மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 5
விவேகன் என்னதான் பிரவீனிடமிருந்து ஒதுங்கிப் போனாலும் கூடப் பிரவீன் அவனின் நிழல் போலவே சுற்றித் திரிந்தான். அவனின் கோபங்களையும் சிடுசிடுப்பையும் தாங்கிக் கொண்டான். அப்போதும் சிரித்தபடி இருக்கும் அவனின் வதனத்தைப் பார்த்துத் தன் கோபத்தைக் குறைத்து கொண்டான் விவேகன். ஆனாலும் அவனிடம் ஒட்டி உறவாடவும் இல்லை.
அரசுப் பள்ளியில் படித்தவனுக்கு அங்கே இருந்த நுனி நாக்கு ஆங்கிலமும், புரியாமல் இருந்த பாடங்களும் எனக் கொஞ்சம் புதிதாய் தான் தெரிந்தது. ஆனாலும் மனதில் கொண்ட வைராக்கியம் அந்தத் தடைகளைத் தகர்த்தது. ஆரம்பத்தில் கடினமாக இருந்த பாடங்களைத் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிப் படிக்க ஆரம்பித்தவனுக்கு அது புரிந்தது போல் இருந்தது. அதே நேரம் அங்கே படித்த மாணவர்கள் யாவரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் ஆடம்பரமான வசதியான வாழ்வும், தங்களின் இஷ்டம் போல் வாழ்ந்தவர்களைக் கண்டவனுக்கு அவர்களின் பெற்றோர்களின் நிலை கவலையைத் தான் தந்தது என்றாலும் கூடச் சற்று கோபமும் சேர்ந்தே வந்தது.
ஏனோ அவர்களின் பிள்ளைகளைச் சற்றே கண்டிப்புடன் வளர்த்திருக்கலாம் என்று நினைக்காத நாளில்லை. மற்றபடி அதைப் பற்றிப் பெரிதாக எதுவும் யோசிக்கமாட்டான்.
அந்தப் புது உலகம் அவனை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொண்டான். அவனின் இலட்சியம் படிப்பு ஒன்றே என்ற குறிக்கோளுடன் சென்றான்.
படிப்பு அதன் பாதையில் மட்டுமே அவனின் பயணம் சென்றது.
அவனுடன் பிரவீனும் சேர்ந்தே படித்தான் அவனைக் கவனித்து கொண்டே.
இதற்கு நடுவில் கல்லூரி விட்டு வந்ததும் ஒரு கம்பியூட்டர் சென்டரில் மாலை நேர வகுப்புக்குச் சென்றவன் அதன் அடிப்படைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.
படிப்பதற்கும் சாப்பிடுவதற்கு தங்குவதற்கு இப்படி எதற்கும் அவனுக்கு அதிகமாய் செலவில்லை. ஆனால் சில அடிப்படை தேவைகளுக்காக வார விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றான்.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை மூன்று விடயங்களில் மட்டுமே திரும்பிப் பார்க்கும். ஒன்று பணம், பதவி, புகழ் இதைக் கண்டு மயங்காத மக்கள் இல்லை எனலாம். ஆனால் இன்னொன்று அதிகாரம். இதைக் கண்டும் மயங்கும் மக்கள் உண்டு.
இவனோ மற்ற மூன்றையும் பெரிதாக எண்ணவில்லை. இவனின் பயணம் அதிகாரத்தைப் பெறுவதில் சென்றது.
முதல் ஆறுமாதங்கள் கடினமாகக் கடந்த நிலையில் எல்லாம் புரிய ஆரம்பித்து வாழ்க்கை அதன் போக்கில் செல்லத் துவங்கியது.
எப்படி முதல் வருடம் முடிந்தது என்றே தெரியாமல் காலம் வேகமாய் ஓடியது. நடந்து முடிந்த கல்லூரித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று நிர்வாகத்தின் கவனத்தைப் பெற்றான் விவேகன்.
வாரத்தில் ஒருநாள் மட்டும் அமுதாவிற்கு அழைத்துப் பேசுபவன் மற்ற யாரையும் கேட்கமாட்டான். அருந்ததியிடம் இதுவரை மூன்று முறை மட்டுமே பேசியுள்ளான்.
ஏனோ அவளின் அழுகுரலைக் கேட்டால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் அவன் உலகமே ஸ்தம்பித்ததைப் போலானது.
அதிலிருந்து அவளிடம் சற்று விலகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன் அதன் பின்பு அவளிடம் அதிகம் பேசவில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள அவளின் குடும்பம் உள்ளது என்று விட்டுவிட்டான்.
அமுதாவிடம் மட்டும் அவ்வப்பொழுது அவளைப் பற்றிக் கேட்டுக் கொள்பவன் மறந்தும் கூட ஊருக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை.
அந்தக் குடும்பத்தில் இருந்தும் கூட யாரும் அவனைப் பற்றி எதுவும் விசாரித்ததில்லை. குறைந்த பட்சம் எப்படி இருக்கிறாய் என்று கற்பகநாயகி கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. இதில் இரண்டு முறை மட்டும் அவனுக்குச் செலவுக்கென்று பணத்தை அனுப்பினார். ஆனால் அவனோ அதைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
இதற்கிடையில் பிரவீன் மட்டும் தனது சொந்த ஊருக்குச் சென்றவன் இருநாட்களில் மீண்டும் வந்துவிட்டான்.
