நிழல் – 7

அதிகாலை 5 மணி. பெங்களூர் நகரம் ஒரு மெல்லிய பனித்திரைக்குள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் படிந்திருந்த பனித்துளிகள், விடுதி அறையின் மங்கலான வெளிச்சத்தில் கண்ணீர் துளிகளைப் போலத் தெரிந்தன. 

மரங்களில் இருந்த பறவைகள் இன்னும் விழிக்கவில்லை. எங்கும் ஒரு நிசப்தமான, அதே சமயம் ஒரு கனமான அமைதி நிலவியது. அந்த விடுதியிலும் அதே அமைதி எல்லா அறைகளையும் ஆக்கிரமித்திருந்தன. 

ஆனால் பவித்ராவின் அறையில் மட்டும் ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது. அறையின் மின்விசிறி ஒரு சீரான ஓசையுடன் சுழன்று கொண்டிருக்க, அந்த அதிகாலைக் குளிரிலும் பவித்ராவிற்கு மட்டும் உடல் தகிக்கத் தொடங்கியது.

பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆனால் அவளது ஆழ்மனம் அமைதியாக இருக்கவில்லை. அவளது மூளைக்குள் ஏதோ ஒரு பழைய நினைவுகளின் சிதைந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் ஓடின.

மௌனமாக நடந்து கொண்டிருந்த அந்த போரில், அவளது ஆழ்மனதில் புதைந்து கிடந்த, பூட்டபட்டிருந்த  நினைவுகள், இப்போது அந்த பூட்டுகளை உடைத்துக் கொண்டு மேலே வர முயற்சித்துக் கொண்டிருந்தன.  

அவளது புருவங்கள் பயத்தினால் ஒன்றோடொன்று கட்டிக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் லேசாக நடுங்கின. கண்கள் இறுக மூடியிருந்தன – ஆனால் அந்த மூடிய இமைகளின் கீழ், கண் விழிகள் வேகமாக அசைந்து கொண்டிருப்பதை அந்த இமைகளின் நடுக்கத்தில் காண முடிந்தது.

அவள் நெற்றியில் வியர்வை மணிகள் உருவாகி, மெல்ல கன்னங்களின் வழியே உருண்டு தலையணையில் ஈரமாக படிந்தன. அவள் விரல்கள் படுக்கை விரிப்பை வலிக்கும் அளவுக்கு இறுகப் பற்றிக் கொண்டிருந்தன. வெண்மையாக மாறிய அவளது கை முட்டிகள் அந்த பிடியின் வலிமையை காட்டின.

அவளது மூளை ஒவ்வொரு காட்சியாக அவள் மனக்கண்களுக்கு திரையிட ஆரம்பித்தது. அதில் அவள் உணர்ந்தது, ஒரு ஆணின் அரவணைப்பு. அவனது கதகதப்பான அந்த அணைப்பில் அவள் காதலை மட்டுமில்ல, ஒருவித வழியையும் உணர்ந்தாள். அந்த கதகதப்பு, அவள் மனதில் பதியும் முன்பு காட்சிகள் மாற ஆரம்பித்தன.   

ஒரு மெல்லிய ஒளி அவள் கண்களை ஊடுருவியதை போல அவள் உணர, அதை உற்றுப் பார்த்தாள். அவன் கைகளில் மின்னியது அந்த சிவப்பு நிற கிரிஸ்டல் இதயங்கள். 

அதை அவன் பவித்ராவின் கைகளுக்குள் புதைத்தவன், “இது நம்ம காதலுக்கான அடையாளம்.. உன் இதயமும் என் இதயமும் காதல் என்ற பிணைப்பு எப்படி பிணைத்து வைச்சுருக்கோ.. அதே போல தான் இதுவும்.. இத பத்திரமா  வச்சுக்கோ..” என்று மெல்லிய குரலில் கூறினான். அந்த குரல் தெளிவாக இல்லை. மங்களாக பவித்ராவின் காதுகளில் ஒலித்தது. ஆனாள் அது ஆழமாக ஒலித்தது. அந்த குரலை முழுமையாக அவள் உணரும் முன்பு, காட்சிகள் மீண்டும் மாற ஆரம்பித்தன.  

