அத்தியாயம் – 15
திருமண மேடை கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது…
மெரூன் நிறப் பட்டுப்புடவையில், உச்சியிலிருந்து பாதங்கள் வரை தங்க ஆபரணங்கள் மின்ன, தேவலோக மங்கையின் அழகை மிஞ்சும் அளவிற்கு மணக்கோலத்தில் தயாராகி இருந்த ரிதன்யா, சித்தார்த்தின் அருகில் தான் அமர்ந்திருந்தாள். அவனும் வெள்ளை நிறப் பட்டு வேஷ்டி சட்டையில், ஆண்மைக்குரிய இலக்கணத்துடன் கம்பீரமாக இருந்தான்…
வெளிப்படையாகப் பார்த்தால், இருவருமே பார்ப்பதற்கு மிகவும் பொருத்தமான ஜோடி. ஆனால், ரிதன்யாவின் முகத்தில் இருந்த புன்னகையின் பின்னால், வரவிருக்கும் பிரட்சனைகளை எதிர்கொள்ளும் தீர்மானம் உறைந்திருந்தது. சித்தார்த்தின் கம்பீரமான முகத்தில், ஜானுவைத் தான் மணக்க முடியாத கோபமும், ரிதன்யாவை பழிவாங்கும் வெறியும், கட்டாயத்தின் வலியும் வெளிப்பட்டது…
சடங்குகள் ஆரம்பித்தன. பெரியவர்களின் மகிழ்ச்சியான குரல்களும், நாதஸ்வர ஒலியும் மண்டபத்தை நிரப்பியது. நேரம் செல்லச் செல்ல, முகூர்த்த நேரம் நெருங்கியது…
சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க, தெய்வீக ஒலிகள் மண்டபத்தை ஆக்கிரமித்தன. திருமாங்கல்யத்தை எடுத்து, சித்தார்த்தின் கைகளில் கொடுத்தார் புரோகிதர்,..
சித்தார்த், மாங்கல்யத்தைக் கையில் வாங்கியபோது, அவனது கண்களில் ஒரு கணம் தீப்பிழம்பு கணலாய் எரிந்தது. ‘இந்தத் தாலி… இந்தக் கயிறு… இவள் என் வார்த்தையை மீறியதற்காக நான் கொடுக்கும் தண்டனையின் ஆரம்பம்!’ என்று அவன் மனதிற்க்குள் சபதம் இட்டான்…
ரிதன்யா, கண்களை மூடிக் கொண்டாள். அவள் மனம் பிரார்த்தனை செய்யவில்லை தன்னை வளர்த்த பெற்றோரின் முகங்களை மட்டுமே நினைவில் நிறுத்தி, வரப்போகும் வாழ்க்கையின் வலியை ஏற்றுக்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்…
“கெட்டிமேளம், கெட்டிமேளம்!” புரோகிதர் உற்சாகமாகக் குரல் கொடுக்க, மேள வாத்தியம் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. அந்தப் பேரொலி, அங்கு அமர்ந்திருந்த பல நூறு பேரின் மகிழ்ச்சியைக் குறித்தது…
சித்தார்த், ரிதன்யாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்,
முதல் முடிச்சு விழும்போது, ரிதன்யாவின் நெஞ்சில் ஒரு கனத்த கல்லை வைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன் அபியின் நினைவை, அவள் ஒரு முடிச்சாகப் புதைத்தாள்…
இரண்டாவது முடிச்சு விழும்போது, சித்தார்த்தின் இதயத்தில் ஒரு வலி உண்டானது. தன் ஜானு, நிரந்தரமாகத் தன்னை விட்டு விலகிவிட்டதின் வலி அது…
மூன்றாவது முடிச்சு விழும்போது, அந்தப் பந்தலின் மொத்த சந்தோஷமும் உச்சத்தை அடைந்தது. அனைவரும் பூக்களைத் தூவி அவர்களை ஆசீர்வதித்தனர்….
