அத்தியாயம் 15
அபிராமி மகனை படுக்க வைத்து விட்டு அறையை விட்டு சென்றாள்.
அஸ்வந்த் கட்டிலில் அமர்ந்து நிம்மதி மூச்சை வெளியிட்டான்.
நல்ல வேலை வெளிய போய்ட்டாள் என்று அவன் மனதிற்குள் நினைத்த நேரத்தில் அபிராமி மறுபடி அறைக்குள் நுழைந்தாள். அதுவும் கைகளில் ஒரு டிராலியை இழுத்து கொண்டு வந்தாள்.
அஸ்வந்த் திகைப்போடு அவளை பார்த்தான். நாம் அவ்வளவு சொல்லியும் நம் அறைக்குள் வந்து விட்டாளே என்று அவள் மீது கோபம் அதிகமாக வந்தது.
ட்ராலியை திறந்து அவளது புடவைகளை எடுத்து கட்டிலில் வைத்தாள். அவள் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வந்த அவளது உடைமைகள் அதில் இருந்தது.
அருகில் இருந்த கப்போர்டை திறந்தாள். அதிர்ச்சியில் கண்களை விரித்தாள் அபிராமி.
கப்போர்ட்டில் எண்ணற்ற வண்ண வண்ண புடவைகள் இருந்தது. அத்தனையும் அழகாக இருந்தது. அதில் ஒன்றை எடுத்து “வாவ்” என்று வருடினாள்.
அஸ்வந்த் அவளின் செய்கையை பார்த்தவன் சீறி கொண்டு வந்தான்.
“ஹேய் அதை தொடாத டி” என்றான் சத்தமாக.
அவனின் சத்தமான குரலை கேட்ட அபிராமி பயந்து நின்றாள்.
இது என் பொண்டாட்டி சுகியோடது. நீ தொடக் கூடாது டி என்றான்.
அவனின் கோபத்தில் சாரிங்க என்றாள் அபிராமி. இவ்வளவு நேரம் கணவனை கேள்விகளால் லெப்ட் ரைட் வாங்கியவள் நொடியில் கண் கலங்கினாள்.
கப்போர்ட்டை சத்தம் வரும் வகையில் அழுத்தி மூடினான் அஸ்வந்த்
உன் ட்ரெஸ்ஸ அதே பேக்ல வச்சி யூஸ் பண்ணு என்றான்.
சரி என்பது போல் தலை அசைத்தாள் அபிராமி.
சரி வெளியே போ என்றான்.
ஏனோ அவனின் கோபத்தை தாங்க முடியாதவள் அந்த நேரம் வெளியில் சென்று ஹாலில் அமர்ந்தாள்.
ஹாலில் அமர்ந்த அபிராமியை பார்த்து அவர் அருகில் வந்தார் சங்கர்.
என்னமா ரூம்க்கு போலையா என்று கேட்டார்.
இல்லை மாமா இப்போவே அங்க போய் என்ன பண்ண. அவர் ரெஸ்ட் எடுக்குறாரு என்று பொய் கூறினாள் அபிராமி.
சரி மா என்றவர் அவளின் முன் அமர்ந்து மீண்டும் பல கதைகள் பேச தயாரானார்.
அவளின் அம்மா, அப்பா மற்றும் தங்கை மூவரை பற்றி தெரிந்து கொண்டார். ஏற்கனவே அகிலாவை பற்றி அவருக்கும் தெரியும். இருந்தாலும் மருமகளிடம் பேச ஆசையாக இருந்தது அவருக்கு.
அபிராமியும் மாமனார் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் தந்தாள்.
மெல்ல மெல்ல இருள் சூழ தொடங்கிய நேரம் அது.
சரோஜா இரவு உணவை சமைத்து கொண்டிருந்தார்.
அவர் சமைத்து முடிக்கவும் அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். இப்பொழுது சாப்பிட்டு முடித்து கண்டிப்பாக கணவன் இருக்கும் அறைக்கு தான் தானும் செல்ல வேண்டும் என்று யோசித்தாள் அபிராமி.
