அகல்யா, நிர்வாகியிடம் பேசிக் கொண்டிருந்த அதே தருணத்தில், ஆசிரமத்தின் அமைதி ஒரு பேரதிர்ச்சியால் குலைந்தது.
அங்கு வேலை செய்யும் பெண்மணி ஒருவர் மூச்சிரைக்க ஓடி வந்தவர். “ஐயா… ஐயா! அந்த கவிதா பொண்ணு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துடுச்சுங்க ஐயா!” என்று அவர் பதற்றத்தில் கத்த, அகல்யாவின் முகம் அப்படியே வெளுத்துப் போனது.
மறுநொடி, ஆகாஷும் அகல்யாவும் அந்தப் பாப்பாவின் அறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினார்கள். அங்கே கவிதா முகம் எல்லாம் வேர்த்துப் போய், உயிரற்ற ஒரு பொம்மையைப் போலத் தரையில் விழுந்து கிடந்தாள். அவளது மூச்சுத் திணறலைப் பார்த்ததும் அகல்யா “கவிதா குட்டி!” என்று அலறிவிட்டாள்.
ஆனால் ஆகாஷ் அந்த இக்கட்டான சூழலிலும் நிதானத்தை இழக்கவில்லை. சட்டென்று கீழே குனிந்து, அந்தச் சிறுமியைத் தன் பலமான கைகளால் ஏந்தித் தூக்கிக்கொண்டான். “அகல்யா, அழாதே! இப்போ நாம ஹாஸ்பிடல் போயே ஆகணும். வா சீக்கிரம்!” என்று கட்டளையிட்டபடி வெளியே ஓடினான்.
வெளியே வந்தபோது, ஆசிரமத்தின் வாசலில் குழந்தைகளுக்குச் சமையல் சாமான்கள் கொண்டு வரும் ஒரு பழைய ஆம்னி வண்டி நின்றிருந்தது.
நிர்வாகி பதற்றத்துடன் அந்த வண்டியின் டிரைவரைத் தேடினார். போன் செய்தும் பலனில்லை, டிரைவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.
நிமிடம் ஓட ஓட, கவிதாவின் நிலை மோசமாவதை உணர்ந்த ஆகாஷ், “ஐயா, நேரமில்ல… வண்டி சாவியைக் கொடுங்க!” என்று நிர்வாகியிடம் இருந்து சாவியை வாங்கியவன், குழந்தையை அகல்யாவிடம் கொடுத்துவிட்டு, டிரைவர் சீட்டில் தாவி ஏறி அமர்ந்தான்.
அகல்யா குழந்தையைத் தன் மடியில் கிடத்திப் பின்னால் ஏறிக்கொள்ள, ஆகாஷ் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அந்தப் பழைய ஆம்னி வண்டி, ஒரு ரேஸ் கார் போல சீறிக்கொண்டு ஆசிரமத்தின் வாசலைத் தாண்டியது.
கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து நெரிசல் அந்த காலை நேரத்தில் அதிகமாக இருந்தது. ஆம்புலன்ஸ் இல்லாத அந்தச் சூழலில், ஆகாஷ் அந்த வண்டியை மிக லாவகமாக ஓட்டினான்.
“பாஸ்… கவிதா உடம்பு ரொம்ப ஜில்லிட்டுப் போகுது! சீக்கிரம் போங்க பாஸ்!” என்று அகல்யா பின்னால் இருந்து அழுதுகொண்டே சொல்ல,
“அகல்யா, பயப்படாதே… இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிடல் போயிடலாம். குழந்தையைப் பத்திரமா பிடிச்சுக்கோ,” என்ற ஆகாஷ், ஒரு கை ஸ்டீயரிங்கிலும், இன்னொரு கை கியரிலும் இருக்க, சந்து பொந்துகளில் எல்லாம் வண்டியைப் புகுத்தி எடுத்துச் சென்றான்.
ஹாஸ்பிடல் வாசலில் வண்டியைச் சடாரென நிறுத்தியவன், கீழே இறங்கி ஓடிப் போய் ஒரு ஸ்ட்ரெச்சரை இழுத்து வந்தான். கவிதாவை உள்ளே கொண்டு சென்றபோது, டாக்டர்கள் ஓடி வந்தனர்.
