நிஜமாகும் நினைவுகள்

 

        அத்தியாயம் 8

   சிபி தந்த பாலைப் பருகியபடியே யோசித்தாள் அகல்யா.அவளுக்கும் அதே எண்ணம் தான் மனதுக்குள் இருந்தது. தன்னால்தானோ தன் தங்கை வாழ்வு இப்படியாகியது என்றக் குற்ற உணர்வில் அண்ணன் குமைவதை அண்ணி சொன்ன பிறகே அவளுக்குப் புரிந்தது.

     அவள் வாழ்வு சீராகும் வரை குழந்தை வேண்டாம் என்று தள்ளி இருப்பதாக ரூபிணி சொன்ன அன்றுதான் அவள் மறுமணத்திற்கே சம்மதம் சொன்னாள்.

    தன்விதி வாழ்வில் விளையாடியதற்கு, மற்றொரு பெண் ஏன் தண்டிக்கப்பட்டுத் துன்பம் அனுபவிக்க வேண்டும்? என்று தோன்றிட, அவளுக்கு மனமில்லாமில்லா விட்டாலும், ஒத்துக் கொண்டாள்.

    ஒத்துக் கொண்ட பிறகு,ஏற்கனவே முரளியின் வீட்டினரால் நொந்திருந்தவளை,அவள் மனதே அவளை சந்தேகிக்கும்படியாக ராஜாத்தி நடத்திய லீலைகளால், பயம் மட்டுமே நிரம்பி வழிந்தது.

    அதனால் யாரோ ஒருவர் தன்னை மணக்க விரும்புகிறார் என்ற மட்டிலேயே விபரம் அவளுக்குத் தெரியும். அவன் பெயர் நல்ல குடும்பம் என்ற அளவில் மட்டும் கேட்டுக் கொண்டாள்.

     மற்ற விசயங்களில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவளுக்கு தான் மனதளவில் விருப்பம் இருக்கவில்லையே?அந்த அளவுக்கு அவள் மூளை சலவையாகியிருந்தது.

     அமைதியாக டம்ளரைக் கையில் வைத்தபடி யோசித்துக் கொண்டிருப்பவளைக் கண்டவனின் மனதிலோ, ஒருவேளை அவள் முன்னாள் கணவன் நினைவில் உழல்கிறாளோ? என்றுத் தோன்றிட,வேதனையாக இருந்தது.

  “  தூக்கம் வந்தா படேன் “என்றான் சிபி.சிந்தனையிலிருந்து மீண்டவள், அவனிடம் மீதி பாலைக் கொடுத்துவிட்டு, பாத்ரூமில் நுழைந்து, வாயைக் கொப்பளித்துவிட்டு வந்தாள்.

   திடீரென ஷன்மதி சொன்னது நினைவில் வர, “இல்ல ஷன்மதி அண்ணி, இந்த விளக்கை அணையாமப் பார்த்துக்க சொன்னாங்களே? நாமத் தூங்கிட்டா, விளக்கு அணைஞ்சுடாதா? “என்று அப்பாவியாகக் கேட்ட மனைவியை ஆச்சர்யமாகப் பார்த்தான் சிபி.

    இவள் தெரிந்து கேட்கிறாளா? இல்லை வேண்டுமென்றேக் கேட்கிறாளா? என்று யோசனையோடு அவளைப் பார்த்தான்.

    “ ஏன் உங்க சைட் இந்த பழக்கம் கிடையாதா? “என்று கேட்டான். “தெரியலையே? அண்ணன் கல்யாணத்துக்கு, நியாயமா நான்தான் செஞ்சிருக்கனும். ஆனா நான்தான் அந்த நிலையில இல்லையே? “

     “அதனால அவன் கல்யாணத்தப்ப ஒதுங்கியே இருந்துட்டேன். மத்தபடி இந்த சம்பிரதாயம் எனக்கு தெரியாது.” என்றாள்.

    முரளியுடன் நடந்த கல்யாண வாழ்க்கை லட்சணம் அவனுக்குத் தெரிந்திருக்கலாம் என்பதால் அதைப் பற்றி அவள் சொல்லவில்லை. இருந்தாலும் இப்படி ஒரு சம்பிரதாயம் பற்றி அன்றும்அவளிடம் யாரும் எதுவும் சொல்லியிருக்கவில்லை.

      ஆனால் சிபி அவளை விழியகலப் பார்த்தான். கல்யாணம் செய்த பத்தே நாளில் முரளி 

மிலிட்டரிக்குத் திரும்ப போய்விட்டான், பிறகு இறந்துதான் வந்தான் என்றே அவனும் அறிந்திருந்தான்.

