அத்தியாயம் 9

 

கொஞ்ச நாள் முன்னாடி எம்.எல்.ஏ சதாசிவத்திற்கு எதிரான வழக்கு ஒன்று என்னிடத்தில் வந்தது. அந்த சதாசிவம் தன்கிட்ட வந்த ஐந்து  பேரிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் வாங்கி ஏமாத்திட்டான். அவங்களாம் சேர்ந்து இந்த எம்.எல்.ஏ  மேல வழக்கு போடணும்னு என்கிட்ட வந்தாங்க. நான் அந்த வழக்கு எடுத்து ஜெயிச்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு நியாமான பணத்தை வாங்கி கொடுத்தேன். அதிலிருந்து அந்த சதாசிவத்துக்கு என் மேல கோபம். அவன் என்னுடைய சீனியர் வக்கீல் பத்மநாபனுக்கு வேண்டியவர் தான் அவனை பத்தி என் சீனியர்க்கு நல்லா தெரியும் அவன் நல்லவன் இல்ல, அவனாலே உனக்கு ஆபத்து வரும்னு என் சீனியர் இந்த வழக்கை எடுக்க வேண்டாம்னு சொன்னாரு.எனக்கு நான் தனியாக ஒரு வழக்கு எடுத்து நடத்தி அதில் வெற்றி பெறணும்னு நீண்ட நாள் ஆசை, அதனாலே அவரை நான் சமாதானப்படுத்தி அந்த வழக்கை எடுத்து நடத்தினேன். வெற்றியும் பெற்றேன். எப்போதும் என் சீனியர் அவர் இல்லாதபோது அவருடைய கட்சிக்காரர் கொடுக்கும் பணத்தை என்னதான் வாங்கி அவருடைய அறையில் உள்ள பீரோவில் வைக்க சொல்லுவார். அன்றைக்கு அது மாதிரிதான் ஒரு கட்சிக்காரர் பத்து லட்சம் கொண்டு வந்து கொடுத்தார் . நானும் அவருடைய அறையில் உள்ள பீரோவில் தான் வைத்தேன். ஆனால் மறுநாள் வந்து பார்த்த போது அந்த பணத்தை காணோம். அரை முழுக்க தேடி பார்த்தேன். எங்குமே பணம் இல்லை. என்னுடைய சீனியர் வந்ததும் அவர்கிட்ட பணம் காணோம்னு சொன்னவுடன் அவருக்கு கோபம் வந்துவிட்டது. அந்த பீரோவின் சாவி உங்கிட்ட தானே இருந்தது அப்புறம் எப்படி பணம் காணாம போகும்னு ஒரே சத்தம் போட்டார். 

 நீ நேர்மையானவன் என்று நினச்சு தானே உன்னை நம்பி பணத்தை வாங்கி வைக்க சொன்னேன். நீயே இப்படி என்னை ஏமாத்தினா என்ன அர்த்தம்? நாளைக்கே என் பணம் எனக்கு வந்தாகணும். அப்படி இல்லனா உன் மேல் போலீசில் புகார் கொடுப்பேன். நான் போலீசுக்கு போனா சட்ட விதிப்படி உன்னை இந்த தொழிலிருந்தே டீபார் பண்ணிடுவாங்க. அப்புறம் உன்னாலே எந்த கோர்ட்டுக்கும் சென்று வாதாட முடியாது என்று மிரட்டி விட்டு சென்று விட்டார். 

 