பாரிஜாதமும் சங்கரும் மகன், மருமகளிடம் சொல்ல சொன்ன முக்கியமான விஷயங்களை கூறாமல் விட்டு விட்டனர்.
எப்படி சொல்லுவார்கள் ? திருமணம் செய்து வைத்து விட்டு மகனின் அறைக்கு செல்லாதே என்று அவர்கள் மருமகளிடம் கூற முடியுமா?
அப்படி கூறினால் மருமகள் என்ன நினைப்பாள் என்று பாரிஜாதம் சிந்தித்து கொண்டிருந்தவர் அபிராமியிடம் மகன் சொல்ல சொன்ன விஷயங்களை சொல்லவில்லை . இருவரும் மனம் விட்டு பேசி புரிதலோடு நூறு வயது வரை சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்தார். அதனால் அமைதியாக இருந்து விட்டார்.
அஸ்வந்த் சாப்பிட்டு அறைக்கு சென்றான். பின்னாலேயே அபிராமியும் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் உன்னைய தான் வரக்கூடாதுனு சொன்னேன்ல என்றான் அஸ்வந்த்.
ஏங்க இப்படி சொல்லுறீங்க? நீங்க தான் என்னைய வராதன்னு சொல்லுறீங்க. அத்தை மாமா என்னைய எதும் சொல்லல. அப்போ நான் எங்கங்க தங்கணும் அப்பாவியாக கேட்டாள்.
இந்த அம்மாவை என்று பற்களை கடித்தான் அஸ்வந்த்.
சரி அதான் இப்போ சொல்லிட்டேன்ல கிளம்பு என்றான்.
ஏங்க வேணாம்ங்க. நைட் தனியா தூங்க பயமா இருக்கும். நான் வேணும்னா காலையில ரூம்குள்ள வரல. நைட் மட்டும் வரேன் ப்ளீஸ்ங்க என்றாள்.
ஹேய்.. சொன்னா புரியாதா? நீ எப்பவும் வர கூடாது. நைட்டும் வேணாம் காலையிலேயும் வர வேணாம் என்று அஸ்வந்த் கூற,
போங்கங்க என்றவள் அந்த பஞ்சு மெத்தையில் அமர்ந்தாள். அவனின் மகன் இன்னும் தூங்கி கொண்டிருக்க, அவனின் அருகில் அப்படியே படுத்தாள்.
ஹேய் என்ன டி பண்ற? பெட்டை விட்டு இருந்து எழுந்திரு என்றான் கோபமாக.
ரொம்ப டையர்டா இருக்குங்க. காலையிலேயே சீக்கிரமா எழுந்திரிச்சது. உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் வாங்க வந்து தூங்குங்க என்றாள்.
நர நரவென்று பற்களை கடித்தான் அஸ்வந்த். சரியான திமிர் பிடிச்சவள் என்று மனதிற்குள் திட்டினான்.
அவனுக்கும் தூக்கம் கண்ணை கட்டி கொண்டு வந்தது. சரி டி அப்போ பையனை நடுவுல படுக்க வை. நீ இப்படி என்கிட்டே தூங்குறது எனக்கு புடிக்கல. என் புள்ளைய இங்க என் பக்கத்துல படுக்க வை என்றான்.
அந்த மாதிரி குழந்தைங்கள நடுவுல படுக்க வைக்க கூடாதுங்க என்றாள் அபிராமி.
அஸ்வந்த் புருவம் தூக்கி ஏன்? என்று கேட்டான்.
உங்களுக்கும் எனக்கும் நடுவுல இவன் படுத்தா ரெண்டு பேரோட பாடி ஹீட்டும் இவனுக்கு தான் போகும். அதுனால இவன் என் பக்கத்துல படுத்துக்கட்டும் என்றாள் அபிராமி.
