மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 6
அருந்ததியின் கால் பாதத்தின் பாதி பகுதியில் தீச்சுட்டுப் பொசுக்கப்பட்டு இருந்தது. உடலில் ஏற்பட்ட காயம், மனதில் தோன்றிய பயம், வலியென அனைத்தும் அச்சிறு மலரின் உடல் நிலையைப் பாதித்திருந்தது. ஆம்! காய்ச்சல் கண்டு அதே பயத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் கூட அலறிக்கொண்டிருந்தாள்.
அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமுதாவின் விழிகளில் கண்ணீர் பொழிந்தது. தன் கண்ணீரைத் துடைத்தபடி,
‘கடவுளே! இந்தச் சின்னப் பொண்ணு யாருக்கு என்ன செஞ்சா? ஏன் இவளை இப்படி தண்டிச்சிட்டு இருக்க? இதுக்கு ஒரேடியா இவளைக் கொன்னுடலாமே?’ என்று இறைவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தெரியாதே அவள் இந்தப் பூமிக்கு வந்ததன் நோக்கம் இப்பொழுது தான் தொடங்கியது என்று!
“ஏய்! என்ன அவ பக்கத்துல உக்காந்து அழுதுட்டு இருக்கே? ஏன் நீ தான் அவளைப் பெத்தியா?” என்று கர்ண கொடூரமாய் கேட்டபடி அங்கே வந்தாள் சகுந்தலா.
அவளைக் கண்டதும் அமுதாவின் கால்கள் நடுங்கத் துவங்கியது.
“அம்மா இல்லைங்கம்மா… புள்ளை கால் முழுக்க புண்ணாயிடுச்சு. அது தான் மருந்து போட்டுட்டு இருந்தேன்மா…” என்றாள் கீழே குனிந்தபடி.
ஏனோ சகுந்தலாவை பார்க்கும்போது அத்தனை கோபம் வந்தாலும் கூடக் கோபத்தைக் காட்டும் இடத்தில் அவள் இல்லையே! ஒரு அடிமைக்குக் கோபத்தைக் காட்டுவதற்கு வழி உண்டா என்ன?
‘இவளெல்லாம் ஒரு பெத்த தாயா? தான் பெற்ற பிள்ளையை யாராவது இப்படி தண்டிக்க முடியுமா என்ன? அதுவும் இத்தனை குரூரமாய்!’ என்றவளுக்கு தெரியாதே இன்னும் கூடக் குரூரமாய் தண்டிக்க சகுந்தலாவால் முடியும் என்று!
“புண்ணு தான ஆச்சு இன்னும் உசிரு இருக்குல்ல… பரவாயில்லை அப்புறம் இங்கே நடந்த எதுவும் அத்தைக்கும் அவருக்கும் தெரியக் கூடாது சரியா?” என்று வெஞ்சினத்துடன் சொன்னவள் அருந்ததியை ஒருவிதமான திருப்தியுடன் பார்த்தபடி சென்றாள்.
சகுந்தலாவின் கண்களில் இருந்த நிம்மதி அமுதாவின் மனதில் சூறாவளியாய் சுழற்றியடித்தது.
அந்த அறையில் இருந்த கண்ணனின் புகைப்படம் அருகே வந்தவர்,
“கண்ணா, இந்தப் புள்ளையை சுமந்து பெத்தவளால இவ்வளவு கொடூரமா எப்படி இருக்க முடியுது? எனக்குக் கொஞ்சமும் புரியலையே… கண்ணா என் அடிவயிறு பத்தி எரியுதே… இதுக்கு ஒரு தீர்வே இல்லையா? இந்தக் குழந்தை இன்னும் என்னென்ன கஷ்டத்தை எல்லாம் தாங்கணுமோ? எனக்குப் புரியலையே கண்ணா…” என்றவளின் கண்ணீர் துளி பூமியை தொட்டது.
இன்று நடந்தது அப்படியே நினைவில் மீண்டும் ஒருமுறை வந்து போனது.
இன்று கற்பகநாயகியும் மாணிக்கமும் உறவுகளில் ஏதோ பெரிய காரியம் என்று சென்றிருக்க, அருந்ததியோ பள்ளி விட்டு அப்பொழுது தான் வந்தவள் அமுதாவுடன் சற்று நேரம் பேசி விளையாடிவிட்டு தனது வீட்டுப் பாடங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.
