பாகம் -20
” பெரிய சண்டை வந்துட்டு போல இருக்கு.. அதனாலதான் இப்படி அடிச்சுறாங்க..” என்று..
“என்னோட உயிரை காப்பாத்துனாடா அந்த பூங்குழலி ..அதற்காகவாவது நான் அவங்ககிட்ட உயிரா இருக்க வேண்டாமா.. ”
“பரவால்ல ஏதோ கதை சொல்ற ..நல்லா இருந்துட்டு போ ..”என்று அதோடு எழுந்து சென்று விடுகிறான்..
மறுநாள் முழுக்க நவீனை பார்க்க முடியவில்லை.. போன் செய்ததும் , “அட நான் ஆபீஸ் வராதது கூடவா உனக்கு தெரியுது ..ஆபீஸ் முடியும் நேரமாவது அக்கறையா எனக்கு போன் பண்ணி விசாரிக்கிறியே ரொம்ப நன்றி டா .. ”
என்றதும் தான் அவனிடத்தையே கவனிக்கிறான் . ‘நல்ல வேளை அவன் ஆபீஸ் வராதது எனக்கு தெரியவில்லை.. ஆளைக் காணோம், கோபத்தில் என்னை விட்டு விட்டு டீ குடிக்க போய் விட்டானோ என்று போன் அடித்தேன்.. உண்மை தெரிந்தால் அவ்வளவுதான் என்னைப் பேசியே கொன்று விடுவான்.,
“ஆமாடா நீ இல்லாம உன்னுடைய இடமே வெறுமையா இருக்கு .அதுக்காக தான் போன் அடிச்சேன் .. ”
“ஆமாடா நீ நேத்து முழுக்க உன் அண்ணனைப் பத்தி பெருமை பேசுனியா. அதனால எனக்கு வெப்பம் அதிகமாக போய் காய்ச்சல் தாங்கலடா..இப்பதான் டாக்டர் கிட்ட போய் மாத்திரை மருந்து வாங்கி முழுங்கி படுத்து கிடக்கிறேன்.”
“பொறாமையால கூடவாடா காய்ச்சல் வரும்.. “அரவிந்த் அவனுக்கு காய்ச்சல் என்று கவலைப்படாமல் வியப்பாய் கேட்கிறான் ..
“சொல்லுவடா சொல்லுவ.. கிட்டத்தட்ட ஆறு மாசமா பழகி இருக்கிற ஒரு ஆளைப் பத்தி என்கிட்ட நானா கேட்ட பிறகு சொல்ற.. எனக்கு முகம் தெரியாத அந்த ஆதி மேல பொறாமை எல்லாம் கிடையாதுடா.. உன்மேல தான்
வெறுப்பு.. ”
“சரி சரி நான் சாயந்திரம் வந்து உன்னை பார்க்கிறேன்.. மாத்திரை எல்லாம் போட்டு கஞ்சி எல்லாம் குடிச்சிட்டு உடம்பை நல்லா வச்சுக்க .கல்யாணம் பண்ற வயசுல இருக்க .இப்படி எலும்பும் தோலுமா இருந்தா யாரும் உனக்கு பொண்ணே கொடுக்க மாட்டாங்கடா..”அவன் எது சொன்னாலும் நவீனுக்கு எரிச்சலாகிறது..
எல்லாம் உன்னால தான் நான் இப்படி போனதற்கு காரணமே நீ தான்.. இல்லா விட்டால் நான் எப்படி அஜித் கணக்கா இருப்பேன் தெரியுமா..” என்றதுமே அரவிந்த் சிரித்து விடுகிறான்.
