தூவானம் -24

 

கோயம்புத்தூரில் அந்த இக்கட்டான சூழல்கள் ஓரளவுக்கு ஓய்ந்து, கவிதா நலமாக இருக்கிறாள் என்ற நிம்மதி வந்தாலும், அகல்யாவின் மனதிற்குள் இருந்த அந்தப் புயல் மட்டும் ஓயவில்லை. ஆகாஷின் பெற்றோர்களைச் சந்திக்கப்போகிறோம் என்ற அந்த ஒரே ஒரு செய்தி, அவளது உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது.

இரவுப் பேருந்து மீண்டும் சென்னை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஜன்னல் வழியே தெரியும் இருள், அவளது மனதின் பிரதிபலிப்பாகவே இருந்தது.

ஆகாஷின் அருகிலேயே அமர்ந்திருந்தாலும், அகல்யாவின் முகம் இந்த முறை காரணமின்றிச் சோர்வடைந்து போயிருந்தது. பழைய கலகலப்பு இல்லை, குறும்புப் பேச்சுகள் இல்லை. ஆனால், அவளது கரங்கள் மட்டும் ஆகாஷின் கரத்தை இன்னும் அழுத்தமாகப் பிணைத்திருந்தன. அந்தப் பிடியில் அன்பு இருப்பதை விட, “என்னை விட்டுவிடாதே” என்ற ஒருவிதமான மரணப் பயமும், சொல்ல முடியாத கவலையும்தான் அதிகமாக இருந்தது.

வண்டி ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியபோதும் அவள் அசையவில்லை. அவளது பார்வை பேருந்தின் நடைபாதையையே வெறித்துக் கொண்டிருந்தது. ஆகாஷ் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளது விரல்களின் நடுக்கம் அவனது உள்ளங்கை வரை கடத்தப்பட்டது.

“அ.. அகல்யா…!” என அவன் மெல்லிய குரலில் அழைத்தான்.

அவள் தலையைத் திருப்பவில்லை. அவனது பக்கம் பார்க்கக்கூடத் துணிவில்லாமல், “ம்ம்…” என வெறும் குரலை மட்டும் பதிலாகக் கொடுத்தாள்.

குழப்பமடைந்த ஆகாஷ், மீண்டும் அவளது பெயரை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தான். “அகல்யா, நான் உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்.” என்றான் 

இப்போதும் பதில் வரவில்லை. அதே ஒற்றைச் சொல்… அதே உடைந்த குரல்… “ம்ம்…”

பேருந்தின் ஜன்னல் வழியே சீறிப்பாயும் காற்றின் இரைச்சலை விட, அந்த இருக்கையில் நிலவிய மௌனம் ஆகாஷின் காதுகளைத் துளைக்க, அவளது மௌனம் ஆகாஷின் பொறுமையைச் சோதித்தது.

ஏதோ ஒரு பெரிய பாரம் அவளை அழுத்துகிறது என்பதை அவன் உணர்ந்தான். சட்டெனத் தன் வலது கையால் அவளது தாடையைப் பிடித்து, மெதுவாகத் தன் பக்கம் அவளது தலையை நிமிர்த்தினான்.

அவள் தடுத்தும் பலனில்லை. அவள் முகம் அவன் பார்வைக்கு நேராக வந்த அந்த நொடி… ஆகாஷ் அப்படியே அதிர்ந்து போனான். அவளது கண்கள் குளமாகி, நீர் கோர்த்து நின்றன. கண்ணின் ஓரங்களில் வழிந்த அந்த ஈரம், நிலவொளியில் வைரம் போல மின்னியது. அவளது இதழ்கள் துடித்துக்கொண்டிருந்தன.

அந்தச் சோகமான முகத்தைப் பார்த்ததும் ஆகாஷின் இதயம் ரணமாகிப் போனது. ஒரு நொடியில் அவன் உடல் சிலிர்க்க, குரல் தழுதழுக்க, “அகல்யா…!” என்றான். அந்த அழைப்பில் ஒரு பதற்றமும், அக்கரையும், வலியும் கலந்திருந்தது.