“எமர்ஜென்சி கேஸ்! சீக்கிரம் பாருங்க!” என்று ஆகாஷ் சத்தம் போட்டு சொல்ல, அங்கிருந்த நர்ஸ்கள் வேகமாக ஓடி வந்தார்கள்.
குழந்தையை எமர்ஜென்சி வார்டுக்குள் கொண்டு சென்ற மருத்துவர்கள், “வெளியே இருங்கள்” என்று கூறிவிட்டு கதவுகளை மூடவும், அந்த ICU வார்டின் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது.
வெளியே அந்தத் தாழ்வாரத்தில் ஒருவிதமான மயான அமைதி நிலவியது. அகல்யாவால் இனிமேலும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது கண்கள் அருவியாகக் கொட்டத் தொடங்கின.
தன்னைச் சுற்றியுள்ள உலகம் சுழல்வது போல உணர்ந்தாள். அவள் வளர்ந்த விதம், அந்த ஆசிரமத்தின் மீது அவளுக்கிருக்கும் பிணைப்பு, கவிதா குட்டியின் அந்தச் சிரிப்பு… எல்லாம் அவள் கண்முன்னே வந்து போனது.
ஆகாஷ் அவளது அருகில் சிலையாக நின்று கொண்டிருந்தான். அவளது அழுகை அவனது இதயத்தை ஊசியால் குத்துவது போல இருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவனது கைகள் துடித்தன, ஆனால் அவனது நாகரிகம் அவனைக் கட்டிப்போட்டது. ஒரு நண்பனாக அவளைத் தொடுவது முறையா?’ என்ற கேள்வி அவனுக்குள் ஓடியது.
ஆனால், அகல்யா அப்போது சுயநினைவில் இல்லை. ஆறாத துயரத்தின் உச்சத்தில் இருந்தவள், திடீரென ஒரு பிடிமானம் தேடி ஆகாஷின் மார்பில் சடாரெனச் சாய்ந்து விம்மி அழுதாள். அந்தத் தீண்டலில் ஆகாஷின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் உடைந்தது.
அவளது மெலிதான தோள்களைத் தன் பலமான கைகளால் அணைத்துக் கொண்டான். “அழாத அகல்யா… கவிதாவுக்கு ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன்ல,” என அவளது தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்துத் தேற்றினான். ஒரு CEOவாக இருந்தவன், இப்போது ஒரு சாதாரணப் பெண்ணின் கண்ணீரைத் துடைக்கும் ஒரு அன்பான தோழனாக நின்றான்.
சிறிது நேரத்தில் ICU கதவு திறக்கப்பட்டது. மருத்துவர் வெளியே வந்ததும் அகல்யா அவசரமாக விலகி அவர் முன்னே போய் நின்றாள். “டாக்டர்… கவிதா எப்படி இருக்கா?”
மருத்துவரின் முகம் கவலையாக இருந்தது. “பாருங்க, குழந்தையோட நிலைமை ரொம்ப சீரியஸா இருக்கு. இன்னும் ஒரு மணிநேரத்துல ஆபரேஷன் செஞ்சாகணும். இல்லைன்னா நாங்க எதையும் உறுதி சொல்ல முடியாது. உடனே பணத்தைக் கட்டிட்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போடுங்க,” என்றார் கண்டிப்பான குரலில்.
அகல்யாவின் முகம் இருண்டு போனது. கையில் இருப்பது வெறும் ஒன்றரை லட்சம் மட்டுமே. ஆனால் அந்த ஆபரேஷனுக்கு இன்னும் சில லட்சங்கள் தேவைப்படும். நிர்வாகி ஐயாவோ பதற்றத்தில் திணறினார்.
“அகல்யா, நீ இங்கேயே இரு… நான் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் உதவி கேட்கிறேன். யாராவது பணம் கொடுத்தா உடனே இங்க வந்திடுறேன்,” என்று கூறிவிட்டு அவர் அவசரமாக அங்கிருந்து ஓடினார்.
அகல்யா அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். “எல்லாமே முடிஞ்சுடுச்சா பாஸ்? பணத்துக்காக அந்தக் குழந்தையோட உயிர் போயிடுமா?” என அவனது கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள்.