“அஜித் பேரை ஏன்டா தேவையில்லாமல் இருக்கிற.. நாக்குல நரம்பு இல்லாம பேசுறியேடா ..அஜித் எங்க நீ எங்க … காக்காவையும் மயிலையும் ஒண்ணா வைக்க முடியுமா. ”
” சரி சரி நான் தெரியாம சொல்லிட்டேன் நீ வாயை மூடு .எனக்கு தலைவலி தாங்கல .. அதுவும் உன்னாலதான்டா போடா நான் தூங்க போகிறேன்..” சொன்னது போலவே அன்று மாலை நவீனை அவன் வீட்டில் சென்று பார்க்கிறான்..
அவனிடம் மனம் விட்டு பேசுகிறான்.. அவனை சமாதானம் செய்கிறான் ..நவீன் என்னவோ கொஞ்சம் சமாதானம் தான் ஆகிறான். ஆனால் அதற்கு இரண்டு மடங்கிற்கு மேல் இவனை குழப்பி விடுகிறான். அவன் சொல்வது சரி என்றும் தோன்றுகிறது ..தவறு என்றும் தோன்றுகிறது.. என்ன செய்வது என்றே அரவிந்துக்கு புரியவில்லை ..இவ்வளவு நாட்களாக தெளிந்த நீரோடையைப் போல அவன் மனம் இருந்ததற்கு எதிர் மாறாய் இப்பொழுது குழம்பிப் போன குட்டையாகி விடுகிறது..
நவீனை பார்த்ததுமே அவனிடம் மன்னிப்பு கேட்கிறான்..” என்னதான் நான் சமாதானம் சொன்னாலும் நான் செய்தது தவறு தான்டா.. என்னை மன்னித்து
விடு.. ” என்று..
நவீனுக்கு காய்ச்சலாய் இருப்பதால் எதுவுமே புரியவில்லை.. “ நீ எதற்குடா மன்னிப்பு கேட்கிற..அதான் சொன்ன படியே வந்து பார்த்து விட்டாயே..”
” அது இல்லைடா எனக்கு கஷ்டமா இருந்த போது உன்னிடம் வந்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நான் நன்றாக இருப்பதை எதையுமே சொல்லவில்லை. அந்த காரணத்தினால் தானே உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனது என்று சொன்னாய். நான் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்கிறேன் நான் செய்தது சரியா தவறா என்று சொல். ” என்று ஆதித்யாவிடம் முகநூலில் ஆரம்பித்த பழக்கத்திலிருந்து இப்போது பேசியது வரை எல்லாவற்றையும் எடுத்துக் கூறுகிறான் நவீனும் பொறுமையாக கேட்கிறான்..
“நீ செய்தது தவறாக என் மனதிற்கு படவில்லை.. சொல்லப் போனால் இப்பொழுது உன் மனைவியை சந்தேகப் படுவதை விட்டு விட்டு ஆதித்யாவின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாய் ..அதுவே நல்ல துவக்கம் தான்..” அவன் சொல்வது கிண்டலாக பேசும் தொனியில் கேட்கிறது அரவிந்துக்கு ..
“ டேய் நவீன் நீ எனக்கு நல்லது செய்ய பார்க்கிறாயா..இல்லை கெட்டது செய்ய பார்க்கிறாயா..நீ சொல்வதெல்லாம் நல்ல வார்த்தைகளாகத் தான் இருக்கிறது.. ஆனால் பேசுகின்ற மாடுலேஷன் தான் கிண்டல் செய்வது போல இருக்கு.. என்ன தான்டா உனக்கு பிரச்சனை சொல்லு.. நான் ஆதித்யாவை என்னிடம் பேசாமல் விட்டு விடவா ..அப்பொழுது உனக்கு நிம்மதியாக இருக்குமா .. ”
நவீன் சிரிக்கிறான்..”உனக்கு என்னமோ நான் அந்த ஆதியிடம் போட்டி போடுவதாக தான் எண்ணத் தோன்றும் ஏனென்றால் நீ அப்படித்தான்.. ஆனால் நான் எப்படி பேசினேன் என்று துல்லியமாக கண்டு பிடித்த உன்னால் உன் குடும்பத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என்று சரி செய்ய முடியவில்லையே. அதை நினைத்தால் தான்டா வருத்தமாக இருக்கிறது .. “
“நான் நன்றாக தானே இருக்கிறேன் .என் மனைவியிடம் என் பிள்ளையிடமும் உயிரையே வைத்துக் இருக்கிறேன்.. இதற்கு மேல் என்ன வேண்டும் .. ”
“அது இறுதி வரை நிரந்தரமாக இருக்க வேண்டும். அது தான்டா எனக்கு பயமாக இருக்கிறது .. ”
“இப்பொழுது இதில் என்னடா உனக்கு பயம் வந்தது .. சரி நவீன் உன் மனதில் உள்ளதை கூறு.. நான் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொன்னேனே அதே மாதிரி.. ” என்றதும் நவீன் பேச ஆரம்பிக்கிறான்..