நான் என்ன பண்றதுனு தெரியாமல் வெளியில் நடந்து கொண்டிருந்த சமயம் தான் அந்த எம்.எல்.ஏஆளுங்க கார்ல வந்து என்னை தூக்கிட்டு போயிட்டாங்க. அந்த கார்லே என் கை காலை கட்டிப்போட்டு என் வாயில் வலுக்கட்டாயமா விஸ்கியை ஊத்திவிட்டுட்டாங்க. அதும் மட்டும் இல்லாமல் நீ இரண்டு நாளைக்கு எழுந்திருக்கவே கூடாதுனு மயக்க மாத்திரையை அதிலே கலந்து குடிக்க வைச்சாங்க. எனக்கு சீக்கிரமா மயக்கம் வராததால் மேலும் மேலும் மயக்க மாத்திரை கலந்த மதுவை குடிக்க வச்சாங்க. அப்புறம் என்ன நடந்திச்சின்னு எனக்கு தெரியாது. கண் விழித்து பார்த்த போது இங்கு இருக்கிறேன் என்று விக்னேஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கே போலீஸ் வந்தது. விக்னேஷ், நீங்க வக்கீல் பத்மநாபன் பணம் பத்து லட்சத்தை திருடிவிட்டதாக அவர் உங்க மேலே போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். டாக்டரை இப்பதான் பார்த்திட்டு வரேன். அவர் நீங்க ஒரு நாள் கண்டிப்பாக மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னதாலே நாளைக்கு நாங்க உங்களை விசாரிக்க ஸ்டேஷன் கூட்டிட்டு போக வேண்டியது இருக்கும். நீங்க லாயர்னாலே உங்ககிட்ட அதிகமா சொல்ல வேண்டியதில்லைனு நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றதும் கவிதாவும் மாசிலாமணியும் உள்ளே வந்து, இங்கே எதற்கு போலீஸ் வந்தார்கள் என்று கேட்கவும் வேறு வழியில்லாமல் கௌரியும் அனைத்தையும் சொன்னான். அதை கேட்டதும் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றுவிட்டனர். கௌரி அவர்களிடம் நீங்க கவலைப்படாதீங்க, எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீங்க அண்ணனை பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான். கௌரி முதலில் விக்னேஷ் கூட படித்த நரேஷை சென்று பார்த்தான். அவனும் லாயர் தான். நரேஷுக்கு விக்னேஷை விட கௌரிக்கு தான் மிகவும் பழக்கம். நரேஷிடம் சென்று நடந்ததை கூற நரேஷ் உடனே முன்ஜாமீனுக்குரிய ஏற்பாடுகள் செய்து அன்று மாலைக்குள் முன்ஜாமீனும் வாங்கிவிட்டான். 

 

கௌரி அவனிடம் ரொம்ப நன்றி நரேஷ். உரிய நேரத்தில செய்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன் என்று கூற, நண்பர்களுக்குள்ள நன்றியெல்லாம் எதுக்கு? கௌரி, உங்க அண்ணனை எனக்கு நல்லா தெரியும். அவன் கொஞ்சம் சிடுமூஞ்சிதான். அதிகமா யார்கிட்டேயும் பேசமாட்டான். ஆனா ரொம்ப நேர்மையானவன். நீ என்கிட்ட சொல்றத வச்சி பார்த்த  அந்த எம்.எல்.ஏ ஆளுங்க தான் விக்னேஷ் கூட வேலை பாக்கிறவனை வச்சி பணத்தை எடுத்து இருக்கனும் என்று சொல்ல ஆமா நரேஷ் அப்படி தான் இருக்கனும். நான் இதை பாத்துக்கிறேன். என் அண்ணன் மேல எந்த தப்பும் இல்லனு நான் நிரூபிப்பேன். anyway ரொம்ப தேங்க்ஸ் நரேஷ் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்தான். 

 

மருத்துவமனை அடைந்ததும் அங்கு அவன் அன்னை கவிதா மட்டும் வெளியில்  அமர்ந்துக் கொண்டிருந்தாள். அப்பா எங்கம்மா? என்று கேட்க, அவர் வீடு வரைக்கும் போயிருக்காருப்பா. வீட்டிலே அவர் குளிச்சிட்டு அப்படியே எனக்கும் மாத்து துணி எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு. போன வேலை என்னாச்சுப்பா? அண்ணனுக்கு முன் ஜாமின் கிடைச்சிடிச்சும்மா. விக்னேஷ் கூட படிச்ச என் நண்பன் நரேஷ் இந்த கேசை எடுத்து நடத்தறேன்னு சொல்லிட்டான். அவன் தான் இவ்வளவு சீக்கிரமா முன்ஜாமீன் வாங்கி கொடுத்தான். இப்ப அண்ணன் எப்படி இருக்கார்? உங்களுக்கு இப்ப உடம்பு தேவலயா? என்று கேட்க, எனக்கு ஒன்னும் இல்லப்பா. நான் நல்லாத்தான் இருக்கேன். உன் அண்ணன் தான் இறுக்கமா இருக்கான். விஷயம் கேள்விப்பட்டு இப்பதான் மதுமதி வந்திருக்கா. அவ உன் அண்ணன் கிட்ட பேசிட்டு இருக்கா. அவ எப்படியும் உன் அண்ணனை இதிலிருந்து வெளியில் கொண்டு வந்துருவா. அவ பேசட்டும் தான் நான் வெளியில் இருக்கேன் என்று கூற கௌரியும் தன் அன்னையின் அருகில் அமர்ந்துக் கொண்டான். 

