– 19
” எனக்கும் வர வேண்டும் என்று ஆசைதான்.. இந்த பத்திரத்திற்காகவே இரண்டு நாட்கள் நான் லீவு போட்டு விட்டு வரும் படியாக ஆகி விட்டது ..ஒரே ஊர் என்றால் பரவாயில்லை. ஊர் பயணம் கிளம்புவது என்றால் சும்மாவா இருக்கிறது. ஏதாவது விசேஷம் என்றால் சொல்லுங்களேன். உடனே வருகிறேன்.. இல்லா விட்டால் நீங்கள் வர முடியுமா தம்பி ..எங்கே நீங்களும் என்னை மாதிரி தான் ஆபிசில் வேலை செய்கிறீர்கள்.. தேவையில்லாமல் லீவு போட முடியாது கண்டிப்பாய் நம்ம ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளலாம் கவலைப்படாதீர்கள்.. ” என்கிறான் ஆதித்யா..
“அண்ணா அப்படி என்றால் எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. இரண்டு பிள்ளைகளின் பிறந்த நாளையும் நாம் ஏதாவது ஹோட்டலில் ஏற்பாடு செய்து அங்கே வைத்து கொண்டாடுவோமா..”
“அட இதுவும் நல்லா யோசனை தான்.. ஐந்தாவது பிறந்த நாளை கோலாகலமாய் கொண்டாடுவோம் .. என்ன இன்னமும் நான் உங்கள் மகனையும் தங்கையையும் தான் பார்க்கவில்லை.. ஏனோ இன்னமும் அறிமுகம் ஆகாமலேயே இருக்கிறது.. ” என்கிறான் ஆதித்யா ..
” பிறந்த நாள் அன்று பார்க்க வேண்டும் என்று தான் இப்படி நான் காட்டாமல் வைத்திருக்கிறேனோ என்னவோ .. “
என்று அரவிந்த் சிரிக்கிறான்.
நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது.. இதோ பிறந்த நாளும் வந்து விடுகிறது.. இரண்டு மாதங்களுக்கு முன்பேயே மித்ராவிடம் , “ஆதித்யா அண்ணா பூங்குழலி,அமிர்தனின் பிறந்த நாளை ஏதாவது ஹோட்டலில் வைத்து ஒன்றாக கொண்டாடுவோமா என்று கேட்கிறார்கள்.. நாம் அப்படியே செய்வோமா சரி என சொல்லவா. “
உடனே மித்ராவுக்கு முகம் சுண்டிப் போகிறது .. ” ஏங்க அந்த ஆதித்யா என்னுடைய கூட பிறந்த அண்ணனா இல்லை, அந்த பெண் தான் உங்களுக்கு கூட பிறந்த தங்கையா ..இல்லை அந்த ஆதித்யா அண்ணா உங்களுக்கு உறவுக்காரரா ..எதுவுமே இல்லை.. ஒரு இடத்தை விட்றீர்கள். பத்திரத்தை பதிவு செய்வதற்கு எல்லாரும் வந்தார்கள்..பார்த்தீர்கள் ,பேசினீர்கள், சரி என அதோடு முடித்து விட வேண்டியது தானே. அதற்கு மேல் நீங்கள் இரண்டு பேரும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. “
“நான் இடையில் எதுவும் சொல்லவில்லை.. இப்பொழுது என்னமோ புதிதாக உறவு முறை கொண்டாடி ஒன்று சேர்ப்பதற்காக செய்வது மாதிரி இருக்கிறது நீங்கள் செய்வது. அவரவர் இடத்தில கொண்டாடி கொண்டு போனால் என்ன.. நீங்கள் இப்படி பேசுகிறீர்களே ..எனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை..நான் சம்மதிக்கவும் மாட்டேன்..”
‘ இப்பொழுதே பேச ஆரம்பித்தால் சண்டையில் தான் முடியும் .. இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது.. அதற்குள் இவளை எப்படியாவது சரி கட்டி விடுவோம் .., என்று அமைதி காக்கிறான் அரவிந்த்..