“நான் கேட்கும் கேள்வி எல்லாமே அந்த ஆதியை வைத்து தான் இருக்கும் ..ஆனால் நீ கோபித்துக் கொள்ளக் கூடாது.. நான் பொறாமைப் படுவதாக சொல்லக்கூடாது.. இந்த டீலுக்கு ஓகே என்றால் நான் என் மனதில் இருப்பதை கூறுகிறேன்..”
“உண்மை அதுதான், ஆனால் நீ ஒத்துக் கொள்ள மாட்டாய். நீ என்ன என்று பேசு.. நான் வரிசையாக பதில் சொல்கிறேன்..” என்கிறான் அரவிந்த் .
“உன் புது அண்ணா ஆதியிடம் இன்னும் எவ்வளவு காலம் பழகுவாய் .. “என்றதுமே அரவிந்த் சிரித்து விடுகிறான்..
“நான் தான் சொல்கிறேனே ..உனக்கு ஆதி அண்ணாவின் மீது பொறாமை என்று.. ”
“எனக்கு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை ..நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு.. என்னை அடித்தாலும் கூட பரவாயில்லை.. ”
“அப்படி என்றால் அடி வாங்கும் படியாக தான் நீ கேள்வி கேட்கப் போகிறாய்.. எதற்கும் அடி வாங்க தயாராக இருந்து கொள்.. ” என்று கை முஷ்டியை முறுக்கிக் கொண்டு பக்கத்தில் உட்காருகிறான் அரவிந்த்..
“நீ கேட்டதற்கு முதலில் பதில் சொல்கிறேன்.. என் உயிர் இருக்கும் வரை ஆதி அண்ணாவுடன் நான் நட்பாக இருப்பேன் .. ”
“ நல்லது தான் கடைசி வரைக்கும் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் போல நல்ல நட்போடு இருக்க போகிறீர்கள் .. ”
“உனக்கு இது கிண்டலாகத்தான் இருக்கும்.. நீயும் ஆதி அண்ணாவிடம் பழகி பாரேன்.. உனக்கும் அவரை பிடிக்கும். ”
“ நான் பழகுவது இருக்கட்டும் .. நீ கடைசி வரையும் இதே நட்போடு இருப்பாயா..”
“ கண்டிப்பாக . ”
“சரி ஏதோ காரணத்தில் அப்படியே இடையில் இந்த உறவு முடி(றி)ந்து விடுகிறது.. அப்பொழுது என்ன செய்வாய். ”
“ அது எப்படிடா..”
“அரவிந்த் நானே ஏதாவது விஷமம் செய்து உங்கள் நட்பை முறித்து விடுகிறேன் ..அப்போது என்ன செய்வாய்.. ”
“அப்படி செய்தாய் என்றால் முதலில் உன் காலை தான் முறிப்பேன்.. அதன் பிறகு ஆதி அண்ணாவிடம் என்னை நிரூபிப்பேன்..”