 

உள்ளே மதுமதி சென்றதும் விக்னேஷை பார்க்க அவன் அவளை பார்க்க முடியாமல் தலையை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டான். மதுமதி அவனிடம் சென்று, அத்தான் என்னை பாருங்க! இப்ப என்ன நடந்துடிச்சினு முகத்தை திருப்புறீங்க! அத்தை எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க. உங்க மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் நீங்க ஏன் கில்டியா பீல் பண்றீங்க? உங்களுக்காக மாமா,அத்தை, கௌரினு எல்லோரும் இருக்கோம். கௌரி மாமா உங்களுக்காக முன் ஜாமீன் எடுக்க வெளியில் போயிருக்கிறார். கண்டிப்பா எல்லாம் சீக்கிரமா சரியாய்டும். நாமே எந்த தப்பும் செய்யல அத்தான். அதனாலே நமக்கு நல்லது தான் நடக்கும். நாளைக்கே நாம் வீட்டிற்கு போய்டலாம். உங்களுக்காக நான் எப்போதும் உங்க கூடவே இருப்பேன். உங்களை எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் வீட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களை விட்டும் போக மாட்டேன். இனி நான் உங்க வீட்டில் தான் இருப்பேன். உங்க வீட்டில் இருந்தே வேலைக்கு போகிறேன் அத்தான் அப்பா, அம்மாகிட்ட கூட சம்மதம் வாங்கிட்டேன். நீங்க வீட்டிற்கு வந்ததும் உங்களை என் கண்ணின் மணி போல பார்த்துப்பேன் என்று அவன் கையை எடுத்து தன் கை மேல் வைத்து ஆறுதல் கூற, விக்னேஷ் ஒன்றுமே பேசவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வாய் மொழி பேசாததை அவன் கண்கள் பேசியது. நாம் எத்தனையோ கோடி ஜென்மங்கள் ஒன்றாக வாழ்ந்து இருப்போமடி அதனாலதான்  நீ என்மீது இத்தனை அன்பை பொழிகிறாயோ! அதற்கு நான் தகுதியானவன் இல்லை பெண்ணே! என்று கூறுவது போல் இருந்தது அந்த பார்வை. அவளும் அவனையே தான் காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

சற்று நேரம் கழித்து கவிதாவும் கௌரியும் உள்ளே வர அப்போதும் மதுமதி அவளையும் மறந்து அவன் கையை விடாமல் பிடித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கௌரி மதுவை பார்த்து, எவ்வளவு நேரம் தான் என் அண்ணனை விடாமல் சைட் அடிச்சிட்டு இருப்பீங்க? கல்யாணத்துக்கு அப்புறம் பாக்கிறதுக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க அம்மணி என்று கிண்டலடிக்க, உடனே மதுமதி கௌரி மாமா, நான் என் புருஷனைத்தானே சைட் அடிக்கிறேன், உங்களுக்கு என்ன வந்திச்சு?  என்று பதிலுரைக்க, பார்ரா! இன்னும் கல்யாணமே ஆகலே, அதுக்குள்ளே புருஷனா? நடத்துமா! நீ நடத்து, என்று மறுபடியும் கலாய்க்க, அத்தை பாருங்க  இந்த கௌரி மாமாவை, இரு மாமா எனக்கும் ஒரு காலம் வரும் உங்களையும் ஓட்ட, அப்ப பாத்துக்கிறேன் என்று அவள் பதிலுரைக்க, விக்னேஷ் முகத்திலும் சிறு புன்னகை மலர்ந்தது. கவிதா, என் புள்ளை முகத்திலே ரொம்ப நாள் கழிச்சு  சிரிப்பை பாக்கிறேன். இந்த சிரிப்பு அவன் முகத்திலே எப்போவும் நிலைச்சு இருக்கணும்பா. சீக்கிரமா விக்னேஷ், மது கல்யாணத்தை நடத்திடனும், அதற்கு என் செந்தில்மலை ஆண்டவன் தான் அருள் புரியனும் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள்.     

