அத்தியாயம் 13

தான் வந்து சற்று நேரம் ஆகியும் இன்னும் வராமல் இருக்கும் அகிலாவை தேடினான் கார்த்திக். 

 

விழிகளை சுழற்றி அங்கும் இங்கும் பார்க்க, தாய் தந்தைக்கு நடுவில் கோழி குஞ்சு போல் பதுங்கி நின்றாள் அகிலா. 

 

அக்கா மாமாவை பார்த்து கொண்டிருந்தாலும் அவளின் நெற்றியில் லேசான சுருக்கம் இருந்தது. 

 

எங்க டி போன இவளோ நேரம்? எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம்னு பார்த்தால் நீ இங்க இல்லை. அப்படி எங்க போன என்று கேட்டார் கௌரி. 

 

ஹான்…. ஒன்னும் இல்லை மா. நான் தம்பியை வச்சிட்டு அங்க தான் நின்று இருந்தேன் என்று சமாளித்தாள் அகிலா. 

 

தம்பியை வச்சிருந்தியா? தம்பி எங்க என்று கேட்டார். 

 

அ… து. அந்த அக்கா வந்து வாங்கிட்டு போய்ட்டாங்க. அங்க மேல ஸ்டேஜ்ல தான் இருக்குறான் தம்பி. அத்தை தான் வச்சிருக்குறாங்க என்று திக்கி திணறி கூறினாள் அகிலா. 

 

என்ன டி ஆச்சு உனக்கு? என்று கேட்டவர் மகள் திக்கி திணறி கூறியதை கேட்டு அவளை ஒரு மார்க்கமாக பார்த்தார். 

 

ஒன்னும் இல்லை மா. வாங்க போட்டோ எடுக்கலாம். அதுக்கு தான தேடுனீங்க என்று ஸ்டேஜ் ஏறினாள். 

 

அவளின் பின் கௌரி கல்யாண் இருவரும் ஏறினர். 

 

கௌரி அபிராமியின் அருகில் சென்று நின்றார். அபிராமியின் முகம் புன்னகை என்னும் பூக்களால் நெய்யப்பட்டது போல் இருந்தது. 

 

கௌரி எதார்த்தமாக பார்க்க மேடையின் கீழ் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். 

 

அச்சோ இவனா? இவனால தான் அகி முகத்தை இப்படி வச்சிருக்காளா. பாவி பையன் என்று அவனை மனதில் வறுத்து எடுத்தார். 

இந்த பையனை மாப்பிள்ளையோட வீட்டுல இருந்து அழைச்சிட்டாங்க. நம்மளால என்ன பண்ண முடியும்?  என்று கௌரியின் மூளை குறு குறுத்தது. 

 

அகிலாவின் கண்கள் கார்த்திக்கை பார்த்தது. 

 

எப்படி? எப்படி அவன் அப்பா இறந்தாங்க. அவன் தங்கச்சி வாழ்க்கை என்னாச்சு? என்று மனதிற்குள் கேள்வி கேட்டு நின்று கொண்டிருந்தாள். 

 

கார்த்திக் அதற்கு மேல் இருக்க முடியாது சக ஊழியர்களுடன் சேர்ந்து அவனும் கிளம்பினான். 

 

அகிலாவின் பார்வை கார்த்திக்கை துளைத்து எடுக்க, போய்ட்டு வரேன் என்று கண்களால் அவன் கூற, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாது நின்றாள் அகிலா. 

 

சரி வாங்க. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பொண்ணயும் மாப்பிள்ளையையும் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போயிரலாம் என்றார் பாரிஜாதம். 

 

அபிராமி அதிர்ச்சியோடு பார்த்தாள்.

 

தாய் தந்தையை விட்டு பிரிய போகிறோம் என்று அவளின் உள்ளம் வேதனை அடைந்தது. 

 

அகிலா அபிராமியை கட்டி கொண்டு விசும்பினாள். 

 

தங்கையின் விசும்பல் சத்தம் கேட்டதும் அபிராமியும் கண்ணீர் வடித்தாள். 