இங்கே விவேகனும் தனது படிப்பு, பகுதி நேர வேலையென அவனின் நேரம் சிட்டாய் பறந்தது.
அதே போல் இங்கே அருந்ததியும் தன் பள்ளிப் படிப்புடன் வீட்டு வேலையும் செய்தாள் என்று சொல்வதை விடச் சகுந்தலாவால் செய்ய வைக்கப்பட்டாள்.
சகுந்தலாவிற்கு ஏனோ அருந்ததியைப் பிறந்ததிலிருந்தே அவ்வளவாய் பிடிக்கவில்லை. பெற்ற மகளாய் இருந்தாலும் கூட அவ்வளவாய் பாசம் காட்டியதில்லை.
துருவனைப் பிடித்த அளவுக்கு அருந்ததி மேல் பாசமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் தான் அருந்ததிக்குப் புரியாத புதிராய் இருந்தது.
‘நானும் அவர்கள் பெற்ற பெண் தானே… என்னை ஏன் அம்மாவுக்குப் பிடிக்காமல் போனது’ என்று புரியாமல் தவித்தாள் குழந்தையவள்.
அதுவும் பெண் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் நன்றாகவே வெறுப்பைக் கொட்டினாள் சகுந்தலா.
அன்று வீட்டு வேலைகளை முடித்து விட்டுப் பள்ளிக்குக் கிளம்பும் சமயம் அவளின் முன்னே கோபமாய் வந்து நின்ற சகுந்தலா,
“ஏய் சனியனே! என்னோட வளையல் எங்கேடி?” என்றாள் ஆங்காரமாய்.
அவளின் ஆங்காரத்தில் பயந்த அச்சிறுமலரோ,
“எனக்குத் தெரியாதும்மா… நான் பாக்கலை…” என்றாள் கலங்கிய கண்களுடன்.
சொந்த மகளிடமே எந்தத் தாயாவது இப்படி கேட்டிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் அப்படி இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாகச் சகுந்தலா இருந்தாள்.
“எது நீ பாக்கலையா? பொய்யா சொல்ற…” என்றபடி அவளை அடிக்கக் கையை ஓங்க அப்போது அங்கே வந்த கற்பகநாயகியோ,
“சகுந்தலா, என்ன பண்ற?” என்றபடி வேகமாய் அங்கே வந்தார்.
அதில் கையை இறக்கிய சகுந்தலா அருந்ததியை முறைத்துக் கொண்டு,
“அத்தை, டேபிளில் வச்சிருந்த என்னோட வளையலைக் காணோம். இவதான் அவரைப் பாக்க வந்தா… அதுதான் அவகிட்ட கேட்டா பொய் சொல்றா… ஒரு பொம்பளை புள்ளை இந்த வயசிலேயே பொய் சொல்லலாமா என்ன? அதுதான் ஒரு அம்மாவா கண்டிச்சேன். இதுல என்ன தப்பைக் கண்டுபிடிச்சீங்க?” என்றாள் பார்வையை எங்கோ திருப்பியபடி.
“நீ எதுக்காகச் செஞ்சேன்னு எனக்குத் தெரியும் சகுந்தலா. போய் உன்னோட ரூம்ல நல்லா தேடி பாரு… அங்கே தான் இருக்கும்.” என்று அழுத்தமாய் கூறியவர் அருந்ததியின் பக்கம் திரும்பி,
“நீ ஸ்கூலுக்குக் கிளம்பு. உனக்கு நேரமாச்சுல்ல.” என்றபடி அவளை அனுப்பி வைத்தார்.
அவளுமே, “சரிங்க பாட்டி…” என்றபடி தன் தாயைப் பார்த்தபடி அங்கிருந்து சென்றார்.
சகுந்தலாவின் பார்வையோ அவளை நெருப்பாய் பொசுக்கியது.
“சகுந்தலா, என் பின்னாடி வா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றபடி அவர் முன்னே செல்லக் கடுகடுவென்ற முகத்துடன் சகுந்தலாவும் அவரின் பின்னே சென்றாள்.
தன் அறைக்குள் நுழைந்த கற்பகநாயகியின் பின்னே சென்ற சகுந்தலாவோ எதுவோ பேச ஆரம்பிக்கும் போதே ஓங்கி அறைந்தார் கற்பகநாயகி.
“அத்தை…” என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கோபத்துடன்,
“ஏய்! உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு இந்தக் குடும்பத்தோட கௌரவமும் மரியாதையும் ரொம்பவே முக்கியம். அதைப் பாழாக்குற மாறி ஏதாவது செஞ்சிட்டு இருந்த, நீ இருந்த இடமே தெரியாம அழிச்சிடுவேன். இனி ஒரு முறை இதுமாதிரி நடக்கக் கூடாது. புரியுதா?” என்றார் அழுத்தமாய்.
