அத்தியாயம் 16

“என்னாச்சு மித்து.. இப்படியா அந்த பொண்ணை தள்ளி விடுவ. அறிவில்லையா உனக்கு?” – அரவிந்த்.

“பாவம் பயந்து போயிருப்பாங்க. உன் விளையாட்டுக்கு அளவு இல்லையா?”- சத்யா.

“சார் நதியா இன்னும் முழிக்கல. பேசாம ஹாஸ்பிடலுக்குப் போயிடலாமா?” – விஷ்ணு.

அவளுக்கு காற்றோட்டமாக இருக்கட்டுமென இடம் விட்டு, சற்று தள்ளி நின்றிருந்தவர்கள் ஆளுக்கொன்றாய்ச் சொல்லிட,

“நதியா வேக்கப், என்னைப் பாரு” மிதுன் அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பினான்.

‘என்னை தண்ணிக்குள்ள தள்ளி விடுறியா ரோபோ. நல்லா திட்டு வாங்கு. கொஞ்ச நேரம் நல்லா அழட்டும்’ மனதிற்குள் நினைத்தவாறு கண்மூடி நடித்தாள் நதியா.

அவள் விழியசைவைக் கவனித்துவிட்ட மிதுன், “ஹாஸ்பிடலுக்கு வேணாம் விச்சு. வாய்ல வாய் வச்சு தண்ணியை எடுத்துட்டோம்னா அவ முழிச்சிடுவா” சிரிப்பை அடக்கியவாறு சொல்ல, திடுக்கிட்டு கண்களைத் திறந்தவள், “அய்யோ.. எனக்கு ஒண்ணும் இல்ல, நான் நல்லா இருக்கேன்” என்று அருகில் இருந்த மிதுனைத் தள்ளிவிட்டு எழுந்து ஓட, நண்பர்கள் மூவரும் சத்தமாகச் சிரித்தனர்.

அருகிலிருந்த நீச்சல் குளத்தின் கரையில், நீரில் கால்களை நனைத்தபடி நதியா அமர்ந்திருக்க, விஷ்ணு அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தவன், “ஹே.. பார்த்து போக மாட்டியா? நான் பயந்து போயிட்டேன்” என அவள் தோளில் தட்டினான். 

“நான் எங்க விழுந்தேன். அந்த ரோபோ தான் தள்ளி விட்டுட்டார்” நதியா அவனது தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். மற்றவர்கள் கேண்டீனுக்குச் சென்று கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ்கிரீம் வாங்கி வந்தனர். மிதுன் வேகமாக வந்து அவளுக்கு மறுபக்கம் அமர்ந்து கொண்டான்.

விஷ்ணு அவளுக்கு கூல்ட்ரிங்க் டின்னை ஓபன் செய்து தர, அவளோ யாரையும் கண்டுகொள்ளாமல் அவனது தோளில் சாய்ந்தவாறு அதைக் குடித்தாள். 

மிதுனுக்கு இதைப் பார்க்கும் போது தன்னுடைய மனதில் ஒருவித அழுத்தத்தை உணர முடிந்தது. கட்டுப்படுத்த நினைத்தாலும் அவனையும் மீறி அது எரிச்சலாக மாற, “நதியா.. சாயாம ஒழுங்கா உட்கார்ந்து குடி” என அவளை அதட்டினான்.

‘ரோபோ ஆரம்பிச்சுருச்சு’ முகத்தை சுளித்தவாறு விஷ்ணுவின் தோளில் சாய்ந்திருந்தவள் எழுந்து கொள்ள, மிதுனின் கண்களில் தெரிந்த பொறாமைத் தீயை அவனது நண்பர்கள் கண்டு கொண்டனர். வாங்கியதெல்லாம் சாப்பிட்டு முடித்த பின்னர், அவர்கள் அங்கிருந்து நகர்ந்து வேறு இடத்திற்குச் சென்றனர். 

நதியாவின் பின்னே சென்று கொண்டிருந்த விஷ்ணுவின் கழுத்தோடு அவனைப் பிடித்து இழுத்த அரவிந்தும், சத்யாவும், “டேய் விச்சு.. நதியா கூடவே ஏன் போற? அதான் மிதுன் இருக்கான்ல. அவன் பார்த்துப்பான்” என்று சொல்ல, “இப்போ நீங்க பண்ணிட்டு இருக்குறதுக்கு பேர் என்ன தெரியுமா?” என்று குறும்பாக கேட்டவன், அவர்களுக்கு அர்த்தம் புரியும்முன் அங்கிருந்து ஓடியிருந்தான். 

