அத்தியாயம் 23

“நதியா.. உன் அம்மாவுக்காக இங்க கீழே அந்த ரூமை அரேஞ்ச் பண்ண சொல்லியிருந்தேன். அவங்களை அங்க தங்க வச்சுக்கலாம். ஈவ்னிங் ஒரு நர்ஸ் வருவாங்க, அம்மாவுக்கு பக்கத்திலேயே இருந்து அவங்களை பார்த்துப்பாங்க, மெடிசின்ஸ் தந்து அவங்களை கேர்டேக் பண்ணிப்பாங்க” மிதுன் பேசியதில் விஷ்ணுவும் நதியாவும் ஆச்சரியத்தில் திகைத்துப் போயிருக்க, 

“நதியா.. எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு, நான் ஆபீஸுக்குக் கிளம்புறேன்” என்றவன்

விஷ்ணுவிடம் திரும்பி, “விச்சு.. ஆபீஸ் வர்றியா? இப்படியே நின்னு வேடிக்கை பார்க்கப் போறியா?” என்று அதட்டிவிட்டுச் செல்ல, “அய்யோ.. என்னை விட்டுட்டுப் போயிடுவார். நான் கார் எடுத்துட்டும் வரல” நதியாவைப் பார்த்து சொன்ன விஷ்ணு, மிதுனுக்குப் பின்னே ஓடினான்.

“அம்மா.. வாங்க..” என்று சாந்தியை அறைக்குள் அழைத்துச் சென்றவள், அவரைக் கைத்தாங்கலாக மெல்லத் தூக்கி மெத்தையில் அமர வைத்தாள். நைட்டி போல் அவர் அணிந்திருந்த பெரிய காட்டன் ஃபிராக்கைத் தூக்கி, ஆபரேஷன் செய்த இடங்களையெல்லாம் அவள் பார்வையிட்டாள். 

“காயமெல்லாம் நல்லாவே ஆறிடுச்சு போலம்மா. மறுபடியும் உங்களை பார்க்க முடியாதோன்னு நான் பயந்துட்டேன்” தாயை அணைத்தவாறு அவருக்கருகில் படுத்துக் கொண்டாள். 

அவரைக் குளிக்க வைத்து, அவருக்கு உணவு தந்து, மருந்து மாத்திரைகளை எடுத்துத் தந்து அருகிலேயே இருந்தாள். இருவரும் நடந்து முடிந்த கசப்பான நினைவுகளைப் பற்றி பேச விரும்பவில்லை. இருவரின் அருகாமையும், அணைப்புமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

அன்று மாலை, அங்கு நர்ஸ் வந்ததும் அவருக்கும் அறைக்குள்ளேயே கட்டிலும், மெத்தையும் போடப்பட்டது. நதியா அவரிடம் கிச்சன் இண்டர்காம் எண்ணைத் தந்தவள், “உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க, அவங்க கொண்டு வருவாங்க” என்றாள்.

வைஷாலி நதியாவைத் தேடி அங்கே வந்திருக்க, “அம்மா.. இது வைஷு.. அவரோட தங்கச்சி. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட், என்னோட ஏஞ்சல். நீங்க என்னை எப்படி வீட்ல பார்த்துப்பீங்களோ அப்படித்தான் இவ என்னைப் பார்த்துக்கிறா” நதியா அவளைப் பற்றி புகழ்ந்து பேசியதும், “அண்ணி.. போதும் போதும். ரொம்ப ஓவரா சொல்லாதீங்க” கூச்சத்தில் நெளிந்தாள் சின்னப் பெண்ணவள்.

சாந்தி அந்த வீட்டிற்கு வந்த பிறகு நதியாவிற்கு நேரம் போவதே தெரியவில்லை. அவர் உறங்கியதும் மிதுனின் அறைக்குச் சென்றாள். வழக்கம்போல் மெத்தையில் அவன் மடிக்கணினியோடு அமர்ந்திருக்க, அவள் உள்ளே நுழைந்ததும், அவளை நிமிர்ந்து பார்த்தவன் புன்னகைத்தான்.

