இதழ் – 18
ராகவன் அடித்ததில் பொத்தென கீழே விழுந்தவள் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“உன் மனசில் என்னடி நெனச்சிட்டு இருக்க?” எனக் கோவத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான் ராகவன்.
“நான் என்னங்க பண்ணினேன்?” எனக் கேட்டாள் அருவி, தன் கன்னத்தில் கை வைத்தபடி.
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எங்க அம்மா கிட்ட அப்படிப் பேசியிருப்ப? நீ பேசுனதை கேட்டு எங்க அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இனிமே அப்படிப் பேசினா… உன்னை உயிரோட பொதச்சிடுவேன்!”
“இல்லைங்க! நீங்கதான சொல்லியிருக்கீங்க, அத்தை கிட்ட நான் எடுத்து எறிஞ்சி பேசணும்னு… அதனாலதான் அப்படிப் பேசினேன்.”
“பேசணும்னு சொன்னேன், அதுக்காக நீ ஓவரா போறியா? அதுக்காக இவ்ளோ கோவமா நீ பேச வேண்டாம். அவங்க அடிச்சா நீ அடி வாங்கிக்கணும். மத்தபடி நீ எங்க அம்மாவை கஷ்டப்படுத்தவோ காயப்படுத்தவோ கூடாது. புரிஞ்சுதா?!” என அவளை மிரட்டியவன் மீண்டும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.
‘இவர் என்ன? லூசா? எதிர்த்துப் பேசணும்னு சொல்றாரு… எதிர்த்துப் பேசக் கூடாதுன்னும் சொல்றாரு… என்னதான் பண்றது?’ என நொந்தபடி அழுது கொண்டே படுத்து உறங்கினாள் அருவி.
மறுநாள் காலை. சேதுராமனும் சரஸ்வதியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“சொல்லு சரஸ்வதி, நேத்து நைட்டு லேட்டா நான் ஆபீஸ் விட்டு வரும்போது ஏன் டல்லா படுத்திருந்த?”
“இல்லங்க… கொஞ்சம் தலைவலி. அதனாலதான்.”
“நிஜமாவே?! தலைவலியா?”
“ஆமாங்க! வேற என்ன இருக்கப் போகுது? நம்ம மருமக கூட என்னைப் பார்த்து, ‘வாங்கத்தை ஹாஸ்பிடல் போலாம்’னு சொன்னா… நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.”
சேதுராமன் தன் மனைவியை நம்பாமல் பார்த்தான்.
அப்போது அருவியின் கையைப் பிடித்து வேகமாக இழுத்து வந்த ராகவன், தன் தாய் தந்தையைப் பார்த்ததும் மெதுவாக அவளோடு கைகோர்த்து வருவது போல் வந்தான்.
“என்ன ராகவா? இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்டீங்க?” என சரஸ்வதி சகஜமாகக் கேட்டாள்.
“அம்மா, எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதனால நான் சீக்கிரம் போறேன். இவள பரிமாறுனு சொன்னா… ரொம்ப ஓவரா பண்றா. ‘நீங்களே போட்டு சாப்பிடுங்க’ன்னு சொல்றா. நீங்க சொல்லுங்கம்மா… ஒரு புருஷனுக்கு பொண்டாட்டி பக்கத்துல இருந்து பரிமாறினா தானே பிடிக்கும்? வர வர உங்க மருமக என்னை கண்டுக்கிறதே இல்ல!” எனக் கூறிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான் ராகவன்.
‘இவர் எப்ப? என்னை கூப்பிட்டு நான் மாட்டேன்னு சொன்னேன்… இப்படி எல்லாம் மனசாட்சியே இல்லாம பேசுறாரு’ என அருவி மனதில் நினைத்தாள்.
சரஸ்வதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சேதுராமனுக்கு நடப்பது புதிதாக இருந்தது.
“தட்டுல எடுத்து வை… இட்லியை” என்றான் பல்லைக் கடித்தபடி மெதுவாக.
