வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 14
“எல்லாரும் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சுதான் கல்யாணம் செய்யறாங்க. ஆனால் குடும்ப அரசியல்ல இங்க பல பேரோட காதல் கரைஞ்சு போய் வெறுப்புணர்வுதான் மிஞ்சி நிக்குது. என்ன நடந்தாலும், யார் பேசினாலும் தன்னோட துணையை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
-பத்மமுகி.
மாதவியம்மாள் முகத்தில் கோபம் தாங்கியபடி அமர்ந்திருந்தார். அருகில் ஆதியின் அக்காவும் நின்றுகொண்டிருந்தார்.
“இதை உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை. அந்த ஷீலா நீ ஒரு பொண்ணோட கைக்கோர்த்துட்டு சுத்துறதைப் பார்த்திருக்கா. நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகுறது? யாரு அந்தப் பொண்ணு? அந்த ஷீலா இனி நம்ம சர்க்கிள்ல எல்லாருக்கும் இந்த விஷயத்தைத் தம்பட்டம் அடிச்சுருவா. ”
தன்னை குழந்தைபோல் வைத்துக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்தவன்,
“இதில் எங்க கௌரவம் போகுது? என் கூட இருந்தது உங்க மருமகள். அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.”
“என்ன?” மாதவி கொதித்து எழுந்து விட்டார்.
“உன் அப்பா போனதுக்கு அப்புறம்…”
ஆதியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவனைப் பார்த்த அமிர்தா தன் அன்னையைப் பேச விடாமல் தடுத்தாள்.
“அம்மா, பொறுமையா இரு. நம்ம ஆதியைப் பத்தி அந்தம்மா சொல்றதை நம்பணுமா? ஆதிக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்குனா விடும்மா. ஆதி நீ கிளம்பு. அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன். எந்த இந்தியன் பேரன்ட்ஸ்தான் பசங்க லவ்வ உடனே ஏத்துக்குவாங்க? நீதான் பொறுமையாகப் பேசிச் சம்மதம் வாங்கணும்.” என அமிர்தா இருவருக்கும் சமாதானம் பேசினாள்.
அதில் கொஞ்சம் அன்னை, மகன் இருவருமே தணிந்தனர்.
“ஆதி, பொண்ணு என்ன பண்ணறா?” என அமிர்தா கேட்டாள்.
“அம்மா, முகி ரொம்ப நல்ல பொண்ணு. கவர்மெண்ட் ஆர்க்கியாலஜி டிபார்மெண்ட்டில் வொர்க் பண்ணுறா.”
“அவங்க அப்பா அம்மா?”
“அவளுக்கு யாரும் இல்லைக்கா.” என ஆதி கூறி முடித்திருக்க, மாதவிக்கு மேலும் கோபம். அவர்களுடைய தகுதிக்கு எத்தனை இடத்திலிருந்து ஆதியைக் கேட்டனர். இவன் என்னவென்றால் யாருமில்லாத பெண்ணைப் பிடித்து இருக்கிறது என்கிறான்.
அன்னையின் முகத்தைப் பார்த்த அமிர்தா, “ஆதி, நீ ஆபிஸ் கிளம்பு. நான் அம்மாகிட்ட பொறுமையாக எடுத்துச் சொல்றேன்.” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அவன் வெளியேறியதும், மாதவி தன் மகளை அதிருப்தியுடன் பார்த்தாள்.
“நீ எதுக்கு அமிர்தா ஆதிக்கு சப்போர்ட் பண்ணுற?”
“அட ஏம்மா? நீ குதிச்சு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னா ஆதி திடீர்னு அந்தப் பொண்ணை கல்யாணத்தைப் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டால்? யோசிம்மா! கோபப்பட்டுக் காரியத்தைக் கெடுத்திடக் கூடாது.” என் தன் அன்னையை மிஞ்சினாள் அமிர்தா. பேர் தான் அமிர்தா. ஆனால் உள்ளம் முழுக்க விஷம்.
ஆதியின் தந்தை போனபிறகு ஆதிதான் அவர்களுக்கு எல்லாமும். முக்கியமாக அன்னைக்கும், அக்காவுக்கும் பணத்தைக் கொடுக்கும் வள்ளல். தந்தை அன்னையையும், அக்காவையும் பார்த்துக் கொள்ளும்படி இறக்கும் முன் கேட்டிருக்க, பாசமிகுந்த ஆதியோ அதை வேதவாக்கென எடுத்துக்கொண்டிருந்தான். தமிழ் நாட்டில் ஆண்களின் மேல் சுமத்தப்படும் பொறுப்புதானே!
ஆனால் அமிர்தாவும், மாதவியும் பணக்காரத் திமிரும், கர்வமும் மிகுந்தவர்கள். ஒருவரைப் பணத்தைக் கொண்டே எடை போடும் கழுகுகள். தன் வீட்டிற்கு ஒரு பணக்காரப் பெண்ணை, தங்கள் சொல் பேச்சு கேட்கும் மருமகளாகக் கொண்டு வர நினைத்திருக்க அந்தக் கனவைப் பத்மமுகி என்னும் பெண் சுக்கு நூறாக உடைத்திருந்தாள்.