“ஏன் அகல்யா? ஏன் இப்படி அழற? நான் உன்கூடத்தானே இருக்கேன்? எங்க அப்பா அம்மா வர்றாங்கங்கிறதுக்காகவா இவ்வளவு பயம்? அவங்க ஒன்னும் அரக்கர்கள் கிடையாது அகல்யா,” என அவன் அவளது கண்ணீரைத் தன் விரல்களால் துடைக்க முயன்றான்.

அவன் கையை மெல்லப் பற்றிய அகல்யா, “இல்ல ஆகாஷ்… அவங்க வர்றது பயம் இல்லை. அவங்க வரும்போது என் முன்னாடி நிக்கப்போறது அந்தப் பழைய ஆகாஷ் கிடையாதுன்னு எனக்குத் தோணுது. உங்க அப்பா உன் கிட்ட பேசின விதமே எனக்கு எதையோ உணர்த்துது.” என்றாள் 

அவளது தாடையை மென்மையாக ஏந்தி, தன் பக்கம் திருப்பி அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

“அகல்யா… ஏன் இப்படிப் பேசுற? எதுக்கு இந்த அழுகை? நான் இருக்கேன்ல?” என்று அவன் பதற்றத்தோடு கேட்க, அவளது மௌனம் மெல்ல ஒரு விம்மலாக உடைந்தது.

“ஆகாஷ்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என்று ஆரம்பித்தவள், அவனது சட்டையைத் தன் பிஞ்சு விரல்களால் இறுகப் பற்றிக்கொண்டவள்.

“நான் ஒரு அனாதை… இந்தச் சமூகம் என்னை எப்படிப் பார்க்கும்னு எனக்குத் தெரியும். இதுவரைக்கும் வாழ்க்கையில எனக்குன்னு எதையுமே நான் ஆசைப்பட்டு கேட்டது இல்லை. ஏன்னா, ஆசைப்பட்டா அது கிடைக்காதுங்கிற நிதர்சனம் எனக்குச் சின்ன வயசுலயே பழகிடுச்சு. ஆனா, முதல் முதலா… இந்த உலகத்துல எனக்குன்னு ஒருத்தர் வேணும்னு நான் ஆசைப்பட்டது உங்களை மட்டும்தான்,” என்று சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.

மேலும் விம்மலுடன் தொடர்ந்தாள், “ஆசிரமத்துல வளர்ந்தப்போ எத்தனையோ விசேஷங்களுக்கு எங்களை அழைப்பாங்க. மத்த குழந்தைகளை அவங்க அப்பா அம்மா தூக்கிட்டுப் போறதைப் பார்க்கும்போது, என் மனசுக்குள்ள ஒரு ரணம் இருக்கு.”

பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் மோதித் தெறிக்கும் காற்றின் இரைச்சலை விட, அகல்யாவின் விம்மல் சத்தம் அந்த இருக்கையில் ஒரு பாரமான அமைதியை உருவாக்கியிருந்தது. ஆகாஷ் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துத் தேய்த்து அவளது நடுக்கத்தைக் குறைக்க முயன்றான். ஆனால், அகல்யாவின் மனதிற்குள் பல வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்தத் தனிமையின் ரணம் இன்று எரிமலையாய் வெடித்தது.

