அத்தியாயம் -21

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 21

 

விதி சில சமயம் நீங்க யாரைப் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களோ அவங்க முன்னாடியே நிக்க வைக்கும். அது நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும். அது சில சமயங்களில் ஒரு முறை கடந்து போகும்படி இருக்கும். ஆனால் சில சமயங்களில் நம்மை வசமாக அவர் கண் முன்னே எப்போதும் இருக்கும்படி சிக்க வைத்திருக்கும்.
  -ருத்ரசேனா.

காமினி வீட்டுக்குச் சென்றவள், சூடான நீரில் குளித்து விட்டு, பேஸ்டல் பச்சையில் சட்டை மற்றும் அடர் பச்சையில் பேன்ட்ஸ் மற்றும் பிளேசர் அணிந்தவள், குதிரை வால், கழுத்தில் காதில் சிறிய வைரக்கற்கள் வைத்த நகைகள், அதற்கு ஏற்றாற்போல் கைக்கடிகாரத்தையும் அணிந்து கொண்டாள்.

கண்ணாடியில் உதட்டுச் சாயத்தைப் பூசும்போது தன்னைப் போல் ருத்ரனின் நினைவு எழாமல் இல்லை. இப்போது எல்லாம் அவன் நினைவு அடிக்கடி எழுகிறது. அவன்மேல் கோபமும் வர, அதைக் கட்டுப்படுத்தி அவனுடன் இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நினைத்து ஒரு பெருமூச்சு எழுந்தது. லோபர் வகை காலணிகளை எடுத்துக் கொண்டவள், தன் கையடக்கக் கணினியை எடுத்துக் கொண்டாள். இனி மணப்பெண்ணை சந்தித்து, அவளுடைய விருப்பங்களைக் கேட்டாக வேண்டும். தன் மகிழுந்தினை எடுத்தவள் விடுதிக்குக் கிளம்பிச் சென்றாள்.

சிவகார்த்திக் அமைதியாக வரவேற்பில் அமர்ந்துகொண்டிருந்தான். அவன் பல நேரங்களில் அந்த விடுதியில் உள்ள ஒவ்வொரு துறையிலும் பணியில் நிற்பான். அந்தப் பணியையும் அவனே செய்வான். அது வேலை செய்பவர்களின் மனதையும், இன்னும் வாடிக்கையாளர்களின் தேவையையும் கண்டறியப் பயன்படுத்திக் கொள்வான். அவன் அப்படி ஏதாவது துறையில் இருப்பது அங்கிருப்பவர்களுக்கும் பழகிப் போயிருந்தது.

இன்று அதே போல் வரவேற்பில் நின்றுகொண்டிருந்தான். அங்கு நிற்பதற்கு முக்கியக் காரணமும் ஒன்று இருந்தது. புதிதாக வந்தவளை சோதிக்கவும் வேண்டும் அவனுக்கு. காமினி திருமணம் என்று விடுதியில் நடக்கும்போது மொத்த விடுதியும் ருத்ரா மற்றும் சிவகார்த்திக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வப்போது காமினி தலையிடாமல் இருக்க மாட்டாள். திருமணங்களின்போது ருத்ராவுக்கும் வேலை பன்மடங்கு இருப்பதால் சிவகார்த்திக்தான் அனைத்தையும் கவனித்துக் கொள்வான்.

ஆளுக்கு ஒரு துறையெனப் பேருக்கு இருந்து கொண்டாலும், மூவரும் இணைந்தே வேலை செய்வர். அப்படித்தான் அவர்களுக்குள்ளும் பழகிப் போயிருந்தது. சிறு வயதிலிருந்தே ஒன்றாக இருப்பதால் அவர்களுக்கு அது பழக்கமானது.

இடைவேளை நேரத்தில் வெளியே சென்றிருந்த கன்யா திரும்பி வரும்போது, வரவேற்பின் மேசைக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான் சிவகார்த்திக். அவனைப் பார்த்ததும் சகலமும் அதிர்ந்தது.

கன்யா தயங்கியபடி மேசைக்குப் பின்னால் வந்து நின்றாள். அவள் எதுவும் பேசாததால் சிவகார்த்திக்கும் பேசவில்லை. கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். தன்னருகில் வந்து நிற்பவளின் அசைவுகள் அனைத்தும் பெரிபெரல் விஷன்(பக்கவாட்டுப் பார்வை) மூலம் பதிவாகிக் கொண்டிருந்தது.

