நிழல் – 6

மாலை நேரத்தின் மெல்லிய சாயல் பெங்களூர் கல்லூரி வளாகத்தை மெல்ல மூடிக் கொண்டிருந்தது. மேற்கு வானத்தில் சூரியன் ஆரஞ்சு நிறத்தில் கரைந்து கொண்டிருக்க, அந்தப் பொன்னிற ஒளி கல்லூரி கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களில் பட்டுத் தெறித்தது.

கேண்டீன் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, சமோசாவின் வாசனையும், காபியின் நறுமணமும் காற்றில் கலந்திருந்தன. பெஞ்சுகளில் நெருக்கமாக அமர்ந்திருந்த மாணவர்கள், தங்கள் நாள் முழுவதும் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அந்த சலசலப்பான சூழலில், ஒரு மூலை மேஜையில் பவித்ரா அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. அவள் கண்கள் தன் முன் வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது காலையில் மைதானத்தில் பார்த்த அந்த இளைஞனின் நிழல். அவனை மதிய வேளையில் திட்டியதும், அவன் கண்களில் தெரிந்த அந்த அதிர்ச்சியும் அவளை வாட்டிக் கொண்டிருந்தன.

‘ச்ச…! நாம ஏன்… அவன் மேல அவ்ளோ கோவப்பட்டோம்…? கொஞ்சம் பொறுமையாவே பேசியிருக்கலாம்…’ என்று ஒரு புறம் அவள் அவனை நினைத்து கவலையில் மூழ்கிக் கிடக்க,

மறுபுறம், “நாம ஏன் அவன நெனச்சு இவ்ளோ கவலைபட்றோம்…?” என்று அவள் மனம், அவளைத் திட்டித் தீர்த்தது.

இவ்வாறு அவள் மனம் போராடிக் கொண்டிருக்க,  அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த ஆர்த்தி, தட்டில் இருந்த சமோசாவை பரம சுகமாக கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

ஒவ்வொரு கடியிலும் அவளது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. சட்னியை சமோசாவில் தொட்டு, அதை ரசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்த்தி, பவித்ராவின் அமைதியை பார்த்தாள்.

பவித்ராவின் முகத்தில் இருந்த சோகத்தை கவனித்த ஆர்த்தி, சமோசாவை மென்ற படியே கேட்டாள், “என்ன பவி… இன்னும் உன் ஃப்ரெண்ட் பத்திதான் யோசிச்சுக்கிட்டு இருக்கியா?”

பவித்ரா லேசாக தலையை அசைத்தாள். “இல்ல ஆர்த்தி… நா… அந்த பையன பத்தி தான் நெனச்சுக்கிட்டு இருந்தே…”

ஆர்த்தி குழம்பினாள். “பையனா…? எந்த பையன்…?”

“மதியம்… நா திட்டின பையன்… அவன பத்தி தான்… நா அவன் கிட்ட ரொம்ப கோவப்பட்டுட்டேனோன்னு….” பவித்ரா மெல்ல கூறினாள்.

ஆர்த்தி சிந்தனையில் ஆழ்ந்தாள். அவள் நினைவை தேடி பார்த்தாள். “மதியம் நீ யாராவது திட்டினியா…? நா யாரையும் கவனிக்கலயே…!” என்று அவள் கூறினாள்.

பவித்ரா லேசாக புன்னகைத்தாள். “நீ கவனிச்சிருக்க மாட்ட… ஏன்னா…? உன் ஃபோகஸ் எல்லாம் அந்த நேரத்துல சாப்பாட்டு மேல மட்டும் தான் இருந்துச்சு…”

ஆர்த்தி தன் சமோசாவை பார்த்து சிரித்தாள். “ஆமா… ஒத்துக்கிறே… ஃபூட் இஸ் லைஃப் ஃபார் மீ…” என்று உற்சாகமாக கூறினாள்.

அவள் கூறியதை கேட்டதும் பவித்ரா மென்மையாக புன்னகைத்தாள். மீண்டும் சமோசாவை தன் வாயிக்குள் தள்ளியவாறு, “சரி… அவன் யாரு…? எதுக்காக அவன திட்டுன..? உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை…? “ என்று கேள்விகளை அடுக்கினாள் ஆர்த்தி.