 

ஏதோ அவசரமாக இந்த திருமணம் நடந்து முடிந்ததை போல் உணர்ந்தான் அஸ்வந்த். 

 

மிஸ் யூ அக்கா. எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணி பேசு என்று சிறு விசும்பலோடு அகிலா கூறினாள். 

 

நீயும் அம்மா அப்பாவை புரிஞ்சு நடந்துக்கோ டி. இனிமேல் நீ தான் டி எல்லாம். நான் இனிமேல் அடுத்த வீட்டு பொண்ணு டி என்று கண்ணீரோடு அபிராமி உரைக்க, 

 

கல்யாண் இரு மகள்களையும் தன் தோளில் சாய்த்து கொண்டார். 

 

இந்த பாசப் பிணைப்பை பார்க்கும் பொழுது பாரிஜாதத்திற்கும் கண்கள் கலங்கியது. 

 

கௌரி கண்ணீரோடு  கணவனையும் மகள்களையும் பார்த்து கொண்டிருந்தார். 

 

எப்பொழுதும் பெண் பிள்ளைகள் அப்பாவின் செல்லங்கள். அபியும் அகிலாவும் அப்படி தான். 

 

என்ன அண்ணே…. நீங்களே இப்படி அழுதுட்டு இருக்குறீங்க சின்ன புள்ளை மாதிரி. உங்க பொண்ணை நம்பி எங்களோட அனுப்பி வைங்க. உங்க பொண்ணு சந்தோசமா இருப்பாள் என்றார் பாரிஜாதம். 

பூ அலங்காரங்கள் செய்யப்பட்ட கார் மண்டபத்தின் வாயிலில் மணமக்களை சுமந்து செல்ல காத்திருக்க, சின்னஞ்சிறு சிறுமிகள் பூக்கள் தனக்கு கிடைக்காதா என்று அந்த காரை வட்டம் அடித்தனர். 

 

அந்த சிறுமிகள் நம் அபிராமியின் வகுப்பு குழந்தைகள். அபிராமியின் திருமணத்தில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர். 

 

அதனால் தலைமை ஆசிரியர் சம்மதத்தோடு குழந்தைகள் அனைவரும் மற்ற ஆசிரியர்கள் உதவியோடு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

அபிராமியும் அஸ்வந்த்தும் கௌரி கல்யாண் இருவருக்கும் விடை கொடுத்து காரின் அருகில் வர, காரிலிருந்து தங்களால் முடிந்த அளவு ஒட்டி வைத்திருந்த ரோஜா பூக்களை கையில் சுமந்து கொண்டு நின்றனர் அந்த குழந்தைகள். 

 

இருவரையும் பார்த்ததும் சோகமான முகத்துடன் அபிராமியின் அருகில் வந்தனர். 

குழந்தைகளின் உயரத்திற்கு அபிராமி குனிந்தாள். 

 

டீச்சர் இனிமேல் நீங்க வர மாட்டிங்கனு திவ்யா டீச்சர் சொன்னாங்க. நீங்க நிஜமா வர மாட்டிங்களா என்று சிறிய உதடுகளை குவித்து கண்களில் நீரோடு கேட்டது ஒரு குழந்தை. 

 

அச்சோ டீச்சர் அப்போ அப்போ வந்து என் பசங்கள பார்த்துட்டு தான் போவேன் என்று குழந்தைகளின் அழுகையை சமாதானப் படுத்த கூறினாள் அபிராமி. 

 

அப்போ தினமும் வருவீங்களா டீச்சர்? திவ்யா டீச்சர் எங்ககிட்டே பொய் சொல்லிட்டாங்களா? என்று கேட்டது மற்றொரு மழலை. 

 

டீச்சர் பொய் சொல்லுவாங்களா? உண்மைய தான் சொன்னாங்க. தினமும் வருவேன்.  ஆனால், கிளாஸ் எடுக்க மாட்டேன் என்றாள். 

