பாகம் – 17
வழக்கம் போல அவள் கூறியதை எல்லாம் அசட்டையாய் கேட்கிறாள்..
” ஏன்டி நான் எவ்வளவு ஜாலியா இதையெல்லாம் சொல்கிறேன். உனக்கு கேட்பதற்கு கூடவா ஆசையாய்
இல்லை .. ” வியந்து கேட்கிறான்..
“இல்ல நீங்க சீக்கிரமா சொல்லி முடிச்சிட்டா நான் தம்பிகிட்ட போய் விளையாடுவேன் .. ” என்று தலையை சொறிகிறாள் ..
“நீ ஒரு பைத்தியம் டி .. பிள்ளை பைத்தியம், போ போய் அவனை கட்டிக் கொண்டு அழு .. “என்று விரட்டி விடுகிறான்.. விட்டால் போதும் என்று அவளும் தப்பித்து ஓடுகிறாள்..
‘ஆனாலும் எவ்வளவு விஷயங்கள் சொன்னாலும் ,சொத்தையே பிள்ளை மீது எழுதி வைத்தாலும் அவள் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாகிறான்..
அந்த மகிழ்ச்சியால் மனைவி அருகில் சென்று அவள் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுக்கிறான்.. அவளுக்கு ஆச்சரியமாகிறது ..
“என்ன ஐயாவுக்கு திடீரென்று முத்தம் கொடுக்கும் யோசனை. இதெல்லாம் மறந்து போச்சு என்றல்லவா நினைத்தேன்.. “கிண்டல் செய்கிறாள்..
” ஆமாம் மறக்காதா பின்ன. நீ இப்படி அவ்வை பாட்டி பற்றி மாதிரி பிள்ளை என்று இருந்தால் நானும் தாத்தா மாதிரி தான் ஆக வேண்டும் ..வேறு வழி இல்லையே .. “
“கோபித்துக் கொள்ளாதீங்க… இவன் குட்டி பிள்ளையா இருக்கான் .. இந்த மழலையை இன்னும் கொஞ்ச நாள் தான் நாம் ரசித்து மகிழ முடியும். வளர்ந்துட்டா நம்ம எப்படி இதையெல்லாம் பார்க்க முடியும்.. அவன் எப்படி அழகாக சிரிக்கிறான் பாத்தீங்களா..”
” ஆமாடி இவன் தூக்கத்தில் மட்டும் தான்டி சிரிப்பான்.. இப்படி சிரிக்கும் போது அவன் முழு சிரிப்பும் தெரிய மாட்டேன் என்கிறது ..விழித்திருக்கும் போது சிரித்தால் தான் கண்கள் எல்லாம் சேர்ந்து சிரிக்கும் .. “
” என்னங்க ஏதேதோ சொல்றீங்க ..நான் கிட்டயே இருக்கேன் ..அவன் சிரிப்பு விஷயம் எனக்கு தெரியவில்லையே.. புதிதாக சொல்கிறீங்க..”
“ஆமாம் பொழுதனைக்கும் அவன் அருகிலேயே இருந்தால் என்ன தான் உனக்கு தெரியும் . இனியாவது அவன் சிரிக்கும் போது நன்றாக கவனித்துப் பாரேன் ..அவன் கண்கள் எல்லாம் இடுங்கி முகம் முழுக்க சிரிப்பான் ..இப்படி சிலர் தான் சிரிப்பார்கள் போல .எனக்கு உனக்கெல்லாம் சிரிக்கும் போது இப்படி கண்கள் சுருங்காதுடி ..இதோ நான் ஆதித்யா அண்ணாவை பார்த்தேனா.. அவங்களும் இதே மாதிரி தான் சிரித்தாங்க ..அதனாலோ என்னமோ எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சு .. “
“போதும் போதும் உங்க ஆதி பெருமை போதும் .வந்ததிலிருந்து அவங்களைப் பற்றியே பேசிகிட்டு இருக்கீங்க.. எனக்கு காதே புளிச்சு போச்சு ..இவன் இன்னைக்கு என்ன செய்தான் தெரியுமா..” என்று மகன் பெருமையை அதற்கு பதிலாக எடுத்து கூறுகிறாள்..