திருமணத்தின் அந்தப் புனிதச் சடங்கு நிறைவடைந்தபோது, வாசுதேவன், தெய்வானை, மாணிக்கம், சாரதா ஆகிய நான்கு பெரியவர்களின் முகங்களிலும் நிறைவான சந்தோஷம் தாண்டவமாடியது. தங்கள் வாழ்வில் கண்டிராத ஒரு திருப்தி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பாகி விட்டது என்ற நிம்மதி அனைத்தும் அந்தப் பெற்றோர்களின் கண்களில் தெரிந்தது…
தாலி கட்டி, குங்குமம் வைத்து, திருமண சடங்குகள் அனைத்தும் இனிதே நிறைவுற, தங்கள் தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர் புதுமணதம்பதியினர்,..
முதலில் வாசுதேவன் மற்றும் தெய்வானையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
வாசுதேவன், மிகுந்த பாசத்துடன் மகனையும் மருமகளையும் ஆசீர்வதித்தார்.
தெய்வானை, ஆனந்தக் கண்ணீருடன் ரிதன்யாவைக் கட்டி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஆசீர்வாதம் செய்தவர், மகனை சந்தோஷத்தில் இறுக அணைத்துக் கொண்டார்,..
அடுத்து, ரிதன்யாவின் பெற்றோறான மாணிக்கம் மற்றும் சாரதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
மாணிக்கம், கண்ணில் நீர் மல்க, அவர்களை ஆசீர்வதித்தார்.
சாரதாவும் கண்கலங்கிப் போனார், மகளின் திருமணம் அவருக்கு நிறைவான சந்தோஷத்தை கொடுத்து இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் மகள் தன்னை பிரிந்து போய்விடுவதை எண்ணி மனம் கவலையில் சுருங்கியது…
“வாழ்த்துகள் அக்கா” என்று தமக்கையை அணைத்துக் கொண்டு வாழ்த்து கூறிய சரண்யா,.. “கங்கிராட்ஸ் மாமா” என்று சித்தார்த்தின் கரம் பற்றி முகம் முழுக்க புன்னகையோடு வாழ்த்துக்கள் கூறியவள்,… “இனி என் அக்கா உங்க பொறுப்பு, பத்திரமா பார்த்துக்கோங்க மாமா” என்று கூற, அவனுக்கு புன்னகைக்க வேண்டிய கட்டாயம் அந்த இடத்தில்…
பெற்றோர்கள் ஆசீர்வதித்த அந்த சில நிமிடங்கள்தான், ரிதன்யாவின் மனதில் இருந்த எல்லாப் போராட்டங்களுக்கும் ஆறுதல் கிடைத்தது போல் இருந்தது. அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம்தான், இந்த முடிவை அவள் எடுத்ததற்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது…
அன்றைய தினம் முழுவதும், இருவரும் ஒருவரையொருவர் நெருங்காமல், ஆனால் பிரிந்திருக்கவும் முடியாமல், விருந்தினர்களைச் சந்தித்தனர். அவர்களின் முகத்தில் இருந்த புன்னகை, வெறுமனே ஒரு சமூக நாடகம் மட்டுமே…
ரிதன்யா சித்தார்த் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமும் நெருங்கியது. மாணிக்கமும், சாரதாவும், தங்கள் செல்ல மகளைப் பிரியும் கவலையில் கண்கலங்கி நின்றனர். ரிதன்யாவினாலும் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை…
”அம்மா அப்பா” என்று அவர்களின் மார்பில் சாய்ந்து அழுதாள். இருவரும் அவள் மீது வைத்த பாசம் அளவில்லாதது அல்லவா!
“அழாதடா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. நீ சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்குப் போதும்,” என்று அவளைத் தேற்றினார்கள்,..