 

எங்களுக்கு எந்த கிளாசும் எடுக்க வேணாம் டீச்சர். நீங்க தினமும் வாங்க என்றனர் குழந்தைகள். 

 

பாரிஜாதம் குழந்தைகளின் பேச்சில் சத்தமாக சிரித்தார். 

 

சரி யாரும் இனிமேல் அழக் கூடாது. டீச்சர்  போய்ட்டு வரேன் என்று அவர்களுக்கு டாட்டா காட்டி காரில் ஏறினாள். 

 

டீச்சர் பாய் என்று பால் போன்ற வெண்ணிற பற்களை காட்டி சிரித்தனர் குழந்தைகள். 

 

அபிராமி ரிவர் வியூ மிரரில் குழந்தைகளை பார்த்து கண் கலங்கினாள். 

 

இந்த நாளில் அபிராமிக்கு இரு பிரிவுகள் நிகழ்ந்து விட்டது. ஒன்று தன் தாய் தந்தை மற்றும் தங்கை மூவரையும் பிரிந்தது. மற்றொன்று தன் வகுப்பு பிள்ளைகள். 

 

தன்னை தானே சாமன் செய்து கண்ணீரை நிறுத்த முயற்சி செய்தாள். 

 

அஸ்வந்த் அவளின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சன்னல் வழியாக சாலையை தான் வெறித்து பார்த்தான். 

 

அபிராமி நீ ஏன் மா வேலைய விட்ட என்று கேட்டார் பாரிஜாதம். 

 

அழுகை முற்றிலும் நின்று போய் கனத்த இதயத்தோடு அமர்ந்திருந்த அபிராமி, மாமியாரின் கேள்வியில் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த மாமியாரை நோக்கினாள். 

 

அவர் இவளின் பதிலை எதிர்பார்த்து கழுத்தை திருப்பி பின் சீட்டில் அமர்ந்திருந்த அபிராமியை பார்த்தார். 

 

அவனை பார்த்துக்கணும்ல அத்தை என்றாள் அபிராமி. 

 

அவளின் வார்த்தை புரிந்த அபிராமி மனதிற்குள் நிம்மதி மூச்சை படர விட்டார்.

சரி டா என்று கூறினார். 

 

“எவனை பார்த்துக்கணும் ” நெற்றி சுருக்கி கேட்டான் அஸ்வந்த். 

 

மகன் மருமகளிடம் கேட்டதால் அவள் பதில் சொல்லிக்கொள்வாள் என்று பாரிஜாதம் அமைதியாக வந்தார். 

 

சங்கர் மகன் எதும் மருமகளை திட்டி விடுவானோ என்று நினைத்தார். 

 

அவன் தாங்க “நம்ப பையன் ” என்று உரிமையாக, அஸ்வந்த்துக்கும் சுகன்யாவுக்கும் பிறந்த குழந்தையை ” நம்ப பையன் ” என்று கூறினாள் அபிராமி. 

 

கண்கள் சிவக்க அபிராமியை மொறைத்து பார்த்தான் அஸ்வந்த். 

 

அவன் என் பையன் என்று கூற வந்தவன் திடீரென்று வாயை மூடினான். 

 

அன்று தாய் கூறியது நினைவு வந்தது. 

அவளுக்கு குழந்தை பொறக்காது பா. அதுனால தான் அவளுக்கு விவாகரத்து ஆயிடுச்சு என்றது நினைவு வந்ததும் அவளை நினைத்து பாவமாக இருந்தது. 

 

சிவந்த கண்களோடு தன்னை மொறைத்து பார்த்த தன் கணவன்  ஏதோ பேச வாய் திறந்தும் அதை மென்று விழுங்கி விட்டாரே என்று அவனை பார்த்து ” என்னாச்சுங்க? ” என்று கேட்டாள் அபிராமி. 

 

ஹான்…. ஒன்னும் இல்லை… நம்ப பையன் தான் என்றான் அஸ்வந்த். 

 

பாரிஜாதம் மகனின் வார்த்தையில் சிறிது அதிர்ச்சியாகி மகனை திரும்பி பாத்தார். 

