தோளில் சாயும் நேரம் 13

பெரிய பெரிய அலைகள் வந்து கரையோடு மோதிக் கொள்ள, நீர்த் துளிகள் நாலா பக்கமும் சிதறிக் கொண்டிருந்தன.

அந்தக் கடல் அலைகள் வந்து கரையைத் தொட்டுச் செல்வதையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் பிரேமகிருஷ்ணா.

அவனுக்குப் பின்னால் சிறு இடைவெளி விட்டு நின்றிருந்தான் ரகு.

இருவருக்கும் இடையில் ஏதோ காரசாரமான விவாதம் போயிருக்க வேண்டும் போல, இருவருடைய முகமுமே கார மிளகாயைக் கடித்து வைத்த சிறுவன் போல கடுகடுவென்று தான் இருந்தது.

“இப்ப முடிவா என்ன தான் சொல்ல வாறாய் கிருஷ்ணா..”

“அது தான் ஏற்கனவே சொல்லீட்டனேடா..”

“திரும்பவும் ஆரம்பிக்கிறன் எண்டு பாக்காதடா.. ஆனால் தயவு செஞ்சு கொஞ்சமாவது யோசி.. உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு கிருஷ்ணா..”

“நான் இல்லை எண்டு சொல்லவே இல்லையேடா.. எப்புடியும் ஒருத்தியைக் கல்யாணம் கட்டி வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்குப் போகத் தானே போறன்..”

“அதுக்கு இவளைக் கட்டுவம் எண்டு நிக்கிறது எல்லாம் சரியே இல்ல.. கொஞ்சமாவது உனக்காக யோசியடா..”

“ரகு பிளீஸ்.. இதைப் பத்திக் கடந்த ரெண்டு கிழமையா நானும் நீயும் கதைச்சு முடிச்சாச்சுது எண்டு நினைக்கிறன்..”

“கிருஷ்ணா இருந்தாலும் எனக்கு மனசு கேக்கலையேடா..”

“நானே டேக் இட் ஈஸி எண்டு இருக்கும் போது.. நீ வீணாப் போட்டு உடைக்காதேடா..”

“நான் உன்ர பிரெண்டுடா..”

“அதனால தான் உனக்கு மட்டும் இந்த விசியம் தெரிய வந்திச்சுது..”

“எனக்குத் தெரியாமலே இருந்திருக்கலாம்.. போடா நான் போறன்..”
என்ற ஆற்றாமையோடு அங்கிருந்து வேகமாகப் போய் விட்டான் ரகு.

கடல் மணலை உதைத்துத் தள்ளிக் கொண்டு அவன் போன விதமே அவனுடைய ஆற்றாமையுடன் கூடிய கோபத்தை, பிரேமகிருஷ்ணாவுக்கு அப்பட்டமாக எடுத்துக் காட்டியிருந்தது.

ஆனாலும் நண்பனின் உருவம் மறையும் வரை அமைதியாக நின்றிருந்தவன், அதற்குப் பிறகே ஒரு நீண்ட மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.

ரகு அங்கிருந்து சென்ற பின்னர், அவனுக்கு அலையடித்து ஓய்ந்தது போல ஒரு உணர்வு.

மீண்டும் தன் பார்வையை, வேகமாக வந்து கரை தொட்ட அலைகள் மீது பதிய விட்டான் கிருஷ்ணா.

எத்தனை நேரம் தான் அலைகளைப் பார்த்தபடியே நின்றிருப்பானோ தெரியவில்லை, அவனுடைய அலைபேசி சிணுங்கித் தன் இருப்பைக் காட்டியது.

பிரேமகிருஷ்ணாவின் தம்பி அருண்கிருஷ்ணா தான் அழைத்திருந்தான்.

அதாவது கிருஷ்ணாவின் சித்தியின் மகன், சற்று முன்பு ரகுவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் நடந்த நீண்ட காரசாரமான பேச்சுவார்த்தைக்கு மூல காரணமானவன்.

“சொல்லு அருண்..”

“என்ன அண்ணா.. உனக்கு ஓகே தானே.. அதை எடுத்துச் சொல்ல மாட்டியோ.. நான் தான் அதையும் எடுத்துக் கேக்க வேணுமோ..”

“கொஞ்சம் வேலையா இருந்ததால சொல்ல முடியேல்ல..”

