அத்தியாயம் -17

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 17

 

என்னோட மனைவி எனக்கு எல்லாமே பார்த்துச் செய்யறதால் அவள் என்மேல் ரொம்ப அன்பு வச்சுருக்கான்னு நினைச்சேன். நம்மளுக்கு எல்லாம் செய்யறான்னு நினைக்குற நாம அவங்களுக்கு எல்லாம் செய்யணும். எமோஷனலாகச் சப்போர்ட் செய்யணும் அப்படிங்கிறதை யோசிக்கறதே இல்லை. நிறைய பேரு காசு கொடுக்கிறோம். அதான் பார்த்துக்கிறதுன்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு நீங்கக் கொடுக்கிற நேரமும், அன்பும் தேவைன்னு புரிஞ்சுக்கிறது இல்லை.  
            -ஆதி.

“இப்படியே தின்னுட்டு இருந்தால் உடம்பு ஏறுமே தவிர குழந்தை பொறக்காது. முதல்ல வாயைக் கட்டு முகி.” என வந்து விழுந்தன மாதவியின் வார்த்தைகள்.

சிந்தாமல் சிதறமால் முகியின் இதயத்தை நோக்கி வீசப்பட்ட விஷ அம்பு தடவிய வார்த்தைகள் அவள் மனதைக் குத்திக் கிழித்துச் சென்றது. சுருக்கென்று தைத்த வார்த்தைகள் விழிகளில் நீரை வர வைக்க, அதை அப்படியே துடைத்துக் கொண்டாள்.

“இவளைப் போய் எம்பையன் கட்டிட்டு வந்தானே! இதில் இவளுக்கு இருக்குற கடனை வேற அடைச்சான். நல்லதா தின்னாதானே நல்லபடியா குழந்தை பிறக்கும். ஒரு வருஷம் பிறக்காத அப்பவே எனக்குத் தோணிருக்கணும்.” என முணுமுணுத்துக் கொண்டே சென்றார்.

முகி குழந்தைப்பேற்றுக்கான பரிசோதனைக்குச் சென்றிருக்க, அவளுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாக மருத்துவர் கூறி இருந்தார். உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை செய்யும்படி கூறி இருந்தார். அத்தோடு நல்ல மன நிலையில் இருப்பது அவசியம் எனக் கூறி இருந்தார்.

ஆனால் இவற்றை மாதவியிடம் சொன்ன நாளிலிருந்து அடிக்கடி அவள்மீது அக்கறைபோல் கூறி இருந்த வார்த்தைகள் இப்போது மனதை அறுக்கத் தொடங்கி இருந்தன. ஒரு நாள் இரவு முகி இதைப் பற்றி ஆதியிடம் பேச முயற்சித்தாள்.

“ஆதி, அத்தை என்னை இப்படிச் சாப்பிட்டால் உடம்பு ஏறும்னு சொல்றாங்க.” என்று கூறி இருக்க அலுவலகத்திற்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவன் முகியின் வாடிய முகத்தைக் கவனிக்கவில்லை.

“அம்மா சொல்றாங்கன்னா அதில் காரணம் இருக்கும் முகி. நீ அம்மா சொல்றபடி சாப்பிடு.” என்றவன் அலைபேசி அடிக்க விரைந்து சென்றிருந்தான். இதற்கு மேல் முகிக்கு என்ன பேச என்று புரியவில்லை. அமைதியாக அப்படியே அறையில் முடங்கிப் போயிருந்தாள்.

காலை எழுந்தவுடன் சமையலை முடித்து, பிற வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு அலுவலகம் சென்று மாலை நேரமும் சமையலை முடித்துக் கிடக்கும் அத்தனை பாத்திரங்களையும் துலக்க வேண்டும். வேலைக்காரி வேண்டும் என்று கேட்பதற்கு முன்பே மாதவி வேலைக்காரி யாரும் கிடைக்கவில்லை என்றிருந்தார். முன்பு அவளுடன் உதவி செய்த மாதவி இப்போது உடல் நலக் குறைவு எனப் படுத்துக் கொள்கிறார். இல்லை தன் தோழிகளைப் பார்க்க வெளியில் சென்று விடுகிறார்.

