வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 13
“அழகான பெண்கள் பலருண்டு. அறிவான பெண்களும் பலருண்டு. அன்பான பெண்களும் பலருண்டு. இந்த எல்லாக் குணமும் சேர்ந்து கிடைச்சா ஒரு ஆண் நிஜமாவே அதிர்ஷ்டசாலி. அதே சமயம் அறிவான, சுதந்திரமான சிந்திக்கச் தெரிஞ்ச பெண்களுக்குச் சுய மரியாதையும் உண்டு.
-ஆதி.
தன் சுழல் நாற்காலியில் சுழன்றபடி சிரித்துக் கொண்டிருந்த நண்பனை வினோதமாகப் பார்த்து வைத்தான் சுக்ரீவ்.
“ஆதி, நீ தனியாகச் சிரிக்கிறதை இதோட நாலு பேர் எங்கிட்ட சொல்லிட்டாங்க. சண்டே கூட ஆபிஸ் வர நீ நேத்து நைட்தான் ஆபிஸ் வந்துருக்க. என்னடா நடக்குது இங்க?”
நேர்த்தியான எக்ஸ்கியூட்டிவ் சூட்டில் நின்ற நண்பனை நிமிர்ந்து பார்த்தான் ஆதி.
“என்ன சுக்ரீவ்?”
“அதைத்தான் உன்கிட்ட கேக்குறேன்.”
மீண்டும் ஆதியின் முகத்தில் புன்னகை. சுக்ரீவிடம் அவன் எதையும் மறைத்தது இல்லை என்பதால் நண்பனிடம் தன்னுடைய காதலைப் பற்றியும், வெளியில் சென்றதைப் பற்றியும் கூறினான். காதலியைப் பற்றிக் கூறும்போது சுக்ரீவின் புருவம் சுருங்கியது.
“ஆதி, யாருமில்லாத பொண்ணுன்னு சொல்ற? நம்ம ஸ்டேட்டஸுக்கு சமமும் இல்லை. எப்படிடா உன் வீட்டில் அம்மா ஒத்துக்குவாங்க?”
“இதில் அவங்க ஒத்துக்க என்ன இருக்கு? எனக்குப் பிடிச்சுருக்கு. நான் கல்யாணம் பண்ணிப்பேன். லைஃப் பார்ட்னர் குணத்தைப் பார்த்துச் செலக்ட் பண்ணனும். பணத்தைப் பார்த்து இல்லை. பணத்தைப் பார்த்துச் சூஸ் பண்ணி நம்ம சர்க்கிள்ல இருக்குற சிலர் நிலைமை என்னன்னு உனக்கே தெரியும். அதெல்லாத்தையும் விட எனக்கு முகியைப் பிடிச்சிருச்சு. பழகும்போது இன்னனும் பிடிச்சிருக்கு.”
“எல்லாம் ஓகேடா. உனக்கு நல்ல பார்ட்னர் கிடைக்கறதில் என்னைவிட யாரு சந்தோஷப்பட போறா! ஆனால் உன் அம்மா ஒத்துக்க வாய்ப்பில்லை.”
“அம்மா நிச்சயமாக ஒத்துக்குவாங்க. அவங்களை விடு. முதல்ல முகி ஒத்துக்கணும். அதுதான் கஷ்டம்.” என்று முறுவலுடன் கூறியதில் சுக்ரீவுக்கும் புன்னகை தொற்றியது.
“யாரு அவங்க? எனக்கே அவங்களைப் பார்க்கணும் போல இருக்கே!” என்றபடி அவன் எதிரில் அமர்ந்தான்.
“கண்டிப்பா! உயிர் நண்பன் நீ பார்க்காமலா?”
“ஆதி, டெய்லி டெக்ஸ்ட்டை விட்டுட்டு கால் பண்ணி பேச ஆரம்பி. அப்பதான் பான்டிங் உருவாகும். சரி நான் கிளம்பறேன்.”
“ம்ம்ம்… ஓகே.”