பவித்ரா ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். “அவன் யாருன்னு எனக்கு தெரியல… நேத்து அவன… நம்ம ஹாஸ்டலுக்கு ஆப்போசிட் இருக்குற பார்க்கல பாத்தே… அப்பறம் காலேஜ்ல மார்னிங்ல இருந்து என்ன ஃபாலோவ் பண்ணிட்டே இருந்தான்…. அதான் கோவத்துல திட்டிட்டேன்… ஆனா… இப்போ… ஒருவேள அவன நா பாத்தது கோ-இன்சிடென்ட்டோன்னு தோணுது… தேவையில்லாம அவன திட்டிட்டோமோன்னு தோணுது…. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று வருத்தமாக கூறினாள்.

“அவன யாருன்னே தெரியாதுன்னு சொல்ற… அப்பறம் ஏன் அவன பத்தி கவலை பட்ற….?” என்று ஆர்த்தி கேட்க, 

சற்று அமைதியான பவித்ரா, “தெரியல… அவன் கஷ்டப்படும்போது… எனக்கும் வலிக்குது…” என்று கூறி ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.

ஆர்த்தி தன் சமோசாவை தட்டில் வைத்துவிட்டு, பவித்ராவை கவனமாக பார்த்தாள். “பவி… நீ அவன பத்தி இவ்வளவு கவலப்படுறன்னா… அவன் கிட்ட போயி சாரி சொல்லு…” என்று கூறியதும் பவித்ரா குழப்பமாக ஆர்த்தியை பார்த்தாள்.

“சாரியா…?” பவித்ரா ஆச்சரியமாக கேட்க, 

“ஆமா… யார் தப்பு யார் சரின்னு யோசிக்காம… உன் மன நிம்மதிக்காக… அவன் கிட்ட போயி சாரி சொல்லு… நீ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ…” என்று ஆர்த்தி அறிவுரை கூறினாள்.

இதை கேட்ட பவித்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள். ‘ஆர்த்தி சொல்றது சரி தான்… ஆனா… அவன் கிட்ட எப்படி போறது…? அவன் எங்க இருப்பான்…?’ என்று சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தாள்.

அந்த சமயம், தன் சமோசாவை முழுமையாக சாப்பிட்டு முடித்துவிட்ட ஆர்த்தி, தன் கையை துடைத்துக் கொண்டு எழுந்தாள். “ஓகே பவி… லெட்ஸ் கோ டு ஹாஸ்டல்… அங்க டீ நமக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு…” என்று அழைக்க, பவித்ரா அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள். 

“என்னது…? இப்போ தான நீ சாப்பிட்ட…” என்று பவித்ரா கேட்க, ஆர்த்தி சிரித்தாள். “ம்ம்ம்…..ஆமா… பட்… இது கேண்டீன் டீ… நாம காசு கொடுத்து வாங்கின டீ… ஆனா… அது… ஹாஸ்டல இருக்குறவங்களுக்கு மேனேஜ்மென்ட் தர்ற ஃப்ரீ டீ… அத ஏன் விட்டு வைக்கணும்…?” என்று சாதாரணமாக கேட்டாள் ஆர்த்தி. 

பவித்ரா சிரித்துக் கொண்டே தலையை அசைத்தாள். ‘இவள நம்மால சமாளிக்கவே முடியாது…’ என்று நினைத்துக் கொண்டாள்.

மேலும் அவள், “நீ போய் உன் டீய குடி…. எனக்கு ஆபீஸ்ல பில் காலக்ட் பண்ணணும்… அத முடிச்சுட்டு நா வர்றே…” என்று பவித்ரா கூறினாள்.

“ஓகே… அப்போ நா உன்னோட டீய வாங்கி வைக்கிறேன்… ஏன்னா… நீ வர லேட் ஆகிட்டா டீ காலியாகிடும்…. ” என்று ஆர்த்தி கூறினாள்.

“ஐயோ…! இன்னொரு டீயா… எனக்கு வேணாம்…” என்று பவித்ரா மறுக்க, “ஷ்யூர்-ஆ…?” என்று ஆர்த்தி உறுதி செய்து கொண்டாள்.

“டேம் ஷ்யூர்… ஐ ஆம் சோ ஃபுல்…” என்று பவித்ரா உறுதியாக கூறிவிட,  “ஓகே… அப்போ… உன் டீ என் வயிறுக்கு தான்…” என்று சிரித்தபடி கூறிவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறினாள் ஆர்த்தி.

பவித்ராவும் எழுந்து தன் காலியான காபி கோப்பையை கவுண்டரில் வைத்துவிட்டு, மெல்ல கேண்டீனை விட்டு வெளியேறினாள்.

வெளியில் வந்ததும், மாலை நேர குளிர்ந்த காற்று அவள் முகத்தைத் தழுவியது. வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் கலந்து ஒரு அழகான கோலத்தைக் காட்டியது. 