அவள் இட்லியை எடுத்து வைத்தாள். சாப்பிட்டவன் தாய் தந்தை பார்க்கும்போது சிரித்த முகமாக இருந்தாலும், அவளிடம் பல்லைக் கடித்துக் கொண்டே பேசினான்.
“நான் ஆபீஸ் போனதும் 10 நிமிஷத்துல வீட்டு வாசல் ஆட்டோ வந்து நிக்கும். நீ அதுல ஏறிக்கோ. புரியுதா?!”
“சரி” எனத் தலையசைத்தாள் அருவி.
அவன் கூறியது போல் அவன் சென்றதும் பத்து நிமிடம் கழித்து வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது. அருவிக்கு போன் செய்தான் ராகவன்.
எடுத்தவள், “ஹலோ!”
“என்ன செய்ற?”
“இல்லங்க… நேத்து சாதம் மீந்து போச்சு. அதை வடகம் பண்ணிட்டு இருக்கேன்.”
“நீ வடகமும் போட வேண்டாம், வத்தலும் போட வேண்டாம். அப்படியே வச்சுட்டு வெளியில நிக்கிற ஆட்டோல ஏறு.”
“எதுக்குங்க?”
“கேள்வி கேட்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். புரிஞ்சுதா?! அதுக்கப்புறம் உங்க அம்மா அப்பாவோட பொணம் கூட உனக்கு கிடைக்காது!” என்றான் கொடூரமாக.
“இல்லங்க… நான் எதுவும் கேள்வி கேட்க மாட்டேன்” என்றாள் பயந்தபடி.
“அப்புறம் இன்னொரு விஷயம்.”
“சொல்லுங்க” என்றாள் அருவி நடுங்கியபடி.
“என் அப்பா, அம்மாவுக்கு தெரியாம நீ வெளிய வரணும்.”
“அதெப்படிங்க முடியும்?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது” என போனை கட் செய்தான்.
அருவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மெல்ல எட்டிப் பார்த்தாள். சரஸ்வதியும் சேதுராமனும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மெல்ல அவர்கள் கவனிக்காத சமயம் வீட்டை விட்டு வெளியே வந்தவள் வேகமாக ஆட்டோவில் ஏறினாள். அவர்கள் இவளை கவனிக்கவில்லை.
ஆட்டோக்காரன் செல்ல, மறுபடியும் அவளுக்கு அழைப்பு வந்தது.
எடுத்தவள், “ஹலோ! சொல்லுங்க.”
“அடுத்த தெருவில் இறங்கு” என்றான்.
அவன் கூறியது போல் இறங்கி நின்றாள். அவள் அருகில் வந்து காரை நிறுத்தினான் ராகவன். அவள் நிமிர்ந்து பார்க்க, காரில் ஏறு எனக் கண் ஜாடை செய்தான். அவள் வண்டியில் ஏறியதும் வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“என்னங்க! நம்ம எங்க?” என அவள் கேட்கும் முன், அவன் முறைத்துப் பார்த்ததில், அப்படியே வாயை மூடிக் கொண்டாள் அருவி.
அவளை காரில் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினான்.
‘இப்ப எதுக்கு இவரு கோயிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்?’ எனப் புரியாமல் அவள் பார்த்தாள்.
அவன் முன்னால் சென்றான். அவள் வேகமாகப் பின்னால் வந்தாள்.
“என்னங்க?” என்றாள் மெதுவாக.
“என்ன?”
“பூஜை பொருள் வாங்கலையா?”
“நீ பூஜை எல்லாம் ஒண்ணும் பண்ண வேணாம். நீ என்னதான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் இந்த ஜென்மத்தில் உன் தலையெழுத்து மாறப் போறது கிடையாது. புரிஞ்சுதா?” என நெருப்பை அள்ளி வீசியது போல் வார்த்தைகளை வீசிச் சென்றான்.
