அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்

அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்

கொடைக்கானலின் குளிர் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது.

பனித்திரை விலகி சூரியனின் மெல்லிய கிரணங்கள் மரக்கிளைகளின் ஊடாக ஊடுருவி தரைக்கு வந்தன.
மலரும் மொட்டுக்களில் வாசம் சுற்றிலும் பரவ, பூக்களின் புது வாழ்வு வானம் பறக்கும் வாசகர் வந்து அமர மனத்தை கொண்டாடியது, கொடைக்கானல் நிலப்பரப்பு. ஆர்யனின் வாழ்க்கையிலும் ஒரு சிறு மாற்றம் தெரிய ஆரம்பித்திருந்தது.

முன்பெல்லாம் காலையில் எழுந்தால் சத்தம் கேட்கவில்லையே என்ற கோபம் வரும். எப்போதும் ஏதாவது ஒரு நாதத்தை கேட்டே வளர்ந்தவனுக்கு எந்த சத்தமும் இல்லாமல் இருக்கும் நிசப்தம் எப்படிப்பட்ட கொடூரம்? ஆனால் இப்போது, எழுந்தவுடன் அவன் கண்கள் தேடுவது பக்கத்து வீட்டுத் தோட்டத்தைத்தான். அங்கே யாழினி இருப்பாள். யாழினி மேல் அப்படியென்ன தேடல்?

அது அவளின் செயல்கள் மூலம் ஆர்யனை கவர்ந்து இருந்தது. அவள் ஒருபோதும் அவசரமாக எதையும் செய்வதில்லை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது முதல், பறவைகளுக்குத் தானியம் வைப்பது வரை அனைத்திலும் ஒரு நிதானம் இருந்தது. இருந்த போதிலும் அவள் தன்னை பராமரிக்கும் குணம் சொல்லவே வேணாம்!

வகிடு எடுக்காத கேசம், ஒரு கருத்த அருவி போல எப்போதும் அவள் உச்சி முதல் பின் பாகத்தை கொடிய கண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு கேடயம் போல நீண்டு வளர்ந்த கூந்தல், கண்களில் நிரந்தரமாய் குடி கொண்டிருக்கும் சாந்தம். நடக்கும் நடையில் கூட பூமிக்கு வலிக்காத வகையில் மென்மையான பயணம், என எல்லாம் நேர்த்தியாக இருக்கும் பெண், பெண் என்றாலே நேர்த்தி தானே என்று புரிய வைத்தாள் யாழினி.

ஆர்யனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை, சிறுவயது முதல் இசையும், இசை குரு “சிவநந்தர்” மட்டுமே வாழ்க்கை. பெண் வாசம் என்றால் ராகத்தில் மட்டுமே அறிய முடியும். உதாரணமாக தோடி(TODI), கௌரி(GAURI), தனாஶ்ரீ(DHANASRI), பஹர்(BAHAR), பஞ்சரி(PANJARAI), பைரவி(BHAIRAVI), போன்ற ராகினியாக விளங்கிடும் ராகங்கள் மூலமே பெண் எனும் பெயரே ஆர்யனுக்கு தெரியவிக்கப்பட்டது. இசை பள்ளியில் அப்படிப்பட்ட ஒழுக்கம். எல்லாம் இசை குரு சிவநந்தரையே போய் சேரும். சிவநந்தர் ஒரு இசைஞானி இசை மூலம் இறைவனை உணர முடியும் எனும் கோட்பாட்டினை கொண்டவர். ஏதும் இல்லா ஆர்யனுக்கு இசை மூலம் ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இன்று ஆர்யன் ராக்ஸ்டார் ராக, ராகம் பயிற்று வித்தவர்.

அன்று ஆர்யன் தனது கிதாரை எடுத்துக்கொண்டு யாழினியின் வீட்டிற்குச் சென்றான். வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தாளம் உருவாவதை ஆர்யன் உணர்ந்தான். இதே தாளம் மென் உணர்வுகளாய் பரிணமித்து அவளை அடையாதா? அல்லது அவளுக்கு புரியாதா? யாரிடமும் இப்படி ஒரு உணர்வை, ஆர்வத்தை ஆர்யன் உணர்ந்ததில்லை.

