அலை 4
குவளை, “ஐயா… ஐயா…” என்றழைத்துக் கொண்டே சென்றாள்.
“கொற்கையம் பெருந்துறை நீர் போற்றுதும்!
நீர் வார்க்கும் ஆறு போற்றுதும்!”
தண்பெருநையாற்றின் இருமருங்கிலும், தமிழர்கள் செல்வச் செழிப்போடும், வளமாகவும் வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னோடி ‘தமிழர் நாகரிகம்’ என்று சொன்னால் அது உண்மையல்லவா, ஆம், மறுக்கமுடியாத உண்மையே!
அந்த முத்துக் குளிக்கும் நகரத்தின் பட்டினப்பாக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை உப்பங்கழிகளால் சூழப்பட்டிருந்தது தாழைப்பாக்கம். நண்பகல் சூரியனின் ஜுவாலையால் வெள்ளைப் பாதரசம் போல் மின்னியது.
சதுர வடிவில் பாத்திகட்டி அணைகட்டியிருந்தது. அங்காங்கே ஒரு சிலர் வாரி (மரப்பலகை) பாத்திகளில் படிந்துள்ள உப்பை வாரிக் குவிக்க மரத்தாலான பலகைகளைப் பயன்படுத்துகின்றனர்.
உப்பளங்களின் இடைவெளியே குவளை சப்தமிட்டுக் கொண்டே நடந்தாள்.
“ஏ… புள்ள… குவள…” என்ற சப்தத்தில் வடக்குதிசை நோக்கித் திரும்பினாள்.
அங்கே பனையோலைக் கூடையில் குவிக்கப்பட்ட உப்பை எடுத்து, பக்கவாட்டில் உள்ள குவியல்களுக்குக் கொண்டு சென்று கொண்டிருந்த மக்களின் நடுவே ஒரு கை மட்டும் அசைந்தது.
குவளை அவ்விடம் நோக்கிச் சென்றாள். நெடிய தேகம், வைரம்போல் கண்களில் சீர்மையுடன் வெற்று உடம்புடன் இருந்த மனிதர் செங்கன், குவளையின் தந்தை.
செங்கன், “மக்களே, போய்க் கஞ்சி குடிச்சிட்டு வெரசா வாங்க” என்றவர், முன்னே வந்த மகளைப் பார்த்து, “ஏம் புள்ள, உன்ன நான் இங்கே எல்லாம் வரவேண்டாம்னு சொன்னேன் இல்ல, வா! உச்சி வெயில் உனக்கு ஆகாது.” என்று தன் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கயவாய் சென்றார்.
கயவாய் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நதிகள் வந்து கலந்து நிற்கும் கரையோர நிலபரப்பு. புன்னைமரம் ஒன்று தாழ்ந்து நீண்டு தண்ணீரில் வளர்ந்து நின்றது. அதன் நிழல் பெரும்குடை போல் பரந்து இருந்தது.
செங்கனிடம் மூங்கில் கூடையைக் கொடுத்து விட்டு, “ஐயா, ருசி பார்த்துச் சொல்லுங்க, உங்களுக்குப் பிடிச்சது.” என்றாள். சாமை வெள்ளை அரிசியுடன், அயிலை மீனும் கலந்து, புளிப்பு ஏறிய கறியுடன் சமைத்த ஒரு வகையான உணவு.
தன் மகளின் வதனத்தைப் பார்த்துக் கொண்டே, “என்ன புளி ஏறுதானே மகளே? இதைவிட உலகத்துல ருசியான உணவு வேறு இல்ல. உன் அம்மா சிப்பி இருந்தா மாறிப் போய் இருந்து இருக்கும். என்ன பண்றது? இந்தக் கடல்தாய் இருக்குறவரை நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லையம்மா. இந்தத் தாயின் அருமை பெருமை உனக்குத் தெரியாதா? இவளுக்குக் கோபம் மட்டும் வரக்கூடாதும்மா!” என்றார்
செங்கன் கண்களில் கண்ணீருடன்.
“ஐயா! நான் இன்னைக்கு கொற்கைக்கு போயிட்டு வந்தேன்.” என்றாள்.