 

அஸ்வந்த் அமைதியாக சாலையை வெறித்தான். 

 

ஹேய் பாரு உன் பையனுக்கும் நெஞ்சுல ஈரம் இருக்கு டி என்றார் சங்கர். 

 

ம்ம் அவன் எப்பவும் ரொம்ப நல்ல பையன் தான். இறக்க குணம் ரொம்ப அதிகம். இப்போ கொஞ்ச நாளா தான் சுகி இல்லனு இப்படி ஆயிட்டான். இப்போ அபி வந்துட்டாள இனிமேல் அவள் அவனை சரி பண்ணிருவாள் என்று தோளில் தன் முகத்தை இடித்து கூறினார். 

 

தன் மகனை கல் நெஞ்சக் காரன் என்று கணவர் கூறிவிட்டாராம் அதற்கு தான் இந்த இடிப்பு. 

 

பெரிய அரண்மனை போன்ற வாயிலை அடைந்தது கார். 

கேட்டை தாண்டி கார் செல்ல கண்களில் சிறு அதிர்ச்சியை காட்டினாள் அபிராமி. 

 

இரு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள் வளர்ந்து நின்றது. 

 

வானை முட்டும் அளவுக்கு அரண்மனை போன்று இருந்தது அவர்களின் வீடு. 

 

திடீரென்று அபிராமியின் கண்களில் மின்னல் வெட்டு. எதற்கு இவ்வளவு அவசரமாக இந்த திருமணம். அதுவும் நகை வரதட்சணை என்று எதுவும் எதிர்பார்க்கவில்லை. திருமண அழைப்பிதல்களும் இவர்களின் செலவு என்று ஏதேதோ யோசனையோடு இருந்தவளை கலைத்தது பாரிஜாதத்தின் குரல். 

 

வா மா. கீழே இறங்கு என்றார் பாரிஜாதம். 

 

இதோ சரோஜா அனைவருக்கும் முன் வீட்டிற்கு வந்தவர் ஆரத்தி கரைத்த தட்டோடு நின்று இருந்தார். 

 

அபி என்ற பாரிஜாதம் அவளின் கைகளில் தன் பேரனை கொடுத்து விட்டு சரோஜாவின் கைகளில் இருந்த ஆரத்தி தட்டை வாங்கி  மகன், மருமகள், பேரன் என்று மூவருக்கும் சுற்றினார். 

 

வலது கால் எடுத்து வச்சு உள்ள வா என்றார். 

 

சரோஜா தன் முதலாளியின் கைகளில் இருந்த ஆரத்தி தட்டை வாங்கி கொண்டு வெளியில் சென்று கொட்டினார். 

 

அஸ்வந்த் வீட்டிற்குள் நுழைந்ததும் வேகமாக படி ஏறி தன் அறைக்கு செல்ல அடி எடுத்து வைக்க, டேய் இரு டா மருமகளோட சேர்ந்து உட்காரு என்ற தாயின் அதிகார தோரணையில் அபிராமியின் முன் தாயை எதுவும் கூற முடியாமல் அமர்ந்தான். 

 

இதோ அவனின் மகன் கண் கொட்டாமல் அபிராமியை பார்த்தான். 

 

என்ன டா தங்கம். என்ன வேணும் என் தங்கத்துக்கு. அச்சோ அழகா இருக்குறீங்களே என்று குழந்தையை கொஞ்சினாள் அபிராமி. 

 

அஸ்வந்த் படி ஏறி அவனின் அறைக்கு சென்று இருந்தால் கூட அபிராமி அவனை தவறாக எண்ணி இருக்க மாட்டாள் . அவனுக்கு களைப்பாக இருக்கும் என்று தான் நினைத்து இருப்பாள். 

 

அவனை அமர சொல்லி விட்டு ஏற்கனவே தயாராக இருந்த பாலும் பழமும் எடுத்து வந்தார் பாரிஜாதம். 

 

தொடரும். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
878 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page