாஸ், நான் இப்படி உங்க மேல சாஞ்சு தூங்குறது முறையான்னு தெரியல,” என்றாள்.
“ஹோ.. அப்போ அந்த லிப்ட் கிட்ட கட்டி பிடிச்ச அப்போ நான் யாருனு தெரியலையோ?” என கிண்டலுடன் கேட்க ..
“பாஸ் அதே சொல்லி கட்டாதிங்க … அது ஒரு எமோஷனல் ல பண்ணினது … !” என்றவளின் முகம் சிவக்க
“இப்போ நான் உன் பாஸ் இல்லை அகல்யா. நாம ரெண்டு பேரும் ஒரு பயணத்துல இருக்கிற நண்பர்கள். ஒரு நண்பனோட தோள்ல சாய உனக்கு உரிமையே இல்லைன்னு சொல்றியா?” எனக் கேட்டு அவளைச் சங்கடப்படுத்தினான்.
அவள் சிரித்துக்கொண்டே மீண்டும் மெதுவாக அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டாள். இம்முறை பயமோ தயக்கமோ இன்றி, ஒரு நம்பிக்கையுடன்.
ஆகாஷ் அவள் உறங்கிவிட்டாள் என்றே முடிவு செய்தான். அவளது சீரான சுவாசமும், அசைவற்ற நிலையும் அவனுக்கு அந்த நம்பிக்கையைத் தந்தது. “இந்தத் தூக்கம் இவளுக்கு ரொம்பத் தேவை” என நினைத்தவனாய், அவள் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானும் சிலையாக அமர்ந்திருந்தான்.
பேருந்து செங்கல்பட்டு டோல் கேட்டை நெருங்கியபோது, நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக இயங்கும் அந்தப் பகுதியின் வெளிச்சம் ஜன்னல் வழியே உள்ளே பாய்ந்தது. சில சிறுவர்கள் ஜன்னல் ஓரங்களில் கொய்யாப் பழங்களையும், நறுக்கிய மாம்பழங்களையும் ஏந்தியபடி, “சார்… பழம் சார்!” எனச் சத்தமிட்டனர்.
சட்டென ஆகாஷின் தோளில் இருந்து நிமிர்ந்த அகல்யா, தன் பையிலிருந்து சில்லறைகளை எடுத்து ஜன்னல் வழியே நீட்டி, ஒரு பாக்கெட் பழங்களை வாங்கினாள்.
ஆகாஷ் அதிர்ச்சியில் அவளையே பார்த்தான். “அடிப்பாவி! நீ இன்னும் தூங்கலையா? நான் நீ தூங்கிட்டன்னு நினைச்சு மூச்சுக் கூட விடாம, சிலையாட்டம் உட்கார்ந்திருக்கேன்!” என்றான் போலி கோபத்துடன்.
குறும்புடன் சிரித்த அகல்யா, “தூங்குற மாதிரி நடிச்சாதானே பாஸ், உங்க தோள் எனக்குத் தலகாணியா கிடைக்கும்? அதுவும் இல்லாம, இந்தத் தலகாணி கொஞ்சம் காஸ்ட்லி ஆச்சே… அதான் மிஸ் பண்ணாம அனுபவிச்சேன்,” என அவள் கண்ணடிக்க, ஆகாஷிற்கு முகம் சிவந்தது.
“இந்த நேரத்துல எதுக்கு இந்தப் பழம்? பசிக்குதா?” என ஆகாஷ் கேட்க,
“எனக்கு இல்ல பாஸ், உங்களுக்குத்தான்! வண்டி ஏறினதுல இருந்து வெறும் காத்தையும், என் கதையையும் மட்டும்தான் சாப்பிட்டுட்டு வர்றீங்க. இந்தாங்க, இதைச் சாப்பிடுங்க,” என ஒரு துண்டு கொய்யாப் பழத்தை அவனிடம் நீட்டினாள்.
ஆகாஷ் அதை வாங்கிக் கொண்டே, “பாருடா… என் மேல இவ்வளவு அக்கறையா? இதுல உப்பைக் கொஞ்சம் கம்மியா தூவியிருக்கலாமே?” எனச் சாப்பிட்டபடியே கிண்டல் செய்தான்.
“உப்பு இல்லாம வாழ்க்கை சப்புன்னு இருக்கும் பாஸ்! அதுவும் இல்லாம, ஒரு PAவுக்கு இவ்வளவு கூடவா தாங்கிக்கத் தெரியாது?” என அவள் வம்பிழுத்தாள்.