தன் கலங்கிய கண்களைத் துடைக்கக்கூடத் தோன்றாமல், உடைந்த குரலில்… “பாஸ்… உங்களுக்குத் தெரியாது. ஒரு பண்டிகை வந்தா, ஒரு லீவு வந்தா அந்த ஆசிரமத்தோட நாலு செவத்துக்குள்ள நாங்க படுற அவஸ்தை இருக்கே… அது நரகம். வெளியில இருக்கிற உலகத்துக்கு நாங்க வெறும் ‘பாவப்பட்ட குழந்தைங்க’. ஆனா எங்களுக்குள்ள இருக்கிற அந்தத் தவிப்பு இருக்கே… அதை யாராலயும் உணர முடியாது. ஒரு விசேஷத்துல எல்லாரும் புதுத் துணி போட்டுட்டு அவங்க அப்பா அம்மா கையப் பிடிச்சுட்டுப் போகும்போது, அந்த ஓரத்துல நின்னு வேடிக்கை பார்க்கிற அந்தச் சின்ன வயசு அகல்யாவோட வலி இன்னும் எனக்குள்ள அப்படியே தான் பாஸ் இருக்கு.”

அவள் மூச்சிரைக்கத் தொடர்ந்தாள். ‘நீ யாரு? உன் அப்பா பேர் என்ன? நீ எந்த ஊரு?’ன்னு யாராவது எதேச்சையா கேட்டாக்கூட, என் தொண்டை அடைக்கும் பாஸ். சொல்ல என்கிட்ட பதில் இருக்காது. பொய் சொல்லவும் மனசு வராது. அந்த நிமிஷம் நான் ஒரு அநாமதேயமா இந்த உலகத்துல நிக்கிற அந்த வலி இருக்கே… அதைவிட ஒரு கொடுமை வேற எதுவுமே இல்லை. இப்போ… நாளைக்கு உங்க அப்பா அம்மா முன்னாடி நான் வந்து நிக்கும்போது, அவங்க அதே கேள்வியைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்? ‘அகல்யா’ங்கிற இந்த மூணெழுத்து பேரைத் தவிர, எனக்கென்ன பாஸ் அடையாளம் இருக்கு? நான் ஒரு வெறும் ‘வெத்து மனுஷி’யா அவங்க கண்ணுக்குத் தெரிவேன்ல?”

அவளது கண்ணீர் அவனது கைகளை நனைக்க, அகல்யா இன்னும் ஆவேசமாக, அதே சமயம் இயலாமையுடன் பேசினாள்.

“உங்க அப்பா போன்ல பேசின அந்தத் தோரணை… அந்த அதிகாரக் குரல்… அதை வச்சே எனக்குப் புரியுது பாஸ், நீங்க எவ்வளவு பெரிய பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னு. ஒரு கௌரவமான குடும்பத்துல ஒரு விளக்கேத்தப் போற பொண்ணுக்குக் குலமும், பெருமையும் இருக்கணும்னு தான் எந்தப் பெத்தவங்களும் ஆசைப்படுவாங்க. ஆனா, நான் ஒரு அனாதைன்னு தெரிஞ்சா… அந்த ஒரு நிமிஷம் அவங்க முகம் சுருங்குமே, அந்த ஒரு கணம் உங்க மேல அவங்களுக்கு ஒரு வெறுப்பு வருமே… அதை என்னால ஜீரணிக்கவே முடியாது பாஸ்!”

“என் கௌரவத்தைப் பத்தி எனக்குக் கவலை இல்லை பாஸ். ஏன்னா, நான் பிறந்ததுல இருந்தே அவமானத்தைச் சுமந்து பழக்கப்பட்டவ. ஆனா, உங்க கௌரவம்? எனக்காக நீங்க உங்க குடும்பத்துக்கிட்ட கெட்டப் பெயர் எடுக்குறதோ, இல்ல ஊர் உலகம் உங்களைப் பார்த்து ‘யாரோ ஒருத்தி பின்னாடி போய் தன்னோட அந்தஸ்தைக் கெடுத்துக்கிட்டான்’னு பேசுறதோ எனக்கு மரணத்தை விடப் பெரிய வலி. வேண்டவே வேண்டாம் பாஸ்… அவங்க என்னை ஏத்துக்கலைன்னா நான் அப்படியே விலகிப் போயிடுறேன். மறுபடியும் அதே தனிமைக்கு, அதே இருட்டுக்குத் திரும்பிடுறேன். ஆனா உங்க வாழ்க்கையில நான் ஒரு கறையா இருக்கக் கூடாது பாஸ்… ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க!”