அமுதாவும் வீட்டு வேலை செய்ய ஆரம்பிக்க அப்போது தான் வெளியே இருந்து வந்தனர் துருவனும் சகுந்தலாவும்.
துருவன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து போனில் விளையாடிக் கொண்டிருக்க சகுந்தலாவோ தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சற்று நேரத்தில் எதுவோ உடையும் சத்தம் கேட்கத் தன் அறையிலிருந்து சகுந்தலாவும், சமையல் அறையிலிருந்து அமுதாவும், வேகமாய் வெளியே வர அங்கே உடல் நடுங்க அருந்ததியும் அவளுக்குக் கீழே துருவன் விளையாடிக் கொண்டிருந்த அலைபேசி உடைந்து கிடக்க அதைக் கண்ட சகுந்தலாவோ என்ன நடந்தது என்று கூடக் கேட்காமல் வேகமாய் வந்தவள் அருந்ததியின் கன்னத்தில் பளாரென அறைந்தவள்,
“சனியனே! உனக்குச் சோறு போட்டுப் படிக்க வைக்குறதே வெட்டித் தெண்டம்… இதுல முப்பதாயிரம் ரூவா போனை போட்டு உடைச்சி வச்சிருக்க… உன்னை யாருடி போனை எடுக்கச் சொன்னது?” என்றவளுக்கு இதைவிட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை போல் மேலும் நான்கு அடிகளைக் கொடுத்தவளின் காதுகளில்,
“அம்மா, நான் எதுவும் பண்ணலைமா…” என்றவளின் குரல் கேட்கவில்லை போலும்.
அவளை அங்கேயே நிறுத்தியவள், “இந்த இடத்தை விட்டு நகர்ந்த உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன் பாத்துக்கோ…” என்றபடி உள்ளே சென்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வந்தவளின் கரங்களில் இருந்ததை கண்டு அமுதாவின் விழிகளோ தெறித்து விழ, அருந்ததியின் உடலோ மேலும் பயத்தில் நடுங்கியது.
அமுதாவோ வேகமாய் சகுந்தலாவின் அருகே வந்து,
“அம்மா வேணாங்கம்மா… அவ சின்னப் பொண்ணும்மா… தெரியாம இப்படி பண்ணிட்டாம்மா… விட்ருங்கம்மா… வேணாங்கம்மா அவ உங்க பொண்ணும்மா… இப்படி பண்ணாதீங்கம்மா…” என்றபடி அவளின் கையைப் பிடிக்க அதைப் பிடித்து ஆவேசத்துடன் உலுக்கித் தள்ளிய சகுந்தலா,
“ஏய்! அவ என் பொண்ணுடி… அப்போ அவ தப்பு செஞ்சா நான் தண்டிக்கனும் இல்ல… இப்போ நான் குடுக்கப் போற தண்டனையில அவ வாழ்க்கை முழுக்க தப்பு பண்ணமாட்டாடி… நீ இடையில வராதடி…” என்றபடி ஒரே தள்ளாகத் தள்ளி விட அமுதாவின் தலையில் அடிபட அப்படியே மயங்கி விழுந்தவளின் கண்களில் அருந்ததியின் அலறல் சத்தம் அந்த வீட்டையே அதிர வைத்தது.
ஆம்! அருந்ததியின் பாதத்தில் தான் எடுத்து வந்திருந்த சூட்டுக் கோலினால் சூடு வைத்தாள் சகுந்தலா.
“அம்மா, நான் எதுவும் செய்யலைம்மா… அண்ணன் தான்மா உடைச்சான்…” என்றவளின் அலறலை கொஞ்சமும் காது கொடுத்துக் கேட்கவில்லை சகுந்தலா.
உண்மையில் அந்த அலைபேசியை உடைத்தது துருவன் தான். ஆனால் தாயின் மேலுள்ள பயத்தில் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட அந்த அமைதிக்கு பலியாகிவிட்டாள் அருந்ததி.
அமுதா மயக்கம் தெளிந்து எழும்போது உட்ச பட்ச பயத்திலும் காய்ச்சலிலும் அருந்ததி அனத்திக் கொண்டு படுத்திருந்தாள்.
அவளைப் பார்த்த அமுதாவிற்கு தான் மனம் பாரமானது.
