பாகம் – 14
அரவிந்த் ஏதாவது சொன்னால் , “இல்லைடா என் மருமகளை மாதிரியே அவனுக்கும் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது ..இது ஒன்று போதாதாடா.. இவன் நம் குழந்தை என்று.. உனக்கு ஏதோ ஒரு வியாதி வந்து இருக்கிறது.. சந்தேகம் பிடித்த வியாதி ..அதனால் தான் நீ இப்படி இருக்கிறாய் ..இன்னும் ஒரு முறை வந்து ஏதாவது இப்படி பேசினால் உன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டு நாங்கள் நான்கு பேரும் ஒன்றாக இருந்து கொள்வோம் எப்படி வசதி..” என்று மாறன் மிரட்டுகிறார் ..
எந்த பக்கமும் அவனால் பேச முடியவில்லை ..ஆனாலும் கடவுள் கண் திறந்தது போல அவனுக்கும் ஒரு வழி கிடைக்கிறது ..
சிறு வயதிலிருந்து அவனுக்கென்று தனியே நண்பர்கள் கிடையாது.. பொதுவாய் பேசிக் கொள்வான். தன்னுடைய பர்சனல் விஷயங்கள் கலந்து பேசும் அளவிற்கு ஏனோ யாரிடமும் நட்பு வைத்துக் கொள்ளவில்லை .அவன் பழகியது ஒரே ஒரு ஆள் என்றால் அது மித்ரா மட்டுமே..
அவளிடமும் இப்பொழுது எது பேசினாலும் பிரச்சனை.. இவன் நெருங்கி பழகவில்லை என்றாலும் இவன் ஆபிஸில் இவனுக்கென்று ஒரு தோழன் இருக்கிறான். அவன் பெயர் நவீன்… இவன் எதுவும் சொல்கிறானோ இல்லையோ.. நவீன் தன்னுடைய வீட்டு விஷயங்கள் எல்லாவற்றையும் இவனிடம் சொல்லி விடுவான்.. அரவிந்த் தலையாட்டி கேட்டுக் கொள்வான் அவ்வளவுதான்.. அதற்குரிய தீர்வை கூட சொல்ல மாட்டான்.. ஆனாலும் நவீன் தன் நண்பனுக்காக உயிரையே கொடுப்பான்.
இப்போது கூட அவனிடம் கலந்து பேச வேண்டும் என்று கூட அரவிந்துக்கு புத்தியில் எட்டவில்லை ..சிறு வயதிலிருந்து வந்த பழக்கத்தை திடீரென எப்படி மாற்ற முடியும்..
ஆனாலும் நவீனை நண்பனைக் கவனித்து ஏதோ பிரச்சினை என புரிந்து கொள்கிறான் ..
“டேய் அரவிந்த உன் பிள்ளைக்கு இப்பொழுது தானே நான்கு வயது ஆகிறது .. “பிள்ளையைப் பற்றி பேசவும் அவன் கொஞ்சம் அரண்டு தான் போகிறான்..
” ஆமாம் அதற்கு என்னடா. “
“இல்லை உன் பிள்ளைக்கு நாற்பது வயதாகி விட்டதோ என்று நினைத்தேன். “
நவீன் என்ன பேசுகிறான் என்று இவனுக்கு புரியவில்லை …
“ஏன்டா லூசு மாதிரி உளறிகிட்டு இருக்குற.. “
” ஆமா உன்னை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது ..வயதானவன் போல இளைத்து கருத்து போய் கிடக்கிற.. உனக்கு என்னதான் பிரச்சனை ..என்னிடம் கொஞ்சம் சொல்லித்தான் பாரேன். உன் மனம் கொஞ்சமாவது அமைதியாகிறதா என்று பார்க்கிறேன்.. நானும் உன்னை ரொம்ப நாட்களாக கவனித்துக் கொண்டு வருகிறேன்.. நீ ஆளே சரி இல்லைடா.. முன்பு கலகலவென இருந்த அரவிந்தா நீ.. என்னமோ பித்து பிடித்தவன் போல பேய் பிடித்தது மாதிரி நிற்கிற.. “
அதற்கு மேல் அரவிந்தால் கட்டுப்படுத்த முடியவில்லை ..அவன் தோளில் சாய்ந்து கொண்டு வாய் மூடி அழுகிறான்.. அப்படியே தனியாக அழைத்து சென்று விடுகிறான் .யாரும் கவனிப்பார்கள் என்று ..