“அம்மா என்ன பண்றாங்க நதியா?”

“அவங்க தூங்குறாங்க”

“நீயும் அவங்க பக்கத்திலேயே தூங்க வேண்டியது தான”

“நீங்க எனக்கு வேண்டியதைக் கொடுத்துட்டீங்க. நான் உங்களுக்கு வேண்டியதைத் தரணுமே” 

அழுத்தமாய் அவளைப் பார்த்தவன், “நான் குழந்தைக்காகத்தான் இதெல்லாம் பண்ணேன்னு நினைக்கிறியா?” என ஒற்றைப் புருவம் தூக்கி வினவிட, “அப்போ எதுக்கு..?” என்றவளும் அவன் விழிகளைப் பார்த்தாள். இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்த அந்தக் கணத்தில், இதழ்கள் பேசிடா வார்த்தைகளை மின்னல் வேகத்தில் விழிகளின் வழியே இரு இதயங்களும் பரிமாறிக் கொண்டன.

அதை ஏற்றுக் கொள்ள மறுத்தவள், சட்டென, “நான் குளிச்சு ரெடி ஆகட்டுமா?” என்று நகர்ந்திட, “எனக்கு வேணாம். நீ ரெஸ்ட் எடு” அவனது குரல் இறுகிப் போயிருந்தது. நதியா மெத்தையில் அமைதியாய் படுத்துக் கொள்ள, வேலையில் மும்முரமாக இருந்தவன் இதழும், உடலும் அவளைக் கேட்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

நதியாவுடனான தன்னுடைய உறவு குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தவன், அதற்காகவே அவளிடமிருந்து தற்போது விலகி இருக்கிறான்.

சில நாட்கள் இப்படியே நகர்ந்திட,

அன்று ஆபீஸிலிருந்து மிதுன் நதியாவின் செல்போனிற்கு அழைத்து, “நாம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில போறோம். நீ கிளம்பி ரெடியா இரு” என்றவன் பதிலை எதிர்பார்க்காது வைத்துவிட்டான்.

“நான் இங்க குழந்தை பெத்துக் கொடுக்கத்தான் வந்தேன். இவர் ஏதேதோ பண்றார். என்ன மனசுல நினைச்சுட்டு இருக்கார்னு ஒண்ணும் புரியலையே” புலம்பியவாறு குளித்துக் கிளம்பினாள். அவன் செய்வதையெல்லாம் காதல் என்று ஏற்றுக்கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை. 

காரில் இருவரும் செல்லும்போது..

“சார்.. எங்க போறோம்னு சொல்லவே இல்லையே” அவள் கேள்வியாய் அவனைப் பார்த்திட, “அது சர்ப்ரைஸ்..” கண்களைச் சுருக்கிச் சிரித்தவனின் அழகில் சில நிமிடங்கள் தொலைந்து மீண்டாள்.

“சார்.. டாக்டர் நம்மளை தினமும் ஒண்ணா இருக்கச் சொல்லியிருக்காங்க. அப்போதான் சீக்கிரமே குழந்தை..” என்றவள் அவனுடைய கூரிய பார்வையில் மௌனமானாள்.

கார் அந்த தெருவிற்குள் நுழைந்திட, நதியாவின் முகத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது. தெருவைக் கடந்து அங்கிருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே சென்றதும், அவளின் பதற்றம் அதிகமானது. 

அந்த வீட்டின் முன் காரை நிறுத்தி டிரைவர் சீட்டில் இருந்து இறங்கியவன், அவளின் பக்க கார் கதவைத் திறந்துவிட, “இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்றவள் இறங்கத் தயங்கினாள். “வா நதியா..” அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவன், பூட்டியிருந்த வீட்டைத் திறந்து அவளுடன் உள்ளே நுழைந்தான்.