முகி வீட்டில் சரியாகச் சாப்பிடுவதில்லை. காலைவேளையும் அரைகுறையாய் உண்ண நேரம் இருப்பதில்லை. மதியம் உணவைப் போட்டுச் சென்றாலோ அது அவள் வேலை முடித்துச் சாப்பிடும் நேரத்தில் கெட்டு விடுகிறது. அதனால் வெளியில் சாப்பிடுகிறாள். இரவு சாப்பாட்டு நேரத்திலும் மாதவியினால் அவள் உணவு சரியாக உண்ணுவதில்லை.

எந்த வீட்டுக்கு விரும்பி வந்தாளோ அந்த வீட்டில் இருக்கப் பிடிப்பதில்லை. ஆனால் ஆதி இருக்கிறானே! அவனும் முக்கியமான வேலையில் சில மாதங்களாக இருக்க, முகிக்கும் அவனுக்குமான நேரங்கள் குறைந்திருந்தது. இடையில் ஒருநாள் முகியும், மாதவியும் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்க, முகி தனியாக நின்று பழங்களைத் தின்றுகொண்டிருந்தாள். மாதவி அவர் தோழிகளுடன் பேசிக் கொண்டு சென்று விட்டார். அப்போது அவர் அருகில் வந்தார் அந்தப் பெண்மணி. மாதவியின் வட்டத்தில் அவளைப் பார்த்து இருக்கிறார். கொஞ்சம் நல்ல மாதிரி அவர்.

“பத்மமுகி எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க?”

“நான் நல்லா இருக்கேன். அப்புறம் லைஃப் எப்படி போகுது? இந்தச் சர்க்கிள் லைஃப்க்கு அடாப்ட் ஆகிட்டியா?”

“என்ன ஆன்ட்டி, என்ன அடாப்ஷன்?”

“மாதவி சொல்லிட்டு இருந்தாள். உனக்கு இந்த ஹை-சொசைட்டியில் அடாப்ட் ஆகக் கஷ்டமாக இருக்காம். அதோட உன்னோட பேக்ரவுண்ட் பத்தியும் சொல்லிட்டு இருந்தாள். உன்னோட நீர்க்கட்டிப் பிரச்சினையையும் பத்தி. வேலைக்குப் போறேன்னே நீ யாரையும் கவனிக்கிறது இல்லையா? பொண்ணுங்க எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணிதான்மா போகணும். பார்த்துக்கோ!”

முகிக்கு அதிர்ச்சிதான். தற்போது இருக்கும் நிலையில் அவர் கூறி இருப்பார் என்றே தோன்றியது. தன்னுடைய பிரச்சினையை இப்படி யார் யாருக்கோ சொல்ல வேண்டுமா? என்று தோன்றியது. அதுவும் தன் உடல் நலனைப் பற்றி எதற்கு மற்றவர்களிடம் கூற வேண்டும்? என்று தோன்றியது. மாதவியின் இந்த முகத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. குழந்தை இல்லை என்பதால் தன்னைத் திட்டிக் கொண்டிருக்கிறாரென நினைத்திருக்க, ஆனால் முதல் முறை அப்படி இல்லையெனத் தோன்றியது.

அலுவலகத்தில் மற்ற திருமணமான பெண்கள் பேசும் கதைகள்பற்றிக் கேட்டிருக்கிறாள். மாமியார் அப்படி, நாத்தனார் இப்படி என்று. அவர்கள் கூறுவது போல்தான் மாதவியுமோ? என்று தோன்றியது. ஆனால் அப்படி இருக்காது என நினைத்துக் கொண்டாள். ஆனால் மாதவி அவள் நினைப்பதை விடப் பன்மடங்கு அதிகம் என அவள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.