    கை நழுவிய பொக்கிஷம் மீண்டும் கிடைக்கப் போவதால், அது எப்படி இருந்தாலும் சந்தோசமே என்ற மனநிலையிலே இருந்தான் அவன். அதனால் தோண்டித் துருவவில்லை.

    ஆனந்த்தும் அதைக் கெட்ட கனவாகவே மறந்துவிட எண்ணியதால், சிபியைப் பற்றி விசாரிப்பதில் காட்டிய முனைப்பில்,தங்கையைப் பற்றி சொல்லத் தோன்றவில்லை.

     இருவருக்கும் மறுமணம் என்பதோடு, குடும்பத்தைப் பற்றி விசாரித்த போது நல்ல அபிப்ராயம் வர மற்றதைப் பற்றி யோசிக்கவே இல்லை.சிபியின் வீட்டினரும், சிபி ஏற்கனவே அகல்யாவை விரும்பியது பற்றி எதுவும் சொல்லவில்லை.

    பட்டுத் திருந்தியவர்களாயிற்றே? மீண்டும் பாழாக்க எண்ணுவார்களா? ஆகக்கூடி பழையதைக் கிளற யாரும் விரும்பவில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அது சாத்தியமா?

    அவன் ஆச்சர்யத்தைக் கண்ட அகல்யா, “ரொம்ப முக்கியமான சம்பிரதாயமோ? நான் வேணாத் தூங்காம இருந்து விளக்கை அணையாமப் பார்த்துக்கிறேன். அப்படி செய்யாமப் போனா, உங்களுக்கு ஏதாவது கெடுதல் வந்துடக் கூடாதுல?”என்று அஞ்சிய விழிகளோடுக் கூறிட மகிழ்ந்தான் சிபி.

   மெல்லத் தன் கையை அசைத்து” இங்க வா “என்று அவளை அழைத்தான். லேசாக மிரண்டபடி வந்தவளைக் கை பற்றி அமர்த்தியவன் அவளை ஆழந்துப் பார்த்தான்.

     அகல்யாவுக்கு அந்தப் பார்வை குறுகுறுப்பைத் தந்தாலும், அவள் பயம் அவளுக்கு அதை தடுத்தது.அவளின் கரிய மருண்ட விழிகளும், பொடிப் பொடியாக உதட்டின் மேல் பூத்திருந்த வியர்வையும், அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

    தன்னைக் கட்டுப்படுத்தியவனாக, “நிஜமாவே உனக்குத் தெரியாதா?” என்று கேட்ட போதே, அவனுள் இருந்த தாபம் மெலிதாக எட்டிப் பார்த்தது. “ம்கூம் “என்று தலையசைத்தாள் அகல்யா.

   “பரவாயில்ல நான் விளக்கை அணையாமப் பார்த்துக்கிறேன். நைட்ல முழிச்சிட்டிருக்கிறது எனக்குப் பழக்கமான ஒண்ணுதான். நல்லாத் தூங்கி மூணு வருசமாச்சு “என்றவளின் வார்த்தையில் சட்டென நிதானத்துக்கு வந்தான் சிபி.

    அவளை ஒருமுறைப் பார்த்தவன் “விளக்குக்கான விளக்கத்தைக் கடைசியில சொல்றேன். இப்போ நாம முக்கியமான விசயங்களைப் பேசிக்கனும்” என்றான் உணர்ச்சிகள் இல்லாத குரலில்.

     அவள்’ என்ன’ என்பது போல அவனைப் பார்க்க, “தெரிஞ்சோத் தெரியாமலோ நம்ம ரெண்டு பேருக்கும், சில கசப்பான சம்பவங்கள் நடந்துட்டு. இனி அதையே சுமந்துட்டிருந்தா, நம்ம புதுசாத் துவங்குற இந்த வாழ்க்கை இனிக்காது.”

    “அதனால இனிப் பழைய நிகழ்வுகளை, பிடிக்குதோ, பிடிக்கலையோ நாம மறக்கனும்.அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது “என்றான்.

   அகல்யாவுக்குப், பழைய நினைவு என்பது வெறும் ரணம் மட்டுமே. நினைத்து மருகும் அளவில் எந்த சம்பவமும் இல்லை. பழைய சூட்டின் தழும்பு மட்டும் அவளை பயமுறுத்தியது அவ்வளவே.

     ஒருவேளை அவனுக்கு எப்படியோத் தெரியவில்லையே? பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்..என்றால் என்ன அர்த்தம்? மனைவியின் இழப்பு அவனுக்கு வலியாக இருக்குமோ? ஏனோ அந்த நினைப்பேஅவளுக்கு வேதனையைத் தந்தது.

