அத்தியாயம் -20

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 20

 

‘பர்சப்சன்’ அப்படின்னு ஒரு கான்சப்ட் சைக்காலஜியில் இருக்கு. நம்முடைய கண்களில் காதுகளில் விழுபவை அனைத்தும் ஒரே மாதிரியாக உணரப்படுவதில்லை. தனிப்பட்ட நபர் ஒரு சமிக்கையை உணர்ந்து புரிந்து கொள்பவதில் வேறுபாடு இருக்கும். இந்த ஒரு விஷயத்தை நாம புரிஞ்சுகிட்டால் நிறைய கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படி அவ்வளவு எளிதில் நடந்து விடாதே.
   -சிவகாமினி.

தன் எதிரில் வந்து கொண்டிருப்பவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சிவகாமினி. அந்த இரவும் சட்டென அவளது நினைவைச் சுழற்ற காமினி இலேசாகத் தடுமாறினாள். அத்தோடு எதுவும் நடவாததைப் போல் எதிரில் வருபவனின் மீது எரிச்சலும், கோபமும் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 
அவளை அறியாமல் பார்வை அவன் இதழ்களுக்கும், அவன் நரம்புகள் புடைத்த கைகளுக்கும் தாவியது. அவள் பார்வையை உணர்ந்தது போல் விழிகள் கூர்மையுடன் அவளை நோக்கச் சிவகாமினி சட்டெனப் பார்வையைத் திருப்பி முகியைப் பார்க்க, அவளோ பின்னால் நின்றிருந்தாள்.

“இன்னிக்கு ருத்ராதான் நமக்குப் பிக்கப் போல. இப்பப் போயிடலாம் அக்கா.”

அவர்கள் அருகில் வருமுன்னே ருத்ரா மகிழுந்தின் சாவியை அமுக்க, அது இரண்டு முறை தன்னுடைய ஒளி விளக்குகளால் கண்ணடித்து விட்டுக் கதவில் இருக்கும் பூட்டை விடுவிக்க முதல் ஆளாகப் பத்மமுகி மகிழுந்தின் பின்பக்கம் ஏறி அவர்களுடைய பையை உள்ளே வைத்து அமர்ந்து கொண்டாள்.

மீதமிருக்கும் பையை எடுத்து முகியின் அருகில் வைத்தான் ருத்ரசேனா. அவள் பக்கம் மகிழுந்தின் சாவியைத் தூக்கிப் போட அதை அழகாகக் காற்றில் பிடித்த சிவகாமினி எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.

“நீ டிரைவ் பண்ணு சிவகாமினி. உன்னால் ஓவர் டைம் பார்த்து நான் ரொம்ப டையர்ட்.” அவன் கூறியதற்கு வெஞ்சினத்துடன் தலையாட்டியவள் முன்பக்கம் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அவன் அமர்ந்து கொள்ள காமினியின் முகத்தில் கடுகைக் கொட்டினால் வெடித்து விடும் என்ற அவளவுக்கு சூடேறி இருந்தது.

‘இவன் வேணும்னே செய்யறான்.’ என மனதுக்குள் நினைத்தவள் அமைதியாக உள்ளே ஏறி வாகனத்தை இயக்கினாள்.

ருத்ரா அமைதியாக விழிகளை மூடிப் படுத்துக் கொண்டவன், விடுதி வந்தபிறகும் எழவில்லை.

முகி மகிழுந்தை விட்டு இறங்கி தன்னுடைய உடைமைகளுடன் நின்றாள்.

“அக்கா, ரூமுக்குப் போங்க. நான் ருத்ராவை எழுப்பிட்டு வீட்டுக்குப் போயிட்டு வரேன்.” சிவகாமினி வீட்டுக்குச் செல்லும் முன் விடுதியில் முகியை விட வந்திருந்தாள்.