இப்பொழுது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல் .. இல்லா விட்டாலும் பரவாயில்லை . நன்றாக அழுது முடி..உன் மன பாரம் குறையும். “
” இல்லடா எனக்கு யாரிடமாவது இதை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.. நான் பேசி முடித்த பிறகு என்னடா இவன் இப்படி பேசுகிறானே என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.. என்னை திட்டவும் கூடாது. இதற்கெல்லாம் சரி என்றால் தான் நான் என் மனதில் உள்ளதை சொல்வேன் .. ” நிறைய வாக்குறுதிகளை வாங்கிக் கொண்டுதான் தன் சந்தேகத்தை அவனிடம் சொல்கிறான் ..
அவன் திட்டவில்லை.. நண்பன் சொல்வதை அனைத்தையும் கேட்கிறான்.. காரணம் ‘அவன் மன உளைச்சலால் தானே இப்படி தோற்றமே மாறிப் போய் இருக்கிறான்.. சும்மா பழி போடுவதற்கு இவன் என்ன பைத்தியமா., தன் மனதில் உள்ளவற்றை வரிசையாய் சொல்லி முடித்ததும் , “சரிடா நீ தங்கச்சியை ஆசையாய் காதலித்து தானே கல்யாணம் செய்து கொண்டாய்.. “
” ஆமாம் டா இப்பொழுது வரையும் நான் அவளை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் .. “
“பிறகு எப்படியடா உனக்கு அந்த பெண்ணின் மீது சந்தேகம் வந்தது .. “
..அவனுடைய செயல்பாடுகள் ஏதோ ஒன்றாவது என்னுடைய வார்ப்பில் இருக்க வேண்டாமாடா.. எனக்கு அவனைப் பார்ப்பதற்கு வேறு யாரோ ஒரு குழந்தையை பார்ப்பதை போல இருக்கிறது.. “
“அதற்குக் காரணமும் நீயே தான் சொல்லி விட்டாய் ..உன் மனைவி குழந்தையை யாரிடமும் விடாமல் தானாக வளர்த்தது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.. “
” ஓ அப்படியும் கூட இருக்கலாம் இல்ல.. ” அரவிந்த் குழம்பி போகிறான்.. “அது என்னவோ தெரியவில்லை ..எனக்கு அவள் மீது என்று சொல்வதை விட என் மகன் மீது தான் சந்தேகம் வருகிறது..
” சரிடா இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.. “
” அதுதான்டா எனக்கும் புரியவில்லை.. அரவிந்த் விழிக்கிறான்..
” என்னடா நீயும் குழம்பி என்னையும் போட்டுக் குழப்புகிறாய் .. “
“இப்பொழுது என்னதான் செய்வது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவளை சந்தேகப்பட்டது இறுதியில் உண்மை என்று தெரிந்தால் அதற்குப் பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்டா.. அரவிந்த் அழுகிறான்..
“அடடா என்னடா இப்படி பேசுகிற எதுவும் ஆகாது ..சின்ன ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்ட்டிங் . சீக்கிரமே சரி செய்து விடலாம் கவலைப் படாதே..நான் ஒரு ஐடியா சொல்கிறேன்..அதன்படி செய்ய முடியுமா என்று பார் .. “
“என்ன செய்ய வேண்டும் சொல்லுடா.. ஏதாவது தீர்வு கிடைத்து அவளின் மீது உள்ள சந்தேகங்கள் நீங்கிய பிறகு தான் என்னால் நிம்மதியாய் வாழ முடியும்.. நானும் நிம்மதியாக இல்லாமல் வீட்டில் உள்ளவர்களையும் உயிரோடு கொல்கிறேன்டா ..எனக்கே நான் செய்வது தவறு என்று தெரிகிறது.. “
“நீ செய்வது உனக்கு தவறு என்று தெரியும் போது மனநல டாக்டரிடம் காட்டி கவுன்சிலிங் செய்து விட்டு வந்தால் என்ன.. உன் மனைவியை மட்டும் டாக்டரிடம் காட்டச் சொல்லி தைரியமாக பேசினாயே..”