“ஏய்… மறுபடியும் பாஸ்னு கூப்பிடுற? இங்க நான் உன் டிராவல் பார்ட்னர் மட்டும்தான்னு சொன்னேன்ல?”
“சரிப்பா… என் பார்ட்னர் சார்! இப்போ சந்தோஷமா?” என அவள் சொல்ல, அந்த பார்ட்னர் என்ற வார்த்தையில் ஆகாஷின் மனம் சிறகடித்துப் பறந்தது.
“சரி, அகல்யா… ஒரு கேள்வி. உண்மையிலேயே நான் உன் கூட வருவேன்னு நீ நம்பினியா?” என ஆகாஷ் மென்மையாகக் கேட்டான்.
அகல்யா பழத்தைச் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “உண்மையைச் சொல்லட்டுமா? நீங்க வரலன்னாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஆனா, நீங்க வந்தது எனக்கு ஒரு பெரிய மேஜிக் மாதிரி இருந்தது. இதுவரைக்கும் என் லைஃப்ல மேஜிக் நடந்ததே இல்லை, ஆனா இன்னைக்கு அது நடந்திருக்கு, பாஸ்… அச்சோ சாரி.. சாரி.. பார்ட்னர்! ” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
ஆகாஷ் அவள் கையை மெல்லத் தொட்டு, “உன் வாழ்க்கையில இனிமே வெறும் மேஜிக் மட்டும் தான் நடக்கும். இப்போ பாரு…” எனத் தன் பேக்கிலிருந்து ஒரு பெரிய தேன் மிட்டாய் பாக்கெட்டை எடுத்தான். “நீ பழம் வாங்கின… நான் உனக்குப் பிடிச்ச தேன் மிட்டாய் வாங்கிட்டு வந்திருக்கேன்!”
அகல்யா ஆச்சரியத்தில் துள்ளினாள். “வாவ்! இது உங்களுக்கு எப்படிக் தெரியும்? நான் இதைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு!”
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதது ஒன்னும் இல்ல அகல்யா. உன் மனசு மாதிரி இதுவும் இனிப்பா இருக்கும், ஆனா கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும்,” என அவன் சொல்ல,
“தேன் மிட்டாயைப் பத்தி சொல்றீங்களா… இல்ல உங்களைப் பத்தியா?” என அவள் கேட்க, இருவருமே அந்தப் பேருந்தின் அமைதியில் சத்தமாகச் சிரித்தார்கள்.
பேருந்து விழுப்புரம் நோக்கித் தன் வேகத்தை அதிகரித்தது. அகல்யா மீண்டும் அவனது தோளில் சாய்ந்தாள். இம்முறை அவள் கண்கள் மூடியிருந்தன, ஆனால் அவளது இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை படிந்திருந்தது.
ஆகாஷ் ஜன்னல் வழியே தெரியும் நிலவைப் பார்த்து, “தேங்க்ஸ் சித்தா! நீ சொன்னது சரிதான்… இது நிஜமாவே காதல் கிளாஸ் தான்!” என மனதுக்குள் சொல்லிக்கொள்ள,
அதே நேரம் பேருந்து ஒரு சிறிய உணவகத்தின் முன் பஸ் நின்றது. “கோவை செல்லும் பயணிகள் 10 நிமிடம் இறங்கலாம்!” என்ற டிரைவரின் குரல் கேட்டு இருவரும் கீழே இறங்கினர்.
அதிகாலைக் குளிரும், அந்தப் பகுதி முழுக்கப் பரவியிருந்த டீத்தூள் வாசனையும் ஒரு இதமான சூழலைத் தந்தது.
இரண்டு ஸ்ட்ராங்’ டீ ஆர்டர் செய்துவிட்டு, புகையும் அந்தத் தம்ளர் கைகளுடன் கடையின் ஓரமாக நின்றனர்.