அன்னையின் இந்தக் குணம் அறியாமல் ஆதி தன் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள் என அன்னையையும், அக்காளையும் நினைத்திருக்க அது பணத்தால் வந்த பாசம் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் தன்னைப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் அன்னை. தன்னைத் தாங்கும் அக்கா.
காதலைச் சொன்னால் வீட்டில் எதிர்ப்பு வரும் என நினைத்திருந்தான். அதனால் இவர்கள் எதிர்ப்பை எதிர்ப்பார்த்தது போல் நடந்தது என நினைத்துக் கொண்டான்.
“அம்மா, ஆதியைப் பத்தி உங்களுக்குத் தெரியும். ஒரு முடிவு எடுத்தால் மாத்திக்க மாட்டான்.”
“அதுக்காக யாருமில்லாத அனாதையை மருமகளாக்குறதா?”
“அம்மா, அப்படி இருந்தால் நமக்கு ரொம்ப ஈஸி. கேள்வி கேட்க யாரு இருக்கா?” என அமிர்தா கேட்ட கேள்வியில் மாதவி யோசிக்க ஆரம்பித்தாள்.
“அதுவும் சரிதான். அம்மா, அவ நம்ம சர்க்கிளுக்கு செட்டாக மாட்டாள். அவளை ஆதி வாழ்க்கையில் கல்யாணம் பண்ணி வச்சாலும் துரத்துறது ரொம்ப ஈஸி. நமக்கு ஃப்ரீயா வேலைக்காரி கிடைக்கும்போது நாம ஏன் டென்ஷன் ஆகணும்? சீக்கிரம் அவளை ஆதி வாழ்க்கையிலிருந்து துரத்திட்டு வேற பொண்ணைப் பார்த்து அவனுக்குக் கட்டி வைப்போம். ஆதி எப்பவும் நம்மகிட்டதான் கிடக்கணும்.” என அமிர்தா சிரிக்க, மாதவியும் நரை முடி ஏறி, சுருங்கிய முகத்தில் புன்னகைக்க, அது பாம்பின் புன்னகை போல் இருந்தது.
இப்படி தான் அந்த வீட்டிற்கு வரும் முன்னரே அந்த வீட்டுப் பெண்கள் இருவரும் தன்னைத் துரத்தத் திட்டமிட்டிருப்பது அறியாமல் முகி கவலையில் இருந்தாள். அவளுக்கு ஆதியின் மூலமாக நிறைவான குடும்பம் அமையப் போகிறது. அவன் அன்னை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கடவுளை வேண்டிக் கொண்டாள். ஆனால் எவ்வளவு செய்தாலும் அவர்களிடம் நல்ல பேரை அவள் வாங்க முடியாது என்பது, அப்பாவி முகிக்குத் தெரியவில்லை.
“இப்ப என்ன செய்யறது அமிர்தா?”
“கொஞ்சம் விட்டுப் பிடிங்க. இரண்டு வாரம் போகட்டும். அதுக்குப் பின்னாடி நீங்க ஓகே சொல்லுங்க மம்மி. நான் அவங்கிட்ட பேசிக்கிறேன். ஆதி அந்தப் பொண்ணை விடமாட்டான். ஆதி குணம் உங்களுக்குத் தெரியும். அதை மட்டும் மனசில் வச்சுக்குங்க. அந்தப் பொண்ணே அவனை விட்டு ஓடினால் என்ன செய்ய முடியும்? ரிலாக்ஸா இருங்க மம்மி.”
பெற்ற மகனின் வாழ்க்கையைக் கெடுக்க அன்னையும், அவன் உடன் பிறந்தவளும் திட்டமிட அதை அறியாமல் ஆதி கவலைப்பட்டுக் கொண்டிருக்க, சுக்ரீவ் அவனை ஆறுதல் படுத்தினான்.
முதல் வாரம் முழுக்க மாதவி ஆதியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஆதியும் முகியின் குண நலன்களை ஒவ்வொன்றாகக் கூறிப் பார்த்தாள். ஆனால் மாதவி விருப்பமின்மையைக் காட்டினாள். ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு அமிர்தா வந்திருக்க, வீட்டின் மாடியில் சோகமாய் நின்று கொண்டிருந்த ஆதியைத் தேடிச் சென்றாள்.
“ஏன் ஆதி இங்க வந்து நின்னுட்டு இருக்க?”
பெருமூச்சு விட்டவன், “அம்மா ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். சாப்பிடும்போது கூட முகம் பார்க்குறது இல்லை.” என்றான் வருத்ததுடன்.
அவன் தோளைத் தொட்ட அமிர்தா, “எல்லாம் சரியாகிடும் ஆதி. எந்தப் பேரன்ட்ஸ்தான் முதல்ல ஒத்துக்குவாங்க? பொறுமையா இரு. நீ ஒன்னு பண்ணு. வொர்க் இருக்குன்னு நைட் ஆபிஸிலேயே கொஞ்ச நாள் இரு. அம்மா நீ வரலைன்னதும் உன்னைத் தேடுவாங்க. அப்புறம் கொஞ்சம் சமாதானம் ஆவாங்க.” என ஆதிக்கு ஆலோசனை கூறினாள்.