“ருத்ரா, எழுந்திரு. நீ தூங்கின மாதிரி நடிச்சதெல்லாம் போதும்.” என அவன் காதின் அருகே கத்தினாள்.

ருத்ரா அப்போதும் எழுந்து கொள்ளவில்லை. உண்மையாகவே அவன் தூங்கி இருந்தான். சில நாட்களாக அவனுக்கு வராத உறக்கம் காலையில் வந்திருக்க அவன் நிம்மதியாக உறங்கிப் போயிருந்தான்.

“இவனை… வேணும்னே செய்யறான்.” என அவன் புஜத்தைப் பிடித்துக் கிள்ளி வைத்தாள். அவள் கிள்ளி வைக்கக் கொசு அடிப்பதைப் போல் அதைக் கையால் தேய்த்து விட்டு மீண்டும் உறங்கவும் சிவகாமினியின் கடுப்பு, கடுப்பு புரோமேக்ஸாகி அவனைப் பஸ்பமாக்கக் காத்திருந்தது. ருத்ராவைப் போட்டு உலுக்க, அவனோ சட்டென எழுந்து அவளைத் தன் பக்கம் தலை வரும்படி, அவள் உடலில் பாதி அவன் மடியில் இருக்கும்படியும் இழுத்திருந்தான்.

“என்ன ருத்ரா? வேணும்னு செய்யறியா?”

“வாட்?” என அழுத்தமான குரலில் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“உனக்கு எதுவுமே தெரியாதுடா. சும்மா நடிக்காத.”

காதைச் சுண்டுவிரல் கொண்டு குடைந்தவன், “இப்ப எதுக்கு கா கானு கத்துற சிவகாமி. இது பப்ளிக் பிளேஸ். வா ரூஃப்டாப் போலாம். இல்லை ஆபிஸ் ரூம் போலாம்.”

சுற்றும் முற்றும் பார்க்க, சில பயணிகளும், பணியாளர்களும் அங்கு இருப்பது தெரிய, காமினி அமைதியாக அவனை விட்டு விலக முற்பட ருத்ரனின் பிடி சற்று இறுகி அவளை விடுவித்தது.

ருத்ரசேனா மின் தூக்கியில் ஏற, அவனைப் பின் தொடர்ந்து காமினியும் ஏறியவள் கைகளைக் கட்டி அவனை முறைத்தபடி நின்றாள். ருத்ரா அவளைச் சட்டை செய்யவே இல்லை. இடையில் பணியாளர்கள் ஏறி இறங்க, காமினியும் அமைதியாக வந்தாள்.

கட்டிடத்தின் மேற்கூரைக்கு வந்ததும், காமினி வெடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன். நீ இவ்வளவு அலட்சியமாக நிக்குற? அன்னிக்கு நடந்தது என்ன ருத்ரா?”

“அன்னிக்கு என்ன நடந்தது?” என அவளைப் பார்த்துத் திரும்பிக் கேட்க, காமினிக்கு ஆத்திரம் அதிகரித்தது.

“உனக்கு எதுவும் தெரியாது பார்த்தியா? அன்னிக்கு உன்னோட ஆபிஸில் ஏன் அப்படி நடந்துகிட்ட?”

“நான் எப்படி நடந்துகிட்டேன்?”

காமினி அவன் சட்டையைப் பிடித்து விட்டாள்.

“ருத்ரா, என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கற.”

காமினி தன் அருகில் வரவும் அவளை இடையோடு சேர்த்து சட்டெனப் பிடித்துக் கொள்ள அவனிடமிருந்து விடைபெறக் காமினி அவள் இரு கைகளைக் கொண்டு அவன் மார்பில் அடிக்க, அது பிரஜோயனம் இன்றிப் போனது.

“சிவகாமினி.” என ஒரு அதட்டல் மிரட்டல் போல எழுந்தது.