நதியாவும் மிதுனும் தனித்து விடப்பட்டனர். இருவரும் ஜெயின்ட் வீல், ரோலர் கோஸ்ட், ஸ்கை டில்ட்டில் சேர்ந்தே ஏறினார்கள். காற்றின் வேகத்தை எதிர்கொள்ள, பயத்தைக் கட்டுப்படுத்த அவள் மிதுனின் கையோடு கை கோர்த்து அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவனும் அவளது கையைப் பிடித்து, தோளைப் பிடித்து, சில சமயம் இடையைப் பிடித்து அவளைத் தன் கை வளைவிற்குள்ளே வைத்திருந்தான். 

அவனது அணைப்பில் எந்தவித விரசமும் இல்லை. அவளும் அந்த அணைப்பினில் பாதுகாப்பை உணர்ந்தாள். மிதுனும் அவளுடன் சேர்ந்து கத்தி, சிரித்து என்ஜாய் செய்து கொண்டிருக்க, நதியாவிற்கு அவனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 

“உங்களுக்கு அறிவே இல்லையா? புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணா இருக்கும்போது நீங்க எதுக்கு அவங்களுக்கு இடையில போறீங்க?” என்று சொன்னவாறு விஷ்ணுவிற்கு அருகில் வந்தாள் வைஷாலி.

அவளைப் பார்த்து திகைத்தவன், ‘அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டின்னு நீ பார்த்த.. வர வர புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைச்சுடுச்சு’ மனதோடு நினைத்து அவளையே அழுத்தமாய்ப் பார்த்தான்.

“உங்களைத் தான்.. லவ்வர்ஸ் தனியா இருக்கும் போது ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க?” வைஷு எரிச்சலோடு கேட்க,

“சரிப்பா.. இனிமே அவங்களுக்கு இடையில போகல. ஆமா அன்னைக்கு நடந்ததை உன்னோட வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்ல, நீ எதுக்கு சொன்ன?” அவளை எதிர்க்கேள்வி கேட்டான்.

“பாவம் அண்ணி. என்னால தான் எல்லார்கிட்டயும் திட்டு வாங்கினாங்க. இதுக்கு பதிலா அன்னைக்கு எனக்கு ஏதாவது ஆகியிருந்தாக்கூட பரவாயில்ல. எனக்காக அவங்க கஷ்டப்படுறதைப் பார்க்க முடியல” வைஷு தழுதழுத்த குரலில் சொல்லிட, விஷ்ணு அவளை வியப்புடன் நோக்கினான்.

“நீ இன்னும் மாறவே இல்ல” சிரித்தவாறு அவள் தலையை வருடியவன், “நிறைய சீரியல் பார்ப்பியோ? அன்னைக்கு பெரிய பெரிய வசனம் எல்லாம் பேசிருக்க” அவள் மனதை மாற்றிடவே  குறும்பாகப் பேசினான்.

“அதெல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு நிஜமாவே அறிவில்லையா? என்னைக் காப்பாத்த அண்ணியை மட்டும் தனியா அனுப்பியிருக்கீங்க. அன்னைக்கு அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா, எனக்கு காலமெல்லாம் குற்ற உணர்ச்சியா இருந்திருக்கும்” கோபத்தில் மூக்கு விடைக்க பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்து, மென் புன்னகை உதிர்த்தான்.

“அதை விடு, வா நாம ரைடு போகலாம்” என்று அவன் பேச்சை மாற்ற, “எனக்குத் தனியா போகத் தெரியும், நான் போயிக்கிறேன்” சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு முன்னே நடந்தாள்.

‘மிதுன் தங்கச்சி தான. அண்ணன் திமிரு கொஞ்சம் கூட இல்லனா எப்படி? ஆனா உங்க வீட்ல யாருக்குமே இல்லாத நல்ல மனசு உனக்கு இருக்கு மா’ விஷ்ணு மனதோடு பேசிச் சென்றான்.

வைஷாலி ரோலர் கோஸ்டரில் ஏறுவதற்காக, வரிசையில் நின்றிருக்க, அவளுக்குப் பின்னே இருந்த சில இளவயது ஆண்கள் அவளைக் கிண்டல் செய்தவாறு இருக்க, சங்கோஜமாக உணர்ந்தாள். “வைஷு.. கொஞ்சம் தள்ளி நில்லு” என அவளுக்கருகில் வந்து நின்றான் விஷ்ணு. 

அவளுக்கு அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ‘இவரைப் பார்த்ததும் ஏன் எனக்கு பாதுகாப்புணர்வு தோன்றுகிறது?’ விஷ்ணுவிற்குப் பதிலாக மனதிற்குள் யோசித்தாள் வைஷு.