இவனுக்கு தான் சரியாய் மாட்டிக் கொண்டதாக தோன்றுகிறது.. ‘இவளிடம் கேட்காமல் தானாகவே திட்டம் போட்டது சரியில்லையோ.. சொன்னது மே அவரும் சரி என ஒத்துக் கொண்டார். இப்போது நானே போய் என் மனைவி ஒத்துக் கொள்ளவில்லை .இந்த திட்டத்தை நிறுத்தி விடுவோம் என்று எப்படி சொல்வது… பார்ப்போம் எப்படியாவது அவள் மனதை மாற்றி விட வேண்டியதுதான்..,
அப்படியே முப்பது நாட்களும் முடிகிறது.. இன்னும் இருப்பது ஒரு மாதம் தான்.. என்ன செய்வது என்றே தெரியவில்லை..அரவிந்துக்கு இது பெரிய கெளரவப் பிரச்சினையாக எண்ணத் தோன்றுகிறது.. நானாகவே பேசி விட்டு நானாகவே எப்படி நிறுத்துவது என்று.. மறுபடியும் அவளிடம் இந்த பேச்சை எடுக்கிறான்..
“ஏங்க நீங்க இதை மறந்து போயிட்டீங்க. அதோட விட்டு விட்டீர்கள் என்று நினைத்தேன். திரும்பவும் வந்து இதை பற்றியே பேசுறீங்களே ..எனக்கு தான் இதில் இஷ்டம் இல்லை என்று சொல்கிறேனே ..பிறகு விட்டு என்ன விட்டு விடுங்களேன்.. “
“எனக்கு என் பிள்ளை பிறந்த நாளை நம் வீட்டில் வைத்துக் கொண்டாடினால் தான் பிடிக்கும். ஏன் நமக்கு என்ன வீடா இல்லை ..வீட்டை விட்டு விட்டு ஹோட்டலுக்கு போய் கொண்டாடுவதற்கு..அவங்க வேணா ஹோட்டலில் கொண்டாடிக் கொள்ளட்டும்.. அப்படி இல்லையா, அந்த பிள்ளையையும் அழைத்துக் கொண்டு நம் வீட்டில் வந்து அந்த பிள்ளைக்கும் இன்னொரு கேக் வாங்கி வெட்டி கொண்டாடுவோம் .. இதுவுமே உங்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்று தான் சொல்கிறேன். “
இது கூட அவனுக்கு நல்ல யோசனையாக தான் இருக்கிறது.. ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என பயம் வருகிறது..
அவன் மனம் நிம்மதியாக இருந்தால் படித்ததுமே தூங்கி விடுவான்.. இப்பொழுது பிறந்தநாள் பிரச்சனை வரவுமே இரண்டு மூன்று நாட்களாக அதே யோசனையில் தூக்கமும் வரவில்லை. வழக்கமான மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.இரவு தூக்கம் வராமல் குருட்டு யோசனையில் இருக்கவும், ஏனோ திடீரென ஆறு மாதங்களுக்கு முன்பு நவீனும் இவனும் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது..
அவசரமாய் வேலை பார்த்து விட்டு நிமிர்ந்து பார்க்கவும் எதிரே நவீன் முறைத்த படியே நிற்கிறான் ..
“என்னடா நவீனு ஆளையே பார்க்க முடியவில்லை .வேலை பிசியாக இருக்கிறதா .. “
“அதை நான் கேட்க வேண்டும்டி.. வந்து புலம்பு புலம்பு என்ற புலம்பி விட்டுப் போனாய் ..உன்னை நினைத்து நினைத்தே கவலைப்பட்டு எனக்கு உடம்பு இளைத்து போனதுதான் மிச்சம்.. “
“நீ என்னடா என்றால் இப்பொழுது ஆளே பார்ப்பதற்கு அழகாய் கொஞ்சம் எடை போட்டு மினுமினுப்பாகி விட்ட .. கஷ்டப்பட்ட போது மட்டும் என்னிடம் வந்து புலம்புனலடா நாயே.. நல்லா இருக்கும் போது என்கிட்ட வந்து சொன்னா நான் சந்தோஷமாக மாட்டேன்.. நாயே உனக்கு ஏன்டா இவ்வளவு கெட்ட எண்ணம்..என்னை இப்படி ஆக்கி விட்டியேடா..” என்றதுமே அரவிந்த் விழுந்து விழுந்து சிரிக்கிறான்..