அந்த வீட்டிற்குள் நுழைந்த நதியா, ஹாலில் பெரிதாக மாட்டியிருந்த புகைப்படத்திற்கு அருகே சென்று, அதிலிருந்த தன் அப்பாவின் பிம்பத்தைத் தொட்டுப் பார்த்தபடி, கண்ணீரோடு அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டைப் பார்த்தாள்.

ஆம், அது நதியாவின் வீடு. அவள் சில மாதங்களாகத்தான் இங்கு வரவில்லை. ஆனால் ‘அவ்வளவுதான், இனி இந்த வீட்டிற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை. இனி இங்கே நுழையவே முடியாது’ என்று கண்ணீரோடு வெளியேறியபின், இன்றுதான் அவள் மீண்டும் வந்திருக்கிறாள். 

அரை வட்ட வடிவில் சோபா போடப்பட்டிருந்த வட்ட வடிவ அமைப்பிலான ஹால், கிச்சனும் அதற்கு பக்கத்திலேயே அளவான டைனிங் ஹால், கீழே அவளது பெற்றோரின் அறை, பூஜையறை, அதோடு ஒரு படுக்கை அறை எல்லா இடங்களையும், கண்ணீரோடு சுற்றி சுற்றிப் பார்த்தவள், வீட்டிற்குள்ளேயே இருந்த படிக்கட்டுகளில் ஏறி, வேகமாக மாடியிலிருந்த தன் அறைக்குச் சென்றாள். 

அறைக்குள் நுழைந்தவள் கண்மூடி மெத்தையில் சாய்ந்திட, கூடடைந்த பறவையின் நிம்மதியும் சந்தோஷமும் அவள் மனதிற்குள் பரவியது. ஆனந்தக் கண்ணீர் அவளது கண்களைத் தாண்டியிருந்தது. தனக்கு அருகில் அமர்ந்து, தன்னுடைய தலைக்கோதும் அப்பாவின் நினைவு வர, அவளது அழுகை கட்டுக்கடங்காமல் பெருகியது.

ஞாபகம் வந்தவளாய் சட்டென்று எழுந்தவள், அறைக்கு வெளியே சென்று மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்க்க, மிதுன் ஹாலில் மாட்டியிருந்த நதியாவின் சிறுவயது புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“மிதுன்.. அங்க என்ன பண்றீங்க. மேலே வாங்க” அவள் குரலில் அத்தனை உற்சாகம். ‘சார்’ என்பது உரிமையில் ஒருமையாகி ‘மிதுன்’ என்றாகியிருந்தது. அவன் படிகளில் மேலேறி வந்ததும், அவனுடைய கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றவள், 

“மிதுன்.. இது என்னோட ரூம். உங்க ரூம் அளவுக்கு பெருசா இருக்காது. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். என்னை இங்க கூப்பிட்டு வந்ததுக்கு, ரொம்ப தேங்க்ஸ். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த வீட்ல தான்” முகமெல்லாம் சிரிப்போடு பேசிக் கொண்டிருந்தவளை அவன் ரசனையோடு பார்த்திருந்தான்.

“நாம எப்படி இங்க வந்தோம்?” அவள் புருவங்களைச் சுருக்கி அவனிடம் கேட்க,

“இது உன்னோட வீடு, இந்த வீடு உனக்குத்தான் நதியா” மெல்லிய புன்னகையோடு பதில் தந்தான்.

“நிஜமாவா!!”

“எஸ்”

அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள், “மிதுன்.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இது வீடு இல்ல, என்னோட மெமோரிஸ், என் அப்பா அம்மாவோட நான் வாழ்ந்த, சந்தோஷமான வாழ்க்கையோட மொத்த மெமோரிஸும் இங்கதான் இருக்கு. அந்த வீடு இப்போ எனக்குத்தான்னு நினைக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதை விட என்னோட சாந்திம்மாவை பழைய மாதிரி எனக்குத் திருப்பித் தந்தீங்களே. அதுதான் என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய சொத்து.

