அத்தியாயம் 14
அபி இந்த பாலை குடிச்சிட்டு அவனுக்கும் கொடு மா என்றார் பாரிஜாதம்.
அத்தை நான் எப்படி? அவரை குடிச்சிட்டு தர சொல்லுங்க என்றாள் அபிராமி.
முதல் திருமணம் என்பதால் அதிகமாகவே தயக்கம் அவளிடத்தில்.
டேய் இந்தா டா குடிச்சிட்டு அவளுக்கு கொடு என்று மகனிடம் நீட்டினார்.
ம்ம்ம்ச் முகத்தை சுழித்த அஸ்வந்த் கடுப்போடு வாங்கி குடித்தான்.
குடித்து முடித்து தாயிடம் நீட்ட, டேய் உன் பொண்டாட்டி கையில கொடு டா என்றார் பாரிஜாதம்.
அபிராமி நல்ல பெண்ணாகவே இருந்துட்டு போகட்டுமே, ஆனால் இவனுக்கு தான் மனம் உறுத்தியது.
அவள் முகம் பார்க்காமல் அவளிடம் தான் குடித்த எச்சில் பாலை நீட்ட, அபிராமி அதை வாங்கி அமிர்தம் போல் பருகினாள்.
பாலை பருகி முடிக்கவும் ஹாலில் மாட்டப்பட்டிருந்த அஸ்வந்த் மற்றும் அவனின் முன்னாள் மனைவி சுகன்யா போட்டோ எதார்த்தமாக அவளின் கண்களில் விழுந்தது.
அத்தை அவங்க என்றவள் போட்டோவிலிருந்து கண்கள் அகற்றாமல் கேட்டாள்.
அவள் தான் மா இவனோட முதல் பொண்டாட்டி பேரு சுகன்யா என்றார்.
தாயின் வார்த்தையில் கோபப்பட்ட அஸ்வந்த், அவள் என்னோட முதல் பொண்டாட்டி இல்லைம்மா எப்பவும் அவள் தான் என் பொண்டாட்டி என்றான்.
சரி ப்பா புரியுது. இந்தா பழம் சாப்பிட்டு அவளுக்கு கொடு என்று பாரிஜாதம் கூறிய வார்த்தையை புறக்கணித்த அஸ்வந்த் , நீங்க எப்படி மா அவளை அப்படி சொல்லலாம். அவள் என் உயிரு மா. அவள் ஒன்னும் என் முதல் பொண்டாட்டி இல்லை. அவள் என் தேவதை என்றான். அவனையும் மீறி அவன் கண்களில் இருந்து நீர் ஊற்றெடுத்தது.
அபிராமி அவனின் கண்ணீரின் வலியை புரிந்து கொண்டாள்.
அஸ்வந்த் அவனின் கண்ணீரை மறைக்க விறு விறு என்று படி ஏறினான்.
டேய் அஸ்வந்த் என்று தந்தை அழைத்தது காற்றோடு மறைந்தது.
அத்தை நான் எதார்த்தமா தான் கேட்டேன். போட்டோல இருந்தது அவங்க மனைவினு எனக்கு தெரியும். ஆனால் எப்படி இறந்தாங்கனு கேட்க தான் வாய் திறந்தேன். சாரி அத்தை என்றாள் அபிராமி.
அச்சோ இதுல என்னமா இருக்குது. நீ என்ன வேணாலும் கேட்கலாம். இது உன் வீடு தான் என்றார் பாரிஜாதம்.
அத்தை ஏன் எங்களுக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்க. அப்பா அம்மாகிட்டே கேட்டால் சங்கடப்படுவாங்க. அதான் அவங்ககிட்டே எதும் கேட்கல என்று தன் மாமியாரிடம் கேட்டாள் அபிராமி.
பாரிஜாதம் மருமகளை புரிதலோடு பார்த்தார்.
இங்கே தொடர்ந்தது மாமியார் மருமகளின் பாசமும் புரிதலும்.
உனக்கு இந்த மாசம் முடிஞ்சிட்டா இருபத்து எட்டு வயசு ஆயிடும்னு உன் அம்மா சொன்னாங்க. இவனும் சுகன்யா நினைப்புல அறைகுள்ளேயே முடங்கிட்டான். பெத்தவங்க நாங்க ரொம்ப பயந்துட்டோம். அதுனால அந்த கோபக்காரனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணோம்.
கோபக்காரன் என்று தன் கணவனை கூறியதும் அபிராமி லேசாக குறு நகை புரிந்தாள்.
அப்போ தான் உன் போட்டோவை பார்த்தேன். எனக்கு உன்னைய ரொம்ப புடிச்சிருச்சு. அப்பறம் உன் அப்பா அம்மாகிட்டே பேசி அவங்களும் உன் சம்மதம் கேட்டு சொன்னதும் தான் நாங்க உன்னைய பொண்ணு பார்க்க வந்தோம் என்றார் பாரிஜாதம்.
