தூவானம் -28

அவர்களின் அந்த அந்தரங்கமான உலகத்தின் அமைதியை, ஆகாஷின் சட்டைப் பையில் இருந்த மொபைல் போனின் அதிரும் சத்தம் சட்டெனக் கலைத்தது. அந்தச் சிறிய அறையில், ஒரு கவிதை போலத் தங்களை மறந்திருந்த அந்தத் தருணம் ஒரு விநாடி துண்டிக்கப்பட்டது.

அகல்யா, அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அந்த இதமான அணைப்பை ரசித்துக் கொண்டிருந்தவள், போன் சத்தம் கேட்டதும் மெல்ல விலகினாள். அவளது முகம் வெட்கத்தில் செந்தாமரையாய் சிவந்திருந்தது. “பாஸ்… போன் அடிக்குது, பாருங்க,” எனத் தழுதழுத்த குரலில் சொல்ல,

ஆகாஷ் போனை எடுத்துப் பார்த்தான். திரையில் ‘சித்தார்த்’ என்ற பெயர் மின்னியது. அவனது புருவங்கள் லேசாக உயர்ந்தன. ‘சித்தார்த் தான் ஏர்போர்ட் போய் அம்மாவையும் அப்பாவையும் பிக்கப் செய்யணும். இப்போ ஏன் கால் பண்றான்? ஒருவேளை அவங்க சீக்கிரமே லேண்ட் ஆகிட்டாங்களோ? இல்லை வழியில ஏதாவது பிரச்சனையா?’ என அவனது பிசினஸ் மூளை கணநேரத்தில் கணக்குப் போட்டது.

அவன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த அகல்யா, “நீங்க போய் போன் பேசுங்க பாஸ்… நான் அதுக்குள்ள இந்த காய்கறிகளை அலசி வைக்கிறேன்,” என அவனை அனுப்பி வைக்க முயன்றாள்.

“ம்ம்ம்…” எனச் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து நகரத் தொடங்கினான் ஆகாஷ். ஆனால், மூன்று அடி எடுத்து வைத்தவன், சட்டென மின்னல் வேகத்தில் மீண்டும் அவளை நோக்கித் திரும்பினான்.

அகல்யா குனிந்து காய்கறிப் பையை எடுக்க முயன்ற அந்தத் தருணத்தில், அவன் அவளருகே வந்து, அவளது மென்மையான கன்னத்தில் ‘சுரீர்’ என ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.

“ஆகாஷ்…!” என அவள் அதிர்ச்சியில் கண் விரியக் கூவுவதற்குள், ஒரு குறும்புக்காரச் சிறுவனைப் போலச் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வாசலை நோக்கி ஓடிவிட்டான்.

அவன் சென்ற திசையையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த, அகல்யா. தனது வலது கையால், அவன் முத்தமிட்ட அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தாள். இன்னும் அவனது இதழ்களின் வெப்பம் அங்கே தங்கியிருப்பது போலத் தோன்றியது. அவளது இதழ்களில் தானாகவே ஒரு புன்னகை அரும்பியது.

“என்ன மனுஷன் இவரு… எப்பப் பாரு எதாவது பண்ணிட்டே இருக்காரு,” எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். ஆனால், அந்த முணுமுணுப்பில் கோபத்தை விடக் காதலே அதிகம் தூக்கலாக இருந்தது. வெட்கம் அவளை ஆட்கொள்ள, அங்கேயே நின்றால் இன்னும் என்னவெல்லாம் யோசனை வருமோ என அஞ்சியவள், தலையைக் குனிந்து கொண்டு சிரித்தபடியே கிச்சனில் புகுந்து மறைந்து தன் வேலைகளைத் தொடங்கினாள்.

பால்கனியை அடைந்த ஆகாஷ், சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிவிட்டு சித்தார்த்தின் அழைப்பை ஏற்றான். உள்ளே அகல்யா வெட்கத்தில் மிதந்து கொண்டிருக்க, இவனோ இங்கே ரகசிய ஏஜென்ட் போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

“சொல்லு சித்தார்த்! உன் அரேஞ்மென்ட் எல்லாம் பக்கா டா. அந்த வீடு, அந்தப் பெரியவர்… நிஜமாவே ஒரு நிமிஷம் நானே இது என் வீடுதான்னு நம்பிட்டேன். செம செம!” என உற்சாகத்தில் அவனைப் புகழ்ந்து தள்ளினான்.

ஆனால் மறுமுனையில் சித்தார்த் சிரிக்கவில்லை. “டேய் மங்காத்தா! கொஞ்சம் பொறுடா… கொண்டாடுற நேரமில்லை இது. அங்கிளும் ஆண்டியும் சென்னைக்கு லேண்ட் ஆகிட்டாங்க!” என்றான்.