நண்பன் கூறியபடி கைப்பேசியை எடுத்தவன் முகிக்கு அழைத்தான். கணினியில் மூழ்கி இருந்த முகி கைப்பேசியின் அழைப்பொலி கேட்டதும் சட்டெனப் பயந்து விட்டாள். பிறகு சில நொடிகள் மூச்சு விட்டவள் மேசையில் வைத்திருந்த கைப்பேசியை எடுக்கப் போக அழைப்பு நின்றிருந்தது. திரையில் தெரிந்த அவன் எண்ணைப் பார்த்ததும் முகியின் விழிகள் விரிந்து இதயத்துடிப்பு எகிறியது.
“இவரா? இந்த நேரத்திற்கு கூப்பிட்டிருக்கார்?”
ஆதி அவள் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் இன்னொரு முறை அழைத்துப் பார்க்கலாம் என்று அழைத்து விட்டான். அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் முகி.
“முகி.” அவன் காதல் வழியும் குரல் உயிரை வருடித்தான் சென்றது.
“சொல்லுங்க ஆதி.”
“உங்கிட்ட பேசணும் போல இருந்துச்சு. அதான் கூப்பிட்டேன். பேசலாமா?”
மடிக்கணினியைத் திரும்பிப் பார்த்தவள் மெல்ல நகர்ந்து அதை அணைத்து விட்டு, “பேசலாம்.” என்றாள்.
அதற்கே ஆதியின் முகத்தில் ஆயிரம் விளக்குகளை ஏற்றியது போல் மகிழ்ச்சி.
“என்ன செய்யற முகி? சாப்பிட்டியா?”
“நத்திங் சும்மாதான். சாப்பிட்டு முடிச்சுட்டேன். நீங்கச் சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன்.”
“வொர்க்ல இருக்கீங்களா?”
“இன்னும் ஆபிஸில்தான் இருக்கேன்.”
“ஓ…”
“இன்னிக்கு டே எப்படி இருந்துச்சு?”
“ஓகேதான். வொர்க் கொஞ்சம் ஹெவி. மத்தப்படி குட் டே. உங்களுக்கு?”
“ஸேம் வொர்க்.”
இப்படி பேச ஆரம்பித்தவர்கள் ஒரு மணி நேரம் பேசினர். வெற்றிகரமாக ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ அவர்களும் ஆரம்பித்து இருந்தனர். தினமும் காலையும், இரவும் பேச ஆரம்பித்து இருந்தனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி ஆதியால் வர முடியவில்லை என்பதையும் கூறி இருக்க, முகிக்கு ஏமாற்றமே! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ஆதி அடுத்த முறை வந்தபோது, இருவரும் காஃபேவில் கொட்டை வடி நீரைக் குடித்துக் கொண்டு அன்பை வளர்த்தனர். நாட்கள் நகர்ந்து ஓட ஆரம்பித்தன. ஆதிக்கும், முகிக்கும் நல்ல ஒரு நட்பும், புரிதலும் உருவாகி இருந்தது. பத்து மாதங்கள் உருண்டோடி இருந்தது.
இருவரும் மீண்டும் ஒரு நாள் கடற்கரை விடுதிக்குச் சென்றிருந்தனர். இரவு நேரம், மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் இரு இதயங்கள் உருகிக் கொண்டிருந்தன. இதுவும் தனிப்பட்ட குடில் போன்ற அமைப்பு உடைய கட்டிடம் என்பதால் அவர்களுக்குத் தனிமை தாராளமாய்க் கொட்டிக் கிடந்தது.
உணவுகளை அடுக்கி விட்டுப் பணியாளர்கள் சென்று விட அவர்கள் மனம் நிரம்பிக் கிடந்தது.
“இந்தக் கேக் சாப்பிடு முகி.” என அவளுக்குக் கேக் துண்டத்தை நீட்ட, முகியும் அதை வாங்கிவிட்டு சிறிய முள் கரண்டியால் வெட்ட முற்படும்போது, சிறிய நெகிழியில் பையில் அடைக்கப்பட்ட கடினமான பொருள் ஏதோ சிக்கியது.