ஒரு பிரகாசமான ஒளி அவளது கண்களை கூசியது. தெளிவாக அவள் எதையும் பார்க்க முடியாமல் தவித்த போது அவள் காதுகளை கிழித்தது, அந்த வாகனத்தின் ஹாரன் சத்தமும்  சக்கரங்கள் சாலையில்  அசுரவேகத்தில் தேய்ந்த சத்தமும். இவைகளைவிட ஒருபடி அதிகமான சத்தத்தை எழுப்பியது கௌதமின் குரல். 

“பவித்ராஆஆஆஆ …….”

பயத்தில் கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அதன் பின் அவள் கேட்டது அவளுடைய சொந்த குரல். வலியிலும் பயத்திலும் அலறித்துடித்த்தாள். 

“ஆஆஆஆஆ..”

பவித்ரா திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பயத்தில் வேகமாக மூச்சிறைத்தாள். அவளது இதயம், கூண்டுக்குள் சிக்கிக் கொண்ட பறவையைப் போல படபடவென அடித்துக் கொண்டது. கன்னங்களில் கண்ணீர் வழிந்திருந்தது.

அவள் இருட்டில் எதையோ தேடுவது போலத் துழாவினாள். தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிய சில நொடிகள் பிடித்தது. அது அவளது விடுதி அறைதான். அருகே ஆர்த்தி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அந்தக் கனவு… அந்தப் பிரகாசமான வெளிச்சம்… அந்த அலறல்… அனைத்தும் இன்னும் அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் மெல்லத் தன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். தலைவலி மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.

பவித்ரா தன் மார்பின் மீது கைகளை வைத்துக்கொண்டு, வேகமாக ஏறி இறங்கும் மூச்சைச் சீராக்க முயன்றாள். இருட்டில் அறையின் சுவர்கள் அவளை நோக்கி நெருங்கி வருவது போன்ற ஒரு பிரமை. அவளது உள்மனம் அவளிடம் ஆயிரம் கேள்விகளை அடுக்கத் தொடங்கியது.

‘என்ன இது..? இதெல்லாம்… என் பழைய மெமரிஸா..? யார் அந்த பையன்..? அவன் தான் கீச்செயின எனக்கு கொடுத்தானா..? அது தான் நம்ம காதலுக்கான  அடையாலம்ன்னு சொன்னானே..! அப்போ.. எனக்கு பாஸ்ட்ல ஒரு லவ் இருந்ததா..?  அவனதான் என் மனசு தேடுதா..?’ என்று எண்ணியவள் கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தாள். 

அவனது அரவணைப்பால் உண்டான கதகதப்பை இப்போதும் உணர்ந்தாள் பவித்ரா. வேகமாக எழுந்து ட்ராயரில் அவள் பதுக்கிய அந்த கீச்செயினை எடுத்தாள். அவளது உள்ளங்கையில் பளபளத்த அந்த இரட்டை இதயங்கள் மீண்டும் அவள் இதயத்தில் ஒரு பாரத்தை அளித்தது. கண்களில் கண்ணீர் காரணமே தெரியாமல் அருவியாக வழிந்தோடியது. 

‘இத பத்தி ஏன் யாருமே என் கிட்ட சொல்லல..? ஆக்சிடென்ட் ஆன இடத்துல கௌதமோட குரல் கேட்டுதே.. ஆனா, ஆக்சிடென்ட் நடந்தப்போ.. என் கூட யாருமே இல்லனுல சொன்னாங்க..! அப்போ.. என் வீட்ல எல்லாரும் பொய் சொல்றாங்களா..? அத பத்திதான்… பேசணும்னு லீலா சொன்னாளா..? இப்போ லீலா எங்க..? அவ ஏன் போன் அட்டென்ட் பண்ண மாட்டிங்கிறா…? என்ன லவ் பண்ண… அந்த பையன் எங்க..?’ என்று மேலும் அவளை குழப்பங்கள் ஆட்கொள்ள, மூச்சு முட்டுவதை போல உணர்ந்தாள் பவித்ரா.

சில நிமிடங்கள் தனது கைகளில் அந்த இதயங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டு தனது படுக்கையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. பின்பு அந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து தப்பிச் செல்ல எண்ணி, மெல்ல எழுந்து அந்த விடுதியை விட்டு வெளியேறினாள். 

அந்த சமயம் அரைகுறை விழிப்போடு கிடந்த விடுதியின் செக்யூரிட்டி அவளை தடுத்து, “இந்த நேரத்துல எங்கம்மா போற..?” என்று கேள்வி எழுப்ப, “வாக்கிங்.. போகபோறே..” என்று கூற அவரும் அனுமதித்தார். 