அம்மாடி அபிராமி என்று மாமனார் மருமகளை பாசமாக அழைத்தார்.
சொல்லுங்க மாமா என்றாள் அபிராமி.
ஆனால் கண்டிப்பா நீ மட்டும் சம்மதம் சொல்லலைனா நாங்க என்ன பண்ணிருப்போம்னு எங்களுக்கே தெரியலம்மா. ஏனா எங்களுக்கு உன்னைய பார்த்ததும் புடிச்சு போச்சு மா. உன்னைய தவிர யாராலயும் எங்க மருமகளா அந்த நேரம் நினைச்சி பார்க்க முடியல என்றார் சங்கர்.
அபிராமி மனம் நெகிழ்ந்து போனாள்.
அந்த அளவுக்கு நாம் இவர்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்தாள்.
இவர்கள் பாசமாக பேசிகொண்டிருக்க, அபிராமியின் கையில் இருந்த பாலகன் பசிக்காக அழ ஆரம்பித்தான்.
சரோஜா என்று சத்தமாக அழைத்தார் பாரிஜாதம்.
வந்துட்டேன் மா என்று வேகமாக கையில் ஃபீடிங் பாட்டிலோடு வந்தார்.
என்கிட்டே கொடுங்க அக்கா என்று அபிராமி வாங்கி தன் பெற்று எடுக்காத மகனுக்கு வயிறை நிரப்ப சித்தமானாள்.
அவனும் கண்களை உருட்டி அவளை பார்த்து கொண்டே தன் சிப்பி வாயில் பாலை உறிஞ்சி குடித்தான்.
அத்தை இது பால் மாதிரி இல்லை. பால் பவுடரா என்று திகைப்போடு கேட்டாள்.
ஆமா மா.
அத்தை இவன் பிறந்ததும் தாய் பால் கொடுக்கலையா? அதிர்ச்சியோடு கேட்டாள் அபிராமி.
ஆமா மா என்ற பாரிஜாதம் லேசாக கண் கலங்கினார். சுகன்யா தன் மகனை பார்க்காமல் தாய் பால் தராமலேயே இறந்து போனது நினைவு வந்ததும் அவரது இதயம் தாங்காமல் வாயை மூடி அழுதார்.
அத்தை ப்ளீஸ் அழாதீங்க. இவனுக்கு நீங்க பிறந்ததுல இருந்து பால் பவுடர் கலந்து கொடுத்ததால இவன் உடம்புல சத்து புடிச்சிருக்காது அத்தை அதான் கேட்டேன். உங்களுக்கு அக்கா நியாபகம் வந்துருச்சா என்று மாமியார் அழுவது தாங்காமல் கேட்டாள்.
பாரு, என்ன இது? மருமகள் வீட்டுக்கு வந்துருக்க நேரம் இப்படி அழுதால் அவள் என்ன நினைப்பாள் . இன்னைக்கு தான் மகனும் மருமகளும் கல்யாணமாகி வீட்டுக்கு வந்துருக்காங்க. நீ இப்படி அழாத என்று மனைவியை அதட்டினார்.
ஐயோ! மாமா நான் எதுவுமே நினைக்கல. எனக்கு உங்க மூணு பேரோட நிலைமையும் புரியுது. நீங்க இப்படி எல்லாரும் அவங்களுக்காக அழுறீங்கனா கண்டிப்பா அக்கா மேல எல்லாரும் பாசமா தான் இருந்துருப்பிங்க. அவங்களும் உங்களோட மருமகளா இல்லாமல் மகளா நடந்துட்டு இருந்துருப்பாங்க என்றாள் அபிராமி.
சுகன்யாவை அக்கா என்று அவளை அறியாமல் கூறினாள் அபிராமி.
தன் கண்களை துடைத்த பாரிஜாதம் சுகன்யா ரொம்ப நல்லவள் மா. அவள் ஆள் தான் பார்க்க பெரியவள் ஆனால், குழந்தை மாதிரி என்றார்.
எப்படி அவர்கள் இறந்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்டால் கண்டிப்பாக தன் மாமியார் மிகவும் உடைந்து விடுவார் என்று உணர்ந்து கொண்டு அந்த கேள்வியை கேட்காமல் விட்டு விட்டாள்.
அபி, என் பையன் கொஞ்சம் கோபக்காரன் மா. பார்த்து நடந்துக்கோ. அவன் உன்னைய ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும். அது வரை கொஞ்சம் பொறுமையா இரு மா என்றார்.
இது உலகத்தில் உள்ள அனைத்து ஆண் மகன்களை பெற்றெடுத்த தாய்மார்கள் கூறும் வார்த்தை. பெண்கள் தான் ஆண்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தன் மகனிடம் உனக்கு வர போகும் மனைவியை புரிந்து நடந்து கொள் என்று ஒரு போதும் கூற மாட்டார்கள்.