“சூப்பர்டா! அப்படியே மெதுவா அவங்களை அடையார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு காபியைக் குடுத்துச் சமாளி,” என ஆகாஷ் ஐடியா கொடுக்க, சித்தார்த் இடையில் புகுந்தான்.

“மச்சி, ஒரு சின்ன ட்விஸ்ட் டா! உங்க அப்பா கார்ல ஏறும்போதே, ‘நீ தங்கி இருக்கிற ஏரியாவுக்கு இப்போவே போலாம், அவன் எப்படித் தங்கியிருக்கான்னு பார்க்கணும்’னு பிடிவாதமாச் சொல்லிட்டாரு. நாங்க இன்னும் 10 நிமிஷத்துல உங்க வாசல்ல இருப்போம்!” என்றான் சித்தார்த்.

ஆகாஷிற்குத் தூக்கி வாரிப்போட்டது. “டேய் டேய் சித்தா! என்னடா சொல்ற? சமையல் இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லைடா! 10 நிமிஷத்துல வந்தா நான் என்ன பண்ணுவேன்? சமைக்கிற மாதிரி இன்னும் எவ்வளவோ டிராமா பாக்கி இருக்கு. நீ அவங்களை இப்போதைக்கு அடையார் வீட்டுக்கே கூட்டிட்டுப் போ,” எனப் பதற்றத்தில் கத்தினான்.

நக்கலாகச் சிரித்த சித்தார்த், “சரி ஓகே.. அடுத்த பிளான் என்னப்பா பண்ணப் போற Mr. PA? அந்தஸ்து, கௌரவம்னு பயந்துட்டு இருக்கிற பொண்ணுகிட்ட இன்னும் எவ்வளவு தான் பொய் சொல்லப் போற?”

“ம்ம்ம்… சொல்லலாம் டா … இப்போ நடக்கிறது பார்ப்போம் .. நான் சொல்லும்போது அடையார் வீட்டில் இருந்து அவங்க கிளம்பட்டும். அதுவும் எனக்குக் காலையில அனுப்பினியே, அதே சாதாரண வண்டியை அனுப்பு. அப்போதான் அவளுக்கு நம்பிக்கை வரும். முக்கியமான விஷயம் சித்தா… எங்க அம்மாவும் அப்பாவும் மதுரையில இருந்து வர்ற மாதிரி நடிக்கச் சொல்லு. அவங்க பெரிய கோடீஸ்வரங்கன்னு தெரிஞ்சா அகல்யா இப்போவே ஓடிடுவா!” என்றான் ரகசியக் குரலில்.

சித்தார்த்தின் போன் அப்போது ஸ்பீக்கரில் இருந்தது. ஆகாஷ் பேசிய அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த அவனது தந்தை ராஜசேகர், அதற்கு மேல் அமைதியாக இருக்கவில்லை. சித்தார்த்திடமிருந்து போனைப் பறித்தவர், தன் கணீரென்ற குரலில், 

“டேய் மகனே! நான் உண்மையிலேயே மதுரைக்காரன் தான்டா… அதை மறந்துட்டியா என்ன?” என அவர் கர்ஜிக்க, ஆகாஷ் அப்படியே உறைந்து போனான்.

“டாட்… நீங்க லைன்ல இருக்கீங்களா?” என அவன் குரல் நடுங்க…

“ம்ம்ம் பின்னே இல்லாம? உன் அம்மாவும் நானும் இப்போ பெரிய பிசினஸ் மேக்னட் ராஜசேகர் குடும்பம் இல்லைடா… அசலான மதுரைக்காரங்க! வேட்டி கட்டிக்கிட்டு, துண்டைச் தோள்ல போட்டுக்கிட்டு, உன் ஆளு முன்னாடி எப்படி ‘கில்லி’ மாதிரி வந்து நிக்கப்போறேன் பாரு! நீ நடத்துற நாடகத்துக்கு நானே டைரக்டரா வர்றேன். ஆனா ஒன்னுடா… அந்தப் பொண்ணு மட்டும் என் மனசுக்குள்ள உட்காரலைன்னா, அப்புறம் இந்த மதுரைக்காரனோட ஆக்ரோஷத்தைப் பார்ப்ப!” என அவர் கிண்டலும் மிரட்டலும் கலந்த பாணியில் சொல்ல…

“டாட், அகல்யா பத்தி ஏற்கனவே சித்தா உங்ககிட்ட சொல்லி இருப்பான். அவளோட பின்னணி, அவ வளர்ந்த விதம் எல்லாமே உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு இதுல முழு சம்மதம் தானே?” என ஆகாஷ் ஒருவிதத் தவிப்புடன் இப்பொழுது கேட்டான்.

