அலை கடல் பெண்ணவள்

அலை 7

 

கிரேக்க சிற்பம் ஒன்று திரட்சியான சிவந்த நிறத்தில் ஆண்மை பொங்கி வழிய, கம்பீரமான நெடிய பரந்து விரிந்த திண்மையான தோள்களுடனும், உறுதியான நடையுடன் நின்ற அழகனைக் கண்டதும் ‘இவன் சிற்பமா? அழகனா? என்ன ஒரு தேஜஸ்!’ என்று நினைத்து அவனைக் கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தாள். பார்த்து வாயைப் பிளந்த அம்பைக்கே வெட்கம் தாளாமல் போனது, 

‘ஐய்யோ! சிவசிவா… ஒரு நிமிடம் மெய்மறந்து விட்டேனே’ என்று தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.

பக்தியில் நனைந்திருந்த அம்பையின் தோற்றம் அமைதியாக எரியும் ஒரு தீபம்போல இருந்தது. அவள் நெற்றியில் திருநீறும் செந்தூரமும் தெளிவாகத் திகழ்ந்தன. கண்களில் கருணையும் உறுதியும் கலந்து ஒளி வீசின. கதம்ப நீலமும் அடர் ரோஜா வண்ணமும் கலந்த, ருத்ராட்ச முத்திரையிட்ட பட்டு நடனச் சேலை அணிந்து, கைகளில் முத்துக்களும் பொன்னும் வளைகள் கலகலத்தன; காலில் சிலம்புகள் இசைத்தன. கூந்தலில் இருவாட்சி கலந்த மல்லிகைச் சரம் தொங்கியது. அம்பை நடந்து வந்ததே நடனம் போலவே இருந்தது.

உலகம் அம்பையை எப்படிப் பார்த்தாலும், அவள் தன்னை இறைவன் படைப்பு என்று ஏற்று அமைதியையும் பக்தியையும் மட்டுமே அலங்காரமாக அணிந்திருப்பாள்.

அம்பை, வீனஸைப் பார்த்துச் சிவந்த நீளமான விரல்களால் வணக்கத்தைத் தெரிவித்தாள்.

சிங்கனுக்கு அம்பையை சிறுவயதிலிருந்து பார்க்கிறான். ‘அம்பை எளிதாக யாரிடமும் தன் வணக்கத்தைத் தெரிவிக்க மாட்டாளே’ என்ற வினாவுடன் அம்பையை நோக்கினான்.

அம்பையின் கண்களில் பாசம் மட்டுமே இருந்தது. திரும்பி வீனஸைப் பார்த்தான். வீனஸும் அதே மரியாதையுடன் வணக்கத்தைத் தெரிவித்திருந்தான்.

அம்பையிடம் எரா நகர்ந்து தன் தலையைக் கொண்டு முட்டிவிட்டு அவள் கூந்தலில் சூட்டி இருந்த மலர்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டே, அவள் அணிந்திருந்த வளையல்களில் தலையை முட்டிக்கொண்டு அதன் சப்தத்தை காதை விடைத்துக் கொண்டு கேட்டு ரசித்தது.

எராவிற்கு இது மிகவும் புதியது. இந்தப் பூக்களின் வாசமும் வளைவிகளின் கலகல சப்தமும் ஆனந்தமாக இருந்தன.

அம்பை எராவிடம் மதிமயங்கி, “ஆஹா! யார் நீங்கள்? என்ன பெயர்? என்ன வேண்டும்? என்ன அழகு நீங்க! என்னை உங்களுக்குப் பிடித்து இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே எராவை தடவினாள்.

உடனே எரா மகிழ்ச்சியால் தன் வாலை ஆட்டியது அப்போது “ச்ளப் ச்ளப்…” மென்மையான குலுக்கல் சப்தம் கேட்டது. அம்பை எராவை கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

சிங்கன், “அம்பை, பாரேன் உன்னிடம் ஏதோ இருக்கிறது. யவனதேசத்தையும், எராவையும் ஈர்த்துக் கொண்டாயே எப்படி?” என்றான்.

அம்பை எராவிடம், “ஓஓ… உங்கள் பெயர் எராவா… என் பெயர் அம்பை.” என்றாள்.

எரா கண்களைச் சிமிட்டியது. “ஆஹா! எரா, என்னுடன் வருகிறாயா என் தோழி ஒருவள் இருக்கிறாள் அவளுக்கு உன்னை மிகவும் பிடிக்கும்.” என்றாள்.