கல்லூரி வளாகம் மெல்ல மெல்ல மௌனமாக ஆரம்பித்தது. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் விடுதிகளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பவித்ரா நிர்வாக அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

அந்த நடைபாதையில் நடந்து செல்லும்போது, மீண்டும் அவள் மனதில் அந்த இளைஞனின் முகம் வந்தது.

‘அவன் யாரு…? ஏன் எனக்கு அவன் மேல இவ்வளவு கில்ட்டி ஃபீல் ஆகுது…? ஒரு வேலை… அவன்… என் பாஸ்ட் லைஃப்க்கு சம்மந்தபட்டவனா…? அதான்… அவன் என்ன பாத்ததும்… எனக்கு ஏதோ மாதிரி ஃபீல் ஆகுதா…?’ இந்த எண்ணங்களுடன், நிர்வாக அலுவலகத்தை அடைந்தாள் பவித்ரா. 

வெகுநேரம் காத்திருந்த பவித்ரா கடைசியாக தன் பில்லை சேகரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

இப்போது வானம் முழுவதும் இருட்ட ஆரம்பித்திருந்தது. வீதி விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக எரிய ஆரம்பித்தன. கல்லூரி வளாகம் இப்போது கிட்டத்தட்ட காலியாக இருந்தது.

பவித்ரா விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஆனால், அந்த பூங்காவை கடக்கும்போது, அவள் கால்கள் தானாகவே அங்கே நின்றன.

நேற்று இரவு கண்ட அதே பெஞ்ச். அதே மரங்கள். அதே அமைதி.

ஏதோ ஒரு சக்தி அவளை அந்த பூங்காவிற்குள் இழுத்துச் சென்றது. மெல்ல அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் பவித்ரா.

அந்த பெஞ்ச் அருகில் நின்றவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை.

மெல்ல அந்த பெஞ்சில் அமர்ந்தவள், தன்னை மறந்து அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். 

சில நிமிடங்கள் தனக்கு எதிரே இருந்த மரங்களை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த பவித்ரா, ‘ஏன் நா இங்க வந்தே…? நா ஏன் அவனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்குறே…?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் பவித்ரா.

வேகமாக எழுந்து அந்த பூங்காவை விட்டு வெளியேற முற்பட்டாள். ஆனால் அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. பூங்காவின் நடைப்பாதையில் அப்படியே உறைந்து நின்றவளின் மனம் அவனை காணமுடியாத ஏக்கத்தில் தவித்தது. 

எப்படியாவது அவனை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் அதிகரித்துக் கொண்டிருக்க, அவனை எங்கே தேடுவது என்று புரியாமல் தவித்து நின்றாள். 

அந்த சமயம்,  அவளுக்கு பின்னால் ஒரு மெல்லிய குரல் கேட்டது. “இங்க தனியா என்ன பண்றீங்க….?”

அவனது குரலைக் கேட்ட அந்த நொடி, பவித்ராவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்திவிட்டு, பின் மிக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அந்த குரல் தன் சிறு இதயத்தை துளைத்தது போல உணர்ந்தாள் பவித்ரா. 

குரல் வந்த திசையை மெல்ல திரும்பி பார்த்தாள். அவளுக்குச் சில அடி தூரத்தில், நிலவின் மெல்லிய ஒளியில் அவன் நின்று கொண்டிருந்தான்.

அந்த நிலவின் ஒளியில் தெரிந்த அவனது வசீகரமான தோற்றம் அவளை மெய் மறக்க செய்தது. அவன் ஒரு தூணைப் போல கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவனது அகன்ற தோள்களும், நேர்த்தியான உடல்வாகும் அவன் ஒரு விளையாட்டு வீரனோ அல்லது கடுமையான உழைப்பாளியோ என்ற எண்ணத்தை அவளுக்குள் ஏற்படுத்தியது.

அவனது கண்கள்… அது பவித்ராவிற்கு மகிழ்ச்சியான ஒரு வலியை உணர வைத்தது. அவனது ஆழமான பார்வையில் பல சோகங்கள் ஒளிந்திருப்பதை கண்டாள் பவித்ரா. 

காலையில் கோபத்தில் கத்தியபோது கவனிக்காத பல விஷயங்கள், இப்போது இந்த அமைதியான இரவில் அவளது கண்களுக்குத் தெரிந்தன.

அவனைப் பார்க்கப் பார்க்க, பவித்ராவிற்குள் ஒரு விசித்திரமான இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. அவன் ஒரு அந்நியன் என்று அவளது மூளை சொன்னாலும், அவனது அருகாமை அவளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது.