இப்போது உள்ள தனிமைக்கு இந்த ஆர்வமே ஆறுதல். சுற்றிலும் பூச்செடிக்கு மத்தியில், பறவைகளின் கொஞ்சல் மொழிக்கு நெருக்கத்தில் யாழினி வாசலில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். அந்த புத்தகத்தின் பெயர் “மௌனத்தின் விலை”

உண்மையில் மௌனத்தை விலை பேச ஆர்யன் வந்துகொண்டு இருக்கிறான். விலை மதிப்பற்ற காதலை பெற மௌனத்தை விலை பேசுவது நியாயம் போல ஆர்யனுக்கு தோன்றியிருக்கலாம். ஆர்யனைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. அவனது கிதாரைப் பார்த்ததும், ஆர்வமாக உள்ளே வா என்று சைகை காட்டினாள். வரவேற்கும் தோரணை வெறும் வீட்டிற்குள் மட்டும் அல்ல, இதயக் கூட்டிற்குள்ளும் வரவேற்கலாம் என கவிதையை மனதிற்குள் உளறிக்கொண்டான்.

தட்டுத்தடுமாறி, சற்றே உரத்த குரலில்..

“யாழினி, நான் உனக்கு ஒரு விஷயம் காட்டப்போறேன்,” என்றான் ஆர்யன்.

அவன் பேசும் சத்தம் அவனுக்கே கேட்கவில்லை என்றாலும், அவள் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது.

“என்ன காட்டப்போகிறான்?” என்ற கேள்வியோடு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி, அவனுக்குள் இருக்கும் ஒரு துள்ளல், யாழினையையும் துள்ள செய்தது, ஆனால் பெண்மையை அடை காக்க எண்ணி, அமைதியுடனே அவனே ரசித்துக்கொண்டு இல்லை, பார்த்துகொண்டு இருந்தாள்.

ஆர்யனோ அன்று தான் நடக்க பழகியது போல அங்கும், இங்கும் நடந்து அவளுக்கு முன் இருந்த ஒரு மர நாற்காலியில் அமர்ந்தான். யாழினியை அவனுக்கு மிக அருகில், தரையில் அமரச் சொன்னான். அவளும் ஏதும் கேட்காமல், மௌனத்தின் விலை புத்தகத்தை ஓரம் வைத்துவிட்டு சற்று மெல்லிய புன்னகையுடன் அவன் அருகில் அமர்ந்தாள். சுற்றி இருந்த பறவைகள் அனைத்தும் அன்பின் மொழியை கூச்சலாய் அரங்கேற்றியது. அவளது வலது உள்ளங்கையை வாங்கி, கிதாரின் மரப்பகுதியின் (Body) மீது வைத்தான். இதுவரை கிதார் மீது கை வைக்காத அவளது விரல்களுக்கு, சிறுவயது முதல் ஆர்யன் நேசித்து, வாசித்த கிதாரைத் தொட்டதும் அவனின் உணர்வின் மொத்தத்தையும் நெருங்கியது போல ஒரு உணர்வு, அந்த உணர்வின் உண்மை முழுதும் அறியும் முன், அவளது இடது கையை அவனது இதயத் துடிப்பை உணரக்கூடிய இடத்தில் வைத்தான்.

யாழினுக்கு மொத்தமாக தூக்கிவாரிப் போட்டது போல
உலகையே மறந்து, சுற்றி நிகழ்ந்த பூக்களின் வாசத்தையும், பறவைகளின் சுவாசத்தையும் மறந்த யாழினி புரியாமல் அவனைப் பார்த்தாள். ஆர்யன் புன்னகைத்துவிட்டு, கிதாரின் கம்பிகளை மீட்டத் தொடங்கினான்.

அவன் பாடவில்லை. ஆனால், அவனது விரல்கள் அந்த கிதாரின் நரம்புகளில் ஒரு மாயாஜாலத்தைச் செய்தன. ஆர்யன் இப்போது அந்த ஒலியைத் தன் காதுகளால் கேட்கவில்லை; மாறாக, அவனது இதயம் எந்த வேகத்தில் துடிக்கிறதோ, அதே வேகத்தில் அவனது விரல்கள் இசைத்தன.