அனைவருக்கும் பசி எடுக்கவே, அவர்கள் சாப்பிடச் சென்றனர். ஆளுக்கொரு மட்டன் பிரியாணியும், ஃபுல் கிரில் சிக்கன், ஹரியாலி கிரில் சிக்கன், பார்பிக் சிக்கன், தந்தூரி சிக்கன், பெப்பர் சிக்கன் ஆர்டர் தந்தனர். டேபிளின் ஒரு பக்கத்தில் வைஷாலி, மிதுன், நதியா, விஷ்ணு அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் ரேஷ்மி, அரவிந்த், சத்யா மூவரும் அமர்ந்திருந்தனர்.

ஆர்டர் செய்த சிக்கன் வந்ததும், நதியா அதையெல்லாம் எடுத்து அதற்கான கத்தியில் வெட்டி எல்லோருக்கும் பரிமாறினாள். அதன்பிறகு அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “அவங்கவங்க எடுத்துப்பாங்களே. எதுக்கு நீ பரிமாறுற?” விஷ்ணு ஹஸ்கி வாய்ஸில் அவளிடம் கேட்க, “அப்புறம் எனக்கு லெக் பீஸ் கிடைக்காம போயிடும், அதுக்குதான்” என்றாள்.

அவன் ‘அடிப்பாவி..’ என்பதைப் போல அவளைப் பார்த்திட, சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள். இவர்கள் பேசியதைக் கேட்ட மிதுன் சாப்பிட்டு முடித்து, அவன் சாப்பிடாமல் வைத்திருந்த லெக் பீஸ் சிக்கன் துண்டுகளை நதியா தட்டில் வைத்துவிட்டு எழுந்தான். 

மிதுன் நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவர்களைப் பார்க்க, நதியா ஒன்றும் பேசாமல் அவன் வைத்ததையும் சாப்பிட்டாள். “என்ன ரோபோக்கு பாசம் பொங்குது?” விஷ்ணு நதியா காதில் கிசுகிசுக்க, ‘எல்லாம் நைட் வந்து என்னை தூங்க விடாம பண்ணத்தான். இல்லனா அவருக்கு ஏன் என் மேல அக்கறை’ மனதில் நினைத்து பெருமூச்சு விட்டாள். 

சாப்பிட்டதும் பெரிய ரைடுகளில் ஏற வேண்டாம் என நினைத்து, கொஞ்ச நேரம் வாட்டர் ட்ரெயின், 3D ஷோ, கோஸ்ட் ரூம் போன்ற இடங்களுக்குச் சென்றபின், அடுத்து ரெயின் டான்ஸ் சென்றனர். 

“ஹையோ எனக்கு இது ரொம்ப பிடிக்கும்” என்றவாறு செயற்கை மழையில், அங்கு போட்ட பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தாள் நதியா. வைஷாலியும், ரேஷ்மியும் அவளுடன் சேர்ந்து கொள்ள குத்துப் பாடல்களுக்கு நடனமாடினர்.

அரவிந்த் வேகமாக சென்று ரேஷ்மியை நின்றவாறு அப்படியே தூக்கிக் கொள்ள, அவள் சிரித்தவாறு அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள். மற்றவர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்த, அவளை இறக்கி விட்டவன் அவளுடன் சேர்ந்து நடனமாடினான். 

எல்லோரும் ஆடி ஓய்ந்து போய் அமர, நதியா மட்டுந்தான் வர விருப்பமில்லாமல் இன்னும் ஆடியவண்ணம் இருந்தாள். மிதுன் வேகமாக எழுந்து சென்றதும், ‘அவன் அவளைப் போய் இழுத்து வரப் போகிறான்’ என யாவரும் நினைத்து அவர்களைப் பார்த்திருக்க, 

இவ்வளவு நேரம் நதியாவின் அழகான நடனத்தை ரசித்திருந்தவன், எழுந்து சென்று அவளை இடையோடு கை வைத்து இரு கைகளில் ஏந்திக் கொள்ள, அவளுக்கு பறப்பதைப் போல தோன்ற கைகளை நீட்டி தன்மீது மழையென விழும் நீரை ரசித்திருந்தாள். 

பிறகு விழாமல் இருக்க, அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், அவன் சிரித்த முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாள். குளிர்ந்த நீரில் நனைந்த அவளது உடல் சில்லிட்டு இருக்க, அவன் தொட்ட இடமெல்லாம் இன்னும் அதிகமாய் அவளுக்குச் சிலிர்ப்பைத் தந்தது. 

அவளை இறக்கி விட்டவன், சட்டென்று அவளை அணைத்துக் கொண்டு நடனமாட, அவள் உடலில் எங்கெங்கோ தழுவிய அவனது கைகள், அவளுக்குக் கூச்சத்தைத் தர, ஆட முடியாமல் தடுமாறினாள். 

அவளுடன் நடனமாடலாம் என்று நினைத்துச் சென்ற மிதுன், அவளைத் தூக்கியதும், அவளை அணைத்துக் கொண்டு ஆடியதும் அவனை மீறி நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள். ஏனோ அவளின் நெருக்கம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர மிதுன் அதை இழக்க விரும்பாமல், ரசிக்க ஆரம்பித்தான். 