“எனக்கு இந்த சந்தேகம் வந்த போதே நான் டாக்டரிடம் போய் பேசி அவரும் மூட்டை மூட்டையாய் மாத்திரைகள் எழுதிக் கொடுத்து தூங்கியதுதான் மிச்சம் ..தூங்கும் நேரம் மட்டும்தான் எனக்கு அந்த மன உளைச்சல் இல்லாமல் இருக்கிறது ..எனக்கு அதில் தீர்வு கிடைக்கவில்லை.. “
” ஓ அப்படியா நீ இதை என்னிடம் சொல்லவே இல்லை.. அப்படி என்றால் இந்த யோசனையும் சரிவராதா.. வேறு என்ன யோசனையை உனக்கு சொல்வது.. “
” எதுவாக இருந்தாலும் சொல்லுடா.. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன்..”
“இதை சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமாக தான் இருக்கிறது..உன் மனைவியை விட எனக்கு நீதான் முக்கியமானவன் ..அதனால் தான் இப்படி சொல்கிறேன் ..என்னடா இப்படி பேசுகிறானே ,உன் குடும்ப விஷயத்தில் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைக்கிறேனோ என்று தவறாக நினைத்துக் கொள்ளாதே..” சொல்லி விட்டுதான் அதை சொல்கிறான்..
அரவிந்த்துக்கு கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது .. தீர்வு காண வேண்டும் என்றால் வேறு வழியில்லை என ஒத்துக் கொள்கிறான்..
” ஆமாம்டா நவீன் நானும் இப்படி கொஞ்சம் யோசித்து தான் பார்த்திருக்கிறேன்.. யோசிக்க ஆரம்பித்ததுமே என்னை நானே திட்டி அதை மனதிற்குள்ளேயே அழித்து விடுவேன் ..இப்பொழுது வேறு வழி இல்லை ..இந்த வழி தான் சரியான வழி..மனதை கல்லாக்கி கொண்டு இதை மட்டும் சரி செய்து விட்டேன் என்றால், பிறகு என் மனதில் எந்த களங்க எண்ணமும் இருக்காதுடா..என் மித்ராவோடு சந்தோஷமாய் வாழத் தொடங்கி விடுவேன் .. ஆனால் இதை எப்படி தொடங்குவது என்று தான் பயமாக இருக்கிறதுடா..”
அரவிந்த் பதறுவதை கண்டு நவீன் அவனுக்கு ஆறுதல் கூறுகிறான்..” நீ அப்படி ஏதாவது என்றால் உன் மனைவியையும் உன் மகனையும் ஒதுக்கி தள்ளி விடுவாயாடா .. “
“அப்படி ஒரு எண்ணமே என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லைடா.. உண்மையா பொய்யா என்று பார்க்க போகிறேன் அவ்வளவுதான்..”
” சரி அவர்களை விலக்கி வைக்காத போது நீ ஏன் இப்படி உண்மை பொய் என்று கண்டறிய போகிறாய்.. பேசாமல் விட்டு விட்டு அமைதியாய் சந்தோசமாய் வாழேன்..”
“என் அறிவுக்கு தெரிந்த சில விஷயங்கள் என் மனதிற்கு தெரிய மாட்டேன் என்கிறதுடா. என் மனதை சமாதானம் செய்வதற்காக தான் இந்த பலப்பரிட்சை.. “
என்ன செய்யப் போகிறான் இவன்?
தொடரும்..