கணவனிடம் இருந்து போனை பிரித்த சிவகாமி, “டேய், இதுல என்னடா இருக்கு? என் மகனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னா, அதைத் தாண்டி எங்களுக்கு வேற என்ன வேணும்? அவ குணம் நல்லா இருந்தா போதும்டா. எங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா?” எனச் சொல்ல, ஆகாஷின் கண்களில் ஒரு மெல்லிய ஈரம் படர்ந்தது.

இருந்தாலும் ஆகாஷின் தவிப்பு அடங்கவில்லை. “மாம், ஆனாலும்… அகல்யா…” என அவன் இழுக்க, உடனே குறுக்கிட்ட சித்தார்த், “டேய் ஆகாஷ், இப்போ அவளுக்கு அண்ணனா நான் இருக்கேன்டா. அவளுக்குத் துணை யாருமில்லைன்னு நினைக்காதே. இனிமே எல்லாமே நாங்கதான்!” எனச் சித்தார்த் உணர்ச்சிவசப்பட்டுக் குரல் கொடுத்தான்.

“இல்லடா சித்தா… அவ ரொம்ப பயந்து இருக்கா. நம்ம அந்தஸ்தைப் பார்த்தோ, இல்ல நாம இவ்வளவு பெரிய இடத்துல இருக்கோம்னு உண்மை தெரிஞ்சாலோ அவ தப்பா நினைப்பாளோன்னு தான் என் கவலை,” என ஆகாஷ் தன் உண்மையான பயத்தைக் கொட்டினான்.

“அதையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்டா. நாங்களே நேர்ல வந்து அந்தப் பொண்ணுகிட்ட அன்பா பேசுறோம். நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே… உன் நாடகத்துக்குத் தகுந்த மாதிரி நாங்க வந்து நிக்கிறோம். நீ போய் அந்தப் பொண்ணு கூட இரு!” என ராஜசேகர் சொல்லிய பிறகுதான் ஆகாஷிற்கு முழு நிம்மதி வந்தது.

போனை அணைத்துவிட்டு, ஒரு நிம்மதியான பெருமூச்சுடன் வாசலில் இருந்து கிச்சனை நோக்கித் திரும்பினான் ஆகாஷ். அங்கே அகல்யா என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆவலாக மெல்ல எட்டிப் பார்த்தான்.

கிச்சனுக்குள் ஒரு அழகான குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது. அகல்யா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, பதற்றத்துடன் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் வழிந்த வேர்வைத் துளிகளைத் தன் தோளால் துடைத்துக் கொண்டவள், அடுப்பில் இருந்த பாத்திரத்தில் உப்புச் சரியாக இருக்கிறதா எனச் சோதித்துக் கொண்டிருந்தாள்.

அவளது தலைமுடி அவ்வப்போது முன்னால் வந்து விழுந்து அவளது வேலைக்கு இடையூறு செய்ய, அதை அவள் எரிச்சலுடன் ஊதித் தள்ளும் அந்த அழகு, ஆகாஷை அப்படியே சிலையாய் நிற்க வைத்தது.

ஆகாஷ் மெதுவாக உள்ளே நுழைந்தான். அவன் வருவதை உணர்ந்த அகல்யா, “பாஸ்! சீக்கிரம் வந்து உதவி பண்ணுங்க. உங்க அப்பா அம்மா மதுரைல இருந்து வர்றாங்கன்னு சொன்னீங்க… அவங்க வர்றதுக்குள்ள சமையல் ஆகணும். எனக்கு பயமா இருக்கு!” எனப் பதற்றத்துடன் சொன்னாள்.

ஆகாஷ் அவளுக்கு மிக அருகில் சென்றான். அவளது பதற்றமான கைகளைப் பற்றிக் கொண்டு, “பயப்படாதே அகல்யா… நான் உன்கூட இருக்கேன். அவங்க உன்னைச் சந்திச்ச பிறகு பிடிக்கலன்னு சொல்ல மாட்டாங்க. ஏன்னா, நீ ஒரு தேவதை!” என அவன் மெல்லிய குரலில் சொல்ல, அகல்யா அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

“ரொம்பப் புகழாதீங்க… வேலையைப் பாருங்க!” என அவள் வெட்கத்துடன் அவனைத் தள்ளிவிட, 

ஆகாஷ் சிரித்துக்கொண்டே, தன் சட்டையின் கைப்பகுதியை முழங்கை வரை மடித்துவிட்டு, தயாராக நின்றவன். “சரி மேடம், இதோ உங்க அசிஸ்டெண்ட் ரெடி! இஞ்சி, பூண்டு உரிக்கிறதுல இருந்து பாத்திரம் கழுவுற வரைக்கும் எல்லாத்துக்கும் நான் இருக்கேன். ஆனா மொதல்ல சொல்லுங்க… நம்ம மதுரை விருந்தினர்களுக்கு இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மெனு? என்னென்ன பண்ணலாம்னு பிளான் வச்சிருக்கீங்க?” என ஆர்வமாகக் கேட்டான்.