செங்கன், “ஹ்ம்ம்ம்… உன் அத்தானைப் பார்க்கப் போனியாம்மா?” என்றார்
“அட போங்கப்பா! அத்தானாம் அத்தான். இல்லப்பா, நான் மயூரியைப் பார்க்கப் போனேன்.” என்றாள்.
“அப்படியா! அம்மா எப்படி இருக்காங்க?” என்றார் செங்கன்.
“ஐயா, அது தெரியல. நானே கூழ் குடுக்கப் போனேன், உடனே வந்து விட்டேன் பார்க்கவில்லை.” என்றாள்.
“அம்மா குவள, நீ உள்ளே எல்லாம் போக வேண்டாம். வெளிய பார்த்துட்டு வந்துடு. கூழு கொண்டு போகாதம்மா, அவங்க பெரியவங்க…” என்றார்.
“ஐயா, நான் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். மயூரிக்கு இது தான் பிடிக்குது. நான் என்ன பண்றது?” என்றாள் கோபமாக.
“குவள, நான் சொல்ல வர்றது வேற. சரிவிடு, உனக்குத் தெரியாதது ஏராளம். நீ சின்னப் புள்ள விடு.” என்றார்.
“ஐயா, நான் பெரியவள் ஆயிட்டேன். நானும் விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து உங்ககிட்டேயும், மயூரிகிட்டேயும் இதே தான் கேக்குறேன். ஆனா என்னன்னு யாருமே சொல்ல மாட்டேங்குறீங்க போங்க ஐயா!” என்றாள் சிணுங்கலுடன்.
செங்கன் சிரித்துக்கொண்டே, “அதை விடும்மா, துகிலனை பார்த்தியா இல்லையா?” என்றார்.
“ஐயா, அத்தானை பார்க்கவில்லை ஆனால் அந்தச் சிங்கன பாத்தேன் உடம்பு நிறைய திமிர்! கொற்கையோட தலைமை காவலன்னு என்கிட்ட வம்பு பண்றார்.” என்றாள். “அத்தானுக்காகப் பொறுத்துப் போகிறேன்.” என்றாள்.
“ஐயா, மயூரி நாட்டியம் அர்த்த மண்டபத்துல நடக்குதாம். எனக்குப் பூவாடை குடுத்து இருக்கு.” என்றாள்.
“நல்லமனசு குவள. அம்மாக்கும் சரி, மயூரி அம்மாக்கும் சரி!” என்றார் செங்கன்.
“ஆம் ஐயா! நல்ல மனுசங்க, அவங்க தகுதிக்கு நம்மகூட இருக்காங்க.” என்றாள் குவளை.
“சரி குவள, நீ புறப்படு. நான் துறைமுகம்வரை செல்லணும், நீ பார்த்துக் கிளம்பு.” என்றார்.
“ஐயா, நீங்கக் கிளம்புங்க. நான் நீர் விளையாடிட்டு செல்கிறேன்.” என்றவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “சீக்கிரம் செல் அம்மா!” என்று உப்பங்கழியை நோக்கி நகர்ந்தார்.
புன்னை மரத்தின் கிளைகளில் ஏறியவள் கருமையான நீரின் உள்ளே இரண்டு கைகளைத் தூக்கிக் கொண்டு குதித்தாள் குவளை. குதித்த உடனே ஒரு பெரிய நீர் அலை கரையில் மோதித் ‘தொப்’பெனச் சப்தத்துடன் தெறித்தது. தெறித்த அந்த அலையின் நீர்த்திவலைகள் உயர எழ, பக்கத்தில் உள்ள பூவரச மரம் பன்னெடுங்காலமாகத் தாழைத்தீவுக்கு எழில் தரும் மரமாக விளங்குகிறது. அந்த மரத்தின் தாழ்ந்த கிளையின் மலர்க்கொத்துகளில் நீர் அலைகள்
பட்டுச் சிதறுகின்றன. நீர்த்திவலையில் நனைந்த அந்த மஞ்சள் அரும்புகள் இளம் மாலை வெயில் பட்டு வானத்து நட்சத்திரங்களைப் போல் பளபளத்தது.