ரிதன்யா, அவர்கள் காட்டிய பாசத்தை நினைத்து உருகினாள். ‘இவர்கள் என்னை பெற்றவர்களாக இல்லாவிட்டாலும், இவர்களது அன்பு விலை கொடுக்க முடியாதது. இப்படி ஒரு பாசமான குடும்பத்தின் கண்ணில் பட்டது என் அதிர்ஷ்டம்!’ என்று நினைத்தவளுக்கு, அக்கணம் தன் அபியை இழந்து விட்டோமே என்று தோன்றிய எண்ணமும் மேலும் அழுகையைத் தூண்டியது…
அந்தச் சமயம், அவளது தங்கையான சரண்யா ஓடி வந்து, தன் அக்காவைக் கட்டிக் கொண்டாள். “அக்கா! என்ன நீ இப்படிப் பண்ற? இது அழற நேரமா? நீ சந்தோஷமா இருக்கப் போற! அங்கே போய் நீ மாமாவை நல்லாப் பார்த்துக்கோ! நாங்க அடிக்கடி உன்னை அங்கே பார்க்க வருவோம்,” என்று கலகலவெனப் பேசி, தமக்கையைச் சமாதானப்படுத்தினாள், சரண்யாவின் வார்த்தைகள் அந்தச் சூழலில் நிலவிய சோகத்தைக் கொஞ்சம் குறைத்தது…
இந்தக் காட்சிகளையெல்லாம் சித்தார்த் உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்களில் எந்தவிதமான பாசமோ, அனுதாபமோ இல்லை.
ஆனால், சித்தார்த்தின் தாயான தெய்வானை இந்தக் காட்சிகளைக் கண்டு மனம் கலங்கினார். தாய்மை உள்ளம் என்பதால், அவரால் தன் மருமகளின் கண்ணீரைத் தாங்க முடியவில்லை… சட்டென்று ரிதன்யாவின் அருகில் சென்று, அவளது கண்ணீரைத் துடைத்தார்.
தன் மருமகளுக்குத் தைரியம் அளித்து, பாசத்துடன் தன் அருகில் இழுத்துக் கொண்டார்.
வாசுதேவனும் தனது மருமகளிடம், “நாங்க இருக்கிறோம்மா, இனி நீ எங்க வீட்டுப் பொண்ணு, அழக்கூடாது” என்று பாசமாக கண்ணீரை துடைத்து விட்டார்,…
பெரியவர்களின் பாசமும், சரண்யாவின் உற்சாகமான பேச்சும் ரிதன்யாவைக் கொஞ்சம் சமாதானப்படுத்தியது. அவளும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கனத்த மனதுடன் சித்தார்த் உடன் காரில் ஏறினாள்,..
அவர்களது மண வாழ்க்கை, இனிதே தொடங்க வேண்டிய அந்தப் பயணம், ஒரு வார்த்தையும் இன்றி, செவ்வானம் மங்காத மாலைப் பொழுதின் பிடியில் நகர்ந்தது…
சித்தார்த்தின் தாயும் தந்தையும் மற்றொரு காரில் பின்தொடர, ரிதன்யாவும் சித்தார்த்தும் பின் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தனர், டிரைவர் வண்டியை ஓட்டினார்,..
சூரியன் மேற்கு வானத்தில் செந்தூரக்
கோடுகளைப் பூசி, மாலைப் பொழுதின் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். காரின் ஜன்னல் வழியே தெரிந்த அந்தப் பிரகாசமான ஒளியும், வெளியே நகரும் காட்சிகளும், உள்ளே நிலவிய மௌனத்தின் பாரத்தை அதிகரிக்கவே செய்தது. இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை…
ரிதன்யா, ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தாள். அவளது கண்களின் ஈரம் தன் பெற்றோருக்கான பாசத்தையும் வரப்போகும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் வெளிப்படுத்தியது…
சித்தார்த், காரின் மறு ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனது முகம் இறுக்கமாக இருந்தது. அவனது கோபமும், அவள்மீது கொண்ட வெறுப்பும், அந்தச் செவ்வானத்தின் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது…
அந்தப் பயணம் முழுவதும், அவர்கள் இடையே ஒரு கனமான இடைவெளி நிலவியது. அதுவே அவர்களுக்குள்ளான மௌனப் போரின் தொடக்கமாக இருந்தது…
அவர்கள் இல்லம் வந்து சேர்ந்தபோது, வரவேற்பு சடங்குகள் தொடங்கின, ரிதன்யா, சித்தார்த்தின் இல்லமான, அந்தக் கம்பீரமான வீட்டிற்குள் பிரமாண்டமான வரவேற்புடன் காலடி எடுத்து வைத்தாள்.