இதோ இப்போது வந்து எதுவும் நடக்காதது போல் அருந்ததியின் காயத்தை ரசனையாய் பார்த்து விட்டுச் சென்ற சகுந்தலாவின் மேல் அத்தனை கோபம் திரும்பினாலும் கூட அதைக் காட்ட முடியாத தன் இயலாமை மேல் கோபம் வந்தது அமுதாவிற்கு.
‘கடவுளே! இந்தப் பொண்ணை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்திடேன்…’ என்று மானசீகமாய் கடவுளிடம் வேண்டுதல் வைக்கத் தான் முடிந்தது.
*
இங்கே விவேகன் தன் படிப்பிலும் வேலையிலும் நேரம் இல்லாமல் ஓடக் காலத்தின் கட்டாயமோ மாற்றமோ அருந்ததியும், அமுதாவும் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டனர்.
இங்கே தன் அத்தானை மனதில் வைத்து அவனுக்கெனவே தன்னை சிற்பமாய் செதுக்கிக் கொண்டு அத்தனை தடைகளையும் தாங்கிப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு அடுத்த சோதனையாய் அவளின் பெண்மை பூத்தது.
ஆம்! அவள் பருவமெய்திவிட்டாள். அதைக் கண்ட சகுந்தலாவின் மனம் இன்னும் வெகுண்டெழுந்தது. ஆனால் அதை நேரடியாகக் காட்ட முடியாமல் மாணிக்கமும் கற்பகநாயகியும் நடுவில் நின்றனர்.
முன்பே அந்த தீக்காயத்திலிருந்து சற்று அடக்கியே வைக்கப்பட்டார் சகுந்தலா.
இந்தத் தருணத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அவள் வயதுக்கு வந்த அன்றே அந்த வீட்டில் நன்றாக இருந்த பசுமாடு இறந்து விட இவளின் ராசியால் தான் இப்படி நடந்தது என்று அதையே வைத்து ஒரு பெரிய பிரச்சனையாக்கினாள் சகுந்தலா.
அடுத்தடுத்த நடந்த சின்னச் சின்ன விஷயங்களில் கூடச் சகுந்தலா சொன்னது உண்மையோ என்னும் அளவு மாணிக்கத்தின் மனதிலும் கற்பகநாயகியின் நினைவிலும் விஷ விதை விழுந்தது.
எல்லோரின் மனமும் சலனத்தில் இருந்த நேரத்தில் அவளின் சடங்கைப் பற்றிக் கூட யாரும் யோசிக்கவில்லை. ஆனால் அமுதாவால் அப்படி இருக்க முடியாமல் அருந்ததிக்கு தலைக்குத் தண்ணீர் ஊற்றித் தான் எடுத்து வந்த புது ஆடையை உடுத்தி வீட்டிற்கு அழைத்துக் கொண்டாள்.
அதைப் பற்றிக் கூட யாரும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.
அன்று அப்படித்தான் மாணிக்கம் தன் வேலையாய் வெளியே செல்லும் நேரம் எதிரில் அருந்ததி வந்துவிட்டாள். அவன் முதலில் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்று விட மீண்டும் வீட்டிற்கு வரும்போது கைகால்கள் அடிபட்ட நிலையில் வந்தான்.
அதைக் கண்ட சகுந்தலாவோ அதற்கும் காரணம் அருந்ததி என்று கூறிவிட, கற்பகநாயகிக்கும் மாணிக்கத்திற்கும் அது உண்மையெனத் தோன்ற அன்று ஆரம்பித்தது அருந்ததியின் அடிமை வாழ்வு அனைவருக்கும் தெரியும்படியாய்.
ஏன் பரிமளம் கூட அவளின் ராசியை கண்டு விலகிச் சென்று விடப் பெற்றவர்கள் உற்றவர்கள் இருந்தும் அனாதையாய் ஆக்கப்பட்டாள் அருந்ததி.
காலம் என்னும் சூழலில் கலங்கரை விளக்கமாய் வாழ்க்கை அமைந்து விட அது ஓடிய ஓட்டம் தெரியவில்லை வருடம் ஐந்தை கடந்திருந்தது.
கற்பகநாயகியின் அந்தப் பெரிய வீட்டில் வெள்ளி கொலுசுகள் சப்திக்க சமையல் கட்டிற்குள் வேகமாய் ஓடிவந்தாள் அருந்ததி.
“அமு…” என்றபடி அமுதாவை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் அருந்ததி.
“என்ன! என் அரு குட்டி சந்தோஷமா வரா… என்ன விஷயமாம்?” என்றபடி தன் வேலையைச் செய்தபடி பேசினாள் அமுதா.