அவன் குரலில் உறைந்து நின்றாள் பாவை. அவள் கைகள் தளர, ருத்ரனின் இதழ்கள் அவள் விரிந்திருந்த இதழ்களைக் களவாட ஆரம்பித்தது. அவளின் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து, சுவற்றில் சாய்த்து அவள் இதழ்களை மூச்சு முட்டக் கொள்ளை அடிக்க, காமினியின் சர்வமும் செயலிழந்து நின்றது.

அவளை விடுவித்த பின்னரும், அதன் தாக்கம் குறையாமல் நின்றவளின் விழிகளின் முன் சொடுக்கினாள்.

“என்ன காமினி பேச்சே இல்லை?” என்றவளுக்கு போன கோபம் மீண்டும் எரிமலையாய் பொங்கியது.

மீண்டும் கத்தப் போனவளின் வாயைத் தன் கைக்கொண்டு மூடியவன், “சும்மா சும்மா கத்தக் கூடாது. கத்துனா இப்படித்தான் அமைதிப்படுத்த வேண்டி இருக்கும். உனக்கே தெரியும். எனக்கு அவ்வளவா நாய்ஸ் பிடிக்காது.” என்றான்.

“பொறுமையாகச் சொல்லு உனக்கு என்ன வேணும்?”

“அ…து… அன்னிக்கு…”

“சும்மா அன்னிக்கு காலையில் ஆறுமணின்னு கூவாம தெளிவாப் பேசு. இப்ப நடந்தது, அதேதான் அப்பவும் நடந்தது. அது உனக்கும் பிடிச்சிருந்தது.”

“இல்லை.”

“பின்னே ஏன் இரண்டு நாள் என்னை அவாய்ட் பண்ணக் கடலுக்கு ஓடிப் போன? நீ கடலுக்குப் போனா உன் மனசில் ஏதோ இருக்குன்னு அர்த்தம்.”

“அது இதுதான்னு சொல்ல முடியாதே! நான் எதுக்கு அதை நினைச்சுக் கடலுக்கு ஓடணும். முகி அக்காவைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இருந்தேன்.” எனக் கைகளைக் கட்டி அவன் எதிரில் நின்றான்.

“ஓகே. நோ இஸ்யூஸ். உனக்கு அதைப் பத்தி எந்த உறுத்தலும் இல்லைன்னா மறந்துட்டு அடுத்த வேலையைப் பாரு.”

காமினி அவன் கூறுவதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிக்க, ருத்ரன் அவளைப் பார்த்தான்.

“புரிஞ்சுதா? சும்மா இது விஷயமாக என்னைத் தொல்லை பண்ணக் கூடாது.”

கதவைத் திறந்து கொண்டு அவன் வேகமாகப் படியில் இறங்குவது அவளுக்குக் கேட்டது. இனி இதைப் பற்றி இவனிடம் வாயைத் திறந்து பேச முடியாததால் அங்குச் சில நிமிடங்கள் நின்றவளின் கைப்பேசி அடிக்கவும் உடனே தன் தந்தையின் அறைக்கு விரைந்தாள்.

அவளுடைய தந்தையின் அறையில் எதிரே உள்ள நீள் விரிக்கையில் அமர்ந்திருந்தார் மத்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதாகர மூர்த்தி.

அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளுடுப்பில், தலை மிளகும், உப்பும் கலந்த நிறத்தில் மின்ன, மீசையை நீவியபடி அமர்ந்திருந்தார் அவர்.

“அங்கிள், ஹவ் ஆர் யூ?” என அவரைக் கட்டி அணைத்தவள் தன் தந்தையும் கட்டி அணைத்து விட்டு அவர்கள் எதிரே அமர்ந்தாள்.

“அடடே குட்டி மினி! எப்படி இருக்க கண்ணு?”

“நல்லாயிருக்கேன் அங்கிள். என்ன தலைநகரை விட்டு இந்தக் கடல் நகருக்கு உங்க காலடி பட்டுருக்கு?”