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த சாலையில் சுயநலமே இல்லாமல், கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள் பவித்ரா. அவளது விரல்களுக்குள் அந்த இரு இதயங்கள் துடித்துக் கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

‘யாரை நம்புவது..? எதை தேடுவது..? எங்கு செல்வது..?’ என்று எதுவும் புரியாமல் பித்து பிடித்தவளை போல நடந்தவளின் கால்கள் ஒரு இடத்தில் நிலைகொண்டன. காரணமே இல்லாமல் அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. புரியாமல் தன் பார்வையை பக்கவாற்றில் திருப்பினாள் பவித்ரா. 

அந்த பூங்கா ஆள் நடமாற்றமே இல்லாமல் வெறுச்சோடி கிடந்தது. தன்னை மறந்து அந்த பூங்காவினுள் நுழைந்தாள் பவித்ரா. அங்கே போடப்பட்டிருந்த கல் நாற்காலியில் அமர்ந்தவள் மேலும் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அந்த இதயங்களை தன் இதயத்தின் மேல் வைத்து அழுத்தியவள் தாங்க முடியாத வலியில் மௌனமாக கதற ஆரம்பித்தாள். 

அந்த சமயம் சிவாவின் குரல் கேட்டது. “நீ ஏன் அழுதுகிட்டு இருக்குற..?”. சிவாவின் குரல் கேட்டதும் பவித்ரா விக்கித்து நின்றாள். தன் இதயத்தின் மேல் அழுத்திப் பிடித்திருந்த அந்தப் படிக இதயங்களை மெல்லத் தளர்த்திவிட்டு, கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே, அதிகாலைப் பனிமூட்டத்திற்கு நடுவே சிவா நின்று கொண்டிருந்தான். அவனது முகம் ஒருவிதப் பிரகாசத்துடன் மின்னியது. அவனது கண்கள் பவித்ராவின் கண்ணீரைப் பார்த்துத் துடித்தன. அவன் ஒரு அடி முன்னே வந்தான், ஆனால் அவனது கைகள் அவளைத் தொடத் தயங்கி அவனது பக்கவாட்டிலேயே நின்றன.

“எதுக்காக இப்போ… இப்படி அழுதுகிட்டு இருக்குற…?” – அவனது குரலில் அத்தனை வேதனை தெரிந்தது. ஆனால் பவித்ராவால் அந்த சமயம் அவனது வேதனைகளை உணர முடியவில்லை. பவித்ரா தன் கண்ணீரைத் துடைக்காமலேயே அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

“எனக்கு தெரியல..! நா தொலச்சவங்கள நெனச்சு நா அழுற.. ஆனா அது யாருன்னு எனக்கு தெரியல.. அவங்கள எங்க போய் தேடுறதுன்னு தெரியாம நா அழுறே..” என்று கூறியவள் மேலும் அழ ஆரம்பித்தாள். 

சிவாவால் தன் நிலா இவ்வாறு அழுவதை கான முடியாமல் தவித்தான். ‘நீ தேடுபவன் நான் தான்.. உன் அருகில் தான் இருக்கிறேன்’ என்று கூறி அவளை தன் மார்போடு அள்ளி அணைத்துக் கொள்ள அவன் கரங்கள் துடித்தன. ஆனால் அவனால் முடியவில்லை. வலி நிறைந்த கண்களோடு அவளை பார்த்தவாறே நின்றிருந்தான் சிவா. 

அவர்கள் இருவரின் தவிப்பையும் காண முடியாத அந்த இருள், சூரிய வெப்பத்தால் மெல்ல கரைய ஆரம்பித்தது. பவித்ராவின் வலியையும் கரைக்க முயன்ற அந்த சூரியனால் அவள் கண்களில் வழிந்த கண்ணீரை கூட கரைக்க முடியாமல் தோற்று நின்றது. 

அவளை அருகில் ஆனால் அவளிடமிருந்து சற்று விலகி  அமர்ந்த சிவா, “உன் மனசு இந்த அளவுக்கு அவன  தேடுதுனா.. அவன் உன்ன விட்டுட்டு எங்க போக போறான்.. உன் பக்கத்துல தான் இருப்பான்.. உன்ன பாத்துகித்துதான் இருப்பான்…” என்று கூறினான். 

