நவீன் யோசனை சொன்னதும் உடனே செய்வதாய் சொன்னவன் வீட்டிற்கு வந்து தன் குடும்பத்தினரை பார்த்ததுமே முற்றிலும் அதை மறந்து விடுகிறான்.. ‘இது தேவை இல்லாத வேலை.. குடும்பத்தில் பிரச்சனைதான் வரும்.., என்று ..
அரவிந்துக்கு மனரீதியான இந்த பிரச்சனை மட்டும் தான் மண்டையை குழப்புகிறதே தவிர வசதி வாய்ப்புகளிலும் பொருளாதார ரீதியாகவும் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போகிறான்..
அமிர்தன் பிறந்த சமயம் அவன் அலுவலகத்தில் ஒருவர் அவர் மகளின் திருமண செலவிற்காக பணத்தேவை இருந்ததால் அவருடைய பிளாட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்க முன் வருகிறார் ..இவன் வேண்டாம் என்று மறுத்தாலும் பிடிவாதமாய் விலைக்கு விற்று விட்டுப் போகிறார் ..
பிள்ளை பிறந்த நேரம் தானாக ஒரு நிலம் வருகிறது. ஏன் அதை மறுக்க வேண்டும் என்று அவனும் அதை வாங்கிக் கொள்கிறான்.. மிகக் குறைந்த விலையில் ஒரு பிளாட் வாங்கி போட்டவன்,அமிர்தனின் நான்காவது வயதிற்குள் நான்கு இடங்கள் வாங்கி விடுகிறான் ..அவன் வாங்கிய நேரம் விலை குறைவு என்றாலும் இருக்க இருக்க அதன் மதிப்புகள் கிடு கிடுவென உயர்ந்து எங்கோ போய் நிற்கிறது..
எல்லாமே ஏன் இடங்களாக வைத்துக் கொண்டு ..அமிர்தன் பெயரில் புதிதாக ஒரு கணக்கு ஆரம்பித்து அதில் நிறைய பணம் போட்டு வைக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறான் ..இந்த ஏற்பாடுகளை செய்த பிறகு மித்ராவிடம் சொன்னால் மகிழ்ச்சி அடைவாள் என்றுஅவளிடம் சொல்லாமலும் விட்டு விடுகிறான்..
இப்போதெல்லாம் மித்ராவிடம் சொன்னால் எதுவாக இருந்தாலும் பிரச்சனைகள் முடிவதால் எதையுமே அவளிடம் பகிர்ந்து கொள்ளாமல் தானாகவே செய்கிறான்..
முதல் வயதில் வாங்கிய இடம் மட்டும் தான் அவளுக்கு தெரியும் ..அதற்குப் பிறகு மூன்று இடங்கள் வாங்கியதை சொன்னாலுமே அவள் கருத்தில் கொள்ள மாட்டாளோ என்னவோ.. அவளுக்கு தேவை அவளின் மகன் மட்டும் தான்.. அவனோடு விளையாடி கொஞ்சிக் கொண்டு இருந்தால் போதும்.. சாப்பாடும் தூக்கமும் கூட அவளுக்கு தேவையில்லை ..
அதற்காதத்தானே மகனின் படிப்பையும் கெடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.. இப்பொழுது ஐந்தாவது வயது தொடங்கும் முன் ஒரு இடத்தை விற்று அவன் பெயரில் பணத்தை போட்டு விடலாம் என (facebook) முகநூலில் விளம்பரம் கொடுக்கிறான்.. இப்படி அறிக்கை விட்டே தான் விளம்பரம் கொடுக்கிறான்..
“(00.00. 0000) இந்த தேதி என் மகனின் பிறந்த நாள்.. அந்த நாளில் பிளாட்டை ரிஜிஸ்டர் செய்ய உள்ளேன்.. யார் வேண்டுமானாலும் வாங்க வரலாம்.. என் மகனின் பிறந்த நாளைக் கொண்டவர்களுக்கு சின்ன சலுகை.. அவர்கள் இந்த பிளாட்டை வாங்கினால் 20% விலை குறைவாக கொடுப்பேன்..”
