அத்தியாயம்- 18

பாகம். 18

எதற்காகவோ வெளியே சென்றவனை குழலி வேகமாக கூப்பிடுகிறாள்.
” அரவிந்த் அங்கிள் கொஞ்ச நேரம் நில்லுங்களேன்.. “அவன் பின்னேயே வேகமாக ஓடி வருகிறாள்..

“என்னடாம்மா.. என அவளைத் தூக்கிக் கொள்கிறான்..

“அதோ அந்த புதருக்குள்ள பாம்பு ஓடின மாதிரி இருந்தது ..நீங்க அங்க போகாதீங்க ..”என்கிறாள்..

அவள் சொல்வது உண்மையோ பொய்யோ ..அரவிந்த் வியந்து போகிறான்.. தன் மகனுக்கும் இவளுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ளதாக இருக்கிறது ..அவன் இன்னமுமே கைக்குழந்தை என்கிற மாதிரி தான் வளர்கிறான் ..இவளுக்கு எல்லாமே தெரிகிறது ..

“பாம்பை பற்றி உனக்கு என்னடா தெரியும்.. “

“, அங்கிள் எனக்கு எல்லாமே தெரியும்.. எங்க ஸ்கூல்ல எல்லாமே நடத்துவாங்க..” என்கிறாள்..

” ஓ நீ ஸ்கூலுக்கு போகிறாயா .. “அவனுக்கு எல்லாமுமே ஒப்பீடாக தான் இருக்கிறது..

“என் மகன் இன்னமும் ஸ்கூல் போகலடா..அப்படின்னா நீ சொல்றது உண்மையா தான் இருக்குமோ.. “அவள் பேசுவதை கேட்பதற்காகவே சும்மாவேனும் பேச்சுக் கொடுக்கிறான்..

” ஆமா அங்கிள் நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் .. “என்று தன் கண்களை சுட்டிக் காட்டுகிறாள்.. “அவள் எது செய்தாலும் அவனுக்கு சிரிப்பு வருகிறது ..

அதற்குள் பத்மா குழந்தையை வாங்கிக் கொண்டு, “இவளையும் நாங்க ஸ்கூலுக்கு சேர்த்திருக்க மாட்டோம் அண்ணா..இவள் செய்யும் சேட்டைகளை சமாளிக்க முடியாமல் தான் அனுப்பி விட ஆரம்பித்தோம். ஆனாலும் அழாமல் சமர்த்துக் குட்டியாய் போகிறாள்.. இவளுக்கு தனியாய் இருப்பது தான் பிடிக்காது ..கூட்டமாக இருந்தால் ரொம்ப பிடிக்கும்.. அதனால் ஸ்கூலில் ஏகப்பட்ட பிரெண்ட்ஸ்..” என்கிறாள்..

கலகலவென ஒரு குழந்தை இருந்தால் அந்த இடமே எப்படி இலகுவாக மாறுகிறது என்று எண்ணிக் கொள்கிறான்.. பத்மா தான் இவ்வளவு நேரம் தன்னிடம் பேசாமல் இருந்தாள்.. அவளும் பேச ஆரம்பிக்கவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகிறது ..

ஆதித்யா சொன்னாலும் அவர் மனைவிக்கு இந்த பிளாட் பிடித்து இருக்கிறதோ என்னவோ என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு பத்மா தானாகவே பேசவும் தான் மனம் நிம்மதியாகிறது ..

பூங்குழலி எதையோ பார்த்து பாம்பு என்று சொல்கிறாள் என்று சமாதானம் செய்கிறான்..

“இல்லம்மா எல்லாரும் நடந்து போகும் இடம் தானே ..இங்கு அதெல்லாம் இருக்காது .. “சொல்லிய படியே காடு இருக்கும் இடத்தில் காலை வைக்கிறான்..

“இல்ல நான் பார்த்தேன்..இதோ ஓடுது பாருங்க .. “என்று கத்துகிறாள்.. அவன் காலடியில் சீறிக் கொண்டு வெளி வருகிறது நல்ல பாம்பு ஒன்று..