இதை கேட்ட பவித்ரா, “இருக்கலாம்.. அவன் என் பக்கத்துல இருந்தா கூட.. அத உணர முடியாத ஜடமா ஆகிட்டே…. அந்த ஆக்சிடென்ட்.. அது.. என் கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சிடுச்சு..” என்று கூறி கவலைபட்டாள் . அவளது வேதனையில் பங்குக்கொள்ள முடியாமல், விதி தன்னை அவளிடம் இருந்து இவ்வாறு விலக்கி வைத்துவிட்டதே என்று எண்ணி கலங்கினான் சிவா. 

சில நிமிடங்கள் பவித்ராவின் கண்ணீரிலும் சிவாவின் மௌனமான வலியிலும் கழிந்து. பின்பு மெல்ல தன் கண்களை துடைத்துக் கொண்டவள், “நான்தான்.. எனக்கு பிடிச்சவங்களோட நினைவுகள தொலச்சுட்டு, இப்படி தனியா உக்காந்து அழுதுகிட்டு இருக்குறே.. நீ.. இந்த நேரத்துல.. இங்க என்ன பண்ற..?” என்று பவித்ரா கேட்டாள். 

அவளை கண்டு மெல்லிய புன்னகையே உதிர்த்த சிவா, “நானும்.. ஒருத்தர மிஸ் பண்றே..” என்று கூறினான். “என்னது நீயும் மிஸ் பண்றியா..? யாரது..?” என்று ஆர்வமாக, தன் கவலையையும் மறந்து கேட்டாள் பவித்ரா. 

சில வினாடிகள் அவளை உற்று பார்த்தவன் உதடுகள் மெல்ல உச்சரித்த அந்த பெயர், “என் நிலா..”. இதை கேட்டதும் பவித்ராவிற்கு இனம் புரியா ஒரு உணர்வு உண்டானது. விபத்தில் இருந்து கண் விழித்த பவித்ராவிற்கு, தன் பெயரே அந்நியமாக தோன்றிய நிலையில் ‘நிலா’ என்ற பெயர் அவளது உயிருக்கு மிக நெருக்கமாக தோன்றியது. 

அந்த பெயரை பவித்ராவின் உதடுகள் மெல்ல அசைபோட, அவள் தன் கடந்த காலத்திற்குள் தொலைய ஆரம்பித்தாள்.  அந்த சமயம் தொலைவில் ஆலய மணி ஒலிக்கும் சத்தம்  அவளை நிகழ்காலத்திற்கு கொண்டுவர, “ஐய்யய்யோ.. நா ஹாஸ்டல விட்டு வெளில வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. ஆர்த்தி என்ன தேடிக்கிட்டு இருப்பா.. நா கெளம்புறே.. பாய்..” என்று கூறிக்கொண்டே ஓடினாள் பவித்ரா. 

அவள் கண்களில் இன்னும் கண்ணீர் காய்ந்திருக்கவில்லை. கன்னங்களில் ஈரம் படிந்திருக்க, அவசரமாக அதை துடைத்துக் கொண்டாள். அந்தப் படிக இதயங்களை மீண்டும் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, விடுதியை நோக்கி ஓட ஆரம்பித்தாள். 

சில அடிகள் ஓடிவிட்டு, திடீரென்று திரும்பினாள். சிவாவை ஒருமுறை பார்த்தாள். “ஹேய்… ஃப்ரீயா இருக்கும் போது மீட் பண்ணலாம்… எனக்கு உன் நிலாவ பத்தி சொல்லு… அவள பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு…” என்று கூறிவிட்டு மீண்டும் ஓடினாள். சிவா அங்கேயே நின்றான். அவளது உருவம் மெல்ல மெல்ல மறைந்து, இறுதியாக விடுதியின் வாசலில் மறைந்தது.

அவளை பார்த்தவாறே நின்றிருந்த சிவா, “உன்ன பத்தி நீயே கேட்குறீயே நிலா… நா என்ன சொல்றது…?” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். 

அந்த சமயம் சூரியன் முழுவதுமாக உதயமாகி, உலகம் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. ஆனால் சிவாவின் உலகம் இன்னும் இருளிலேயே உறைந்து நின்றிருந்தது.

                                                                                                             -நிழல்கள் தொடரும்.. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page