அவனும் அதை ஆசையாய் கேட்டு மகிழ்கிறான்.. ஆதி வந்ததில் இருந்தோ அல்லது அவன் கவனமெல்லாம் ஆதியிடம் சென்றதாலோ என்னவோ இப்பொழுது கணவனுக்கும் மனைவிக்கும் எந்த சச்சரவும் இல்லாமல் நாட்கள் இனிமையாய் ஓடுகின்றன..
மித்ராவும் கணவனை நல்ல விதமாய் கவனிக்கிறாள் ..குறிப்பாய் மகன் தூங்கியதும் இரவு நேரங்களில் ..
“இப்படி இருந்தால் நன்றாக தானே இருக்கு.. ” அவளை முத்தமிட்ட படியே கொஞ்சுகிறான்..
” இருக்கும், இருக்கும். பிள்ளை பாதியில் கண் விழித்தால் எப்படி இருக்கும் தெரியுமா..”
“கண் விழித்தால் என்ன.. இருக்கவே இருக்கிறது பெரிய போர்வை .அதை இழுத்துப் போர்த்திக் கொள்ள போகிறோம்.. ” சொல்லி விட்டு சிரிக்கிறான்..
மித்ரா அவனை அடிக்கிறாள்.. “வர வர ரொம்ப மோசமாகத்தான் பேசுறீங்க போங்க .. “என்று சிணுங்குகிறாள்..
“பின்னே என்னடி சொர்க்கத்தில் இருக்கும் நேரம் கூட நீ இப்படியே பேசுகிறாய்.. இதுவே எப்பொழுதாவது தான் அத்திப் பூத்தாற் போல எனக்கு கிடைக்கிறது..இதில் நீ வேற புலம்புகிறாயா.. ஏன்டி உன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..உனக்கு அவனைத் தவிர்த்து வேறு எதுவுமே பேசத் தெரியாதா..” இதற்கும் சிரிக்கிறான் ..
” ஆமாங்க அது என்னமோ உண்மைதான்.. எனக்கு வேற எதுவுமே சிந்தனை இல்லை.. அமிர்தன் மட்டும்தான் ..எனக்கே இது தவறு என்று நன்றாக தெரிகிறது .ஆனால் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை..ஆனால் முன்பு இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கிறேன்.. நீங்கள் சொல்லி சொல்லி கொஞ்சம் என்னை திருத்தி விட்டிருக்கிறீர்கள் ..அதனால் நானாக கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொள்கிறேன் ..எனக்கென்று கொஞ்சம் நேரம் கொஞ்சம் கொடுங்கள் .. “
“ஆமாம்டி இப்போதிலிருந்தே உன்னை நீ மாற்றிக் கொண்டால் தான் சரியாக வரும். மருமகள் வந்து உன் மகனை இழுத்துக் கொண்டு போனால் நீ ஏங்கி போய் விடுவாய் .. “இதை சொன்னதுமே அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறாள்..
“ஏங்க அப்படி என்றால் நான் என்ன உங்களை உங்க அப்பா அம்மாவிடம் இருந்து பிரித்தா விட்டேன் …ஒரே குடித்தனமாய் வாழவில்லை ..அதே மாதிரி என் மருமகளும் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் .. என் மாமியார் மாமனாரோடு நானும், நீங்களும் ,அதோடு என் மருமகள், மகன், பேரப் பிள்ளைகள் என்று வீடு நிறைய கூட்டமாய் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.. ” சொல்லி விட்டு அந்த காட்சிகளை கனவு காண்கிறாள்..
