மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 9
“இப்போ நீங்கப் போனை கட் பண்ணீங்க… இனி எப்பவும் என்னை நீங்க உயிரோட பாக்க முடியாது அத்தான். இது நீங்க உயிரா நினைக்குற உங்க அம்மா மேல சத்தியம்!” என்றவளின் வரிகளில் அலைபேசியை அணைக்கச் சென்றவனின் கரங்கள் நடுங்க அப்படியே காதுக்குள் வைத்தவன் அமைதியாய் இருந்துவிட்டான்.
அவன் அலைபேசியை அணைக்கவில்லை என்னும் விடயமே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது போல் பேசத் தொடங்கிவிட்டாள்.
“ஏன் அத்தான் நான் என்ன தப்பு செஞ்சேன்னு என் குரலைக் கூடக் கேட்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கீங்க? அந்த அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா அத்தான்? நான் எப்படிப் போனாலும் உங்களுக்குக் கவலையில்லையா? ஆனா எனக்கு உங்களைப் பாக்கணும். நீங்க என்னைப் பாத்து எத்தனை வருஷமாச்சு… ஒருதடவை கூட என்னை நினைக்கமாட்டீங்களா?
அமுகிட்ட பேசுறீங்க… ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை நீ எப்படி இருக்கேன்னு கூடக் கேட்கலை? இல்லை இவ செத்தாலும் பரவாயில்லைன்னு நினைச்சிட்டீங்களா? சரி விடுங்க, நடந்து முடிஞ்ச எதையும் நான் பேச விரும்பலை. நடக்கப் போறதைப் பத்தி பேசுறேன்.
இங்கே வீட்ல என்னோட கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா அதுல எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. என் படிப்பையும் நிறுத்திட்டாங்க. எனக்குப் படிக்கணும். இந்தக் கல்யாணம் வேண்டாம்.
இங்கே சொன்னா யாரும் எதுவுமே கேட்கலை. இங்கே யாருக்கும் நான் தேவையில்லை. அதுமட்டும் இல்லை இந்த ராசி இல்லாதவளை இவங்களால கடைசி வரைக்கும் பாத்துக்க முடியாதாம். ஒரு உதவாக்கரைக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்க. இனி இதுல நான் எந்த முடிவும் எடுக்கப் போறதில்லை. முடிவை உங்க கையில விட்டுட்டேன்.
இனி நான் வாழறதும் சாகறதும் உங்க கையில தான் இருக்கு. இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்லை நான் வச்சிடறேன்.” இவ்வளவு தான் அவள் பேசியது.
ஆனால் அவள் பேசிய வார்த்தைகளில் ஒரே ஒரு உண்மை அவள் முழுவதுமாய் தன்னை நம்புகிறாள். அது மட்டுமே அவனின் நினைவில் நின்ற விடயம்.
‘பட்டு, எந்த இடத்துலடி நான் வருவேன்னு நம்புறே? இத்தனை வருஷமா உன்கிட்ட நான் பேசவே இல்லை. ஆனா எப்படிடி இந்த நம்பிக்கை? ஏன்டி என்மேல் இவ்வளவு நம்பிக்கை? சத்தியமா என்னால முடியலைடி… உன்னை விட்டு விலகிப் போகணும்னு நினைக்குறேன் ஆனா நீயே என்கிட்ட நெருங்கி வர்றியேடி… உன் அத்தான் மேல் அத்தனை நம்பிக்கையாடி? வேணாம்டி, இந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியுமான்னு தெரியலையே…’ என்று நினைத்தவனின் மூடிய இமைகளுக்குள் வந்து போனாள் பதினோரு வயது பூம்பாவை.
பின்பு ஒருமுறை சென்றபோது கூட வீட்டில் நடந்த களேபரத்தில் அவளைச் சரியாகப் பார்த்ததாய் நினைவு இல்லை. அன்று இருந்த மனநிலையில் அவளைப் பார்க்கவே கூடாது என்று நினைத்ததும் கூட உண்டு.
ஆனால் இன்றோ மனதில் ஆழமாய் வேரூன்றித் தன்னையே அசைத்துப் பார்த்தவளின் வதனமே சிறுமலராய் மட்டுமே தெரிந்தது. குமரியாய் இன்னும் அவளைக் காணவில்லையே தவிர இப்படித்தான் இருப்பாள் என்று அவனின் கற்பனைக்கு உருவம் தந்தது போல் அவளின் கிண்கிணியாய் குரலைக் கேட்டதும் மனம் கட்டவிழ்ந்த காளையாய் அவளைத் தேடி ஓடியது.
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டுக் கண் சிரிக்கும் சுந்தரியே,
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…
என்னில் நீயடி உன்னில் நானடி
என்னில் நீயடி… உன்னில் நானடி…
என்ற வரிகள் தான் ஆடவனுக்கு தற்சமயம் நினைவு வந்தது.
ஏனோ இந்த நிமிடமே அவளிடம் ஓடி அவளை அள்ளி அணைத்து தன் மனதில் உள்ள நேசத்தைக் கொட்ட வேண்டும் என்று பரபரத்த கரங்களைக் கட்டி வைப்பது தான் அவனுக்குச் சிரமமாய் போனது.