“தேங்க் யூ சோ மச் மிதுன். குழந்தை பிறந்த பிறகு, இந்த வீட்டுக்கான பணத்தை நான் உங்க கம்பெனிலேயே ஒர்க் பண்ணி தந்திடுறேன்” அவள் மனமெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க, கண்கள் மின்ன பேசிக் கொண்டிருந்தவளின் நெருக்கமும், அவளது வாசமும், தீண்டலும் அவனை ஈர்த்திட, அவளுடைய இதழ்களைக் கவ்வி அடுத்து அவளை பேசவிடாமல் செய்திருந்தான்.

நதியாவின் இதயம் இன்பத்தால் விம்மி நிற்க, இருவரின் இதழ்களும் அவர்களது மனதினுள் ஒளிந்திருந்த ரகசிய ராகத்தை மீட்டுக் கொண்டிருந்தன. அவளும் அவன் தந்த இதழ்முத்தத்திற்கு ஒத்திசைத்து அவனது இதழ்களைச் சுவைத்துக் கொண்டிருக்க, மிதுன் அந்த முத்தத்தில் லயித்திருந்தவன், சட்டென விலகி நின்றான். 

“நான் உனக்கு இதெல்லாம் பண்ணதுக்காகத் தான் நீ என்னைக் கிஸ் பண்றியா?” அவன் மனதில் தோன்றிய சிறு நெருடலுடன் அவளைக் கேட்க, தலையைக் குனிந்து கொண்டவள், ‘ஆம்’ என்பது போல் மேலும் கீழும் தலையசைக்க, கோபத்தில் நெற்றி சுருங்கினான்.

அவன் அவளிடம் வேண்டி நின்றது ஒன்றை. அவள் அவனுக்கு உரைத்ததோ வேறொன்றை. அவளுடைய இதயம் அவனிடம் சொல்லத் துடித்ததை அவளும் சொல்லாமல் மறைத்தாள். 

‘நதியாவும் அவளுடைய காதலும் அவனுக்கு ஒட்டுமொத்தமாக வேண்டும். இல்லையென்றால் அவள் எப்போதும் வேண்டாம்’ என்ற உறுதியான முடிவில் இருந்தான் மிதுன். காதலில்லாத அவள் மனதை வற்புறுத்த அவன் விரும்பவில்லை. 

நதியாவோ ‘காதல் என்று சொல்லி அவன் மறுத்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற பயத்தில் அவன் மீது காதல் கொண்ட மனதை உள்ளுக்குள் பூட்டி வைக்கிறாள்.

“நதியா.. நீ உன்னோட அம்மாவை கூப்பிட்டு இந்த வீட்டுக்கே வந்திடு” இறுகிய குரலில் அவன் சொல்லிட, “சார்.. குழ..ந்தை..” அவளோ பேசத் தடுமாறினாள். “சரி கிளம்பு வா. நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றவன் பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மிதுன் தன்னை அறியாமலேயே ‘நம்ம வீட்டுக்கு’ என்றிருந்தான்.

“சார்.. சத்யா அண்ணன் மேரேஜ் வருதுல, என்னோட ட்ரெஸ் எடுத்துக்கிட்டு வரவா?”

“புது ட்ரெஸ் எடுத்துக்கலாம்”

“என்னோட ஜூவல், மேக்கப் திங்க்ஸ், அப்புறம் அம்மாவுக்கு கொஞ்சம் ட்ரெஸ் இது மட்டும் எடுத்து வச்சுக்கவா”

“சரி உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்கிட்டு கீழ வா, நாம கிளம்பலாம்” என்றவன், ‘இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தாலும் அவளிடம் தன்னை மொத்தமாக இழந்துவிடுவோம்’ என்ற பயத்தில் வேகமாகக் கீழே இறங்கினான். 