தலை குனிந்தபடி கண் கலங்கி அவன் பின்னால் கோவிலுக்குள் வந்தாள்.
ஒரு தூணின் அருகில் நின்றவன், “இங்க உட்கார்” என்றான்.
‘எதற்காக?’ என்பது போல் அவள் பார்த்தாள்.
“நான் வந்து கூப்பிடுற வரை நீ இங்கதான் உட்கார்ந்திருக்கணும். புரிஞ்சுதா?! ஒரு சின்ன வேலை இருக்கு. பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்றவன் கூறிச் சென்றான்.
‘சரி, கோவில்ல தானே விட்டுட்டுப் போறார்… வந்துருவாரு’ என நம்பிக்கையுடன் அவளும் அமர்ந்திருந்தாள்.
ஆனால் அவளை விட்டு விட்டு வந்தவன் நேராக ஆபிஸ் சென்று விட்டான். காலை 7:00 மணிக்கு அவளை கோவிலில் விட்டுச் சென்றான்.
காலை 10 மணி ஆனது. அருவிக்கு சரஸ்வதி போன் செய்ய, அவன் கூறியபடி போனை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.
சரஸ்வதி பதற்றத்துடன் ராகவனுக்கு போன் செய்தாள்.
“ஹலோ!”
“ராகவா… அது வந்து…”
“என்னாச்சு அம்மா? ஏன் பதட்டமா பேசுறீங்க?”
“அருவி… காணோம்” என்றாள் திக்கித் திணறி.
“என்னம்மா சொல்றீங்க?”
“இல்ல ராகவா… காலைல நீ போனதுக்கு அப்புறம் ரூம்ல தான் இருந்தா. நாங்களும் விட்டுட்டோம். ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு நான் அவள சாப்பிட கூப்பிடலாம்னு போய் பார்க்கும்போது அருவியே காணோம்.”
“என்னம்மா? சொல்றீங்க…” என அவனும் பதறியபடி கேட்டான்.
“நான் நிஜம்தான் ராகவா சொல்றேன்.”
“உங்க கிட்ட சொல்லாம எங்க போனா?”
“தெரியலயே…” என்றாள் சரஸ்வதி.
“இப்பல்லாம் அவ எதுக்கெடுத்தாலும் கோவப்படுறா அம்மா. என்கிட்ட அன்பாவே இருக்க மாட்டேங்குறா. அவ என்ன சொன்னாலும் நான் பொறுமையா ‘சரி சரி’ன்னு தான் கேட்கறேன்” என நல்லவன் போல நடித்தான்.
“ராகவா சரியாயிடும்… இப்ப காணாம போயிட்டா என்ன பண்றது?”
“நான் தேடுறேன் அவள. நீங்க எதுவும் பீல் பண்ணாதீங்க.”
“ஆமா! அப்பா எங்க இருக்கார்?”
“அவர் அருவிய தேடிப் போயிருக்கார். அருவி கிடைச்சதும் போன் பண்ணு ராகவா” என சரஸ்வதி போனை வைத்தாள்.
ராகவன் சேதுராமனுக்கு போன் செய்தான்.
“அப்பா எங்க இருக்கீங்க?”
“அருவிய தேடுறேன்.”
“அப்பா நீங்க அம்மா கூட இருங்க. நானும் என் பிரண்ட்ஸும் அருவிய தேடிக்கறோம்.”
“அது வந்து நானும்…”
“அப்பா, நீங்க அம்மா கூட இருங்க. ப்ளீஸ் சொன்னா கேளுங்க” என்றான் ராகவன்.
“சரி… நான் வீட்டுக்கே போறேன். நீ நல்லா தேடு. அருவி கிடைச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு வா.”
“சரிங்க அப்பா” என போனை வைத்தவன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன், எப்போதும் போல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.