“கேக்ல ஏதோ இருக்கு ஆதி.” என அதை வெளியில் எடுக்க, தங்க மோதிரம் வைரக் கற்களுடன் மின்னிக் கொண்டிருந்தது. முகியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. ஆதி அந்தப் பையை வாங்கி, டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து, மோதிரத்தை எடுத்து அவளருகில் மண்டியிட்டு அவளிடம் நீட்டினான்.
“ஐ லவ் யூ முகி! வில் யூ டிராவல் வித் மீ ஃபாரெவர்?” என விழிகளில் எதிர்பார்ப்பும், காதலும் சொட்டியபடி கேட்க, முகி சம்மதமாகத் தலை அசைத்தாள்.
“ஐ லவ் யூ ஆதி!” என்று முகி கூறியதும், எழுந்து விரல்களில் அவள் மோதிரத்தை போட்டுவிட்டவன்,
“ஷேல் ஐ…” எனக் கைகளை நீட்டிக் கேட்க, முகியும் எழுந்து நிற்க, அவன் கைகளுக்குள் சுகமாய் பொதிந்து கொண்டாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்ட ஆதி, அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனின் தோள்வரை உயரம் கொண்ட முகி அவனை நிமிர்ந்து பார்க்க, ஆதியும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் விழிகள் இதழ்களைக் கொய்ய வேண்டும் என்ற செய்தியைக் கொண்டிருக்க, அதைப் படித்த முகிக்கோ இதயத்தில் சாரல் மழை. அவன் தலையைக் குனிந்ததும் விழிகளை மூடிக் கொண்டாள் பாவை.
நெற்றி, கன்னம் என அவன் இதழ்கள் இறுதியாக முற்றுகை இட்டது, இதழ்களை. மெல்லிய தீண்டலாக ஆரம்பித்தது சில நொடிகளில் வன்மையாக மாற, பெண்ணோ தடுமாறிப்போனாள். அவன் கைகள் அவளை விடாதபடி இடையை மென்மையாக வளைத்திருக்க, இதழ்கள் இன்பத்தைக் கொண்டாடின. இருவரும் மூச்சுக்கு விலக, இதயத் துடிப்பு கேட்க, அவள் இமைகள் தாழ்ந்திருக்க சில நொடிகளுக்குள் மீண்டும் ஒரு முறை இதழொற்றல் ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்கள் நீண்டு செல்ல ஆதிக்கு அவளை விட்டு நீங்க மனதே இல்லை.
முகியோ புதிய உலகில் இருந்தாள். கன்னத்தில் ஏறிய வெம்மையும், வெட்கமும் அவளைத் தின்று கொண்டிருந்தன. அதற்குள் ஆதியின் கைப்பேசி அடிக்க, முகிக்குத் தனிமை கொடுத்து வெளியேறியவன் சில நிமிடங்களில் மீண்டும் வந்தான்.
உள்ளே வந்தவனை ஏறிட்ட முகிக்கு, கன்னத்தில் முத்தமிட்டவன், “சாப்பிடலாம் முகி.” என்றான்.
இருவரும் மெல்ல சாப்பிட ஆரம்பித்து முடித்துத் திரும்பும்போது இரவு பத்து மணி. மகிழுந்தில் வழியெங்கும் அவள் விரல் கோர்த்தப்படி பயணம் செய்ய, அவள் வீடு வந்தபோது பிரிய மனமில்லை.
“முகி, இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இன்னொரு டைம்.” என்று அவள் விழிகளைப் பார்க்கச் சம்மதமாகத் தலையசைத்தவளை அப்படியே மடியில் தூக்கி வைத்துக் கொண்டான்.
“எவ்வளவு நாள் கனவு தெரியுமா முகி?” என அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் மெல்ல கழுத்திலிருந்து காதிற்குச் செல்ல மெல்லிய முனகல் அவளிடமிருந்து வெளிப்பட்டது.