இதைப் பார்த்த, மரத்தில் இருந்த அனைத்து பறவைகளும் ‘ஓஹோ, இரவுதான் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதோ’ என்று எண்ணி, கூட்டங்கூட்டமாய் அதன் இடம் நோக்கி நகர்ந்தது.
குவளைக்கு நீரில் மூழ்கியதும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. அங்கும் இங்கும் உற்சாகத்துடன் கத்திக் கொண்டே உலாவலானாள். இவளைக் கண்டு அங்குள்ள சின்னஞ்சிறிய மீன் கூட்டங்கள் ஓடியது. இப்படியே இன்பப் பெருக்குடன் ஆடியவளை இரண்டு கண்கள் ரசனையுடன் ரசித்தன. இது தெரியாமல் ஆடிக்கொண்டிருந்தாள் குவளைமலர்.
கரைக்கு வந்தவள் புன்னை மரத்தின் பெரிய பகுதியில் ஒயிலாகப் படுத்துக் கொண்டே நீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மரத்தின் மேலிருந்து வெள்ளை நிறப் பூக்கள் கிழக்குக் காற்றின் வீரியத்தினால் வீசியதில் இவள்மேல் பூச்சொறிந்து மிஞ்சிய மலர்கள் தண்ணீரில் தவறி விழுந்து இவளைப் பார்த்துக் கொண்டே,
“தண்ணீரில் கண்ணீர் விட்டுச் சென்றன!“
இதைப் பார்ப்பவர்களுக்கு இவள் ஏதோ நீரை வேடிக்கை பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவள் தனது சேலையின் ஒரு பகுதியை விரித்துக் காய வைத்துக் கொண்டே கண்ணாடி பிம்பம்போல் நீரில் தெரியும் தன் வதனத்தின் மேனி எழிலை ரசித்துக்கொண்டிருந்தாள்.
புள்ளினங்களின் சப்தங்களால் சிந்தனை கலைந்தவள் நேரம் கடந்துவிட்டதை உணர்ந்து தனது குடிலை நோக்கி நடந்தாள். கரையிலிருந்து பாக்கம் செல்லும் வழியில் உப்பு ஏற்றப்பட்டக் கட்டை வண்டிகளை ஓட்டிக்கொண்டே,
உமனார் பெண் ஒருவள் சாட்டையை சுழற்றி, “போ… போ… உஷ் உஷ்…” உப்பு விற்றுக் கொண்டிருந்தாள்.
குவளை மாட்டு வண்டியின் அருகே சென்று, “என்ன ஆயி, கொற்கை எப்படி இருக்கு? நீ எப்படி இருக்கே?” என்றாள்.
“ஆமா, உனக்குப் பார்த்தா தெரியல? இதோ வெயில்ல உப்பா உருகுறேன்.” என்றவளின் வயிற்று தொட்டிலில் இருந்த ஆறுமாதக் குழந்தை வீறிட்டது.
ஊமாட்டி, “ஓஓஓ… இரும்மா… இரு இரு…” என்றவள் கையிலிருந்த கிலுகிலுப்பையை ஆட்டிக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டினாள். உடனே குழந்தை அழுகையை நிறுத்தி ‘களுக்’கெனச் சிரித்தது.
குவளை, “ஆயி, ஆமா அது என்ன கொற்கையா இல்ல பூம்பட்டினமா?” என்றாள்.
“ஆங்ங்ங்… நீ வேற கொற்கைதான். இந்தக் கணீர் சப்தம் இதுக்கு ஈடு இணை ஈரேழு உலகத்திலேயும் இல்லையில்ல!” என்றாள்.
குவளை, “ஆமா ஆமா, சப்தமே சொல்லுமே!” என்றவள், “சரி ஆயி, பாக்கம் வந்தா வா… இல்ல பார்க்கலாம்.” என்றவள் நடக்க ஆரம்பித்தாள்.
குவளையும், ஊமாட்டியும் பேசிக் கொண்டது கொற்கையின் முத்துக்களைப் பற்றியது. பாண்டியர்கள் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர். கொற்கைப் பகுதியில் சேர்ப்பான் இன குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் சேர்ப்பான்கள் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள கடலில் மூழ்கி அள்ளி வருவார்கள்.