‘இல்லை விவேகா இன்னும் அதற்குச் சரியான சந்தர்ப்பம் வரலை. வரணும், வர வைக்கணும். ஆனா இப்போ இக்கட்டுல இருக்குற என் பட்டுவைக் காப்பாத்தணும். அதுக்கு என்ன வழி என்று கொஞ்ச நேரம் தன் அறையைச் சுற்றி நடந்தவன் சிந்தனையில் அவனவளின் ஓவியம் தான் தெரிந்தது.
‘வேணாம்டி, என்னை ஏதாவது சிந்திக்க விடு. இப்படி நிதமும் உன் நினைப்புல வச்சிருந்தா நான் என்னதான்டி பண்ணுவேன்.’ என்று தன்னவளின் நினைவுடன் சற்று பேசிக் கொண்டவன் நிச்சயம் அவளை மீட்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவனுக்கு தன் வேலையும் நினைவு வந்தது.
இப்பொழுது தான் இந்த மாவட்டத்திற்கு பதவி ஏற்றுள்ளான். அவன் இரண்டு வருடத்திற்கு இங்கே இருக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் அரசாங்கம் அவனை இங்கே நியமனம் செய்தது. தற்சமயம் தான் பின்வாங்குவது தன் வேலைக்கு இழுக்கு என்று நினைத்தவன் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
அந்தப் பக்கம் ஏற்கப்பட்டதும் என்ன பேசினானோ வைக்கும் தருணத்தில் முகத்தில் புன்னகையுடன், “ரொம்பவே நன்றி சார்!” என்றான் இயல்பாய்.
அதே நேரத்தில் தன் படுக்கையில் அமர்ந்திருந்த அருந்ததியிடம் வந்த சகுந்தலாவோ,
“ஏய் சனியனே! என்ன திமிரா? என்னவோ புதுப் புடவை கட்டமாட்டேன்னு சொன்னியாம். யாரு உயிரைடி இன்னும் வாங்க போற மூதேவி… இந்தா குளிச்சிட்டு இந்தப் புடவையைக் கட்டிட்டு வெளியே வர… இல்லை உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன் பாத்துக்கோ…” என்றபடி கோபமாய் தன் கையில் இருந்த பட்டுப் புடவையைத் தூக்கி அவள்மேல் போட்டவள் அங்கிருந்து கோபமாய் சென்று விட, பெண்ணவளோ அந்தப் புடவையைக் கையால் கூடத் தொடாமல் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
அதேநேரம் அங்கே வேகமாய் வந்த அமுதாவோ,
“தங்கம், ஏன் சாமி இன்னமும் இப்படியே இருக்க? உன் அத்தானும் இன்னும் வரலை. எனக்கு என்னவோ பயமா இருக்குடா தங்கம்… நீ முதல்ல இங்கே இருந்து பின்னாடி வழியா கிளம்பிடும்மா… இவங்களை நான் சமாளிச்சிக்குறேன். போயிடு என் சாமி… இவங்கெல்லாம் மனுஷங்களே இல்லை. ஜாதகம் ஜோசியத்தை நம்ப வேண்டியது தான் அதுக்காக இப்படியா குரங்கு கையில பூமாலை மாறி…
வேணாம் சாமி இவங்ககிட்ட நீ இருந்த வரைக்கும் போதும்டா தங்கம்… நீ கிளம்புடா… இவங்க என்னைக் கொன்னு போட்டாலும் பரவாயில்லை. இவங்களை நான் சமாளிச்சிக்குறேன்மா… நீ போ சாமி…” என்ற அமுதாவையே பார்த்தவளின் கண்களில் கண்ணீர் துளிகள் கரை கட்டியிருந்தது.
எனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வீட்டு வேலையாளுக்கு இருக்கும் பாசம் கூடப் பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் இல்லையே? இதை என்னவென்று தான் சொல்ல! என்றவளின் கரங்களுக்குள் அமைதியாய் இருந்தது அரளி விதை.
அமுதா அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த கற்பகநாயகியோ கோபத்துடன் அமுதாவின் அருகே வந்தவர்,
“அமுதா, நான் உன்கிட்ட என்ன சொன்னேன் நீ என்ன வேலை பாக்குற? இந்தக் கல்யாணம் இந்தக் குடும்பத்தோட கௌரவம் சம்பந்தப்பட்டது. அதைத் தடுத்து நிறுத்தத் துணிஞ்ச உன்னை என்ன செஞ்சால் தான் தகும்…” என்று ஆத்திரம் கண்ணை மறைக்கத் தன் கரத்தால் பளீரென அமுதாவை அறைந்தார்.
“பாட்டி…” என்று அதில் அதிர்ந்த அருந்ததியோ அமுதாவை ஒரு கரத்தில் தாங்கிக் கொண்டு,
“பாட்டி, இப்போ உங்களுக்கு என்ன நான் கிளம்பணும் அவ்வளவுதானே? நீங்கப் போங்க நான் கிளம்பி வரேன்.” என்று அவரைச் சமாதானம் செய்து அனுப்பியவள் அமுதாவிடம் திரும்பி,
“அமு, நீ போய் வெளியே இரு. நான் புடவை மாத்திட்டு வரேன்.” என்றாள் உறுதியாய்.