“வர வர உனக்குக் கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லையண்ணா.. நான் ஒருத்தன் உன்ர பதிலுக்காகக் காத்து இருப்பன் எண்டு தெரியாதோ..”

“பிளீஸ் அருண்.. எதுவா இருந்தாலும் வீட்ட வந்த பிறகு கதைப்பம்..”

“ஏன் ஏன்.. என்னை விட அப்புடி உனக்கு என்ன வேலை முக்கியம்..”
என்ற அருணுக்கு, கிருஷ்ணா எந்தப் பதிலுமே சொல்லாமல் அமைதியாகி விட்டான்.

தமையனின் அமைதியில் அருண் சட்டென்று சுதாரித்துக் கொண்டு விட்டான்.

இதற்கு மேலும் தேவை இல்லாத பேச்சுகளைப் பேசி, எதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்தான் போலும்
“சரியண்ணா வீட்ட வா கதைப்பம்.. திரும்பத் திரும்பச் சொல்லுறன் எண்டு நினைக்காத.. இந்த விசியம் எதுவும் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் தெரியவே கூடாது.. நீ சொல்ல மாட்டாய் எண்டு எனக்குத் தெரியும் தான்.. இருந்தாலும் சொல்லுறன்..”
என்று மீண்டும் தேவையற்ற பேச்சுக்களைப் பேசி விட்டு, அலைபேசியைத் துண்டித்துக் கொண்டான் அருண்.

அருண் அலைபேசி வைத்ததுமே மீண்டும் கிருஷ்ணாவிடம் இருந்து ஒரு பெருமூச்சுக் கிளம்பியது.

‘இதை நான் எப்புடி எடுத்துக் கொள்ளுறன் எண்டுறதுல தானே இருக்குது.. நான் இதைச் சந்தோஷமாத் தானே பாக்கிறன்.. பிறகு இந்த ரகு எருமை ஏன் என்னைக் குழப்பப் பாக்கிறான்.. அவனுக்கு எப்பவுமே எனக்கு என்ன கிடைச்சாலும் பெஸ்டா கிடைக்க வேணும் எண்டு ஆசை.. அதுக்காக எல்லாம் அப்புடிக் கிடைக்குமா என்ன.. கிடைக்கிறதை வைச்சுத் திருப்திப் படுறது தானே வாழ்க்கைக்கு நல்லது..’
இப்படித் தான் இருபத்தெட்டு வயதுக் கிருஷ்ணாவின் எண்ணவலைகள் ஓடிக் கொண்டிருந்தன.

இத்தனைக்கும் தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்த விசயம், இருவரையும் பெற்ற பெண்ணரசிகளுக்கு நெல்முனையளவு கூடத் தெரியாது என்பது தான் உண்மை.

நாட்கள் வேகமாக உருண்டோடத் தொடங்கியிருக்க, ஒரு நாள் காலைப் பொழுதில் மகனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார் அருந்தவராணி.

கூடவே அருந்தவச்செல்வியும் வந்து அமர்ந்து கொள்ளவே, இருவரையும் யோசனையோடு பார்த்தான் பிரேமகிருஷ்ணா.

இரண்டு பெண்களும் இணைந்து வந்தால், ஏதாவது பெரிய விசியமாகத் தான் இருக்க வேண்டும், எதற்கும் வந்தவர்களே வாயைத் திறக்கட்டும் என்பது போல, கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை அவன்.

“கிருஷ்ணா.. அக்காவும் நானும் ஒரு விசியம் முடிவு செஞ்சு இருக்கிறம்.. எல்லாம் உன்ர நல்லதுக்காகத் தான்..”
செல்வி தான் ஆரம்பித்து இருந்தார்.

தாயை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து விட்டுச் சித்தியைக் கேள்வியாகப் பார்த்தான் அவன்.

“உனக்கு இருபத்தெட்டு வயசும் முடிஞ்சுது.. உனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல வேலை கை நிறையச் சம்பளம் வேற.. அதனால இனி உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கலாமே எண்டு யோசிக்கிறம்..”
எனச் செல்வி சொல்லி முடிக்கவில்லை, எப்படித் தான் மூக்கு வியர்த்து, எங்கிருந்து தான் பறந்து வந்தானோ தெரியவில்லை
“உங்களுக்கு எல்லாத்துலயும் அவசரம் அம்மா.. அண்ணாந்த விருப்பு வெறுப்பெல்லாம் பாக்காமல் உங்கட இஷ்டத்துக்கு முடிவு எடுப்பியள் என்ன..”
என்று கொண்டு மூவருக்கும் நடுவில் வந்து குதித்தான் அருண்கிருஷ்ணா.