” இப்பொழுது எதுக்கடா நாயே சிரிக்கிற.. நான் திட்டினது உனக்கு கொஞ்சம் கூட உறைக்கலையா.. சூடு சொரணை கெட்டவனே .. “
நண்பன் அவ்வளவு திட்டியும் அரவிந்த் கூலாக பேசுகிறான்..”டேய் இங்க வா.. இங்க வந்து உட்காரு.. இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற.. முதல்ல உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு..” என்றதுமே அடப்பாவி என்று அவனை நிமிர்ந்து பார்க்கிறான் நவீன்..
“டேய் நவீன் நம்ம ஆளு வச்சி விசாரிச்சாச்சு ..அவ மேல எந்த தவறும் இல்லை .அதனாலதான் நான் நிம்மதியா இருக்கேன் .. “
“போடா டேய் நீ இப்படிதான்டா சொல்லுவ.. திரும்பவும் அவன் என்ன மாதிரி மல்லாக்க படுக்கல ,என்ன மாதிரி தலைமுடி இல்ல ,என்ன மாதிரியே சிரிக்க மாட்டேன் என்கிறான்.. என்ன மாதிரியே சாப்பிட மாட்டேன் என்கிறான் என்று எல்லாவற்றிற்கும் ஆரம்பித்து விடுவ.. உனக்கு என்ன சொன்னாலும் தன்னறிவு இருக்காது.. “
” இல்லடா இனிமேல் நான் அப்படி செய்ய மாட்டேன் ..அதை எல்லாம் கடந்து வந்து விட்டேன்.. எனக்கு என்று ஒரு பக்குவம் வந்து விட்டது .. “
“எப்படிடா கடந்து வந்த .. “
“அது ஒன்னும் இல்லடா. எனக்கு உன்னை விட ஒரு நல்ல தோழன் ஒரு நல்ல அண்ணன் கிடைத்து விட்டார் தெரியுமா அரவிந்த வாயை கொடுத்து மாட்டிக் கொள்கிறான்..
உன்னை விட என்றதுமே நவீனுக்கு அத்தனை கோபம் வருகிறது.. “ஓகோ புதுசா ஒரு தொடுப்பு கிடைத்ததும் என்னை மறந்துட்ட பார்த்தியா ..அதனால தான் பழசை மறந்துட்டு என்ன ஒதுக்கி விட்டுட்டு போயிட்டியா..”
” என்னடா இப்படி பேசுற. யாராவது இப்படி கேட்டா நம்மள பத்தி என்ன நினைச்சுப்பாங்க . “அவன் வாயை இறுக பொத்தி விடுகிறான் அரவிந்த்..
” யாரு வேணா என்ன வேணா நினைச்சுகிட்டு போகட்டும்..என்னை மறந்துட்டு வேற ஆளு கூட பழகற… சரி என்னை ஆளை விடு.. நான் எந்திரிச்சு போகிறேன்..” என்றதும் அட வாடா என்று இழுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொள்கிறான் .இப்பொழுதுதான் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த அலுவலக நண்பர்கள் இருவர அவர்களை பார்த்து கிண்டலாய் சிரித்த படியே போகிறார்கள்..
” நீ எனக்கு தம்பி மாதிரி என்றால் ஆதிதியா எனக்கு அண்ணன் மாதிரி.. ஒரு குடும்பத்துல அண்ணன் தம்பி என்று இரண்டு பேரும் கிடைக்கக் கூடாதா என்ன..