அடுத்த நொடி எரா உச்ச மகிழ்ச்சியில் தலையை உயர்த்தி, வாலை உற்சாகமாக அசைத்து, காதுகளை நிமிர்த்திச் சுறுசுறுப்பாகக் குதித்தது.

வீனஸுக்குமே இந்த நிகழ்வு புதியதாக இருந்தது.

“என்ன இது, எராவிடம் மாற்றம்? சிறுவயதிலிருந்தே எராவை இத்தனை மகிழ்ச்சியுடன் இதுவரை பார்த்ததே இல்லை. அதுவும் இதுவரை பார்க்காத யாரோ ஒருவருக்காக, என்ன இது விந்தை? யார் அது?” என்று பார்க்க ஆவல் உண்டானது.

அப்போது மூவருக்கும் வேறொரு சப்தம் கேட்டது. அது வேறு யாருமல்ல; சிங்கனின் பக்கத்தில் இருந்த கார்வண்ணன், கோபத்தில் தனது கால்களைத் தரையில் கடுமையாக அடிக்க, “டாப்ப்… டாப்ப்…” என்ற சப்தம் எழுந்தது.

அதைத் பார்த்த அம்பைக்குச் சிரிப்பு வந்தது. எராவை மெதுவாகத் தடவிக்கொண்டு அருகே நகர்ந்து, வலது கையால் சைகை செய்து, “வண்ணா, என்ன கோபமா? இவர்கள் நம் விருந்தாளிகள். நாம்தானே கவனிக்க வேண்டும். இது நமது பண்பாடு இல்லையா?” என்றாள்.

வண்ணன் புரிந்துகொண்டது போலத் தலையசைத்தான். வலது கையில் வண்ணனையும், இடது கையில் எராவையும் அம்பை அணைத்துக் கொண்ட தருணத்தில், அவள் கண்களில் கண்ணீர் மெல்ல வழிந்தது.

மனிதர்களைவிட இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருந்த பாசத்தால் அவளின் மனம் கலங்கிப் போனது.

இதைக் கண்ட மற்ற இரு வீரர்களுக்குமே நெஞ்சு கனத்தது.

அம்பை சிங்கனிடம், “இரவில் அர்த்தமண்டபம் வா, சிங்கா! நீங்களும் வாருங்கள்.” என்று வேண்டினாள்.

வீனஸுக்கு ஏதோ ஒரு பாசம் மனதில் சுரந்தது. பூர்வ ஜென்மத்தின் விட்ட குறையா தொட்ட குறையா அனுமானிக்க முடியாமல் போனது.

அம்பை சிங்கனிடமும், வீனஸிடமும், “மீண்டும் சந்திப்போம்.” என்று விடைபெற்றுச் சென்றாள். பிரிய முடியாமல் எரா, வண்ணனிடமும் விடைபெற்றாள்.

சிங்கனும், வீனஸும் நடந்து கொண்டே வணிகர் வீதியில் நுழைந்தனர். பழந்தமிழகத்தில் வணிகர் வீதிகள் திட்டமிட்டு, ஒழுங்கமைவுடன் அமைக்கப்பட்டிருந்தன.  

பழங்காலத்துத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பாரதநாடு முழுவதும் சென்று வணிகம் செய்தார்கள். உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம்) முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்) அருமணவன் (Rāmañña), தக்கோலம் கிடாரம் (கடாரம்), சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வணிகஞ் செய்தனர்.

வணிகர் கடைவீதிகளில் உள்ள திண்ணைகள் நீல மணிகளால் ஒளிபெற்று விளங்கின. சுவர்கள் பளிங்கின் ஒளியை உமிழ்ந்தன. தூண்களில் இடையிடையே முத்துத் தாமங்கள் நிரல்படத் தொடுக்கப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தன.

கருநிறக் கம்பளம் வேய்ந்த சட்டத்தின்மேல் வரிசை வரிசையாகப் பவள மாலைகளும், முத்து மாலைகளும், பொன் மாலைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன.

வணிகர் வீதிகளின் வீடுகளின் கதவுகள் செம்பொன்னாலும், தாழ்ப்பாள்கள் பித்தளையாலும் செய்யப்பட்டிருந்தன.

நாளங்காடி (பகல் நேரக் கடைவீதி) மற்றும் அல்லங்காடி (இரவு நேரக் கடைவீதி) கடைவீதிகள் எப்பொழுதும் ஆரவாரத்துடன் விளங்கின. கடைகள் தோறும் பாண்டிய கொடிகள் பறந்து பட்டொளி வீசின. 