அவன் அவளைத் தொட்டுவிடவில்லை, ஆனால் அவனது பார்வை அவளது ஆன்மாவைத் தொடுவது போல ஒரு சிலிர்ப்பு அவளது உடலில் உண்டானது. 

அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நீண்ட மௌனம் நிலவியது. அந்த அமைதியில், பூங்காவின் இலைகள் உரசிக்கொள்ளும் சத்தமும், தூரத்தில் கேட்ட வண்டுகளின் ரீங்காரமும் மட்டுமே கேட்டன.

தன்னை பார்த்து உறைந்து நின்ற பவித்ராவை கண்ட சிவா மெல்லியதாக சிரித்தான். அவள் பார்வையில் தெரிந்த காதலை உணர்ந்தான் சிவா. முதல் முதலில் அவள் கண்களில் பூத்த அதே காதல் மலர் இப்போதும் வாசம் வீசுவதை கண்ட சிவாவின் மனம் அவளை தன் மார்போடு அணைத்துக் கொள்ள துடித்தது. 

அங்கே நிலவிய அந்த மௌனம் ஆயிரம் கதைகள் பேசுவதை போல உணர்ந்த சிவா, அந்த மௌனம் வெகு நேரம் நீடிக்க வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வைத்தான். 

பவித்ரா தன்னை மறந்திருந்தாலும் தன் மீது அவள் கொண்ட காதலை இன்னும் மறக்கவில்லை. அது அவளுக்குள்ளே புதைந்துதான் கிடக்கிறது என்பதை உணர்ந்த சிவாவின் மனதில் சிறு நடுக்கம் உண்டானது.

அதற்கு மேல் அவளை இவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தால், தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்த சிவா, அவளை சுயநினைவிற்கு கொண்டு வர சொடுக்கிட்டான்.

“ஹலோ… என்னங்க…? பதில் பேசாம அப்படியே நிக்கிறீங்க…” என்று அவன் கேட்டதும் தடுமாற ஆராம்பித்தாள் பவித்ரா.

“அது… அது… ஐ’ம்… சாரி… “ என்று திக்கித் திணறி தன் மன்னிப்பை கேட்டாள் பவித்ரா. அவளை கண்டு புன்னகை மாறாத சிவா, “எதுக்கு சாரி…?” என்று கேள்வி எழுப்ப, 

“அது… நா… அஃப்டர்நூன் உங்ககிட்ட  கொஞ்சம் மோசமா நடந்துகிட்டே அதான்…” என்று அவள் கூற, மீண்டும் மெல்லிதாக சிரித்தான் சிவா. 

அவன் சிரிப்பில் கரைந்த பவித்ரா, அதற்கு மேல் அங்கே நின்றிருந்தால், யாரென்று தெரியாத ஒருவனிடம் தன்னை முழுவதுமாக தொலைத்து விடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து செல்ல முற்பட்டாள். 

“நா… போறேன்…” என்று கூறிவிட்டு வேகமாக இரண்டடி எடுத்துவைத்தவள் சட்டென்று நின்றாள். குழப்பமாக அவன் பக்கம் திரும்பிய பவித்ரா, “எனக்கு உங்கள தெரியுமா….?” என்ற கேள்வியை கேட்டாள் பவித்ரா. 

இதை கேட்டு மேலும் புன்னகைத்தான் சிவா. சிவாவிற்கு அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்தும் புரியாதவன் போல, “எல்லாரும்… உங்களுக்கு என்ன தெரியுமான்னுதான் கேட்பாங்க… நீங்க என்ன வித்தியாசமா… எனக்கு உங்கள தெரியுமான்னு கேட்குறீங்க….?” என்று கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திகைத்த பவித்ரா, “அது… ஒண்ணுமில்ல… நா போறேன்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்ற திசையை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் கண்களில் சோகம் மெல்ல படர ஆரம்பித்தது. அவள் சிவாவின் மீது கொண்ட அந்த காதலின் ஆழம், பவித்ரா தன்னை மறந்தும் தன் மீது கொண்ட காதல் அவள் நினைவுகளில் புதைந்து கிடைப்பதை நினைத்து பூரித்து போனான். 

“நிலா…” என்று அவன் உதடுகள் மெல்ல உச்சரிக்க, அவன் மனம் அவளை தேடி ஓட முனைந்தன. ஆனால் நிஜம் என்ன என்பதை உணர்ந்த சிவாவின் மனம் வேதனையில் துடிக்க ஆரம்பித்தது.

   

                          – நிழல்கள் தொடரும்…..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page