” பரவாயில்லை டி எல்லாரும் கல்யாணம் ஆகி வந்ததுமே மாமியார் மாமனாரை விரட்டி விட்டுடுவாங்க.. நீ உன் மருமகள் வந்தாலுமே அவங்களை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்டி ..நீ உண்மையிலேயே ரொம்ப நல்லவள் தான்.. ஆனால் என்ன, உனக்கு கொஞ்சம் நல்ல விதமா பேச தெரிய மாட்டேன் இருக்கிறது.. ஏதாவது பேசி என்னை கிளப்பி விட்டு விடுகிறாய்.. நான் அதற்கு மேல் கத்தத் தொடங்கி விடுகிறேன்..
” அதுதான் இப்பொழுது நான் கொஞ்சம் திருந்தி விட்டேன் என்று சொல்கிறேனே..
இன்னும் என்ன பேச்சு கிடக்கிறது வாங்க .. ” என்று அவள் மேல் அவனை இழுத்துப் போட்டுக் கொள்கிறாள்.. அதற்கு மேல் அவர்கள் இடையே இந்த பேச்சு வார்த்தையும் இல்லை …அவர்களின் சந்தோசத்திற்கு குறிக்கிடாமல் அமிர்தனும் ஆனந்தமாய் தூங்குகிறான்..
தினமும் அழுது தொந்தரவு செய்து அடம் செய்து கொண்டு இருந்த நண்பன் மூன்று மாத காலமாக தன்னிடம் அந்த பேச்சை எடுக்காமல் இருப்பதாலும், அதோடு இல்லாமல் பார்ப்பதற்கும் நிம்மதியாய் இருப்பதைப் போல தோன்றுகிறது..அவனது மாற்றம் நவீனுக்கு சந்தோஷத்தை தருகிறது ..
‘நான் சொன்ன வழி சரியானதுதான்.. விசாரித்து பார்த்து மித்ரா தங்கையின் மீது எந்த தவறும் இல்லை என்றதும் மன உளைச்சல் இல்லாமல் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறான் போல.. அவன் முகம் மலர்ச்சியுடன் மினுமினுப்பாக இருக்கிறான் ..அப்படி என்றால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று தானே அர்த்தம்..அவனிடம் இதைப் போய் எப்படி கேட்பது ..,என்று யோசிக்கிறான்..
கழுதை சந்தோசமாக இருப்பதை தானாக வந்து சொல்லட்டும் என்று காத்துக் கிடக்கிறான். மாதங்கள் ஓடுகிறது.. முன்பை விட இப்பொழுது இன்னும் அதிக நேசத்துடன் ஆதித்யாவும் அரவிந்தும் உயிராய் பழகுகிறார்கள் ..அதற்கு காரணமும் இருந்தது.. மற்ற எல்லாவற்றையும் நவீனிடம் பகிர்ந்து கொண்டவன் ஆதியிடம் இடத்தை விற்றதையோ அவரிடம் நட்பு கொண்டதையோ நவீனிடம் கூறாமல் விட்டு விட்டான். அது இந்த பிரச்சனைக்கு தேவையில்லை என்று எண்ணியதால் தான்..
ஆதித்யா சொன்னது போலவே பத்திரம் பதிவு செய்ய மனைவியையும் , மகளையும் அழைத்து வந்திருந்தார்.. தானும் அரவிந்தும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியை பத்மாவிடமும் பூங்குழலியிடமும் காட்டி இருந்திருக்கிறார் போல..
அவர்களுக்கு முன்பே தயாராக எல்லா வேலைகளையும் செய்து காத்துக் கொண்டு இருந்தவனை கை காட்டி கூப்பிடுகிறாள் பூங்குழலி ..
“அப்பா நீங்க சொன்ன அந்த அங்கிள் உள்ள இருக்காங்க பாருங்க. நான் அவங்க கிட்ட போகவா..”
அவள் பேசும் போதே அரவிந்த் கேட்டு விடுகிறான் .. ‘ அட அமிர்தனின் வயதுதான இந்த பெண்ணும் .. பெரியவர்களை போல பேசுகிறாளே.., என்று ஆச்சரியமாகிறது ..