   அவன் அவளிடம் “ஓகேவா “என்று கேட்க அவள் தலையசைத்தாள்.பொம்மை போல அவள் தலையசைத்ததைக் கண்டவன் சற்றே இளகியவனாக,” உடனே இல்லாட்டியும் கொஞ்சம் கொஞ்சமா என்னை ஏத்துக்கோம்மா “என்றவனை வியந்துப் பார்த்தாள்.

    “என்ன? “ என்றவனிடம் “நீங்க என்னை மனசார ஏத்துக்கிட்டீங்களா?” என்று அவள் கேட்க, “எப்பவோ” என்ற அவன் வார்த்தைத் தேனாகத் தித்தித்தது.அவனை அணைத்துக் கொள்ளத் தோன்றியது.அதை மறைக்கத் தலையைக் குனிந்து கொண்டாள்.

   அவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவன் பேச்சைத் திசைத் திருப்பினான்.”விளக்கு சம்பிரதாயம் தெரிஞ்சுக்கிறியா? “ என்று கேட்டான். அவள் ஆவலாக ஏறிட்டாள். அதில் மெல்ல அவன் மனம் குளிர்ந்தது.

    என்ன தான் முரளி இறந்தது தன் ராசியாலோ என்று முட்டாள் தனமாக அவள் நினைத்தாலும், இப்போது அவள் சிபிக்காக அவனுக்கு ஏதும் நேர்ந்திடுமோ என்று பயந்தது, அவனுக்கு அவள் மெல்லத் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று நம்ப வைத்தது.

    எனவே உரிமையாக அவளிடம் சொல்லத் துவங்கினான்.”விளக்குக்குனு சம்பிரதாயம் எதுவும் இல்ல. அணையாமப் பார்த்துக்கோங்கன்னா ரொம்ப நேரம் ரெண்டு பேரும் முழிச்சிருங்கன்னு அர்த்தம் “என்றான்.

    முதலில் “எதுக்கு? “என்று முழித்தவள், அவன் முகத்தில் கண்ட குறும்பு சிரிப்பில்,மெல்ல விளங்கவும், குங்குமாய் சிவந்து போனாள். அவள் நாணத்தைக் கண்ட சிபிக்குள் மீண்டும் தாபம் தலைவிரித்தாடியது.

     தன்னைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான். ‘பெரிய இவனட்டாம் வாய் கிழியப் பேசியாச்சு. அதைக் காப்பாத்தப் படாதபாடு பட வேண்டியிருக்கு. தேவையா உனக்கு?’ என்று மனதில் தன்னையே நொந்தான்.

  “ வேற எதுவும் தெரியனுமா? “என்று அவளை வம்புக்கிழுத்தான்.

மெல்லத் தலை நிமிர்ந்தவள் “உங்களை எப்படிக் கூப்பிடனும்? உங்களுக்கு எப்படிக் கூப்பிட்டாப் பிடிக்கும்? “என்றுப் பேச்சை மாற்றினாள் அகல்யா.

    “ஏன் சிபினு கூப்பிடு. ரெண்டே எழுத்து பேர்தானே? “ என்று சிரித்தான். “அய்யோ எங்க அப்பா, அம்மா அவ்வளவு தான் கொன்னேப் போடுவாங்க. இங்க அந்த பழக்கம் அவ்வளவா கிடையாதே?”

     “அம்மா அப்பாவை ஆனந்தப்பானுதான் சொல்வாங்க. அண்ணி மாதிரி ஏங்க னு சொல்லவா? உங்களுக்கு அது ஓகேவா?” என்று கேட்டவளிடம், “உன்னிஷ்டம். “என்று சிரித்தவனுக்கு அவளை மேலும் சீண்டத் தோன்றியது.

    “ம்ம்ம்.. உங்க அம்மா மாதிரி என்னைக் கூப்பிட இப்போதைக்கு சாத்தியமில்லைதான். ஆனா சீக்கிரம் ஆகும் னு நம்புறேன். “என்ற போது, அவளால் தாள முடியவில்லை “அண்ணி சீக்கிரம் லைட் ஆஃப் பண்ண சொன்னாங்க நான் தூங்கப் போறேன். நீங்க லைட் ஆஃப் பண்ணிட்டு படுங்க “என்றபடி அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்தாள்.

    ம்க்கும்,உங்கண்ணி விளக்கக் கூட அணையாமப் பார்த்துக்க சொன்னா. அது மட்டும் தெரியலியோ?’ என மனதுக்குள் புலம்பியபடி அவனும் படுத்தான்.

         தொடரும்..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page