அதில் சமத்தாய் தலையாட்டியவள், “ஆனா அத்தை, அவளுக்காக என்னை நீங்க அடிச்சிருக்க வேணாம்.” என்றபடி தன் கன்னத்தைத் தடவியபடி வெளியேறினாள்.
போகும் அவளைப் பார்த்தவருக்கு கண் முன்னே சில நிழல்கள் தோன்ற அதில் உடல் நடுங்கியவர் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டார்.
அவருக்குத் தெரியாதே இது தான் ஆரம்பம் என்று! நீ விதைத்த விதை உன்னையே கறுவறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற பழமொழி சரியாக இருக்குமோ? பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
விவேகனின் மூன்றாம் ஆண்டு இறுதியில் பிரவீனுடன் சற்றே இணக்கமாய் பேச ஆரம்பிததிருந்தான்.
மூன்று வருட போராட்டத்தில் நண்பனாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட அறைத் தோழன் என்ற ரீதியிலாவது பேசினானே என்று சற்று நிம்மதி தான் வந்தது பிரவீனுக்கு.
அதுவும் அவனை இயல்பாகப் பேச வைப்பதற்குள் பிரவீன் தான் நொந்து போனான்.
தனது மூன்றாம் வருடக் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் அரசு தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தான் விவேகன்.
அவனுடனே பிரவீனும் சேர்ந்து படித்தான் நண்பனுக்குத் துணையாக.
காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் அவனின் நாள் இரவு இரண்டு மணிக்குத் தான் முடியும்.
ஐந்து மணிக்கு நியூஸ் பேப்பர் போடவும், ஆறு மணிக்கு மேல் பால் பாக்கெட் போடவும் தொடங்கும் நாள்… காலை ஒன்பது மணிக்குக் கல்லூரி செல்பவன் அன்றைய பாடங்களைக் கல்லூரியில் கிடைக்கும் நேரத்திலேயே படிக்கப் பழகிக் கொண்டான்.
நான்கு மணிக்குக் கல்லூரி முடிந்தவுடன் ஒரு மளிகைக் கடையில் பில்லிங் வேலையில் சேர்ந்தான். இரவு பத்து மணிவரை அந்த வேலையைச் செய்பவன் தன் விடுதிக்கு வந்து பிரவீன் எடுத்து வைத்திருந்த உணவைச் சாப்பிட்டு விட்டு அரசுத் தேர்வுக்காகப் படிக்க அமருபவன் இரண்டு மணிவரை படிப்பான்.
மீண்டும் காலை ஐந்து மணிக்கு ஓட்டம் தொடங்கும். தினமும் இருபது மணி நேரங்கள் ஓடுபவனுக்கு அந்த மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் அமுதாவுடன் பேச்சு, படிப்பு, வேலையென அவனின் நாட்கள் சிறகடித்துப் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அன்றைய அனைத்து வேலைகளையும் முடித்தவனுக்குப் படுக்கும் சமயம் ஏனோ அருந்ததியின் நினைவு அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எப்போதும் இருக்கும் நினைவு தான் என்றாலும் கூட இன்று ஏனோ அதிகமாய் தான் தோன்றியது. அதன் காரணம் ஆடவனுக்கு அவ்வளவாய் விளங்கவில்லை.
“ஒருவேளை பேசி ரொம்ப நாள் ஆனதால இப்படி ஃபீல் ஆகுதா? இல்ல, வேணாம் விவேகா இது உன்னோட முயற்சிக்குத் தடை தான். உன்னோட பட்டு அங்கே சந்தோஷமா இருப்பா. நீ ரொம்ப யோசிக்காத!” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவன் ஒரு முடிவுடன் எழுந்தவன் அவளின் நினைவாக இருந்த அந்த வெள்ளிச் செயினை தன் கையில் கட்டிக் கொண்டவன் மெதுவாக அதை வருடியபடி,
“அரும்மா, இன்னும் கொஞ்சம் வருஷம் மட்டும் பொறுத்துக்கோ பட்டு. சீக்கிரமே உன் அத்தான் உன்கிட்ட வந்துருவேன். என்னோட லட்சியத்துல ஜெயிச்சிடடு வந்து உன்னை என்னோட அழைச்சிட்டு வந்துருவேன். அப்போ என்னைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை பட்டு.
அதுபோல அத்தானை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. சரியா? என்னைத் தூங்க விடும்மா….’ என்று தன் மனதோடு பேசிக் கொண்டவன் அப்படியே உறங்கி விட்டான்.
அதே நேரம் கற்பகநாயகியின் வீட்டில் அந்த அறையில், “வேணாம், எனக்கு வலிக்குது என்னை விட்டுடுங்க… அம்மா, விட்டுடுங்கம்மா…” என்று அருந்ததியின் குரல் கேட்க அவளின் அருகில் அமர்ந்திருந்த அமுதாவின் விழிகளில் கண்ணீர் பொழிந்தது.
அவரின் பார்வை அருவின் பாதத்தில் நிலைத்து விட அதில் தீக்காயங்கள் பாதி பாதத்தில் கனன்று கொண்டிருந்தது.
இது யாரின் வினையோ? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