அகல்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஆகாஷை உலுக்கியது. தான் ஒரு கோடீஸ்வரன் என்ற உண்மையை அவன் சொல்லத் துடித்தாலும், அவளது இந்தத் தூய்மையான அன்பை அந்தப் பணத்தால் கொச்சைப்படுத்த அவன் விரும்பவில்லை. அவன் மெதுவாக அவளது கைகளைப் பற்றி, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவன் அவளை வலுக்கட்டாயமாகத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான். “முட்டாள்… என்னைப் பத்தி நீ இவ்வளவு யோசிக்கும்போது, உன்னைப் பத்தி நான் யோசிக்க மாட்டேனா? நீ அனாதை இல்லை அகல்யா… இனிமே உனக்காகப் போராட ஒரு உயிர் இருக்குன்னா அது நான் தான். என் அப்பா அம்மாக்குத் தேவை ‘குலம்’ இல்லை, உன்னோட இந்த ‘அன்பு’ தான். நாளைக்கு விடியட்டும்… அப்புறம் நீயே பார்ப்ப,” என அவளது தலையை வருடித் தேற்றினான்.

அவள் விம்மி விம்மி அழ, அந்தப் பேருந்து இருக்கையில் அவள் ஒரு சின்னக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போனாள். அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு கூர்மையான ஈட்டியாய் ஆகாஷின் இதயத்தைத் துளைக்க,

“அகல்யா, ப்ளீஸ்… இப்போ எதுவும் யோசிக்காத. நான் யாராக இருந்தாலும், உன்னைக் காதலிக்கும் அதே ஆகாஷாகத்தான் இருப்பேன்,” 

“இங்க பாரு அகல்யா..!” என அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அகல்யாவின் கண்ணீர் கலந்த வார்த்தைகள் ஆகாஷின் நெஞ்சில் பெரும் பாரத்தை இறக்கி வைத்திருந்தன. அவளது உடலின் நடுக்கமும், குரலில் இருந்த அந்த அவநம்பிக்கையும் அவனைக் குற்ற உணர்வில் தள்ளினாலும், அவளது காயங்களுக்குத் தன் காதலால் மருந்திடத் துடித்தான்.

மெதுவாக அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தி, அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவனது பார்வையில் இருந்த தீவிரம் அவளது அழுகையை ஒரு கணம் நிறுத்தியது.

“அகல்யா… என்னை ஒரு நிமிஷம் பாரு,” என்று ஆரம்பித்தவன், அவளது நடுங்கும் கைகளைத் தன் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினான். “வாழ்க்கையில உனக்கு எதுவுமே இல்லைன்னு யார் சொன்னது? அடையாளம்ங்கிறது வெறும் பெயரும் ஊரும் கிடையாது அகல்யா. ஒருத்தரோட குணமும், அவங்க மத்தவங்க மேல காட்டுற இந்தத் தூய்மையான அன்பும்தான் அவங்களோட உண்மையான அடையாளம். நீ அனாதை இல்லை அகல்யா… உன்னை மாதிரி ஒரு அழகான, மத்தவங்களுக்காக உருகிற மனசு இருக்கிற ஒரு தேவதையைத் தேடித்தான் இத்தனை காலமா என் இதயம் காத்துக்கிட்டு இருந்தது.”