விழும் நீரில் நனைந்திருந்த அவள் பூமுகமும், செவ்விதழும் அவனுக்குள் ரசாயன மாற்றத்தை உண்டாக்கியிருக்க, அவள் இதழை சிறைக் கொள்ளத் துடிக்கும் அதரங்களைக் கட்டுப்படுத்தி அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து வந்தான். 

இதெல்லாம் பார்த்திருந்த மிதுனின் நண்பர்களுக்கும், விஷ்ணுவுக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறைதான். ‘அவன் உண்மையிலேயே நதியாவைக் காதலித்தால் மகிழ்ச்சி தான். ஆனால் குழந்தைக்காக லவ் மேக்கிங், ரொமான்ஸ் என்று அவளின் உணர்வுகளோடு விளையாடி விடுவானோ?’ என்ற பயமும் இருக்கிறது மூவருக்கும்.

பார்க் டைம் முடிந்ததும், உடை மாற்றிக் கிளம்பினார்கள். காரில் டிரைவருக்கு அருகில் மிதுன் அமர்ந்திருக்க, அவனுக்குப் பின்னிருந்த சீட்டில் விஷ்ணு, நதியா, வைஷாலி அமர்ந்திருக்க, பின் சீட்டில் ரேஷ்மி, அரவிந்த், சத்யா அமர்ந்திருந்தனர். 

நதியா அசந்து தூங்கி விழுந்தவள், தலையை விஷ்ணு தோளில் சாய்த்துக் கொண்டாள். இதைப் பார்த்திருந்த மிதுன் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கியவன், விஷ்ணுவை முன்னால் மாறச் சொல்லி நதியாவிற்கு அருகில் சென்றமர்ந்தான். மீண்டும் அவள் தூக்கக் கலக்கத்தில் மிதுன் தோளில் விழ, அவனோ அவளை இழுத்து மார்பில் சாய்த்தவன், அவளைத் தன் கை வளைவிற்குள் தூங்க வைத்திட, அவளுக்குத் தூங்குவதற்கு வசதியாக இருந்தது. 

இதைப் பார்த்திருந்த ஆண்கள் மூவரும் வாயைப் பிளந்தனர். மற்ற அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கிய பின்னர் மிதுன் வீட்டிற்கு கார் சென்றது. கார் நின்றதும் மூவரும் அரைத் தூக்கத்தில் எழுந்து உள்ளே சென்றனர். ‘நதியா.. பேசாம போய் தூங்கிடு. கூப்பிட்டா சத்தம் போடாத. ஏற்கனவே டயர்டா இருக்கு. இன்னும் டயர்டாக உடம்புல தெம்பில்ல’ அவள் யோசித்தவாறு போய் மெத்தையில் விழுந்தாள். 

“நதியா.. வேக்கப்..” ” நதியா.. எழுந்து பாரு..” மிதுன் அவளை எழுப்பிக் கொண்டேயிருக்க, அவளோ பதிலேதும் பேசாமல் விழித்தபடிதான் கண்களை மூடிப் படுத்திருந்தாள். அவளுக்கு அருகில் அவன் நெருங்கி வர, ‘அய்யோ தூக்கி ஷவர்ல நிக்க வச்சிடுவான்’ எனப் பயந்துபோய் எழுந்து அமர்ந்தாள்.

“இந்தா டேப்லெட் போட்டுக்கோ. உனக்கு ஃபீவரா இருக்கு. டேப்லெட் போட்டுட்டு தூங்கு” அவன் காய்ச்சலுக்கான மாத்திரையும் தண்ணீரும் தர, அதைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டவள், ‘நான் கனவுல எதும் இருக்கேனா’ ஏதேதோ நினைத்தவாறு அப்படியே தூங்கிப் போனாள். 

அவனுக்கோ தூக்கம் வர மறுத்தது. ஒருபக்கம் முகம் தெரியாக் காதலியின் நினைவுகள், மறுபக்கம் நதியாவுடனான உறவு, இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவித்தான். மிதுனின் மனம் மெல்ல நதியாவின் பக்கம் ஈர்க்கப்படுகிறது. 

வைஷாலி பிரச்சினைக்குப் பிறகு, மிதுனுக்கு நதியா விஷயத்தில் தான் செய்வது மிகப்பெரிய தவறோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. 

எந்தவித உணர்வுகளுமின்றி அவளை நெருங்கிட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ‘தன் கட்டுப்பாடுகளை மீறி அவளிடம் முழுதாய் சரணடைந்து விடுவேனோ?’ என்ற பயம் அவனைச் சூழ ஆரம்பித்திருக்கிறது. இரவெல்லாம் யோசனையில் இருந்தவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். 

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page