“ நீ என்னடா ரொம்ப சினிமா பார்ப்பியா.. ஓவரா பேசுற .. நெருப்பு என்றால் சுட்டு விடுமா என்ன ..நான் சும்மா ஒரு வார்த்தைக்கு தான் கேட்கிறேன்..நீ ஏன் இப்படி சென்டிமென்டாய் பேசுகிறாய்.. அவர் உன் கூட பிறந்தவர் இல்லை.. நீ ஒரு பிளாட் விற்றாய் ..அவங்க வாங்கினாங்க ..இந்த மாதிரி உறவெல்லாம் ரயில் சினேகம் மாதிரி தான் .. ”
“கொஞ்ச நாளைக்கு தான் நட்பாக இருப்பாங்க ..அதன் பிறகு அவங்க அவங்க வேலையை பார்க்க போயிடுவாங்க ..இந்த ரீதியில் தான் நான் கேள்வி கேட்கிறேன் ..நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லி தொலையேன் ..சும்மா தெலுங்கு படம் மாதிரி சென்டிமென்ட் பேசிகிட்டு.. மசாலா ரொம்ப தூக்கலா போகுதுடா உன்னுடைய பேச்சில.. “என்று எரிச்சலாகிறான் நவீன்..
“ ஓகே இதை நானும் ஒத்துக் கொள்கிறேன்..தினமும் பேசிக் கொண்டு இருந்தோம்.. அதன் பிறகு வாரம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தோம்.. இப்பொழுது மாதம் ஆனா கடைசி ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் பேசிக் கொள்கிறோம் ..நீ சொல்வதைப் போல கொஞ்சம் கொஞ்சமா விலகவும் வாய்ப்பு இருக்கிறது.. ”
“அப்பாடி இந்த கேள்விக்கு தான் நீ சரியான பதில் சொல்லி இருக்கிற டா அரவிந்த்.. இப்படி ஒரு பதில் சொல்வாய் என்று தான் நானும் இந்த கேள்வியை கேட்டேன் புரிகிறதா .. “என்றதும் அரவிந்த் தலையாட்டுகிறான்..
“ இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கள் இரண்டு பேரும் காலப்போக்கில் விலகி விட்டீர்கள் என்றால் அதன் பிறகு என்ன செய்வாய் .. ”
அரவிந்த் விரக்தியாய் சிரிக்கிறான்..” இது ஒரு கேள்வியாடா..அதற்காக கல்லை கட்டி கிணத்தில் விழுந்து தற்கொலையா செய்துக் கொள்ள முடியும்.. “
“ நல்ல பதில் இப்பதான் நீ கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய வலிக்கு வந்துகிட்டு இருக்க.. நீ தற்கொலை செய்து கொள்ள மாட்டடா.. ஆனா மித்ரா தங்கையை தற்கொலை செய்ய வைத்து விடுவாய்.. ”
“ஏன்டா நவீன் நான் ஆதி அண்ணாவிடம் பேசாததற்கும் என் மனைவியை தற்கொலை செய்ய வைப்பதற்கும் என்னடா சம்பந்தம்.. ”
” ஆமாம் அவங்க கிட்ட பேசாத வரைக்கும் நீ உன் மனைவியை சந்தேகப்பட்டாயா இல்லையா ..அந்த பிள்ளை உனக்கு பிறந்ததா இல்லையா என்று சந்தேகப்பட்டாய் தானே.. ” என்றதும் குற்ற உணர்ச்சியில் அரவிந்த் தலையை குனிந்து கொள்கிறான் ..
“இப்பொழுது தான்டா உனக்கு நீ செஞ்ச தவறே புரிகிறது .. இரு இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது.. ”
இப்பொழுது எடக்கு மடக்காக வாயை திறக்காமல் அமைதியாய் அடுத்து என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த்..
“ ஆதி அண்ணாவிடம் உறவு முடிந்த பிறகு நீ என்ன செய்வாய் ..உன் மனைவியை திரும்பவும் சந்தேகப்படுவாய் தானே.. ”
மறுபடியும் முதலில் இருந்தா?
தொடரும்..