அலட்சியமாய் நடந்து சென்றிருந்தால் கண்டிப்பாக அரவிந்தை போட்டுத் தள்ளி இருக்கும் ..குழந்தை தெய்வ வாக்கு மாதிரி சொல்லவுமே சுதாரித்து பின் வாங்கி விடுகிறான்.  அங்கு இருந்தவர்கள் கத்தவுமே அந்த பாம்பு திரும்பவும்  புதருக்குள் போய் ஒளிந்து கொள்கிறது.. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள் எல்லாரும் புகார் கூறுகிறார்கள்..

” இப்படி இந்த இடத்தை வைத்திருக்கிறீர்களே.. நீங்கள் எப்படி இங்கே உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள்.. உங்களுக்கு பயமாக இல்லையா.. இவ்வளவு அலட்சியமாக இருந்தால் சரி வருமா. நாளைக்கே இந்த காடுகளை அழித்து சரி செய்யும் வழியை பாருங்கள் .. இல்லா விட்டால் அதற்கும் புகார் கொடுப்போம் . “என்று மிரட்டுகிறார்கள்..

அவர்கள் மிரட்டலுக்காக இல்லா விட்டாலும் பாம்புக்கு பயந்து கொண்டு நாங்கள் சரி செய்து விடுகிறோம் என்று வாக்கு கொடுக்கிறார்கள் ..ஒரு வழியாய் பூங்குழலியால் அந்த இடத்திற்கு  சாப விமோசனம் கிடைக்கிறது..

வழக்கம் போல இங்கு நடந்தது அனைத்தையும் மித்ராவிடம் கூறுகிறான்.. அவளும் வழக்கம் போல அவன் பேசுவதை மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் மகனுடன் விளையாடிய படியே மேம்போக்காய் கேட்கிறாள்..

அவன் வேண்டுமென்றே  கொஞ்சம் உசுப்பேத்தி விடுகிறான் .. “என்ன இருந்தாலும் இந்த பயலுடன் பிறந்த பெண் தான் பூங்குழலி.. என்ன ஒரு புத்திசாலித் தனமா இருக்கு.. எப்படி பேசுது, அது பேசியதைக் கேட்டால் நீயே அதோட பேச்சில் மயங்கி விடுவ தெரியுமா..”

” க்கும் இவ்வளவு நாளா அந்த ஆதித்யா  பெருமை மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தீங்க.. இப்பொழுது அவங்க குடும்பத்தையும் பார்த்து விட்டீர்களா.. இனிமேல் என் காது பழுத்து விடும். நீங்கள் பேசும் பேச்சை கேட்டு கேட்டு. என் பிள்ளையை விடவா ,அந்த பூங்குழலி பேசுகிறாள்.. “

அவனும் அவளைப் போலவே முக்கிக் காட்டுகிறான் .. “க்கும்,உன் பிள்ளை எங்கே பேசுகிறான் ..உன்கிட்ட மட்டும்தான் பேசறான் ..அந்த குட்டி எல்லாரிடமும் பேசுது தெரியுமா .அதுவும் இல்லாம சுற்றி நடப்பவைகள் எல்லாவற்றையும் கருத்தில் ஏற்றிக் கொண்டு கூர்ந்து கவனிக்குது..
யாருக்குமே அந்த பாம்பு கண்ணுக்கு தெரியல ..அந்த பிள்ளை என்னை எச்சரிக்காம இருந்து இருந்தால் இந்நேரம் பாம்பு என்னை போட்டு தள்ளியிருக்கும் தெரியுமா .. அடுத்து பரலோகம் தான்..”

” க்கும் ,இதே இடத்துல அமிர்தன் இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பான். “

அவனுக்கு சிரிப்பு வந்து விடுகிறது .. “அது ஏன்டி அதுவும் உன் பிள்ளை மாதிரி என்று நினைத்துக் கொள்ளேன்… அது ஏன் போட்டி போடுற ..அவன் போட்டி போட்டா லாவது சரி எனலாம்.. நீ போய் உன் வயசுக்கு நாலு வயசு பிள்ளை கிட்ட போட்டி போடுறீயே..”