நால்வகைப் படைகளும் நகரத்தைப் பாதுகாத்தன. இரவிலும் கூடக் கடைகள் பல திறந்திருக்கும். சுருங்கக்கூறின் பகலென்றும் இரவென்றும் பாராமல் கொற்கை மக்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் கடைவீதிகளில் இருப்பார்கள்.

அந்தி மறைந்து கடைசி பாதத்தில் இருந்தது வானவீதி.

கோவில் முன் பிரதான வீதியில் முரசு, பறை, யாழ் ஒலிகள் முழங்கின. உற்சவரை அலங்கரித்த பல்லாக்கைத் தோள்களில் சுமந்து கொண்டு சாமி ஊர்வலம் வந்தது.

பட்டர்கள், வேதப் பாடகர்களுடன் பாடல்கள் பாடிக்கொண்டே, பல்லாக்கு வணிகர் வீதிக்குள் நுழைந்தது. அங்கு வசிக்கும் வணிகர்கள் தங்கள் கடைகளின் முன் மலர்கள், வாசனைத் திரவியம், பழங்கள் வைத்து வரவேற்று வணங்கினார்கள்.

இப்படியே சாமி ஊர்வலம் பொற்கொல்லர், தச்சர் வீதிகள் வழியே சென்று, உழவர் வீதிகளில் உழவர் மக்கள் முற்றிய நெல், தண்ணீர், இலைமாலை வைத்து வணங்கியபின்பு, அடுத்த வீதிக்குத் தொடர்ந்தது.

கலைஞர் மற்றும் கணீகையர் வீதிகளில் இசையும் நடனமும் கொண்டு சாமியை வரவேற்பார்கள். புலவர் வீதியில் தேவாரப் பாடல்களும் புகழ் பாடல்களும் ஒலிக்கும்.

ஒவ்வொரு வீதியும் ஒரு தனி அர்ச்சனை போன்றது. எல்லா வீதிகளும் சுற்றி முடிந்த பின்தான் சாமியை மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு செல்வார்கள். இதன் பொருள், இறைவன் கோவிலில் மட்டும் இல்லை; ஊர் முழுவதும் நிறைந்து இருப்பதாக இந்த மக்களிடம் வழக்கமான நம்பிக்கை இருந்தது.

காணாத பலவற்றைக் கண்டுகளித்து, கேட்டுத் திகைத்து நின்ற வீனஸை தேரடி வீதிக்குச் சிங்கன் அழைத்துச் சென்றான்.

தேரடி வீதியின் மைதானத்தில் வாலிபப் பருவக் குமாரர்கள் ஒரு பகுதியில் மல்யுத்தம் பயின்று, மற்றொரு பகுதியில் சிலம்பம் கற்று வந்தார்கள்.

அவர்களைச் சுற்றி அவ்வப்போது, “ஹோ ஹோ…” என்ற ஆரவார ஒலி எழுப்பி ஊக்குவித்தனர்.

குழந்தைகள் தெப்பக்குளம் அருகே முத்துகளைத் தட்டி, சோலைப் பூக்களைக் களைந்து களிப்புடன் விளையாடினர். அவர்களின் சந்தோஷமான சிரிப்பும், இனிமையான குரல்களில் பாடிக்கொண்டே ஓடிச் சுழலும் ஓசையும் அந்த இடத்தை நிறைத்தன.

சிலர் முத்துக்களைத் தட்டி மேலே காற்றில் வீசி, பறவைகளைப் போலப் பறந்து ஓடினர்; மற்றவர்கள் சோலைப் பூக்களை எடுத்து ஒன்றுக்கொன்று ஓடி விளையாடினர். குழந்தைகளின் இந்தக் களிப்பான செயல்களும், கைகூடிக் காட்டுதல் போன்ற ஏராளமான விளையாட்டுகளும் சேர்ந்து, தேரடி வீதியை மகிழ்ச்சியால் நிரப்பின.

கொற்கை நகரத்தின் அலைபாயும் வாழ்க்கைச் சூழலில், மக்களின் அன்றாட நிகழ்வுகள் இனிய மகிழ்ச்சியுடனும் அமைதியுடனுமே கழிகின்றன.

வீனஸிற்கு ஒன்று மட்டும் புரிந்தது.

‘தமிழகத்தில், அதுவும் இந்தக் கொற்கையில், எடுக்க எடுக்கத் தீராத தங்கம் போல் அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு வகையான உண்மை. இதைத் தெரிந்து கொள்ளாமலும் அனுபவிக்காமலும் இருந்திருந்தால் என் பிறப்பே பயனற்றதாகியிருக்கும். இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்ததை சிங்கன் கலைத்தான்.