என்று பதிவு செய்கிறான்.. நிறைய பேர் இன்பாக்சில் உடனே பதில் கூறுகிறார்கள் ..
அதில் நிறைய பேக் ஐடியாக இருக்கிறது.. 20% குறைவு என்று சொன்னதுமே நிறைய பேர் இன்பாக்ஸை மொய்க்கத் தொடங்குகிறார்கள்.எங்க போனாலும் இதே தொல்லையாக இருக்கிறது என்று எரிச்சல் ஆனவன் அவர்கள் பிள்ளை உடையதோ அவர்களுடையதோ பிறந்த தேதியை பர்த் சர்டிபிகேட்டுடன் காட்டினால் தான் விலை குறைவு.. இல்லா விட்டால் மொத்த விலைக்கு விற்று விடுவேன் என்று அடுத்த அறிக்கையை விடுகிறான்.. இப்பொழுது வந்தவர்களில் நிறைய ஆட்களை காணோம்..
இறுதியாக வந்தவர்களில் கொஞ்சம் பேர் இன்னும் அடிமட்ட விலைக்கு கேட்கவும் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டு விட முயற்சி செய்கிறான் .. கடைசியாக ஆதித்யா என்பவர் “உங்கள் போன் நம்பரை கொடுங்கள். .நான் உங்களிடம் பேச வேண்டும் .. ” என்கிறார் ..
அவர் பேசியதுமே நம்பகமாகத்தான் இருக்கிறது.. ” என் மகளும் இதே தேதியில் தான் பிறந்தாள்.. அவள் பிறப்பதற்கு முன்பு வரை நாங்கள் வசதி இல்லாமல் தான் இருந்தோம்.. இந்த நான்கு வருடத்தில் ஓரளவு வசதி வாய்ப்புகளுடன் சந்தோஷமாக வாழ்கிறோம் .. “
“ஒரே மகள் அவள் திருமணத்திற்கு இந்த பத்திரத்தை நான் அவள் கையில் கொடுக்க வேண்டும்.. அதற்காக தான் இப்பொழுதே இடம் வாங்கி போட ஆசைப்பட்டேன்..நான் இதை எண்ணி விட்டு முகநூலை பார்க்கிறேன்.. அப்பொழுதுதான் இந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது. நீங்கள் இந்த விளம்பரத்தை கொடுத்ததுமே எனக்காகவே கொடுத்தது போல இருந்தது ..அதனால் நான் உங்களிடம் பேரம் பேச தயாராக இல்லை ..எந்த விலையாக இருந்தாலும் வாங்கிக் கொள்கிறேன் .. ” என்கிறார்..
விற்க வாங்க என்று தொடர்ச்சியாக நான்கு ஐந்து முறை பேசுவதற்குள் இருவருக்குமே ஒரு நேசம் அன்னியோன்யம் உருவாகிறது .. அவர் பேசுவதைக் கேட்கவே அரவிந்துக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..
அரவிந்த், “ஆதித்யா உங்களை என்னுடைய சகோதரர் மாதிரி நினைக்கத் தோன்றுகிறது.. நாம் நேரில் சந்திப்போம்..அதன் பிறகு விலையைப் பற்றி பேசிக் கொள்ளலாம் .. ” என்கிறான்..
அவரும் சொன்ன தேதிக்கு அவனை சந்திக்க வந்து விடுகிறார்..இருவரும் தங்கள் ப்ரொபைலில் அவரவர் புகைப்படம் வைக்காததால் அவர்களுக்கு முக தரிசனம் கிடைக்கவில்லை.. நேருக்கு நேர் பார்த்ததுமே இருவருக்குமே மனதிற்கு பிடித்து விடுகிறது..
எதனால் என்று தெரியவில்லை.. அரவிந்துக்கு தான் ஒரே மகனாய் இருந்ததும், இப்பொழுது தனக்கு ஒரு அண்ணன் கிடைத்தது போலவும் எண்ணத் தோன்றுகிறது .அது என்ன உணர்வோ ..