இருவரும் வீடு திரும்பினர். மிதுன் இரவு தூங்கிக் கொண்டிருக்கையில் அவனுடைய கனவில், அவனைக் காப்பாற்றிய பெண் வந்தாள். இன்று தெளிவாய் இருந்தது அக்கனவு. “சார்.. எழுந்திருங்க” அது நதியாவின் குரல் தான். பதற்றத்தோடும் கண்ணீரோடும் தன் துப்பாட்டாவை அவன் தலையில் இறுக்கமாக கட்டியவள் முகம் நன்கு தெரிந்திட, அது நதியாவின் முகமே தான். 

அப்படியே எழுந்து அவளை அணைத்துக் கொண்டவன், அவள் இதழில் தன்னிதழை பதித்திருந்தான் கனவினில். திடுக்கிட்டு விழித்து எழுந்து அமர்ந்தவன், அருகில் படுத்திருந்த நதியாவைப் பார்த்தான். ‘நான் இவளைத்தான் காதலிக்கிறேனா? அதனால் தான் இப்படியொரு கனவா?’ குழம்பிப் போனான்.

எவ்வளவு யோசிக்க முயன்றும், ஏற்கனவே அவன் நினைவுப்பதிவில் இருந்த அந்த பெண்ணின் மங்கலான முகமும், தெளிவில்லாத குரலும் அவனுக்கு மறந்து போயிருந்தன. கண்களை மூடினால் நதியா தான் அவன் மனமெங்கும் நிறைந்திருந்தாள். 

அவனுடைய இதயமோ ‘அவள் எனக்குத்தான்’ எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, அவனது மூளையோ ‘அவள் என்னைக் காதலிக்கவில்லையென்றால் என்ன செய்வது? காதல் என்ற பெயரில் அவளைக் காயப்படுத்தி விடுவேனோ?’ அவனிடம் முரண்பட்டு நின்றது. 

அவன் மனதிற்குள் பெரும் போரே நிகழ்ந்து கொண்டிருக்க, டென்ஷனில் வலது கையால் தன் நெற்றியை அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டவன், அன்றைய இரவில் தூக்கம் தொலைத்திருந்தான்.

இன்னும் சில நாட்கள் கடந்து சென்றிருக்க, அன்று மாலை.. சத்யாவின் திருமண ரிசப்ஷன். ராதா, ருக்மணி, சாந்தியைத் தவிர்த்து வீட்டிலிருந்த இளையவர்கள் ஒன்றாகக் கிளம்பி, ஒரே காரில் ரிசப்ஷனுக்குச் சென்றனர்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரு குடும்பங்களும் எதிரெதிரே வந்து, மண்டபத்திற்குள் ஒன்றாக நுழைந்தனர். தாராவும் மணப்பெண் பாரதியும் தோழிகள், அதனால் தாரா குடும்பத்திற்கும், ராஜீவ் குடும்பத்திற்கும் சேர்த்தே அழைப்புச் சென்றிருக்க, மிதுனை வெறுப்பேற்றுவதற்காகக் குடும்பத்துடன் வந்திருந்தான் ராஜீவ்.

மிதுன் யாரையும் கண்டுகொள்ளாமல் தன் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான். அவர்களுக்கு நேர் வரிசையிலே குடும்பத்தோடு அமர்ந்த ராஜீவ், மிதுனையும் அவனுடைய குடும்பத்தையும் கவனித்தவாறு இருந்தான். 

தேவ், ரூபிணி ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வைஷு, நதியா இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளை நிற டீஷர்ட், ஜீன் கோட் அணிந்திருந்த சூர்யாவை தாரா ரசனையாய் பார்த்திருக்க, அவளைத் தீயாய் முறைத்திருந்தவன், திரும்பிக் கொண்டான். 

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page