ஐந்து நிமிடங்கள் கழிந்தாலும் அவன் நகர்வதைப் போல் இல்லை. அவளே பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

“கார்த்திக்.” அந்தத் தேன் குரலில் நிமிர்ந்து பார்த்தான்.

“கால் மீ சார்.”

அவனின் பார்வையில் விழிகளைத் தாழ்த்தியவள் மீண்டும் நிமிர்ந்து கொண்டாள்.

“ஓகே சார். கொஞ்சம் என்ட்ரி போட வேண்டிய வேலை இருக்கு.”

“ம்ம்ம்”

அவனின் ஒட்டாத பார்வையும், பேச்சும் அவளைத் தாக்கவே செய்தது. ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை.

“அப்புறம் கன்யாதானே உங்க பேரு.”

“யெஸ் சார்.” ‘எனப் பதில் கூறினாலும், ‘ஏண்டா உனக்கு என்னோட பேரு தெரியாதா?’ விழிகள் கேட்டது.

“இந்த என்ட்ரி எல்லாம் செக் பண்ணுங்க. ஆஃப்டர்நூனுக்குள்ள முடிச்சு வைக்கணும். அதோட ஆஃப்டர்நூனிலிருந்து உங்களுக்கு டியூட்டி மாறும். ஃபாரீன் கெஸ்ட் ஹேண்டில் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு இருக்கு. ஸோ, நீங்க இரண்டு பக்கம் மாத்தி மாத்தி வொர்க் பண்ணுவீங்க. உங்களுக்கு இதுக்கு எக்ஸ்ட்ரா சேலரி இருக்கு.” என அவளுக்குப் பணி மாற்றம்பற்றி உரைத்திருந்தான்.

கன்யா முன்பு வேலை செய்த விடுதிக்கு அழைத்து அவளைப் பற்றி விசாரித்திருக்க, அவளைப் பற்றி அனைத்தும் நல்லவிதமாகவே வந்தது. அவள் புரமோசனில் இன்னும் மேலே செல்ல வேண்டியது. ஆனால் அன்னைக்காக வேலையை விட்டு வந்திருந்தாள். விசாரித்தவரை அனைத்தும் மிகத் திருப்தி. 
அதனால் வரவேற்பில் போட்டுவிட்டு அதன்பிறகு சுதாகர மூர்த்தியின் வருகையால் கன்யாவினை பணிமாற்றம் செய்தனர்.

சுதாகர மூர்த்தியின் மருமகள் அமெரிக்க வாழ் இந்தியர். பாதி பிரிட்டிஷ், பாதி தமிழர் எனக் கூறலாம். மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவரின் மகள். அவளுடைய அன்னை வெள்ளைக்காரப் பெண்மணி. அங்கேயே வளர்ந்திருந்தாலும் தமிழ் அவளுக்குப் பிடிக்கும்.

சுதாகர மூர்த்திக்குத் தன் மகன் என்றால் கொள்ளைப் பிரியம். மகனின் வாக்கே அவருக்கு வேதவாக்கு. அவன் விருப்பப்பட்டுவிட முதலில் கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும் மகனுக்காகச் சம்மதம் தெரிவித்திருந்தார். அதற்கு இன்னொரு காரணம் காமினி. அவளும் சுதாகர மூர்த்தியைப் பேசிச் சம்மதிக்க வைத்திருந்தாள். மணப்பெண் முதலில் ஆங்கிலேய முறைப்படி அங்கே மணந்து கொள்ள விரும்பியதால் அங்கே திருமணம் ஆகிற்று. அத்தோடு அவள் இங்கிலாந்து குடிமகள். தமிழும் பேசவே சுதாகர மூர்த்திக்குத் திருப்திதான். மகனுக்கு ஒத்துப் போகும்போது நமக்கென்ன என்று இருந்து விட்டார். அரசியலில் இன்னும் சில வருடங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு, அவரும் இங்கிலாந்து சென்று விடுவார். மருமகளும் அன்பாக நடந்து கொள்ள, அவருக்கு நிம்மதிதான். இப்போது அந்தப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கன்யாவுக்குத் தரப்பட்டிருந்தது.

“ஹை புரொஃபைல் கன்யா. பார்த்து டீல் பண்ணனும். இல்லைனா ஃபையர் ஆகிடுவீங்க.” அவனை நிமிர்ந்து பார்த்த கன்யா தலையை மட்டும் ஆட்டினாள்.