“இல்லை தங்கம் வேணாம்மா… என் உயிரே போனாலும் இந்தக் கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன்.” என்றபடி அவளை அணைத்துக் கொண்டார் அமுதா.
மெல்ல அமுதாவை சமாதானம் செய்தவள் அவளை வெளியே அனுப்பி விட்டுச் சகுந்தலா வீசியெறிந்த புடவையைக் கையில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள்.
இங்கே வெளியே நின்றிருந்த அமுதாவின் மனமோ, “கடவுளே! இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. என் அரு குட்டி சந்தோஷமா வாழணும்.” என்று கடவுளை வேண்டியவரின் பார்வை வீட்டிற்கு வெளியே தான் இருந்தது.
ஆனால் அவரின் தேடலுக்கு உரியவனோ படபடப்புடன் தன் அறையில் அமர்ந்து நிமிடத்திற்கு நிமிடம் அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனின் உள்ளம் தடதடத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அங்கே அமர முடியாதவன் தன் அலைபேசியுடன் வெளியே வந்து தன் காரில் ஏற டிரைவரும் ஏறி அமர்ந்து வண்டியை எடுக்கும் சமயம் எங்கிருந்தோ அந்த மக்கள் கூட்டம் அவனின் வண்டியை வழி மறித்தது.
அவர்கள் அந்த ஊரின் மலையில் வாழும் பழங்குடியின மக்கள். இவ்வளவு தூரம் அரசாங்கத்தைத் தேடி வந்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இவர்களின் பிரச்சனை பெரிது தான் என்று உணர்ந்தவன் தன் சொந்த வேலையையும் தன் பட்டுவையும் மறந்து போனவனாய் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான்.
தற்சமயம் அவன் பட்டுவை மறந்ததற்கான தண்டனையைப் பின்னாளில் அவன் அனுபவிக்கக்கூடும்.
“அய்யா சாமி! நீங்க தாங்க எங்க குல தெய்வம்னு நினைச்சி வந்துருக்கோமுங்க… நாங்க இருக்குற அந்த மலையில இனிமே நாங்க குடியிருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க சாமி… எங்களுக்கு வேற போக்கிடம்னு எதுவும் இல்லை சாமி… நாங்க விவரம் தெரிஞ்சதுல இருந்து வாழற பூமி இதுதானுங்க சாமி… இப்போ போய்க் காலி பண்ண சொன்னா நாங்க எங்க சாமி போவோம்? நீங்கத் தான் சாமி இதுக்கு ஒரு வழி பண்ணனும்.” என்றனர் ஒட்டு மொத்தமாய்.
அதனைக் கேட்டவன் யோசனையுடன் தன் உதவியாளரைப் பார்க்க அவனோ வேகமாய் வந்து,
“சார், இது மினிஸ்டரோட உத்தரவுன்னு லோக்கல் எம் எல் ஏ செஞ்சிருக்காருங்க…” என்றான் உபரி தகவலாய்.
அதைக் கேட்டவனின் புருவங்கள் சுருங்க ஒரு நிமிடம் யோசித்தவன் அந்த மக்களிடம் திரும்பி,
“நீங்க இப்போ கிளம்புங்க. நான் கூடிய சீக்கிரமே இதுக்கான முடிவோட வந்து உங்களை நேர்ல உங்க இடத்துல வந்து பாக்குறேன்.” என்றான் உறுதியான குரலில்.
முதலில் தயங்கியவர்கள் அவனின் உறுதியான பேச்சில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் தன் காரில் ஏறி அமர்ந்தவன்,
“மினிஸ்டர் ஆபிஸ்க்கு போங்க.” என்று உத்தரவிட்டான்.
இங்கே சகுந்தலா கொடுத்த புடவையில் தேவதையாய் தயாராகி வந்தவளைக் கண்ட கற்பகநாயகியின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.
ஆனால் அதை யாரும் பார்க்கா வண்ணம் துடைத்துக் கொண்டவர் அங்கிருந்தவர்களின் முன்னே திரும்பி அமர்ந்தவரின் கண்களில் மாப்பிள்ளையாய் இருந்தவனைக் கண்டவருக்குக் கண்கள் அதிர்ச்சியில் நிலைகுத்தியது. அவர் சகுந்தலாவை திரும்பிப் பார்க்க அவளின் விழியில் என்ன இருந்ததோ அருந்ததியை பார்த்தவரின் கண்களில் பாவம் மட்டுமே இருந்தது.
சகுந்தலாவிற்கு அருந்ததியை பிடிக்காது என்று நன்றாகத் தெரியும். அதன் காரணமும் அவர் அறிவார். ஆனால் ஒரு வயது பெண்ணுக்கு இத்தனை பெரிய பாவம் செய்வாளா என்று தான் தயங்கினார்.
அப்படி என்ன மாப்பிள்ளை பார்த்தாளோ சகுந்தலா? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