“ஹ்ம்ம்… நான் எதுக்கு இப்படி வரேன்னு உங்களுக்குத் தெரியாதா? இன்னும் போன் வரலையா அமு?” என்றவளின் கண்களில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் பொங்கி வழிந்தது.
“இன்னும் இல்லை அரு குட்டி. சாயந்திரம் தானே பண்ணுவாங்க. இல்லைன்னா நீயே பண்ணேன். இந்தா போன்…” என்றபடி அந்தப் பட்டன் அலைபேசியை நீட்டிட,
“இல்ல அமு, என் குரலைக் கேட்டாவே அத்தான் வச்சிடுவாங்க. நீங்களே பேசுங்களேன். எனக்குக் குரல் மட்டும் கேட்டா போதுமே…” என்றாள் ஆர்ப்பரிக்கும் விழிகளுடன்.
அருந்ததி இப்போது பதினெட்டு வயது பருவ மங்கை. அதிக வளர்த்தியும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல் சரிசமமான அளவுடன் தங்க முலாம் செய்த நங்கையாய் தகதகக்கிறாள் பெண்ணவள். ஆனால் அவளின் இந்தத் தங்க நிற தேகத்தைக் கண்ட சகுந்தலாவின் முகம் தான் இஞ்சி தின்ற குரங்காய் மாறிப் போகும்.
பின்னே அவளோ மாநிறத்தில் இருக்க இவளோ தன் சின்ன அத்தையின் தங்க நிறத்தை அல்லவா உருவமாய் கொண்டுள்ளாள். முன்பே மகளைக் கண்டால் ஆகாது. இப்போது சொல்லவா வேண்டும்? தனது சின்ன நாத்தனாரின் பிரதிபிம்பமாய் நிற்பவளைக் கண்டவளுக்கு ஆத்திரம் பொங்கும் நேரம் எல்லாம் அருந்ததியை திட்டித் தீர்த்துக் கொள்வாள்.
இப்போது கற்பகநாயகியும் சரி மாணிக்கமும் சரி யாரும் அவளைத் தட்டிக் கேட்பதில்லை. அவர்களுக்குத் தான் சொந்த மூளை செத்துப் பல வருடங்களாகிறதே! கண்களைக் கட்டிக் காதுகளைப் பொத்தி வைத்துக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அருந்ததியோ அந்த அலைபேசியையே பார்த்துக் கொண்டிருக்க அவளின் எண்ணத்தைப் பொய்யாக்காமல் சரியாக ஐந்து மணிக்கு அந்த அலைபேசி தன் இருப்பை உறுதி செய்தது.
உள்ளம் படபடக்க அதை ஆன் செய்து அவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு அமுதாவிடம் பேசச் சொல்லிக் கண்ணைக் காட்ட அவரோ புன்சிரிப்புடன்,
“ராஜா எப்படி இருக்கீங்க?” என்றார் சிரிப்புடன்.
அந்தப் பக்கம் இருந்து வரும் குரலுக்காக இங்கே இந்தச் சிறு இதயம் துடிக்க ஆரம்பித்திருந்தது.
“நான் நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? அங்கே இருக்குற எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கம்பீரமாய் அந்தக் குரல் ஒலிக்க அதில் பெண்ணவளின் கண்கள் கலங்கி கண்ணீர் துளி சிதறியது.
இதோ இந்தக் குரலைக் கேட்கத்தானே இந்த ஒரு வாரம் தவமாய் காத்திருக்கிறாள்.
“அத்தான்…” என்று அவளையும் மீறி அழைத்து விட அவளின் குரலைக் கேட்டதும் அந்தப் பக்கம் அமைதியாகி விட்டுச் சற்று நேரத்தில் அழைப்பும் துண்டிக்கப்பட்டது.
உள்ளமெங்கும் வலி எடுக்க மனதின் பாரம் தாங்காமல் அமுதாவின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள் பெண்ணவள்.
அவளின் குரலைக் கேட்டதும் உடனே அந்த அலைபேசி ஏன் அணைத்து வைக்கப்பட்டது?
அதே நேரம் இங்கே ஒருவனோ தன் உள்ளத்தில் எழும் வலியைத் தாங்கமுடியாமல், “ஆஆஆ……” என்று அந்த அறையே அதிரப் பொங்கினான்.
அவன் யாரோ…? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