‘நீ எப்போ இருந்து இப்படி ஆன கார்த்திக்?’ என அவள் விழிகளில் பொதிந்திருந்த கேள்வி அவனுக்கும் புரிந்துதான் இருந்தது.

“நீ எப்படி மாறுனியோ அப்படித்தான் நானும் மாறிட்டேன் கன்யா. அது காலத்தோட அத்தியாவசியம்.” என்றவுடன் கன்யா விழிகளை விரித்துப் பார்த்தாள்.

ஒரு திருமணம் பலரின் வாழ்க்கையை நூலாய் பின்னக் காத்திருந்தது. அவர்களின் வாழ்வில் மிக முக்கிய மாற்றத்திற்கு காரணமாய் அமையப் போகும் மாயா மற்றும் அர்ஜூன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பித்தன.

மாயா இந்தியர்களைப் போல் நிறமும், நீல விழிகளும், ஃபிளான்ட் நிற முடியும் கொண்ட பெண். அர்ஜூனின் தோள் சாய்ந்தபடி அந்த அறையில் அமர்ந்திருந்தாள். அர்ஜூனின் கரங்கள் மெல்ல அவள் சிகையை வருடியபடி இருந்தது.

இருவருக்குள்ளும் விழிகளில் இருக்கும் காதல் பார்ப்போருக்கு தெரிந்துதான் இருந்தது. கன்யா கதவைத் தட்டிவிட்டு அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தாள். அவர்கள் எதிரே சிவகாமினி அமர்ந்திருந்தாள். சிவகாமினியையும் கன்யா எதிர்பார்க்கவில்லை.

“குட் ஆப்டர்நூன் மேம். ஐம் கன்யா. ஐ வில் பி அசிஸ்டிட்டிங் யூ.”

“ஹே கன்யா. ஐ ஹியர்ட் இட் ஃபிரம் கார்த்திக். நீ தமிழில் பேசலாம். எனக்குத் தமிழ் தெரியும்.”

மாயாவின் அழகும், பேச்சும் பார்க்கும் யாவரையும் கொள்ளை கொள்ளும். அர்ஜூன் அவளிடம் தலைக் குப்புற விழுந்து கிடப்பதில் ஆச்சரியமில்லை என்றுதான் கூற வேண்டும். மூன்று வருடங்கள் காதலித்து மணமுடித்திருக்கிறார்கள்.

“ஓகே மாயா. நீங்கக் கேட்டபடி ஹல்தி, சங்கீத் எல்லாம் வைக்கலாம். அது மாதிரியே வெட்டிங் சவுத் இண்டியன் ஸ்டைல்.”

“தேங்க்ஸ் சிவகாமினி ஃபார் எவ்ரிதிங்க் யூ ஹேவ் டன். வெட்டிங்கில் உன்னை எதிர்பார்த்தேன்.”

“இட்ஸ் ஓகே மாயா. நீங்க நம்ம ஹோட்டலையே சூஸ் பண்ணதில் நான் ஹேப்பி. என்ன அர்ஜூன் உன் ஐடியாதானே!”

“கண்டிப்பா காமினி! நீ இருந்தால் பர்சனலாவே எங்களை நல்லாப் பார்த்துப்ப. மாயா கேட்குற எல்லாமே அவளுக்குக் கிடைக்கணும்.” அவன் கூறிய வார்த்தையில் காமினியின் மனம் நிறைந்து விட்டிருந்தது.

“ஸோ ஹேப்பி பாய் போத் ஆஃப் யூ மை டியர்ஸ்.” என எழுந்து நின்று இருவரையும் அணைத்து விடுவித்தாள்.

அவர்களும் அவளை அணைத்து விடுவித்தாள்.

“ஓகே. இப்ப நான் கிளம்பறேன். மாயா உனக்குத் தேவையான எல்லாமே ரூமுக்கே தேடி வரும். டோன்ட் வெரி.”

“அர்ஜூன், காமினி ஒரு பர்ஃபெக்சனிஸ்ட். அதோட ருத்ராவும் சேர்றது ஒரு டெட்லி காம்போ.”

புன்னகைத்தபடியே அவர்களிடமிருந்து விடைபெற்றாள். அதன் பிறகு கன்யாவிடம் விழிகளை அசைத்து விட்டு அவள் வெளியேறிவிட்டாள். நேராகச் சென்றவள் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு கோப்பில் மூழ்கி இருந்த, சிவகார்த்திக்கைத்தான்.