“நாங்கள் என்னடா அவசரப்பட்டம்.. அவனுக்குக் கல்யாணம் பாக்கிற வயசு தானே.. வந்திட்டான் கதைக்க.. முதல்ல உனக்கு எத்தினை வயசு பெரியவை கதைக்கேக்குள்ள அது என்ன அதிகப் பிரசங்கித்தனமா நடுவுல வந்து குதிக்கிறாய்..”

“என்ன எனக்கு எத்தினை வயசு.. அண்ணாவ விட அஞ்சு வாயசு தானே குறைய..”

“அருண்.. நீ முதல்ல உள்ள போ.. உன்ன யார் இப்ப கூப்பிட்டது..”

“அம்மா.. இங்க பாருங்கோ அண்ணாவுக்குக் கல்யாணம் எல்லாம் பாக்க வேண்டாம்..”

“அவனுக்குப் பாக்காமல் பின்ன உனக்குப் பாக்குறதோ.. முதல்ல உள்ள போடா நீ..”

“நான் உள்ள போறது இருக்கட்டும்.. அண்ணா நீங்கள் பாக்கிற யாரையும் கல்யாணம் கட்ட மாட்டான்..”

“என்னடா உளர்ராய்..”

“நான் ஒண்டும் உளரேல்ல.. அண்ணா ஒரு பிள்ளையை உயிருக்கு உயிராக் காதலிக்கிறான்.. கட்டினால் அவளைத் தான் கட்டுவன் எண்டு தலைகீழா நிக்கிறான் தெரியுமோ.. உங்களுக்கும் பெரியம்மாவுக்கும் அதில விருப்பம் இல்ல எண்டால் கூட அந்தப் பிள்ளையைத் தான் கட்டுவனாம்..”
என்று அருண் சொன்னதற்கு, தமக்கையும் தங்கையும் அதிர்ந்து போய்ப் பார்த்தார்களோ இல்லையோ, ஒருத்தன் அப்படி ஒரு அதிர்வில் தம்பியைப் பார்த்தான்.

அருண்கிருஷ்ணா இப்படி வந்து பெரியவர்களுக்கு முன்னால் பேசக்கூடும் என்று, பிரேமகிருஷ்ணா கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

பிரேமகிருஷ்ணாவின் தந்தை அவன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இறந்து விட்டார், வயிற்றுப் பிள்ளையோடு கணவனை இழந்து நின்ற தமக்கைக்கு அருந்தவச்செல்வி தான் உறுதுணையாக நின்றார்.

செல்விக்காவது கூடப் பிறந்த இரத்த உறவுக்குத் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கலாம், ஆனால் செல்வியின் கணவர் சுந்தரலிங்கத்துக்கு எந்தக் கட்டாயமோ கடமையோ இருக்கவில்லை.

ஆனால் அவர் அருந்தவராணியை ஒரு கூடப் பிறவாத சகோதரி போல அப்படி மரியாதையாக நடாத்தினார், அவரின் மகனைத் தன் சொந்த மகன் போல அத்தனை அன்பாகப் பார்த்துக் கொண்டார்.

பிரேமகிருஷ்ணாவுக்கும் கூட சுந்தரலிங்கம் என்றால் அத்தனை இஷ்டம், சொல்லப் போனால் அவர் தான் அவனுடைய முதல் ஹீரோ என்று கூடச் சொல்லலாம்.

செல்விக்கும் சுந்தரலிங்கத்துக்கும் ஐந்து ஆண்குகள் கழித்து அருண்கிருஷ்ணா பிறந்த போது கூட, பிரேமகிருஷ்ணா மீது தம்பதிகள் இருவரும் வைத்த நேசமும் பாசமும் இம்மியளவு கூடக் குறையவில்லை என்பது தான் உண்மை.

குழந்தைகள் வளர வளரக் குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சியும் சேர்ந்தே தான் வளர்ந்தது.