இவை எதையும் ஆதியிடம் தெரிவிக்கவில்லை முகி. சில இடங்களில் அவன் அன்னை பேசுவதை குறிப்பாக உணர்த்த முயற்சிக்க ஆதி ஒரு நாள், “அம்மாவைக் குறை சொல்லாத முகி. அவங்க உனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யறாங்க. நேத்து கூட உன்னை வெளியில் கூட்டிட்டுப் போகச் சொல்லிச் சொல்லிட்டு இருந்தாங்க.” எனக் கூறி விட முகி அதற்கு மேல் மாதவி பேசுவதைப் பற்றி ஆதியிடம் கூற முயற்சிக்கவில்லை.

நாட்கள் இவ்வாறு நகர, அன்று தன்னுடன் வெளியில் வரும்படி ஆதி கேட்டிருக்க, முகியும் வீட்டில் தயாராகி நின்றாள். ஆனால் ஆதி வரவில்லை. அலைபேசியில் முயற்சிக்க அதுவோ கிடைக்கவே இல்லை. அலுவலக எண்ணுக்கு முயற்சிக்க தாகினி எடுத்தாள்.

“ஹலோ! நான் ஆதி வொய்ஃப் பேசறேன்.”

“ஆதி வொய்ஃபா? டோன்ட் யூ ஹேவ் சென்ஸ்? இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?”

“ஹே மிஸ்! மைன்ட் யுவர் வோர்ட்ஸ். ஐம் ஆதி’ஸ் வைஃப்.”

“ஹான்… தென் ஐம் ஆதி’ஸ் செகண்ட் வைஃப்” என அழைப்பைத் துண்டித்து விட, முகியின் மனது அவள் கேட்ட வார்த்தையில் துடித்து விட்டது. ஒரு செயலாளர் பெண்ணுக்கு எவ்வளவு தைரியம்? ஆதி அவளுக்கு அத்தனை இடம் கொடுத்திருக்கிறானோ? என்று தோன்றியது.

அன்று இரவு முழுக்க விழித்திருந்தாள் முகி. ஆதி வரவே இல்லை. அடுத்த நாள் விழிகள் சிவப்புடன் வீட்டு வேலைகள் முடித்து, அலுவலகம் கிளம்பிவிட்டாள் முகி. ஆதி வீட்டுக்கு வந்து சேர இரண்டு நாட்கள் ஆகும் என அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் மாதவி தெரிவித்தார். முகிக்கு அழைத்து அவள் எடுக்கவில்லை என்றதும் மாதவிக்குக் கூறி இருந்தான் ஆதி. அதன் பிறகு வீட்டுக்கு வந்த ஆதி, மனைவியைச் சமாதானம் செய்திருந்தான். கணவன் மனைவிக்குள் இவை எல்லாம் சாதாரணம்தானே என்றிருந்தான். தாகினியைப் பற்றிக் கூற, ஆதியும் இதுபோல் சில உளவாளிகளும், பத்திரிக்கை நிருபர்களும் செய்வதுண்டு, அதனால் தாகினி அப்படிக் கூறி இருப்பாளென ஆதி காரணம் கூற முகியும் அதை ஏற்றுக் கொண்டாள்.

தன் மனைவியை மடியில் இழுத்து அமர வைத்தவன், “இரண்டு நாள் கழிச்சு வந்திருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லையா?” என்றான்.

“ஒன்னும் கிடையாது போங்க.” என்றவளின் காதோரம் தன் மீசையை வைத்து அவன் தேய்க்க, முகியின் உடல் சிலிர்த்து அடங்கியது.

“சும்மா இருங்க. இன்னும் இரண்டு நாளில் எனக்கு டாக்டர் அப்பாயிண்ட்மென்ட் இருக்கு. டாக்டர் உங்களையும் வரச் சொல்லி இருக்காங்க. இதுக்கு முன்னாடியும் பல தடவை நீங்க வரலை. இந்த முறை கண்டிப்பாக வரணும்.” என்று முகி கட்டளைத் தொனியில் கூறினாள்.