அகல்யா கையில் இருந்த கரண்டியை ஒரு கணம் தாடைக்குக் கொண்டு சென்று, ஒரு குடும்பத் தலைவி போல யோசித்தாள். அவளது கண்களில் ஒருவிதத் தெளிவும், அதே சமயம் “அத்தை, மாமா” வரப்போகிறார்கள் என்ற அந்தச் சிறு நடுக்கமும் கலந்திருந்தது.

“ம்ம்… மதுரைக்காரங்கனாலே ருசிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் பாஸ். அதனால ரொம்ப சிம்பிளா இருந்தாலும், மனசுல நிக்கிற மாதிரி இருக்கணும். இதோ என் லிஸ்ட்…” எனப் பட்டியலிடத் தொடங்கினாள்..

“முதல்ல சூடா சீரகச் சம்பா சாதம், அந்த வாசமே பாதிப் பசியைத் தூண்டும். அப்புறம் மதுரைனாலே காரசாரமான சிக்கன் சுக்கா இல்லாம எப்படி? அதை நல்லா மிளகு தூக்கலா பண்ணிடலாம்.

மெயின் டிஷ்-க்கு முருங்காய் போட்ட, ஆட்டுக்கறி குழம்பு… அதுக்கு நீங்க இப்போ அரைச்சுத் தரப்போற அந்த இஞ்சி பூண்டு விழுதும், சின்ன வெங்காயமும் தான் மெயின் சீக்ரெட்!

சைடு டிஷ்க்கு மொறுமொறுன்னு உருளைக்கிழங்கு வறுவல் அப்புறம் முட்டை தொக்கு. கடைசியா செரிமானத்துக்கு நல்லா இடிச்சுப் போட்ட மிளகு ரசம்… கூடவே கெட்டியான தயிர்!”

பட்டியலைக் கேட்டதுமே ஆகாஷின் நாக்கில் நீர் ஊறியது. “அப்பாடா! மெனுவே சும்மா அதிருதே… இதையெல்லாம் சாப்பிட்டா எங்க அப்பா அப்புறம் மதுரையை மறந்துட்டு இங்கேயே செட்டில் ஆகிடுவாரு போலயே!” என அவளைக் கிண்டல் செய்தான்.

“ரொம்பப் பேசாம வேலையைப் பாருங்க பாஸ்! மொதல்ல அந்தச் சின்ன வெங்காயத்தை உரிச்சுத் தாங்க,” என அவள் ஒரு கூடையை அவனிடம் நீட்டினாள்.

இருவரும் வேலையில் இறங்கினார்கள். கரண்ட் இல்லாத அந்த வெப்பத்தில், கிச்சன் ஜன்னல் வழியே வந்த காற்றில் மல்லிகைப் பூக்களின் வாசனையும், தாளிக்கும் மணமும் கலந்திருந்தது. ஆகாஷ் வெங்காயம் உரிக்கும்போது கண்கள் கலங்க, அகல்யா தன் முந்தானையால் அவனது கண்களை மென்மையாகத் துடைத்துவிட்டாள்.

“பாத்தீங்களா… உங்களுக்காக நான் அழுவுறேன்,” என ஆகாஷ் கண்களைச் சிமிட்ட,

“உங்களுக்கு நடிக்கத்தான் தெரியும்னு எனக்குத் தெரியும்,” என அகல்யா அவனது கன்னத்தை மெல்லக் கிள்ளினாள்.

சமையல் வேகமெடுக்கத் தொடங்கியது. பாத்திரங்கள் மோதும் சத்தமும், அவர்களின் மெல்லிய சிரிப்பொலியும் அந்தச் சிறிய வீட்டை ஒரு முழுமையான வீடாக மாற்றியிருந்தது. அகல்யாவுக்குள் இருந்த அந்த பயம், இந்தச் சமையல் புகையில் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருப்பதை அவளே உணரத் தொடங்கினாள்.

அடுத்த அத்தியாயத்தில் நாமளும் அவர்களுடன் சாப்பிடலாம் ..

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page