யாழினியின் கண்கள் விரிந்தன. கிதாரின் மரப்பகுதி வழியாகப் பாயும் அந்த மெல்லிய அதிர்வுகள் அவளது உள்ளங்கையில் ஒரு மின்னலைப் போலப் பாய்ந்தன. அவனது இதயத் துடிப்பும், அந்த இசையின் தாளமும் ஒன்றாக இணைவதை அவள் உணர்ந்தாள். அது ஒரு விசித்திரமான அனுபவம். வார்த்தைகள் சொல்ல முடியாத ஒரு காதலை, அந்த அதிர்வுகள் அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தன.
யாழினி மெல்லக் கண்களை மூடினாள். அவளது இதழ்கள் ஒரு மெல்லிய புன்னகையில் விரிந்தன. ஆர்யன் இசைப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அவள் தன் சிலேட்டை எடுத்து எழுதினாள்: “இந்த இசை எனக்குக் கேட்கிறது ஆர்யன். காதுகளால் அல்ல… என் ஆன்மாவால்.”

ஆர்யன் நெகிழ்ந்து போனான். “யாழினி, நான் இவ்வளவு காலமா சத்தத்துக்காக ஓடிக்கிட்டு இருந்தேன். ஆனா, சத்தம் இல்லாத இந்த மௌனத்துல தான் உண்மையான இசை இருக்குன்னு இப்பதான் புரியுது,” என்றான்.

இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய அமைதி நிலவியது. இது காதல் பூப்பதற்கான அரிய தருணம் என இருவரும் உணர்ந்தனர். இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் அசையாமல், கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். கொடைக்கானல் மேகம் சூரிய ஒளி கூட அவர்களை தொந்தரவு செய்யக்கூடாதென குடை பிடித்தது. தென்றலும் சத்தமில்லாமல் அவர்களை சுற்றி சுழன்று வீசியது. இருவருக்குள்ளும் அந்த ஆழ்ந்த அமைதியில் ஒரு இனம் புரியாத காதல் மலர்ந்திருந்தது.

யாழினி என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை எழுந்து சென்று ஒரு ரோஜாப் பூவைப் பறித்து வந்து அவனிடம் நீட்டினாள். எதற்கு இப்படி செய்கிறோம் என்ற எண்ணம் அவளுக்குள் மேலோங்கி நின்றாலும் இது சரியே என்று உள்ளம் ஆசுவாசமானது.

“நன்றி யாழினி… உன்னோட இந்த மௌனம் தான் எனக்குப் பெரிய மருந்தா இருக்கு. ஆனா, நீ ஏன் பேசமாட்டேங்குறன்னு எனக்கு இன்னும் தெரியல. உன் குரல் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க எனக்கு ஆசையா இருக்கு,” என்று ஆர்யன் மென்மையான குரலில் சொன்னான்.

யாழினியின் முகத்தில் ஒரு நிமிடம் ஒரு இருண்ட மேகம் வந்து போனது. அவளது கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்தன. ஏதோ ஒரு பயம் அவளை ஆட்கொள்வது போல ஆர்யனுக்குத் தெரிந்தது. அவள் பதில் எழுதாமல், சட்டென்று எழுந்து உள்ளே சென்றாள். அறை முழுவதும் யாழினியை சுற்றி கைதட்டும் கரகோஷம் கேட்பதை உணர்ந்தாள். உடல் செல்கள் எல்லாம் புல்லரிக்க, தொண்டையில் உமிழ்நீரை விழுங்கி குரலை பட்டை தீட்டிக்கொண்டாள். அவரவர் இருக்கையில் அமர்ந்தவாறு அனைவரும் யாழினியை ஆர்வத்தோடு வரவேற்றனர்.

ஆர்யன் குழப்பமடைந்தான். கையில் அவள் கொடுத்த பூவின் வாசம் கூட இன்னும் குறையவில்லை அதற்குக்குள் அவளின் மனநிலையை எதற்கு என் வார்த்தை மாற்றியது? “ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், சிறிது நேரத்தில் யாழினி மீண்டும் வந்தாள். அவள் கையில் ஒரு பழைய புகைப்படம் இருந்தது.

அதில் ஒரு சிறிய பெண், கையில் ஒரு மைக்கை பிடித்துப் உரக்க பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஒரு பெரிய விருது இருந்தது. அந்தப் படத்தின் கீழே ‘யாழினி – மாநில அளவிலான பேச்சுப் போட்டி வெற்றியாளர்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆர்யனின் கண்களில் ஒரு மின்னல் கீற்று வீசியதை போல அப்படி ஒரு பிரகாசம், கூடியிருந்த மக்களின் ஒருவர் விசில் அடிக்க, யாழினி தனது உரையைத் தொடங்கினார்.