ஆகாஷ் அவளை மெதுவாகத் தூக்கி ஒரு இருக்கையில் உட்கார வைக்க, அவள் நிலைகுலைந்து போய், ஆகாஷின் தோளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளது சூடான கண்ணீர்த்துளிகள் ஆகாஷின் சட்டையை நனைத்து, அவனது மார்பில் இறங்கி இதயத்தை நனைத்தன. அந்த ஜில்லென்ற ஈரம் ஆகாஷின் உடல் முழுக்க ஒருவித மின்சாரத்தைப் பாய்ச்ச, அவன் உடல் சிலிர்த்தது.
அவளது துயரம் அவனது துயரமாக மாற, அவளைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் போதாது என்று உணர்ந்தவன். “அகல்யா… கொஞ்ச நேரம் இப்படியே இரு, நான் இதோ வந்திடுறேன்” என்று மென்மையாகச் சொல்லிவிட்டு அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு, மின்னல் வேகத்தில் மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு ஓடினான்.
அவன் கண்கள் இப்போது கோபத்திலும் உறுதியிலும் சிவந்திருந்தன. என் கையில் இவ்வளவு பணம் இருந்து, ஒரு குழந்தை உயிருக்காக போராடுவதை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன் என நினைத்தவன், யாரும் கவனிக்காத ஒரு மூலைக்குச் சென்று, உடனடியாகச் சித்தார்த்தை அழைத்தான். போன் இரண்டு முறை அடித்ததுமே சித்தார்த் எடுத்துவிட்டான்.
“மச்சி சொல்லு… கோயம்புத்தூர் காத்து எப்படி இருக்கு?” எனச் சித்தார்த் வழக்கமான கிண்டலுடன் பேசத் தொடங்க, ஆகாஷ் இடைமறித்தான்.
“டேய் சித்தா… விளையாட்டு அப்புறம் வச்சுக்கலாம். இப்போ ஒரு எமர்ஜென்சி! ஆசிரமத்துல இருக்குற ஒரு குழந்தைக்கு இப்போவே ஹார்ட் சர்ஜரி பண்ணனும். நான் சிட்டி ஹாஸ்பிடல்ல இருக்கேன். பில்லிங் கவுண்ட்டர்ல இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம கம்பெனி டிரஸ்ட் மூலமா முழுப் பணமும் கிரெடிட் ஆகணும். எவ்வளோ செலவானாலும் பரவாயில்லை, அந்தப் பாப்பாவை காப்பாத்தணும்!”
சித்தார்த் அவனது குரலில் இருந்த பதற்றத்தைப் புரிந்து கொண்டான். “சரிடா ஆகாஷ், நான் இப்போவே எல்லாத்தையும் அரேஞ்ச் பண்றேன். ஆனா மச்சி… நீ உன் அடையாளத்தை அங்க வெளிகாட்டிக்க போறியா? ஏன்னா பெரிய அமௌன்ட் சிங்கள் payment ல டிரான்ஸ்பர் ஆனா ஹாஸ்பிடல் டீன் கண்டிப்பா விசாரிப்பாரு.”
“இல்லை மச்சி, இப்போதைக்கு நான் ஆகாஷ்ங்கிற நண்பனவே இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா அந்தப் பாப்பாவோட உயிர் எனக்கு முக்கியம். நீ யாருன்னு சொல்லாம ஒரு Anonymous Donation சொல்லி பணத்தை முடி. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் கிட்ட மட்டும் இது பத்தி வெளியே யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு. சீக்கிரம்!”
போனை வைத்துவிட்டுத் திரும்பிய ஆகாஷ், தூரத்தில் அழுதுகொண்டிருந்த அகல்யாவைப் பார்த்தான். அவளது முகத்தில் இருந்த அந்த வேதனை மறைந்து, மீண்டும் ஒரு புன்னகை மலர வேண்டும் என்பதே அவனது ஒரே லட்சியமாக இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில், மருத்துவமனையின் பில்லிங் செக்ஷனில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆகாஷ் எதையும் தெரியாதது போல மெதுவாக அகல்யாவின் அருகே சென்று அமர்ந்தான்.
“அகல்யா… அழாதே. இப்பதான் அந்தத் தொண்டு நிறுவனம் கூடப் பேசினேன். அவங்க மத்தவங்ககிட்ட வசூலிச்ச பணத்தை உடனே அனுப்புறதா சொல்லியிருக்காங்க. இதோ பாரு, டாக்டர் வெளியே வர்றாரு!” என அவன் ஒரு சிறு பொய்யைச் சொல்லி அவளைத் தேற்றினான்.