“கார்த்திக்.”

“என்ன மினியன்?” என்றபடி நிமிர்ந்தான்.

“கார்த்திக், கன்யா இங்க இருக்காள்.”

“ம்ம்ம். அப்பாவும், ருத்ராவும் அப்பாயின்ட்மெண்ட் பண்ணாங்க.”

“ஓ… நீ தடுக்கலையா?”

“நான் தடுக்க அவ எனக்கு யாரு? எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?” தன் சகோதரனின் உணர்வற்றப் பேச்சில் காமினிக்கே ஆச்சரியம்தான்.
“நான் அப்பாகிட்ட பேசட்டா?”

“வேண்டியது இல்லை. நம்மளோட சொந்த விஷயத்தை அஃபிஷியலா பார்க்க வேண்டாம். அப்படியே விட்ரு. நமக்குன்னு ஒரு தரம் இருக்கு மினியன். அதை நாம குறைச்சுக்க வேண்டாம்.”

அவன் அருகில் வந்து ஆறுதலாய் தோளைத் தட்டினாள் காமினி.

“சரிடா. உனக்கு ஓகேன்னா எனக்கும் பிரச்சினை இல்லை.”

“ம்ம்ம்.”

அவள் எதிர்பார்த்த எதுவும் கார்த்திக்கின் முகத்தில் தெரியவில்லை என்றாலும் காமினியின் மனதில் உள்ள உறுத்தல் குறையவே இல்லை.

***

மாலை நேரம் ஆதி மனோகரன் அபிதாவின் முன்னிலையில் அமர்ந்திருந்தான்.

“மேம் பிளீஸ்! என் வைஃப் எங்க இருக்கான்னு சொல்லுங்க.”

“மிஸ்டர். ஆதி மனோகரன் நீங்கக் கேட்ட உடனேயே அவங்க எங்க இருக்காங்கன்னு என்னால் சொல்ல முடியாது. உங்களை வேண்டாம்னு அவங்க கிளம்பி வந்துருக்காங்க. அதோட பத்மமுகியை நீங்க ஹர்ட் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? கோபத்தில் கை வச்சுட்டா? அப்படி எல்லாம் அனுமதிக்க முடியாது. பத்மமுகி ஓகே சொன்னால் மட்டும்தான்.”

“மேம், நான் அவளோட ஹஸ்பண்ட். அவளோட ஃபேமிலி.”

“நீங்கத் துரோகம் செஞ்சீங்களா என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனால் இக்னோரன்ஸ் கூட ஒரு வகை வயலன்ஸ்தான்.” என்று அபிதா முடித்துவிட்டார்.

அவர் பதிலில் மனோவின் முகம் வாடிவிட்டது.

சில கணவன்மார்கள் அவர்களை விட்டுத் தப்பித்து ஓடி வந்த மனைவியை நல்லவர்கள்போல் பேசி அவர்களைக் கண்டு அவர்களுக்கு ஆபத்து விளைவித்ததும் உண்டு. அதனால் ஆதியின் மனைவி இருக்கும் இடத்தை அபிதா கூற மறுத்துவிட்டார்.

“நீங்க வந்த விஷயத்தை நான் இன்ஃபார்ம் பண்ணிடறேன்.”

“மேம், ஒரு நிமிஷம். நீங்களே இந்த வீடியோவைப் பாருங்க, அப்படியே இந்த ஆடியோவையும் கேளுங்க.” எனக் காட்ட அபிதாவும் வாங்கிப் பார்த்தார்.

“ஓகே. நான் முகிக்கிட்ட நீங்க வந்த தகவலைச் சொல்றேன். அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம். அவங்க அப்படி சம்மதிச்சால் நீங்க இன்னும் நிறைய உண்மைகளைத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கும். மேரேஜ் உங்க மனைவி மட்டும் எடுத்துட்டுப் போறது இல்லை ஆதி. நீங்களும் அவங்களை லிசன் பண்ணி, சரவுண்டிங்க்ஸ் தெரிஞ்சுருக்கணும்.” என்று முடித்து விட்டுக் கதவைக் காட்டினார்.

ஆதியும் தொங்கிய தோளுடன் தன்னுடைய வாகனத்தில் ஏறியவன் நேராக வந்து நின்றது ‘நெய்தல் நிழல்’ முன்புதான்.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page