பிரமாண்டமான அந்த வரவேற்பறையும், சுற்றிலும் இருந்த உறவினர்களின் முகங்களும், அவளது மனதில் இருந்த கசப்பைப் கொஞ்சமும் போக்கவில்லை…
வீட்டினுள் நுழைந்ததும், தெய்வானை ரிதன்யாவைப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அவளை விளக்கேற்றச் சொன்னார்…
ரிதன்யா, மெழுகுவர்த்தியைக் கொண்டு விளக்கின் திரியை ஏற்றி வைத்தாள். அந்த ஒளியில், அவளது மனம் ஒரு கணம் அமைதியடைந்தது. இந்த வீட்டிற்க்கு நல்லதை செய்வதற்கான முதல் கடமையைச் செய்துவிட்டதாக அவள் உணர்ந்தாள்…
சடங்குகள் தொடர்ந்து நடந்தன. அப்போது, சித்தார்த், சடங்குகளில் ஈடுபாடு காட்டாமல், எரிச்சலுடன் அவனது அறையை நோக்கி நகர,..
”இன்னும் சடங்கு இருக்கு, மாப்பிள்ளை அதுக்குள்ள போனா எப்படி?” என்று உறவுக்காரப் பெண் ஒருத்தி சொல்ல,..
சித்தார்த், ஒரு கணம் நின்று கஷ்டப்பட்டு எரிச்சலை மறைத்துக் கொண்டு, ஒரு செயற்கையான புன்னகையை உதட்டில் வரவழைத்து,.. ”சாரி ஆன்ட்டி! எனக்கு ஒரு முக்கியமான பிஸ்னஸ் போன் கால் வருது. இப்போதே போயாகனும்” என்று பொறுமையின் எல்லைக்கே சென்று பதில் சொன்னான். அவன் குரலில் இருந்த கசப்பு, அருகில் இருந்தவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் ரிதன்யாவிற்க்கு அது மிகத் தெளிவாகப் புரிந்தது…
வாசுதேவன் நிலைமையைத் தணிக்கும் நோக்குடன், “சரிப்பா, நீ போய் பேசி முடிச்சிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்,…
சித்தார்த், ரிதன்யாவை ஒரு கணம் கூர்மையாகப் பார்த்துவிட்டு தனது அறை நோக்கி சென்றுவிட, தெய்வானை தான் மருமகளின் அருகிலேயே இருந்தார்,..
தெய்வானையின் தூரத்து உறவுக்கார பெண்மணிகள் பலபேர் அங்கு தான் இருந்தனர். கேலியும் கிண்டலுடன் சென்றது நேரங்கள். வெளிநாட்டில் இருக்கும் திலகா தன் அண்ணன் மகனின் திருமணத்திற்க்கு வர எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டார், ஆனால் சில தினங்களுக்கு முன்பு அவரது கணவருக்கு ஏற்பட்ட விபத்தினால் அவர்களால் வர முடியாமல் போய்விட்டது என்ற தகவலை ரிதன்யாவிடம் கூறிய தெய்வானை திலகாவிடம் போனில் பேச வைத்தார்..
அழைப்பில் இருந்தவரிடம் மரியாதையாக சில சொற்கள் பேசியவளுக்கு தெரியாது அந்த திலகா தான், தன் சிறுவயது வீட்டில் அருகில் வசித்த திலகா என்று, அவரை பார்த்து விட்டாலே சித்தார்த் தான் தன் அபி என்ற உண்மை தெரிந்து விடும்.
ஆனால், அவர் கணவரின் விபத்து, அவர்களை நேரில் சந்திப்பதைத் தடுத்துவிட்டது. விதி அவர்களை இன்னும் பிரித்து வைப்பதற்கே திலகாவின் வரவைத் தடுத்திருக்கிறது. இவர்களின் மௌனப் போர் முடியாமல், அவர்களின் உண்மையான அடையாளம் தெரியாமல், அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விதி முடிவெடுத்து விட்டது போல இருந்தது..
அந்தச் சிறு உரையாடலால், ரிதன்யாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. பல வருடங்களாக தெரிந்து கொள்ள நினைக்கும் உண்மை, இருவருக்கும் தெரியாமல், அவர்கள் வீட்டிற்க்குள்ளேயே புதைந்து கிடந்தது…