அவன் அவளது நெற்றியில் வழிந்த ஈரத்தைச் செல்லமாகத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தான். “என் அப்பா அம்மாவை பத்தி உனக்குத் தெரியாது. அவங்க அதிகாரமாப் பேசுறது அவங்களோட வளர்ப்பு, ஆனா அவங்க மனசு ரொம்ப இளகியது. அவங்க எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தெரியுமா? எல்லாத் தடைகளையும் தாண்டித்தான் ஒன்னு சேர்ந்தாங்க. அதனால, ஒரு உறவோட வலி அவங்களுக்குத் தெரியும். அவங்க அன்பைத் தவிர, மனிதநேயத்தைத் தவிர வேற எதையுமே மதிக்க மாட்டாங்க. உன் பின்னணியைக் கேட்டு அவங்க முகம் சுருங்கும்னு நினைக்காதே… மாறாக, ஒரு துணையும் இல்லாம இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கிற உன்னோட அந்தத் தன்னம்பிக்கையைப் பார்த்து அவங்க உன்னை உச்சி முகந்து கொண்டாடுவாங்க.”

“இனிமே உனக்குன்னு ஒரு உலகம் இருக்கு அகல்யா… அந்த உலகத்தோட முதல் குடிமகன் நான் மட்டும்தான். என் குடும்பம் உன்னை ஏத்துக்கிறதுங்கிறது வெறும் சடங்குதான், ஏன்னா என் ஆத்மா உன்னை என்னைக்கோ ஏத்துக்கிடுச்சு. உன் கழுத்துல நான் கட்டப்போற அந்தத் தாலி, வெறும் ஒரு முடிச்சு கிடையாது… அது உனக்கும் இந்தச் சமூகம் கொடுக்கப்போற கௌரவத்தோட அடையாளம்.”

அவளது தோளோடு அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்ட ஆகாஷ், அவளது காதோரம் மிக மென்மையாக,  “ஒருவேளை இந்த உலகமே உனக்கு எதிரா நின்னாலும், உன் நிழலா இல்ல… உனக்கு ஒரு கவசமா நான் உன் முன்னாடி நிப்பேன். அந்தப் பழைய அவமானங்கள், அந்த ஏளனப் பார்வைகள், ஆசிரமத்துச் சுவர்கள்… எல்லாத்தையும் அந்த இருட்டுலயே விட்டுடு. இனிமே நீ பார்க்கப்போற விடியல் வேற மாதிரி இருக்கும். நீ என் ஆசை மட்டும் இல்லை அகல்யா… நீதான் என் உயிர், என் மூச்சு. என் வாழ்நாள் முழுக்க உன்னை ஒரு மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துக்க வேண்டியது இனி என் பொறுப்பு.” என்றான் 

அவன் பேசி முடித்தபோது, அகல்யாவின் கண்களில் இருந்த அந்த மரண பயம் மறைந்து, ஒரு மெல்லிய நம்பிக்கை ஒளிர்ந்தது. அவளது விம்மல் அடங்கி, ஆகாஷின் மார்பில் ஒரு குழந்தையைப் போலச் சாய்ந்துகொண்டாள்.

ஆகாஷ் அவளது நெற்றியில் மிக நீண்ட, ஆழமான ஒரு முத்தத்தைப் பதித்தான். அந்த முத்தம் அவளது அத்தனை வலிகளுக்கும் ஒரு மருந்தாக அமைந்தது. பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு சென்னை நோக்கிப் பறக்க, அகல்யாவின் இதயத்தில் முதல்முறையாக ஒரு பாதுகாப்பான உணர்வு மலர்ந்தது. ‘யார் வந்தாலும், என்ன நடந்தாலும்… எனக்காக இந்தத் தோள் இருக்கிறது’ என்ற அந்த எண்ணம் அவளை அமைதிப்படுத்தியது.

அந்தப் பேருந்துப் பயணத்தின் இருளில், ஆகாஷின் மார்பில் சாய்ந்து கொண்ட அகல்யாவுக்கு ஒரு சிறிய நிம்மதி கிடைக்க, அகல்யாவின் அழுகை அவனது சட்டையை நனைத்தது. ஆனால், விடியப்போகும் அந்தச் சந்திப்பு அவளுக்கு எத்தகைய ஆச்சரியங்களை வைத்திருக்கப் போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page