அதை அவரிடம் சொல்லவும் ஆச்சரியப்படுகிறார்.. ” அட நானும் இப்படித்தான் நினைத்தேன்.. எனக்கு கூடப்பிறந்தவர்கள் யாருமே கிடையாது.. தம்பியாவது, தங்கையாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்கிப் போவேன் .. உங்களை பார்த்ததுமே எனக்கு என் தம்பியை பார்ப்பதே போல ஒரு உணர்வு உண்டானது.. “ஆதித்யா அவன் கையைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ச்சியாக பேசுகிறார் .அவர் செய்வதை பார்த்தால் நடிப்பதைப் போல தெரியவில்லை. மனதில் இருந்து பேசுவதாக தான் தெரிகிறது ..
“அப்படி என்றால் ஏன் அண்ணா என்னை வாங்க போங்க என்று சொல்கிறீர்கள்.. “
” இல்லை அரவிந்த் கொஞ்சம் பழகிய பிறகு நான் வாடா போடா என்கிறேன்.. அதுவரை இப்படியே பேசுகிறேனே..”
” சரி உங்க இஷ்டம் அண்ணா “என்று அரவிந்த் சிரிக்கிறான்..
அப்பொழுதே சொல்கிறார் .. பத்திரத்தை பதிவு செய்யும் போது என் மனைவியையும் மகளையும் அழைத்து வருகிறேன் .. “
” சரி அண்ணா நானும் வீட்டில் வைத்து இதை பேசப் போவதில்லை.. என் மனைவிக்கு நான் இதை விற்பது தெரியாது.. “
“வீட்டிற்கு தெரியாமல் செய்தால் பிரச்சனை ஆகி விடப் போகிறது அரவிந்த்.” ஆதி பயப்படுகிறார்..
” இல்லண்ணா தெரிந்தாலும் அவள் எதுவும் சொல்ல மாட்டாள். ஏனோ அவளுக்கு இதை தெரியப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.. இந்த பணத்தை என் மகன் பெயரில் தான் பேங்கில் போட போகிறேன் ..அதை சொன்னால் அவள் ஆனந்தப்படுவாள்.. ” என்கிறான்..
“சரி அரவிந்த் இது உங்களுடைய சம்பந்தப்பட்ட விஷயம் ..இதில் நான் எதுவும் தலையிட முடியாது .ஆனால் என் மகள் பெயரில் மனமார பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..”
” கண்டிப்பா அண்ணா அவளுக்கு இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ஈடுபாடு கிடையாது .அதனால் நானும் அவளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன் .மற்றபடி பொறாமை குணமோ கோப குணமோ அவளுக்கு கிடையாது.. ” மித்ராவை பற்றி உயர்வாக பேசுகிறான்..
“எப்பொழுது பதிவுகளை செய்யலாம்.. ” என்று விசாரிக்கிறார். அப்பொழுதுதான் அவனுக்கே தோன்றுகிறது ..அவரிடம் “உங்கள் பெயர் என்ன.. ” என்று கேட்கிறான்..
” என்னுடைய பெயர் ஆதித்யா. என் மனைவியின் பெயர் பத்மா ..என் மகள் பெயர் பூங்குழலி..”
“அழகான பெயர், நல்ல தமிழ் பெயர்.. உங்கள் மகள் அழகாக இருப்பாளோ. நான்கு வயது ஆகிறதா..” என்று விசாரிக்கிறான்..
” ஆமாம் உங்கள் மகன் பிறந்த அதே தேதி தானே. அவனுக்கும் இதே வயதாகத்தான் இருக்கும்.. “
அடுத்த முறை ஆதித்யா நேரில் பார்த்த வந்தவர் அமிர்தனுக்கு அளவு சரியான பொருத்தமான ஒரு உடையை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்.. அரவிந்த் வழக்கம் போல தன்னை நொந்து கொள்கிறான்..