இதுபோக கொற்கை கடல் அலை வேறு ஆழக்கடலிலிருந்து நிறைய முத்துக்களை கரையில் குவித்து வைப்பாள். குவிக்கும் முத்துக்கள் துறைமுகத்துக்கு வரும் குதிரைகளின் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.
அலையடிக்கும் கடலும், நீர்யானை போன்ற நாவாய்களும், கப்பல்களின் ஒலியும், முத்துக்கு விலை பேசும் சத்தமும் கொண்டு கொற்கை பெரிய முத்துக்குளிக்கும் பட்டினப்பாக்கமாக விளங்கியது.
குவளை பாக்கத்தில் உள்ள குடிலுக்குள் நுழையும் முன்னே, “பூட்டி… பூட்டி…” என்றழைத்துக் கொண்டே குடிலின் பின்பகுதிக்குச் சென்றாள். அங்கு ஒரு பாட்டி அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள்.
பரதவர்களின் குடில்கள் மூங்கில் கோல்களால் வரிசையாக அமைக்கப்பட்டு, வஞ்சி, காஞ்சி மரங்களின் வெள்ளைக் கிளைகள் இடையிடையே செருகப்பட்டு, தாழை நாரால் கட்டப்பட்டு, தர்ப்பைப் புல் வேயப்பட்டிருந்தன.
குடில்களில் ஓலையால் செய்த தொங்கும் பறை இருந்தது, மேலும் சுரைக்காய்கள் கொடிகளை வீடுகளைச் சுற்றி வளர்த்து, சேர்ப்பான் குடில்களுக்கு இயற்கையான அழகை சேர்த்தது.
நிலம் முழுவதும் மணல் நிறைந்ததாக இருந்ததால், நெல் போன்ற தானியங்களை அவர்களால் பயிரிட முடியவில்லை. எனவே, இந்த மக்கள் கட்டுமரங்கள், படகுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தொடங்கினர்.
பூட்டி என்பது குவளையின் அப்பாவின் தாய். “சொல்லு மகளே…” என்றார்.
குவளை, “எனக்கு ரொம்ப பசிக்குது.” என்றாள்.
“வா வா, மகளே!” என்று சாதத்தை எடுத்து வைத்தார்.
“ஆமா பூட்டி, அத்தான் வந்துச்சா?” என்றாள்.
“இல்லை இல்லை மகளே…” என்றவர் மறுபடியும் அடுப்பின் வேலையைக் கவனிக்கலானார்.
தங்களுக்குத் தேவையானதைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு, மீதமுள்ள மீன்களை விற்று வாழ்க்கை நடத்தினார்கள்.
கடலில் கிடைக்கும் மீன்களையும், இறால், நத்தைகளையும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அரிசி, பருப்பு, பால், தயிர், போன்ற பொருட்களைப் பணமாகக் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பைக் பண்டமாற்று செய்தனர். அதற்குப் பதிலாக அந்த நிலத்தில் விளைந்த பொருட்களைப் பண்டமாற்று முறைமூலம் பெற்றனர்.
மீதமுள்ள மீன்களை உப்பு சேர்த்துப் பாதுகாத்து, சிறிது விற்று, உலர் மீன் (கருவாடு) செய்து சாப்பிட்டனர். ஆண்கள் பிடிக்கும் மீன்களைத் தலையில் சுமந்து சென்று சந்தையில் விற்பது சேர்ப்பான் இனப் பெண்களின் பொதுவான நடைமுறையாகும்.
குவளை யோசனை தனது அத்தானை நினைப்பதற்கு பதில் வேறொரு பிம்பம் மனதில் வந்து வந்து போனது. திடுக்கென்ற எண்ணம் வந்தாலும் அந்த நினைவு இனிமையாக இருந்ததை உணர்ந்தாள். தன்னை சுதாரித்துக் கொண்டு ‘அடடே! என்ன இது இப்படியொரு எண்ணம் எழுகிறதே’ என்று நினைத்துக் கொண்டே தன்னை மறந்து மெய் மறந்தாள்.
அலை வருடும்…