அப்போது ICUவில் இருந்து வெளியே வந்த நர்ஸ், “அகல்யா யாரு? கவிதாவோட ஆபரேஷனுக்கு முழுப் பணமும் ஒரு டிரஸ்ட்ல இருந்து வந்துடுச்சு. டாக்டர் இப்போவே ஆபரேஷன் தியேட்டருக்குக் கிளம்பிட்டாரு. சீக்கிரம் வந்து இந்த ஃபார்ம்ல கையெழுத்துப் போடுங்க!” என உரக்கச் சொன்னார்.
அகல்யா அதிர்ச்சியில் உறைந்து போனாள். “என்னது? பணமா? யாரு கொடுத்தாங்க?” எனப் புரியாமல் ஆகாஷைப் பார்க்க, அவன் ஒரு கள்ளச் சிரிப்புடன், “பார்த்தியா… நல்லவங்களுக்கு இந்த உலகம் எப்பவும் கைவிடாதுன்னு சொன்னேன்ல? போ… முதல்ல சைன் போடு!” என்று அவளைத் தள்ளிக் கொண்டு போனான்.
ஆபரேஷன் தியேட்டரின் மேலே எரிந்து கொண்டிருந்த அந்தச் சிவப்பு விளக்கு அணைந்தபோது, அகல்யாவின் இதயம் ஒரு கணம் நின்றது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மருத்துவர், தன் முகக் கவசத்தைக் கழற்றியபடி புன்னகைத்தார்.
“பயப்பட ஒன்னும் இல்ல… ஆபரேஷன் சக்சஸ்! பாப்பா இப்போ நல்லா இருக்கா. சரியான நேரத்துல பணமும் வந்துடுச்சு, நீங்களும் கொண்டு வந்துட்டீங்க. இன்னும் சில மணி நேரத்துல அவளுக்கு நினைவு வந்திடும்,” என்றார்.
அகல்யா அப்படியே தரையில் அமர்ந்து தேம்பி அழுதாள். ஆனால் இது துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல, நிம்மதியின் பெருவெள்ளம். அதே சமயம், வெளியே பணத்திற்காக அலைந்து கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி ஐயா, வியர்க்க விறுவிறுக்க அங்கே ஓடி வந்தார்.
“அகல்யா! யாருமே இல்லம்மா… யாரும் உதவி செய்ய முன்வரல. என்ன பண்றதுன்னே தெரியலையே!” என அவர் பதற, அகல்யா எழுந்து ஓடிப் போய் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“ஐயா… பாப்பாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சிடுச்சு! யாரோ ஒரு புண்ணியவான் எல்லாப் பணத்தையும் கட்டிட்டாங்க. இப்போ கவிதா குட்டி நல்லா இருக்கா ஐயா!” எனச் சொல்ல, அந்தப் பெரியவர் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
“யாருமா அது? அந்தக் கடவுளே நேர்ல வந்து செஞ்ச வேலையா இது?” என அவர் ஆகாஷைப் பார்க்க, ஆகாஷ் வழக்கம் போல “எனக்கு எதுவுமே தெரியாது” என்பது போல ஆஸ்பத்திரி சுவரில் இருந்த ஒரு போஸ்டரைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான்.
நிர்வாகி கவிதாவைப் பார்க்க உள்ளே செல்ல, அகல்யா மெதுவாக ஆகாஷின் அருகே வந்தாள். அவளது கண்கள் இப்போது சிவந்து இருந்தாலும், அதில் ஒரு தெளிவும், மர்மமான நன்றியும் தெரிந்தது.
“ஆகாஷ்…” என அவள் முதல் முறையாக அவனது பெயரை உரிமையோடு சொன்னபோது, ஆகாஷின் செவிகளில் அது ஒரு கவிதை போல விழ, ஒரு மெல்லிய புன்னகையோடு திரும்பி அவளை பார்த்தவன்.
“சொல்லு அகல்யா?”
“ஒரு இடத்துக்குப் போகணும், வா ” என்றவள் வேகமாக முன்னாள் நடக்க, ஆகாஷ் புரியாமல் பின் தொடர்ந்தான்.
🌧️தூறல்கள் தொடரும்…