“யாருடா இந்த ஆதித்யா.. நான் இதுவரைக்கும் கேள்விப்படாத பெயரா இருக்கு.. ஹூம் என்னன்னவோ புதுசு புதுசா சொல்ற.. நான்தான் பைத்தியம் மதியம் வீட்ல என்ன குழம்பு வச்சாங்க.. என்ன சாப்பிட்டேன் என்பது வரை உன்னிடம் அப்டேட் சொல்றேன்.. நீ உன் விஷயங்கள் எல்லாத்தையுமே என்கிட்ட மறைத்து வைத்திருக்க பார்த்தியா ..போடா நீ என்னதான் என்னை சமாதானம் செய்தாலும் எனக்கு மனசு ஆறவே ஆறாது.. நான் கோபமா தான் போறேன்..”
“டேய் நவீன் நான் சொல்றதை கேளு.. பிறகு உனக்குமே அந்த ஆதி அண்ணன் மீது ஆசை வந்து விடும் . “
“முதல்ல நீ சொல்லு அப்புறம் எனக்கு ஆசை வருதான்னு நான் பார்க்கிறேன்..” இன்னமும் நவீனுக்கு கோபம் தான்.. அவன் வரிசையாக சொல்ல ஆரம்பிக்கிறான்..நவீன் அடுத்த பிரச்சனையை தொடங்குகிறான்..
“அவ்வளவு தான்டா எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு .. என்னை பிடிக்காமல் போச்சு ..என்னை எல்லாம் மறந்துட்ட.. என்னை விட்டு தூர விலகிப் போயிட்ட ..எனக்கு தெரியாம நீ எப்ப வித்த .எப்ப நீ அந்த ஆதித்யாவை பார்த்த .. எதுவுமே எனக்கு தெரியவில்லை.. திட்டம் போட்டு தான்டா நீ என்கிட்ட மறைத்து வைத்திருக்க. திருட்டு பயலே..”நவீனுக்கு கோபத்தில் முகமே சிவந்து போகிறது ..
” எனக்கு உன்கிட்ட பேசவே நேரம் இல்லடா ..அதனாலதாண்டா சொல்ல முடியல .. “
” நீ சொல்றது உனக்கே நியாயமா தெரியுதா பாரு ..ஒரே ஆபீஸ்ல பக்கத்து பக்கத்துல உக்கார்ந்து வேலை செய்றோம்.. ஆனா என்கிட்ட பேசவே நேரமில்லையாம்.. அதனால சொல்ல முடியலையாம்.. நீ இதுவும் சொல்லுவ. இதற்கு மேலும் சொல்லுவடா.. எப்ப வீட்டுக்கு போவோம் .. எப்ப அந்த ஆளுகிட்ட பேசுவோம் என்றுதான் நீ வீட்டுக்கு ஓடிப் போயிடுறியே .. எனக்காக நீ ஒதுக்கிய நேரமெல்லாம் இப்ப அந்த ஆளுகிட்ட போய்ட்டே.. பரவால்லடா பரவால்ல துரோகி நீ எல்லாம் ஒரு நண்பனா போடா .. “
இவ்வளவு பேசியுமே அரவிந்த் கோபமாக பேசாமல் சிரிக்கிறான்..” உனக்கு ஆதி அண்ணா மேல கோபமா.. இல்ல நான் உன்கிட்ட சொல்லாம இருந்தது கோபமா.. சென்னு சொல்லு அதன் பிறகு நான் உன்கிட்ட பேசுறேன்.”
“அடேய் என்னை விட்டுட்டு இன்னொரு ஆளுகிட்ட போயிட்டியேடா ..அதுதான்டா எனக்கு கோபம்.. “என்று நவீன் தன் நெஞ்சில் வேகமாக அடித்துக் கொள்கிறான்..
பார்ப்பவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவியோ என்பதை போல தான் பார்த்து விட்டு போகிறார்கள்..
அடக்கடவுளே..
தொடரும்.