“போங்க என்னைக்காவது ஒரு நாளாவது நம்ம பிள்ளையை பற்றி உயர்வா சொல்லி இருக்கீங்களா ..யாரோ  ஒருத்தர் பிள்ளைளை போய் பத்தி ஆஹா ஓஹோ என்கிறீர்கள்..அவனுக்கு இதெல்லாம் தெரியாது.. அதனால அவன் சார்பா நான் கோபித்துக் கொள்கிறேன்..”

” சரி சரி  நான் பேசியதை காதில் வாங்காமல் அலட்சியப் படுத்துகிறாயே என்று தான் வேண்டுமென்றே எல்லாவற்றையும் சொன்னேன் .. “

“அப்படி என்றால் பாம்பு விஷயமும் பொய்யாங்க. ” என நிம்மதியாகிறாள்..

” இல்லை அது நிஜம் தான். அந்த பிள்ளை சொல்லா விட்டால் நான் பாம்பின் தலையிலேயே காலை வைத்திருப்பேன் ..நல்ல வேளை பூங்குழலி அம்மா தான் என்னை காப்பாற்றினார்.. “

அதற்கு மேல் பூங்குழலி பெருமையை கேட்க மித்ரா தயாராய் இல்லை.. “ஏங்க உங்களுக்கு  ஆதித்யா அண்ணாவிடம் போன் பேசுவதற்கு நேரமாக வில்லையா.. போங்க போங்க சீக்கிரமா போய்  பேசுங்க..”

” ஆமாம் டி நல்ல வேளை நினைப்பு காட்டினாய் ..இதோ போகிறேன்..” என்று போகிறான்..

இவன் செண்டிமெண்டாக பிள்ளையின் பிறந்தநாளின் போது பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினாலும் அதில் நிறைய பாதகங்கள் தான் இருந்தது ..முதல் விஷயம் பிறந்த நாளை இரண்டு பிள்ளைகளும் கொண்டாட வேண்டும் ..அதனால் பிறந்தநாள் முடிந்து மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டார்கள் ..அதன் படியே செய்தும் முடித்தாயிற்று..

இது எல்லாம் நடந்து முடிந்தது பிள்ளைகளின் நான்காவது வயதில்..அமிர்தனின் பிறந்தநாள் முடிந்து இரண்டு நாள் கழித்து அதாவது பத்திரம் பதிவு செய்து மறுநாள் அவனைக் கண்டதும் வேகமாக ஓடி வருகிறாள் மித்ரா ..

“என்னடி ஆச்சு ஏன் உன் முக வாட்டமாக இருக்கிறது .. “

“ஒன்றும் இல்லைங்க.உங்ககிட்ட இதை சொல்வதற்கு கூட பயமாக இருக்கிறது ..” சொல்லும் போதே அவளுக்கு கண்கள் கலங்குகின்றன…

“என்ன விஷயம் என்று சொல்லு ..நான் என்ன அவ்வளவு பெரிய கொடுங்கோலனா.. என்னை பார்த்தால் பயப்படுகிறாய்.. “

” எனக்கு பிரசவம் சமயம் துணையாய் இருந்தாளே புவனா..”

” ஆமா அவளுக்கு என்ன .. “அவன் முகம் கடுகடுக்கிறது ..