நான் ஏன் அவரை புரிஞ்சி நடந்துக்கணும். உங்க பையன் என்னைய புரிஞ்சி நடந்துக்க மாட்டாரா? என்று மாமியாரை எதிர்த்து கேள்வி கேட்காமல் அவர் கூறுவதற்கு “சரி” என்று தலை அசைத்தாள் அபிராமி.
அவளுக்கு என்ன தலை எழுத்தா? அவனை புரிந்து அவனிடம் அடங்கி நடக்க வேண்டும் என்று. ஆனால் இரு வீட்டின் பெரியவர்களை நினைத்து “சரி” என்றாள்.
அதை விட மிகவும் முக்கியமான நபருக்காகவும் தான். இப்பொழுது பெற்றெடுக்காமல் தாய்மை என்னும் வரத்தை கொடுத்த தன் மடியில் பால் குடித்து துயில் கொண்டிருக்கும் குட்டி கிருஷ்ணனுக்காகவும் தான் “சரி” என்றாள்.
சரி அத்தை இவன் தூங்கிட்டான். நான் இவனை படுக்க வைக்குறேன் என்றவள் சோஃபாவில் இருந்து எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்து திடீரென்று நின்றாள்.
என்னாச்சு மா என்று கேட்டார் சங்கர்.
அத்தை மாமா இவனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க என்று கேட்டாள்.
இன்னும் இவனுக்கு நாங்க பேரு வைக்கலமா என்று கவலையோடு கூறினார் சங்கர்.
அப்படியா! என்று யோசித்து, சரி அப்போ நான் நல்ல பேரு செலக்ட் பண்ணிட்டு சொல்லுறேன் அத்தை என்று மாமியாரின் பதிலை எதிர்பாராமல் அஸ்வந்த் சென்ற திசையிலேயே சென்றாள்.
இதோ, தான் இனி கணவனோடு சேர்ந்து வாழ போகும் அறை வாயிலில் நின்றாள்.
அஸ்வந்த் கட்டிலில் பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
திடீரென்று யாரோ நிற்பது போல் இருக்க கண்களை திறந்து பார்த்தான் .
அவன் தாலி கட்டி அழைத்து வந்த புது மனைவி அறை வாயிலில் நின்று இருந்ததை பார்த்து கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்து நின்று, என் பையனை தா என்று கேட்டான்.
தூங்கும் போது குழந்தைங்க கை மாறினா எழுந்திருச்சுருவாங்க. நானே படுக்க வைக்குறேன் என்றவள் ஒரு காலை தூக்கி அறைக்குள் வைத்து பிரவேசிக்கும் நேரம், ” அம்மா உன்கிட்டே எதும் சொல்லலையா? ” என்று கேட்டான் அஸ்வந்த்.
கணவனின் வார்த்தையில் காலை பின்னோக்கி வைத்து புரியாமல் நெற்றி சுருக்கிய அபிராமி, என்னங்க சொல்லணும்? என்று கேட்டாள்.
உன்னைய என் அறைக்குள்ள விடாதீங்க. என் பையனை அவளுக்கிட்டே கொடுக்காதீங்கனு சொல்லிட்டு தான் வந்தேன் என்று பட்டென்று கூறினான்.
வந்த முதல் நாளே நல்ல வரவேற்பு இருக்கிறதே என்று நினைத்த அபிராமி, அப்போ நான் எங்கங்க தங்கணும் என்று கேட்டாள்.
அம்மா சொல்லுவாங்க என்றான்.
அப்போ இது யாரோட ரூம் என்று கேட்டாள்.
இது என் ரூம்.
இவன் யாரோட பையன்?
இவன் என் பையன் என்பதில் சற்று அழுத்தம் காட்டினான் அஸ்வந்த்.
சரிங்க அப்போ நான் யாரு? என்று அபிராமி அடுத்த கேள்வி வைக்க,
அஸ்வந்த் பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறி திரு திருவென விழித்து நின்றான்.
நான் யாருங்க? என்று மறுபடி கேட்டாள்.
என்ன இது நம்பலையே கேள்வி கேட்குறாள். நான் சொன்னதும் அடங்கிருவானு நினைச்சேனே என்று யோசித்து நின்றான் அஸ்வந்த்.
எங்க அம்மா அப்பாவுக்கு மருமகள் என்றான்.
லேசான குறு நகை வைத்த அபிராமி, சும்மா மருமகள் ஆயிட்டேனா? நீங்க என்ன எங்க அம்மாவோட அண்ணன் பையனா? இல்லை எங்க அப்பாவோட தங்கச்சி பையனா?
அடி பாவி. எப்படி எல்லாம் கேள்வி கேட்குறாள் என்று நினைத்த அஸ்வந்த், சரி வா அவனை உள்ள படுக்க வை. நாம இப்படி பேசிட்டு இருக்குற சத்தத்துல முழிச்சிருவான் என்றான்.
அபிராமி தனக்குள் சிரித்து கொண்டு அவனை கட்டிலில் படுக்க வைத்து அவனின் பட்டு கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்தாள்.
தொடரும்.