“ மக்களால் உருவாக்கப்பட்ட இந்த மக்களாட்சிக்கு, கலங்கம் என்றால் அது தான் ஊழல். மக்கள் அன்றாட உழைத்து கொடுக்கும் வரிப்பணத்தை கொண்டு மக்களுக்கு சேவை செய்ய எதற்கு தேவையில்லாத ஊழல்? சுதந்திரம் வாங்கிய தியாகிகள் கூட வெட்கப்படும் நிலையில் நம் நாடு உள்ளது! வெள்ளைக்காரனுக்கு எதிராக போராடி பெற்ற சுதந்திரம் எதற்கு? வரிச் சுமை, அடிமைத்தனம், பேச்சு உரிமை, கருத்து சுதந்திரம் இதில் இப்போது என்ன மாற்றம் இருக்கிறது? ஏன் பெற்ற கல்விக்கு கூட சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லையே. இதற்கு என்ன காரணம் லஞ்சம் வாங்கும் ஊழல் வாதிகள், பேராசைக்காரர் கோடி நிற்கும் சட்டசபை, மக்களின் உண்மையான பணி என்ன என்பதை மறந்து பர,பரப்போடு வைத்திருக்கும் பத்திரிக்கை, அதற்கு முன் எலும்பு துண்டுகளை வீசும் ஆட்சியாளர்கள். இன்னும் இப்படியே பேசிக்கொண்டு சென்றால் பொது மக்களின் அமைதியை கெடுத்துவிட்டேன் என்று என் மீது வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்று தன் உரையை முடித்ததும். கைதட்டகள் காற்றை கிழித்தது. ஒரு மேடை பேச்சு என்பதை தாண்டி குடிமக்களின் தலைமை என்று தலைமை ஆசிரியர் பூங்கொத்தை பரிசளித்தார்.
கூடியிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோரும் வாழ்த்தும் வகையில் யாழியினின் உரை இருந்தது. பள்ளியில் கூடியிருந்த மக்கள் யாழினியை பாராட்டி கொண்டாடினர்.

ஆர்யன் ஆச்சரியமாகப் பார்த்தான். “அப்போ உன்னால பேச முடியும்… ஆனா நீ ஏன் பேசல?”

யாழினி மெல்லத் தன் சிலேட்டில் எழுதினாள்: “பேசுவதை விட மௌனமாக இருப்பது சில சமயம் உயிரைக் காக்கும்.” என்று எழுதும் போதே அவளுக்கு சில நினைவு வந்து போனது. அவளது அண்ணன் பிரகாஷ் தாக்கப்படுவது, அதே நேரம் சில குண்டர்கள் யாழினியின் கழுத்தை நெறிப்பது போன்ற பதற்றமான நினைவுகள் அவளை மேலும் பதற்றமாக்கி கை நடுங்க எழுதி முடித்து ஆர்யனிடம் நீட்டினாள்.

அந்த வரிகள் ஆர்யனை உறைய வைத்தன. அவள் ஏதோ ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறாள் என்பது அவனுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அவள் சாதாரணமானவள் அல்ல; ஏதோ ஒரு ரகசியத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நிழல் அவள்.

ஆர்யன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். “உனக்கு என்ன பயம்னாலும் என்கிட்ட சொல்லு யாழினி. நான் உன் கூட இருப்பேன்,” என்றான் உறுதியாக.

யாழினி அவன் கண்களைப் பார்த்தாள். முதல் முறையாக அவளது கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தன. அந்த மௌனமான மதிய பொழுதில், இருவரது இதயங்களும் ஒன்றையொன்று இறுக்கமாகத் தழுவிக் கொண்டன. அவர்களை ஆசீர்வதிப்பது போல சூரிய ஒளியும் மென்மையாக அவர்கள் மேல் ஒளிர்ந்தது. மௌனத்தின் விலை புத்தகத்தை தென்றல் காற்று, யாழினியின் அனுமதி இன்று அதன் போக்கில் படித்துக்கொண்டு இருந்தது. புத்தகத்தின் பக்கங்கள் தென்றலால் திருப்பப்பட்டன. யாழினியின் மௌனம் ஆர்யனால் கலைக்கப்படுமா? இல்லை யாழினியின் பள்ளி பருவ கதை கேட்டு புரட்சி பெண் இவளா? அல்லது என் மனதை புரட்டி போடும் புதுமைப் பெண் இவளா? என ஆயிரம் கேள்விகள். ஏதோ ஒரு காரணத்தால் செவி திறன் இழந்தவன், யாழினியின் உறவால் இதயத்தையும் இழப்பானா?

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page