“பார்த்தீங்களா அவள் இல்லை என்றாலுமே உங்களுக்கு இப்படித்தான் இருக்கிறது.. “

” என்னடி சொல்கிறாய் ..எங்கடி போனா அவ .. “

” அவ இந்த உலகத்தை விட்டே போயிட்டாங்க .. “சொல்லி விட்டு அழுகிறாள்.. “

” என்ன உலறுற அவளுக்கு என்ன சாகற வயசா ..உன்னை விட வயதில் சின்ன பெண்தானே.. “

அவ அம்மாதான் போன் செய்தாங்க.. ஹாஸ்பிடல் போய்க் கொண்டிருக்கும் போது லாரி மோதி செத்துப் போயிட்டாளாம்.. “

” என்னடி இப்படி சொல்ற.. பாவம் வாழற வயசு இப்படி ஆயிட்டே..” உன் பிரசவ சமயம் எவ்வளவு துணையாக இருந்தா தெரியுமா .. “

“ஆமாங்க என்னுடைய உயிரே அவ தான். இப்போ என் உயிரில் பாதி போயிட்டு..நானும் அவளும் சின்ன வயதிலிருந்து எவ்வளவு ஃப்ரெண்ட்லியா விளையாடுவோம் தெரியுமா..” என்று அழுகிறாள்..

” சரிடி எப்ப இறந்தாளாம்.. “

“முந்தா நாள் அமிர்தனின் பிறந்தநாள் என்று நம்ம இங்க கேக் வெட்டிக் கொண்டு இருந்திருக்கிறோம் .. அங்கே அவள் லாரி மோதி இறந்து போயிருக்கிறாள் ..அவளுக்கு நம் மகனின் பிறந்த நாள் தெரியும்.. இறந்த அன்று காலையில் கூட அவள் அம்மாவிடம், ” அம்மா இன்று மித்ராவின் பிள்ளை பிறந்தநாள் ..நான் போன் செய்து வாழ்த்துக்கள் சொல்லி விடுகிறேன் .. “என்று விட்டு தான் வேலைக்கு புறப்பட்டாளாம்.. திரும்பி வரும் போது ஆளே இல்லாமல் போய் விட்டாள். அதை நினைவில் வைத்துக் கொண்டு பிள்ளையின் பிறந்த நாளின் போது இறந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று அவள் அம்மா விட்டு விட்டாராம்.. அப்படியும் மனம் தாங்காமல் இதோ இப்பொழுது தான் போன் செய்து சொன்னார் .. “

“பாவம் அந்த பொண்ணு  இல்லாம போய் விட்டது. நம்ம ரெண்டு பேரும் போய் அவங்க வீட்ல விசாரிச்சுட்டு வருவோம் .. ” என்று புறப்பட்டு விசாரித்து விட்டு வருகிறார்கள் .அதன் பிறகும் மித்ராவுக்கு மனமே சரியில்லாமல் தான் இருந்தது. புவனாவை தன் மனதில் இருந்து மறப்பதற்கு அவளுக்கு நீண்ட காலம் ஆகிறது ..

அரவிந்துக்கு புவனாவின் தாக்கம் அதிகம் இல்லை .. பாவம் பட்டானே தவிர அதோடு மறந்து விடுகிறான்..இன்னும் சொல்லப் போனால் , ‘இனி மித்ரா அடிக்கடி அவளுக்கு போன் செய்து பேச மாட்டாள்..மித்ரா தான் பாவம் அவளுக்கு போர் அடிக்கும் .. ,என்ற எண்ணம் தான்..

அதனால் பத்திரம் பதிவு செய்ததில் இருந்து தினமுமே அரவிந்தும் ஆதித்யாவும் போன் பேசிக் கொள்கிறார்கள் ..இடையில் பூங்குழலி இருந்தால் அவளும் அவனிடம் ஆசையாய் பேசுவாள் ..அதனால் அவனுக்கு நேரம் போவதே தெரியாமல் தன் வேலைகளை கவனிக்க தொடங்குகிறான்.

அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி தான் ..இப்பொழுது வாரம் ஒரு முறை அதுவும் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரப் பொழுதில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள் ..அரவிந்த் கூட சொல்கிறான்..

” அண்ணா நீங்க ஒரு நாள் பாப்பாவை, தங்கையை அழைத்துக் கொண்டு எங்க வீட்டுக்கு வாங்களேன்.. அமிர்தன் உங்களை எல்லாம் பார்த்தால் ஆசைப்படுவான்..”

யாரு அமிர்தனா, க்கும்..

தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page