ஒரு பக்கம் அவனது மனம் யோசித்தது:
‘அருவி மேல அம்மா பாசமா இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா? அதுக்கு வாய்ப்பே கிடையாது ஏன்னா… அவங்க தான் அருவிய பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. இந்த டைம்ல என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுனு என்னை நெனச்சு தான் பீல் பண்ணுவாங்களே தவிர, அவள நினைச்சு அவங்க கவலைப்பட மாட்டாங்க. அதனால அவங்களுக்கு எதுவும் ஆகாது’ என முட்டாள்தனமாக தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் ராகவன்.
மதியம் 2 மணி ஆனது. சரஸ்வதி அவனுக்கு போன் செய்து,
“அருவி கிடைச்சிட்டாளா?” எனக் கேட்டாள்.
“இல்லை… நானும் எல்லா இடத்துலயும் தேடிட்டு இருக்கேன். ஆனா கிடைக்கல” என்றான்.
மாலை 6:00 மணி ஆனது. தந்தைக்கு போன் செய்தான் ராகவன்.
“அப்பா…”
“சொல்லு ராகவா.”
“அருவி வீட்டுக்கு வந்தாளா?” என சோர்வுடன் கேட்டான்.
“இல்லையே…”
“நானும் காலையிலிருந்து தேடிட்டு இருக்கேன். அவ எங்கயும் காணோம்.”
“என் மருமகள சீக்கிரமா பார்த்து கூட்டிட்டு வந்துருப்பா” என அவரது குரலில் கவலை தெரிந்தது.
“சரி அப்பா… நான் கூட்டிட்டு வந்துடறேன்” என்றவன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.
இரவு 9 மணிக்கு அந்தக் கோவிலுக்கு வந்தான் ராகவன். அழுது ஓய்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்க்க, தன் முன்னால் நின்றிருந்த கணவனைப் பார்த்ததும் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
‘காலையில் 7:00 மணிக்கு விட்டுட்டுப் போனவன்… பொண்டாட்டிய தேடி வர நேரத்தைப் பாரு…’ என்று நினைத்தவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த பூசாரி,
“சார், இந்தப் பொண்ணு காலைல இருந்து இங்க தான் உக்காந்துட்டு இருக்கு. என்ன கேட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்குது. இங்க இருக்க எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டு மறுபடியும் இங்க உட்கார்ந்துட்டு இருக்கு. எதுவுமே பேசல சார். உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா?” என ஐயர் கேட்டார்.
“ஆமா! என் வீட்டு வேலைக்காரி. சரி… நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவன் ஐயரிடம் விடைபெற்று நடந்தான்.
பேச்சற்று அவன் பின்னாலேயே வந்தாள் அருவி. இருவரும் காரில் ஏறியதும், விசில் அடித்தபடி ஓட்டிக்கொண்டு வந்தான்.
“என்னங்க?” என்றாள் மெதுவாக.
“என்ன?”
“என்னை எதுக்காக கோவில்ல…”
சட்டென வண்டியை நிறுத்தியவன், “பளார்” என அவள் கன்னத்தில் அறைந்தான்.
“உன்னை நான் கேள்வி கேட்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். புரிஞ்சுதா? அமைதியா வீட்டுக்குள்ள போகணும். யார்கிட்டயும் எதுவும் பேசக் கூடாது” என்றவன், வீட்டிற்கு வந்ததும் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் ராகவன். அவன் பின்னால் அருவியும் இறங்கினாள்.
அருவியைப் பார்த்ததும் சரஸ்வதி அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, “அருவி… நீ எங்க போன? உன்ன காணாம நான் தவிச்சு போயிட்டேன் தெரியுமா?!” என்றாள்.
அவன் கூறியது போல் அவர் கையை எடுத்து விலக்கியவள் வேக வேகமாக தன் அறைக்குச் சென்று கதறி அழுதாள் அருவி.
♥️ பாவம் அருவி… இவன் ஏன் இப்படிப் பண்றானோ? நாளைக்காவது திருந்துவானா… தெரியலயே… அப்போ அடுத்த எபிசோட மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