“அதான்மா என்னோட மருமகளுக்கு தமிழ் கலாச்சாரபடி பீச் வெட்டிங் வேணுமாம். அதான் நம்ம ஹோட்டல் இருக்குன்னு கிளம்பி வந்துட்டேன்.”

“அதுக்கென்ன அங்கிள்! கல்யாணத்துக்கு யூ.எஸ் வர முடியலைன்னு அப்பா ஃபீல் பண்ணிட்டு இருந்தார். அவருக்குக் கொஞ்சம் முடியலைன்னு நாங்களும் விட்டுட்டு வரலை. இங்க ஜாமாய்ச்சிடலாம்.”

சுதாகர மூர்த்தியும், காமினியின் தந்தையும் நல்ல நண்பர்கள். அரசியல்வாதியையும் தாண்டி அவர் நேர்மையான மனிதர் என்பதால் அவர்கள் நட்பு இன்னும் நீடிக்கிறது. அதோடு காமினியும் அவருக்குச் செல்லம்தான்.

“மினி, நீதான் இங்க வெட்டிங் அரேஞ்ச்மெண்ட்ஸ் பார்த்துக்கணும். ருத்ரசேனாதான் கேட்டரிங் செய்யணுமாம். ருத்ரசேனாவுக்கு என்னோட மருமவ படிக்கிற காலத்தில் இருந்தே ஃபேனாம்.”

“ஓ…” அவன் பெயர் அடிப்பட்டதும் காமினியின் இதயத்தில் குட்டிக் குட்டிப் பூகம்பங்கள் வெடித்தாலும், முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

“காமினி நீதான் எல்லாத்தையும் மேனேஜ் செய்யணும். ருத்ராவும் உனக்கு ஹெல்ஃப் பண்ணுவான். கார்த்திக் ஹோட்டல் விஷயத்தைப் பார்க்கட்டும். நீ இப்ப வெட்டிங்கை மட்டும் பாரு.”

“ஓகேப்பா. சரி அங்கிள் நான் வீட்டுக்குப் போயிட்டு வந்ததும் எல்லாத்தையும் கோஆர்டினேட் செஞ்சிடறேன்.” என்று அறையை விட்டு வெளியேறினாள்.

***

முகி தன்னுடைய அறையில் படுத்திருந்தாள். அவள் கண்ட காட்சி உண்மைதானே என்ற சந்தேகம் அவளுக்கு மீண்டும் மீண்டும் எழுந்தது.

ருத்ரனின் பின்னால் நின்று கடற்கரையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தது ஆதியைப் போல்தான் இருந்தது. ஆனால் சட்டெனச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவனாக இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் காமினியின் பின்னால் மறைந்து கொண்டவள் பின்னர் காரில் ஏறி மறைந்து அமர்ந்து கொள்ள, வந்தது அவனா என்று அவளால் சரியாக அறியமுடியவில்லை.

‘தன்னைத் தேடி அவன் இங்கு வந்திருந்தால்’ என ஒரு நிமிடம் மானம் கெட்ட மனம் கொண்டாடினாலும், மறு நிமிடமே துரோகத்தின் கத்தி அவளைத் தீண்ட மனம் அல்லாடியது.

‘ஒரு பக்கம் அங்கு நடந்தது எல்லாம் பொய் என அவன் தன்னைத் தேடி வந்து சொல்லமாட்டானா?’ என எதிர்பார்த்துக் காதல் கொண்ட மனம் ஏங்கவே செய்தது. தன் கட்டுப்பாட்டை மீறாமல் நடக்கும் மனதினால் விழிகளில் கட்டுப்பாட்டை மீறி நீர் வழிய ஆரம்பித்தது.

ஒரு மணி நேரம் கழித்து காமினி ருத்ராவின் முன்னே கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருக்க, சிவகார்த்திக் கன்யாவின் எதிரில் நின்றுகொண்டிருந்தான்.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page