“நிஜமாவா அக்கா?”
“ட்ரை பண்ணு ஆதி. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்? அம்மாவுக்கு உன்னை இரண்டு நாள் கூட விட்டுட்டு இருக்க முடியாது. உனக்கு அடிக்கடி போன் பண்ணுவாங்க. நீ பிஸ்னஸ் ட்ரிப்புக்கு போயிட்டு வீட்டுல இல்லைன்னா எங்கிட்ட புலம்பிகிட்டே இருப்பாங்க. ஆதி என்ன பண்ணுறான்? சாப்பிட்டானா? அப்படின்னு! அதனால் கொஞ்ச நாள் வீட்டுக்கு வராமல் இரு. அம்மாவே உன்னைத் தேடி வருவாங்க.”
ஆதியின் அன்னைக்கு ஆதி மேல் அன்பிருந்தாலும், சுய நலம் பெரிது. ஆதியின் குணம் மாதவிக்கு ஒத்துப் போகாது. அப்படியே தந்தையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமிர்தாவிடம் கரித்துக் கொட்டுவார். அத்தோடு அமிர்தா அவர் குணத்தைக் கொண்டுள்ளதால் இருவரும் கூட்டு.
அக்காவின் ஆலோசனையில் ஆதியின் முகம் மலர்ந்தது.
“தேங்க்ஸ் அக்கா! நீயாவது என்னைப் புரிஞ்சுகிட்ட.”
“அக்கா உனக்காக எது வேணாலும் செய்வேன்டா.” என அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.
அமிர்தாவுக்கு சிறுவயதில் ஆதியின் மேல் பாசம் இருந்தது. ஆனால் வளர வளரப் பணத்தாசையும், கர்வமும் அதை அழித்திருந்தது. சிறுவயதில் செய்வது போல் அக்கா அவன் கன்னத்தைக் கிள்ளியதும் அவன் முகம் மேலும் புன்னகையைத் தத்தெடுத்தது.
“ம்ம்… இதுதான் என் தம்பி. எப்பவும் சிரிச்சுட்டே, சந்தோஷமாக இருடா.”
அக்காவின் ஆதரவு ஆதிக்கு மிகவும் பலமாக இருக்க, ஆதி உச்சி குளிர்ந்து போனான். ஆனால் ஆதரவு எல்லாம் ஆதாயத்துடன் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அறியும் நேரத்தில், அவன் காதல் மனைவி கை எட்டும் தூரத்தில் இருக்கமாட்டாள் என்றும் அறியவில்லை.
வீட்டில் நடப்பதை முகிக்கும் கூறி இருந்தான் ஆதி. முதல் வாரம் அவனைச் சந்தித்தபோது ஆதியின் வருத்த முகம் அவளைத் தாக்கியது. வாடிய காதலனின் முகம் பார்க்க முடியாமல் கட்டியணைத்துக் கொண்டாள்.
“ஆதி, அம்மா ஒத்துக்குவாங்க பாரேன். அக்கா எப்படியும் நமக்காகப் பேசுவாங்க.”
முகியின் ஆறுதல் மேலும் அவனை அமைதியாக்கியது. இயல்பாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தான். இருவரும் வெளியில் சென்று சாப்பிட்டு, தீம் பார்க் சென்று விளையாடி விட்டு வந்தனர்.
ஆனால் முகிக்கும் மனதில் கலக்கம்தான். யாருமில்லாத பெண்ணை யார்தான் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்வர்? சீர், வரதட்சணை, சடங்குகள் இப்படி அவளுக்கென நிற்க யாருமில்லை. அந்த வருத்தமும் மனதில் இருந்தாலும் ஏற்கனவே கவலையில் இருக்கும் அவனிடம் அதை வெளிப்படுத்தவில்லை.
அதனால் இருவரும் இப்படி வெளியில் சென்று தங்களை சமாதானம் செய்து கொண்டனர். முகியுடன் நேரம் செலவிட்டதில் ஆதியின் கவனமும் திசைமாறி இருந்தது.
முகியின் மனதில் பாரம் அதிகரித்திருந்தது. தன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. ஒரு குடும்பமாய் வாழ அவளுக்கு மிகுந்த ஆசை இருந்தது. எது கிடைக்கவில்லையோ அதன் மீது ஆசை கொள்வது மனித மனத்தின் இயல்புதானே! இரு வாரங்களும் அவள் மனதில் அலைக்கழிப்புத்தான். அவள் முகத்தில் சோகம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் இதை அவள் ஆதியுடம் காட்டிக் கொள்ளவில்லை. முகியின் இந்தக் குணமே அது அவளுக்கு எதிரியாகிப் பின்னாளில் அவளைக் கொன்று தின்ன ஆரம்பித்தது.
இரண்டு வாரங்கள் கழித்து மாதவியின் எதிரில் அமர்ந்துகொண்டிருந்தாள் பத்மமுகி.
தொடரும்…