அது அவனை மேலும் பித்தாக்க, மற்றொரு முறை இதழ் தீண்டல் ஆரம்பித்தது. விழிகள் மூடி, காதலர்கள் இருவரும் அவர்கள் உலகத்தில் மூழ்கிப் போயினர். ஆள் நடமாட்டமின்றி தனித்திருந்த வீடு, அவர்களுக்கு வசதியாகிப் போக, இந்த முறை எந்தத் தடையும் இல்லை. ஆனால் பொது இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு முகிக்கு எழ, தன் கையை இதழ்களுக்கு இடையில் வைத்துத் தடுத்தாள் முகி.
“யாராவது வந்துருவாங்க ஆதி.” என மெல்லிய குரலில் மூச்சு வாங்கியபடி கூற ஆணவனின் விழிகள் காதலால் இன்னும் காதலால் தகித்துக் கொண்டிருந்தது.
அப்போது அருகில் வீட்டின் இரும்புக் கதவு திறக்கும் சத்தம் கேட்க, முகியைத் தூக்கி மீண்டும் பக்கத்து இருக்கையில் அமர வைத்தவன் தலை கோதிக் கொண்டு பெருமூச்சு விட்டான். அவனுக்கு இன்னும் அவளுடான தருணங்கள் வேண்டும் என்ற ஆசை.
பெண்ணவளோ ஆங்காங்கே கலைந்திருந்த தலை முடியையும், உடைகளையும் சரி செய்தாள். மௌனமாய் கழிந்தன சில நிமிடங்கள்.
“ஆதி, ஐ லவ் யூ!” என்றாள் முகி.
அவனுடன் பழகிய இத்தனை நாட்கள் முகிக்குள் நம்பிக்கையும், அன்பையும் விதைத்திருந்தது. அத்தோடு காதலும் சேர்ந்து கொண்டிருந்தது. அவனின் ஒவ்வொரு குணமும் அவளை ஈர்த்தது. அவள் இருக்கிறாளென நடிக்காமல் இயல்பாய் அவனும் நடந்து கொண்டாள். முகியும் அவள் இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
இருவரும் ஆராய்ச்சித் துறையில் இருப்பதால் ஒருவரையொருவர் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. முன்னை விட இருவரும் சேர்ந்து செலவளிக்கும் நேரங்கள் அதிகரித்திருந்தது. அவ்வப்போது போடும் குட்டி சண்டைகள் என நாட்கள் நகர்ந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல முகிக்கும் ஆதியை அதிகம் பிடிக்கிறது என்று உணர்ந்திருந்தாள். அவனை அதிகம் தேட ஆரம்பித்தாள்.
முன்னெப்போதும் விட அதிகம் சிரித்தாள், மகிழ்ச்சியாய் உணர்ந்தாள். அவன் காதல் மாற்றி இருந்தது. அவள் மகிழ்ச்சியில் முகமும் பொலிவுற ஆரம்பித்திருந்தது.
அவளின் சில மாற்றங்களைப் பார்த்து, “என்ன முகி, இப்ப எல்லாம் ஆளே ஜொலிக்கிற? என்ன சீக்ரெட்?” என உடன் பணியாற்றுபவர்கள் கேட்டிருந்தனர்.
“பார்லர். அப்புறம் ஏபிசி ஜுஸ்.” என அவர்களிடம் கதை சொல்லி இருந்தாள்.
அதை நினைத்துத் தனியே சிரித்தும் கொண்டாள். இப்படி ஆதியின் மேல் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பி வழிய ஆரம்பிக்க, அது இன்று வெளிப்பட்டிருந்தது. அவளுக்கும் தன் மீது காதல் வந்துவிட்டதை உணர்ந்த ஆதி, அவளிடம் திருமணம் செய்யக் கேட்கச் சம்மதித்து இருந்தாள்.
அன்றைய இரவு அவளைவிட மனம் இல்லாமல் வீட்டில் விட்டுச் சென்றிருந்தவன் அடுத்த ஒரு மாதத்தில் அன்னையின் கோபத்திற்கு ஆளாகி நின்றிருந்தான்.
தொடரும்…