 

ஒரு வாரம் ஓடிவிட்டது. விக்னேஷ் வீட்டில் தான் இருந்தான். அவனுக்கு மனம் முழுக்க பாரமாக இருந்தது. இந்த உலகத்தில் நேர்மையாய் வாழணும்னு நினைக்கிறவனுக்கே காலம் இல்லையா? என்னைப்பத்தி நல்லா தெரிஞ்ச என் சீனியர் கூட நான் பணத்தை திருடிட்டேன்னு சொல்லிட்டாரே? நான் மதிப்பும் மரியாதையும் வைச்சி இருக்கிற இவரே என்னை நம்பலான வேர் யாரு என்ன நம்ப போறாங்க?  என்று  நினைத்துக் கொண்டே மோட்டு வலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இந்த திருட்டு பழியை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கூடவே அவனை நீதிமன்றத்துக்கு சென்று வாதாட முடியாதபடியும் செய்துவிட்டார்கள். மனதில் இவ்வாறு பலவேறு சிந்தனைகள் செய்துக்கொண்டும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டும் தனக்குள்ளே ஒடுங்கி போனான்.ஏற்கனவே அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். இப்போது இன்னும் தன் கூட்டுக்குள் முடங்கி போனான். ஆனால் மதுமதி அவனை விடுவதாய் இல்லை. அவன் மனதை மாற்ற அடிக்கடி அவனிடத்தில் சென்று பேச்சுக் கொடுத்தாள். அவனை சகஜமான மனநிலையிக்கு மாற்றுவாள். ஆனால் அதெல்லாம் சிறிது நேரம் தான் நிலைக்கும். மீண்டும் அவன் தன் சிந்தனையில் மூழ்கிவிடுவான். தன்னிடம் வருவோரின் மனநிலையை புரிந்துக் கொண்டு அவர்களின் மன வலியை போக்கி நம்பிக்கை கொடுத்து வாழ வைக்கும் மதுமதிக்கு தன்னுடய உற்றவனின் மனதை மாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது.ஆனால் அவனை அப்படியே விடக்கூடாது, எப்படியாவது சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்,  அவனை எப்படியும் மாற்றவேண்டும் என்ற திடமான மனதுடன் உறுதியாக இருந்தாள். இதற்கிடையில் கௌரியும் தனக்கு நம்பகமான துப்பறிவு நிறுவனம் மூலம் லாயர் பத்மநாபனின் அலுவலகத்தை கண்காணிக்க சொன்னான். அவர்களும் விரைவில் பணத்தை எடுத்தவனை கண்டுபிடித்து விடுவதாக கூறினார்கள். இதையெல்லாம் விக்னேஷ் நல்ல மன நிலையில் இருந்தால் அவனே செய்து இருப்பான். தான் மதிக்கும் ஒருவர் தன்மேல் நம்பிக்கை வைக்காமல் தன்னை திருடன் என்று எண்ணி விட்டாரே என்ற மனநிலையிலேயே உழன்று கொண்டிருந்ததால் அவனால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. 

 

மேலும் ஒரு வாரம் சென்றது. அன்று கௌரி அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்த சமயம் அவனுடைய அலைபேசி ஒலித்தது. ஹலோ என்று கூறியவுடன் அடுத்த பக்கத்தில் கூறிய செய்தி கேட்டு அவன் முகம் பிரகாசமாகியது. அப்படியா! இப்பவே வரேன். இன்னும் அரை மணி நேரத்தில் நீங்க சொன்ன இடத்தில இருப்பேன் என்று கூறி அவன் விரைந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். கவிதா, அவ்வளவு அவசரமாக கிளம்பி போறானே என்ன விஷயமாக இருக்கும் என்று போய்க்கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்    

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
824 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page