“உத்தரவு மகாராணி!” என அவன் முகத்தை மனைவியின் கழுத்தில் வைத்துத் தேய்த்தான். கைகள் வீணையாய் அவளைத் தீண்ட ஆரம்பித்தது. அவள் கழுத்தைத் திருப்பிப் பூவிதழைக் கொய்ய ஆரம்பித்திருந்தான் காதல் கணவன். அவன் தீண்டலில் உடல் மனம் இரண்டும் வெம்மை கொள்ள அவனிடமே மேலும் சுருண்டாள் பாவை.

மனைவியை இறுக்கி அனைத்தவன், “முகி, ஐ லவ் யூ!” என வார்த்தைகளை முணுமுணுக்கப் பேதையின் மனமும் காதலால் கசிந்திருகியது. சில நாட்களாக அவன்மேல் இருந்த பிணக்குகள் எல்லாம் மறைவது போல் தோற்றம்.

கழுத்து, இதழ்கள் என அவள் முகத்தை ஒரு இடம் விடாமல் ஈரப்படுத்தி இருக்க, முகி அவன் மீசையைச் செல்லமாகக் கடித்து இழுத்தவள், கன்னத்திலும் கடித்து வைத்தாள். பறவைகள்போல் கொத்தியும், கடித்தும் அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். முகி கன்னத்தில் கடித்து வைக்க, அவள் கழுத்தில் பதிலுக்குக் கடித்து வைத்திருந்தான் ஆதி.

“ஆதி, இதைப் பார்த்தால் எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.” என அவள் சிணுங்க,

“தெரியட்டுமே.” என்றிருந்தான். அவன் கூறவும் உடனே மீண்டும் நன்றாகக் கன்னத்தில் கடித்து வைத்தாள் முகி.

“இன்னிக்கு மேடம் ஓவரா கடிச்சு வைக்கிறீங்க. இது சரியில்லை.” என்றவன் அவளை ஒரேடியாகத் தூக்கி அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்தவன் இலேசாகக் கடித்து வைக்க, முகி விழிகளை மூடி அதை அனுபவித்தாள்.

முகி அவனிடமிருந்து இறங்கி ஓட முயற்சிக்க, அவள் பால்கனி கதவைத் திறக்கும் முன் அவள் கையைப் பிடித்தவன், கதவில் அவள் முகம் படச் சாய்த்திருந்தவன், இரண்டு கைகளையும் அவள் கையோடு கோர்த்து அவள்மீது சாய்ந்திருந்தான். கணவனின் பிடியில் தள்ளாடினாள் பேதை.

“மனோ…” என முணுமுணுப்பாக வெளி வந்தது அவள் குரல்.

“சொல்லுடி பொண்டாட்டி… என்ன வேணும்?” என அவள் காதோரம் கிசுகிசுக்க, முகியின் மனது பேயாட்டம் போட்டது.

“நீ!” என அவள் மீண்டும் முணுமுணுக்க, அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டவனின் கைகள்வசம் அவள் உடை செல்ல, அவளும் அவன்வசம் சென்றிருந்தாள்.

அந்த இரவு இருவருக்கும் திகட்டாத இரவாக மாறி இருந்தது. இருவரும் காதலில் தங்களைக் கொண்டாடித் தீர்த்திருந்தனர். ஆதி உறங்கிவிட முகி இன்னும் விழித்திருந்தாள். அவள் களைப்பாக உணர மனமோ அமைதியுற்றிருந்தது.

ஆதியின் நெற்றி மேல் முத்தமிட்டவள் தன்னை அணைத்துப் படுத்திருந்தவனை மேலும் அணைத்துப் படுத்துக் கொண்டாள்.

இப்படிக் காதலாய் உருகியவளின் மனதை அடுத்து வந்த சில நாட்களில் உடைத்திருந்தான் ஆதி. அதுவும் சுக்கு நூறாய் அவள் இதயம் உடைந்திருந்தது.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page