‘இவர் இத்தனை அழகாக செய்து இருக்கிறார் .எனக்கு ஏன் தோன்றவில்லை ..,
“ஒரு இரண்டு நிமிஷம் இருங்க அண்ணா.. இதோ வந்து விடுகிறேன்..” வேகமாக சென்றவன் ஸ்வீட் பாக்ஸ் பொம்மை உடைகள் என அள்ளி குவித்து கொண்டு வருகிறான். .கொண்டு வந்ததை அவரிடம் கொடுத்ததும் உரிமையாய் திட்டுகிறார்..
” ஏன் தம்பி நான் செய்ததற்காக நீங்கள் திருப்பி செய்ய வேண்டுமா .. “
” அப்படி இல்லை பிரதர் ..எனக்கு இது தோன்றவில்லை நீங்கள் செய்ததை பார்த்ததும் எனக்கும் ஆசையாகி விட்டது. எனக்கு பெண் குழந்தைக என்றால் அவ்வளவு ஆசை.. அடுத்ததாய் நான் பெண் குழந்தை ஒன்றை பெற்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு கொண்டிருக்கிறேன். இவன் கொஞ்சம் வளரட்டுமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் .. “
எங்கள் வீட்டிலும் அதே கதைதான். இவளோ சரியான வாலாக இருக்கிறாள்.. அதனால் இப்போது கிடையாது.. “என்று சிரிக்கிறார் ..
ஆதித்யாவும் சரி அரவிந்தும் சரி இடைத்தரகர் இல்லாமலேயே அந்த இடத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் அழகாய் முடித்து விடுகிறார்கள் .. “
அரவிந்த் அவர் போகும் போது, என் நம்பரில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வரும்… என் மகன் பிறந்த நாள் அன்று அவனை வாழ்த்த உங்களை கூப்பிடுவேன். நீங்கள் கட்டாயமாக வர வேண்டும் ..உங்கள் மகள் மனைவியையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா.. ” என்கிறான்..
” கண்டிப்பாக என் மகள் பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு உடனே கிளம்பி வருகிறோம் ..ஒரே நாள் பிறந்த நாள் அல்லவா..”
ஆதித்யா சொன்னதும் தான் அவனுக்கு நினைவுக்கே வருகிறது..” சாரி அண்ணா நான் மறந்து விட்டேன் .. நம் இருவருக்குமான தொடர்பே நம் குழந்தைகளின் பிறந்த நாள் தான்.. அதைப் போய் மறந்து விட்டேன் பாருங்களேன்..உங்களுக்கு முடிந்த போது வாங்க .. ” என்று சிரித்த படியே அனுப்பி விடுகிறான்..
வீட்டிற்கு வந்துமே அவனுக்கு ஆதித்யா வின் நினைவாக தான் இருக்கிறது.. விதம் விதமாய் யோசிக்கிறான்…’ எப்படி அவர் தனக்கு நெருக்கமாக தெரிகிறார்.. அவருடைய கண்களா, அவருடைய குணாதிசயமா, அவர் தம்பி என்று உரிமையாய் அழைக்கும் உறவு முறையா, அல்லது கண்களை சுருக்கிக் கொண்டு முகம் முழுக்க சிரிக்கும் தெய்வீக சிரிப்பா..,
இதை நினைக்கும் போது, ‘ இந்த குட்டி பையன் அமிர்தன் கூட இப்படித்தான் சிரிப்பான் ..இப்படி சிரித்தால் பார்க்க அழகாக தானே இருக்கிறது ..ஆனால் இவன் சிரிப்பது அரிது. எப்போதாவது தான் கலகலவென இப்படி சிரிப்பான்.. அதைக் காண கண் கோடி வேண்டும்.. அத்தனை அழகு அது..,
‘ ஆனால் அந்த அண்ணாவோ நிமிடத்திற்கு ஒரு முறை சிரித்தே என்னை மயக்கி விட்டாரே.., மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் மனைவியிடம் நடந்துவற்றை எல்லாம் அப்படியே கூறுகிறான் ..
தொடரும்.