“என்ன பார்ட்னர்… தூக்கம் கலைஞ்சிடுச்சா?” என ஆகாஷ் கிண்டலாகக் கேட்க
“உங்க தேன் மிட்டாய் பாக்கெட்ல இருந்த ருசி என் தூக்கத்தையே விரட்டிடுச்சு பாஸ்… சாரி, பார்ட்னர்!” எனச் சிரித்தாள் அகல்யா. அந்தப் புகையும் டீயை ஒரு மிடறு பருகியவள், மெல்ல
“பார்ட்னர், நீங்க ஏன் அந்தப் பழத்தை வாங்கினேன்னு கேட்டீங்கல்ல? அந்த டோல் கேட்ல அந்தச் சின்னப் பசங்க நள்ளிரவுல பழம் விக்கிறதைப் பார்த்தப்போ எனக்கு மனசுக்குள்ள ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இந்த வயசுல அவங்க நிம்மதியாத் தூங்கணும், இல்லன்னா படிக்கணும். ஆனா அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லாம இப்படி ரோட்டுல நிக்கிறாங்களே…” என அவள் குரல் சற்று தழுதழுத்தது.
ஆகாஷ் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்னால அவங்க வாழ்க்கையை ஒட்டுமொத்தமா மாத்திட முடியாது. ஆனா, அவங்ககிட்ட இருந்து அந்தப் பழத்தை வாங்கும்போது அவங்க முகத்துல ஒரு சின்ன நிம்மதி வருமே… இன்னைக்குக் கணக்கு முடிஞ்சது, இனிமே வீட்டுக்குப் போய் தூங்கலாம்-னு அவங்க நினைப்பாங்கல்ல? அந்த ஒரு சின்ன உதவி எனக்குப் பெரிய திருப்தியைத் தருது பாஸ். அதான் வாங்கினேன்,” என்றாள் மிகவும் எதார்த்தமாக.
ஆகாஷ் அவளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். “நீ ஒரு சாதாரண பொண்ணு இல்ல அகல்யா. எல்லாரும் பழத்தோட டேஸ்ட்டைப் பார்ப்பாங்க, ஆனா நீ அந்தப் பழத்தை விக்கிறவனோட கண்ணீரைப் பார்க்குற,” என்றான் அவளது குணத்தைப் பாராட்டும் விதமாக.
அகல்யா வெட்கத்தைச் சமாளிக்க, “என்ன… ரொம்பப் புகழுறீங்க போல? இந்தத் டீக்கு நான் தானே காசு கொடுக்கணும், அதான் இவ்வளவு ஐஸ் வைக்கிறீங்களா?” சரி சரி கொடுக்குறேன் … ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன்!”என சொல்லி சிரிக்க
ஆகாஷ் டீயைக் குடித்து முடித்துவிட்டு, “அடப்பாவமே! அதுக்கும் ஒரு கண்டிஷனா!” எனக் கண்ணடித்தான்.
“இப்போ வண்டி ஏறுனதும் மறுபடியும் உங்க தோள்ல நான் சாய்ஞ்சுப்பேன். நீங்க அசையாம அப்படியே உட்கார்ந்திருக்கணும். இதுதான் தண்டனை!” என அவள் துறுதுறுவெனச் சொல்ல,
“இது தண்டனையா இல்ல எனக்குக் கிடைக்கிற வரமா?” என ஆகாஷ் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். வண்டி நகரத் தொடங்கியதும், அகல்யா தன் போர்வையைச் சரிசெய்தபடி, “பாட்னர்… ஒரு விஷயம். நீங்க நிஜமாவே PA வேலையில தான் இருக்கீங்களா? இல்ல எதாவது சினிமாவுல ஹீரோவா நடிக்கிறீங்களா? ஏன்னா நீங்க பேசுறதெல்லாம் அப்படியே பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு!” எனத் திடீரெனக் கேட்டாள்.
ஆகாஷ் திடுக்கிட்டான். “ஏன்… அப்படித் தெரியுதா?”
“பின்ன என்ன… டீக்கடையில நீங்க கொடுத்த அந்த லுக், தேன் மிட்டாய் கொடுத்த அந்த ஸ்டைல்… இதெல்லாம் பார்த்தா எனக்குச் சந்தேகமா இருக்கு,” என அவள் கிண்டல் செய்ய,
“அகல்யா… நான் ஹீரோவோ இல்லையோ, ஆனா உன்னோட இந்தப் பயணத்துல நான் ஒரு நல்ல பார்ட்னரா இருப்பேன்னு மட்டும் உறுதி தரேன். இப்போ தண்டனையை ஆரம்பி… தூங்கு!” என அவன் தன் தோளைக் காட்ட,
“ஆமா… தலகாணி ரெடியா இருக்கு!” எனச் சிரித்துக்கொண்டே அவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.
🌧️தூறல்கள் தொடரும்…