எவ்வளவு கஷ்டம் வந்த போதும் சுந்தரலிங்கம் மகன்கள் இருவரதும் படிப்பில் கை வைக்கவேயில்லை.

அவர் ஒரு அரசாங்க ஆசிரியர் என்பதையும் தாண்டி, இரவு நேரத்திலும் வேலை செய்யத் தொடங்கியிருந்தார்.

சுந்தரலிங்கத்தின் கஷ்டமோ நஷ்டமோ அருண்கிருஷ்ணாவை நெல்முனையளவு கூடப் பாதிக்கவில்லை.

ஆனால் பிரேமகிருஷ்ணாவை மலையளவு பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தன்னுடைய பதினைந்தாவது வயதில் தன் சித்தாப்பாவுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், சிறு சிறு வேலைகளுக்கு எல்லாம் போகத் தொடங்கி, பதினெட்டாவது வயதில் வீடுகட்டும் மேஸ்திரிக்குக் கூலி வேலைக்கே போகத் தொடங்கி விட்டான்.

சுந்தரலிங்கம் எவ்வளவு தடுத்தும் கிருஷ்ணா கேட்கவேயில்லை
‘எங்கட அப்பா எங்களுக்காகப் பகலிரவா கஷ்டப் படேக்குள்ள.. எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடக் கஷ்டமாத் தெரியேல்ல..’
என்றவனைக் கண்கள் கலங்கக் கட்டியணைத்துக் கொண்டார் சுந்தரலிங்கம்.

தனக்கு என்ன ஆனாலும் இந்தக் குடும்பத்தைத் தன் வளர்ப்பு மகன், தனியாளாக நன்றாகவே பார்த்துக் கொள்வான் என்கிற நம்பிக்கை அவருக்கு அப்போதே வந்து விட்டிருந்தது.

இது இப்படியிருக்க அவரது சின்ன மகனது விஷயம் வேறு மாதிரி ஆகத் தொடங்கி விட்டிருந்தது.

பெரியவர்களும் கிருஷ்ணாவும் அருணின் விஷயத்தில் விட்ட முதல் பிழை, அவனுக்கு அதிகளவில் செல்லங் கொடுத்தது தான்.

அளவுக்கதிகமாகச் செல்லங் கொடுக்கப் படும் பிள்ளைகள், எங்கோ ஒரு மூலையில் தங்கள் சுயம் இழந்து, அடுத்தவர்களது கஷ்டங்களைப் புரியாத ஜடங்களாக நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் அல்லவா.

நெல்வயலுக்குள் முளைக்கும் களை போலத் தான் சுந்தரலிங்கத்தின் சொந்த மகன் அருண்கிருஷ்ணா இருந்தான் என்று கூடச் சொல்லலாம்.

சின்ன வயதிலேயே அவன் பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் மனதை நோகச் செய்வதாகவும், மற்றவர்களை மட்டந் தட்டுவதுமாகவே இருந்தது.

அவை எல்லாவற்றையும் விடவும், ஒன்றை நினைத்தால் அதனை உடனடியாக அடைந்தே தீர வேண்டும் என்கிற எண்ணம் அருணிடம் அதிகமாக இருந்தது.

அவனுடைய தாயும் தந்தையும் கிருஷ்ணாவில் செயல்களிலும் நல்ல பண்பான பேச்சுகளிலும் பூரித்துப் போயிருந்ததால், தங்கள் மகனைப் பெரியவன் எப்படியும் மாற்றி விடுவான் என்றே நம்பினார்கள்.

கிருஷ்ணா காட்டும் கண்டிப்பு மட்டுமே அருணிடம் ஓரளவு வேலை செய்தது என்று கூடச் சொல்லலாம்.

இந்தக் கால கட்டத்தில் தான் மாரடைப்பால், தன்னுடைய பூலோகப் பயணத்தைச் சுந்தரலிங்கம் எதிர்பாராத விதமாக முடிக்க வேண்டியிருந்தது.

அந்த வேளையில் தன் மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான மகன் கிருஷ்ணாவை அழைத்து அவர் சொன்ன ஒரு விசயம் தான், இப்போது அருண் சொல்லும் எல்லாவற்றிற்கும் கிருஷ்ணாவைத் தலையாட்டிப் பொம்மை போல மாற்றி வைத்திருக்கிறது.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page