‘அவனும் நன்றாக பேசுவான். ஆனால் தன் அம்மாவிடம் மட்டும் தான் .கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில் ,சில சமயம் அதற்கும் பதில் இருக்காது. மித்ராவை போலவே எல்லாவற்றிலும் அலட்சியம் அசட்டை தான் .. எல்லாம் வளர்க்கும் விதம்தான்.. மித்ரா இப்படி வளர்க்கிறாள்.. பூங்குழலியின் அம்மா எல்லாரிடமும் பழக விட்டு வளர்க்கிறார்கள் போல..ஒரு முறை போட்டோ காட்டி இருப்பாரா .. அதை நினைவில் வைத்துக் கொண்டு தைரியமாக என்னிடம் வரவும் துடிக்கிறாளே குட்டி குழந்தை..,
அதற்கு மேலாக அரவிந்தால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை.. குட்டி தேவதையை போல துரு துருவென இருக்கும் அவளை யாருக்குத்தான் பிடிக்காது ..பார்ப்பவர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு ..அதுவும் இல்லாமல் ஏதோ கல்யாணத்திற்கு வருவதைப் போல பட்டு பாவாடை அணிந்து இரண்டு ஜடை போட்டு பூவும் வைத்திருந்தாள்.. அந்த நான்கு வயதிற்கு அலங்காரம் அதிகம் தான் என்றாலும் அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது.. அவன் மட்டுமல்ல அங்கே இருந்தவர்கள் எல்லோரது பார்வையும் பூங்குழலியின் மீதுதான்..
வேகமாக சென்று பாப்பா இங்கே வா என்றதுமே பாய்ந்து ஓடி வந்து ஏறிக் கொள்கிறாள்.. உடனே அவ கன்னத்தில் முத்தம் ஒன்றையும் கொடுக்கிறாள்.. அரவிந்துக்கு மனம் நெகிழ்கிறது. . யார் இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க போகிறார்கள்..இதெல்லாம் தானாக வருவது தானே.. புதிதாக பார்ப்பவர்களை கண்டு சின்ன குழந்தைகள் பயப்பட செய்யாது .இவள் என்னமோ நெருங்கி பழகியவளை போல செய்கிறாளே.. அவனும் அதே போலவே பாப்பாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுக்கிறான் ..
தெளிவாக பேசினாலும் மழலையுடன் தான் பேசுகிறாள்.. “ஐய்ய அங்கிள் உங்க தாடி என் கன்னத்தை குத்துது..” என்று கன்னத்தைத் துடைத்துக் கொள்கிறாள்..
“உங்ககிட்ட ஏதோ ஒரு வசிய சக்தி இருக்கு போல அரவிந்த்.எனக்கு உங்களை பிடித்தது மாதிரியே என் மகளுக்கும் உங்களை பிடித்து இருக்கு பாத்தீங்களா..”
“நானும் இதே தான் சொல்ல பார்த்தேன் .. ஆனா நான் என் ஃபேமிலியிடம் இதை பற்றி கூறவே இல்லை .. சொல்லி இருந்தால் அவளும் தம்பியுமே இங்க வந்திருப்பார்கள்.. “
” பரவாயில்லை அவங்களுக்கு தான் இதெல்லாம் விருப்பம் இல்லை என்கிறீர்களே.. ஆனால் பத்மா தான் பூங்குழலிக்கு இந்த ஏற்பாடு செய்ய சொன்னது “ஆதி பெருமையாக மனைவியை பார்க்கிறார்..
அரசாங்க அலுவலகம் என்பதற்கு ஏற்ப அலுவலகத்தைச் சுற்றிலும் காடு மண்டி கிடந்தது அந்த இடம்..
” எவ்வளவு முக்கியமான இடம் இது.. பத்திரப்பதிவு செய்யப்படும் இடத்தை இப்படி போட்டு வைத்திருக்கிறார்களே..” இருவரும் பேசிய படியே தான் உள்ளே செல்கிறார்கள்..
அடுத்ததாய் நடந்த சம்பவத்தினால் தான் அரவிந்துக்கு பூங்குழலியின் மீது இன்னும் பிரியத்தை கொடுக்கிறது …
அது என்ன?
தொடரும்.