“நண்பா, எனக்கு ஒரு ஐயம். தங்களது நாட்டிலும் இவ்விளையாட்டுகள் உள்ளனவா? இப்போது இங்கே நடப்பதைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்; பின்னர் ஓய்வு எடுக்கும்போது உங்கள் நாட்டைப் பற்றிக் கூறுங்கள்,” என்றான் சிங்கன்.

வீனஸின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டே வந்தான் சிங்கன். தெப்பக்குளத்தைச் சுற்றி மண் அகல் விளக்குகள் மெல்லிய காற்றில் துளிர்த்து எரிந்தன. அவற்றின் சுடர்கள் நீர்மேல் பிரதிபலிக்க, குளம் முழுவதும் நட்சத்திரங்கள் இறங்கி வந்து தங்கியதுபோல் தோன்றியது.

படிக்கட்டுகளின் ஓரங்களில் ஒளி வட்டங்கள் மலர, இருள் பின்வாங்கியதுபோல் அமைதியான பிரகாசம் பரவியது. நீரில் அசைந்த அலைகள் அந்த ஒளியை உடைத்தும் இணைத்தும் விளையாட, பொற்கொடி போல் மின்னும் அலங்காரத் விளக்கைதோற்றம் கண் முன்னே விரிந்தது.

விளக்கேற்றிய இளம்பெண்களின் முகங்களில் விளக்குச் சுடரின் ஒளி விழ, கொள்ளை அழகுடன் அவர்கள் முகங்கள் மின்னின. மறுபுறம் இளமான்கள் கூட்டம் மறைவிலிருந்து இதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. பெண்கள் ஒருவருக்கொருவர் காதில் மெதுவாக ரகசியம் பேசிக்கொண்டே சிவன் கோவிலுக்குள் சென்றனர்.

வீனஸ் இதைக் கண்டு ரசித்துச் சிரித்தபடி சிங்கனிடம், “சிங்கா, எங்கள் நாடுகளில் இத்தகைய பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லை. குடும்பங்கள் ஒன்றாக இருப்பது என்ற எண்ணமே அங்கே இல்லை.

பரிவும் பாசமும் மதிக்கப்படுவதில்லை. பிடித்தால் சேர்ந்து வாழ்வது; பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போவது, அப்படித்தான் என் வாழ்க்கையும் அமைந்தது.

எனக்கு நண்பனாகவும் தமையனாகவும் இருக்கும் ஒரே உறவு எரா மட்டுமே. பெற்றவர்களையும் நான் சிறிய வயதிலேயே இழந்துவிட்டேன்.”

“யவனநாட்டின் மிகச் சிறந்த தளபதி அலக்ஷோ கரோல்லின் தங்கை மகன் நான். என் மாமா எனக்குப் பல போர்க்களங்களையும் போர்பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார். சிறிய வயதிலிருந்தே போர்பயிற்சியே என் பொழுதுபோக்கு; என் தனிமையைப் பகிர்ந்தவன் எரா ஒருவனே.

பெண்கள் யார் என்றே அறியாதவனாக, வெறுப்பும் கோபமும் சுமந்தவனாகத் தான் தமிழகம் வந்தேன். ஆனால் இந்நாட்களும், இனி இங்குக் கழிக்கப்போகும் நாட்களுமே என் வாழ்நாளின் உண்மையான வாழ்வு!” என்றான் ஒரே மூச்சாக.

சிங்கனுக்கு வீனஸ் மீது பாசமும் பரிதாபமும் ஒருசேர எழுந்தது. இப்படிப்பட்ட வீரனுக்கு இப்படியொரு வாழ்க்கையா என்று மனம் நெகிழ்ந்தவன்,

“இதோ, இந்தக் கொற்கையில் உங்களுக்குத் தம்பிகளும், தங்கைகளும், தாயும் இருக்கிறோம். அதற்கும் மேலாக, உங்களுக்கு எல்லாமாக நண்பனாக நான் இருக்கிறேன்,” என்று கூறி வீனஸை அன்புடன் அணைத்துக் கொண்டான்.

வீனஸுக்கு மாலுமி சொன்னது நினைவுக்கு வந்தது. “கொற்கை உனக்குக் கொடுக்கும் என்பது இதுவே தான்” என்று அவன் ஆணித்தரமாக நம்பினான். தேர்வீதியிலிருந்து கோவில்வீதிக்கு நண்பர்களாக நடந்து சென்றார்கள்.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
977 113 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page