நீ எப்படி டி அவனை பார்த்துப்ப? அவன் நைட் பசிக்குதுன்னு அழுவான். என்னால தான் அவனை பார்த்துக்க முடியும் என்று வேண்டும் என்றே வாக்குவாதம் செய்து அபிராமியை தன் அறை விட்டு வெளியே துரத்த எண்ணினான் அஸ்வந்த்.
அபிராமி படுத்து இருந்தவள் அங்க பாருங்க என்று மேஜையை காட்டி எழுந்தாள்.
அறையில் போடப்பட்டிருந்த மேஜையில் குட்டி கிருஷ்ணனுக்கு பால் இருந்தது.
அறைக்குள் வரும் பொழுது எடுத்து வந்ததும் அந்த மேஜயில் வைத்து விட்டு தன் நாயகனோடு பேசி கொண்டிருந்தாள்.
அவன் அழுதால் நான் பார்த்துப்பேன் என்றாள்.
இவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அப்போ என் புள்ளையை என்கிட்டே இருந்து பிரிக்க பார்க்குற என்று கோபத்தில் ஏதேதோ கூறினான்.
ஏங்க என்னங்க பேசுறீங்க? அவன் பசிக்கு அழுதால் நீங்களே அந்த பால் எடுத்து இவனுக்கு கொடுங்க. நான் என்ன சொல்ல போறேன் உங்கள என்றவள் படுத்து விட்டாள்.
ஹேய் இங்க பாரு டி.. நீ இங்க இருக்குறது எனக்கு புடிக்கல. வெளியே போ என்றது அவளின் காதுக்களில் ஏறவில்லை.
அவள் நொடியில் நித்திரா தேவியிடம் சரணடைந்து விட்டாள்
அஸ்வந்த் கலங்கி போய் இருந்தான்.
சுகி சாரி டி என்று அவனின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
நான் உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன். இந்த அடங்காப்பிடாரி சிலாட்டையை கட்டிக்கிட்டேன் என்று அவனின் அறையில் போட்டோவாக தொங்கி கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்து மானசீகமாக பேசினான்.
ஆனால் நம் நாயகனுக்கு குற்ற உணர்ச்சி கொன்றது. சுகி அவன் உயிர் அல்லவா. அவளுக்கு துரோகம் செய்தது மனதை ரணமாக குத்த, ஒரு பெட்ஷீட் எடுத்து சோஃபாவில் சென்று படுத்து கொண்டான்.
*****
காலை கதிரவன் அவனின் ஆட்சியை பூமிக்கு நிலை நிறுத்தி கொண்டிருந்தான் .
பறவைகள் கீச் கீச் என்று சங்கீதம் பாட, அபிராமி கண் விழித்தாள்.
இரவு அவர்களின் மகன் இரண்டு, மூன்று முறை அழுது விட்டான். அப்பொழுது எழுந்து அவனுக்கு பசியாற்றும் போதே தன் கணவன் கோபத்தில் சோஃபாவில் படுத்து விட்டான் என்று அவளுக்கும் வேதனையாக தான் இருந்தது.
அதற்காக தானும் அவன் கூறிய படி வெளியில் ஹாலிலா சென்று தூங்க முடியும். ராமன் இருக்கும் இடம் தானே சீதைக்கு சொர்க்கம்.
அது போல் அபிராமி பிடிவாதமாக அவன் வேண்டாம் என்று மறுத்தும் அவனின் அறைக்குள்ளேயே இருந்து விட்டாள்.
இப்பொழுது சோஃபாவில் தூங்கும் தன் கணவனை ரசித்து தான் பார்த்தாள் அபிராமி.
தூங்கும் போதும் குழந்தை போல் இருந்தான். அப்பொழுதும் அவனின் முகத்தில் கோபம் தென்பட்டது.
வட்ட வடிவ முகத்தில் அடர்ந்த புருவங்கள், கூர் நாசி, தடித்த உதடுகள் அபிராமியை விட நிறமாக இருந்தான் நம் நாயகன். அவன் அறியா வண்ணம் அவனை ரசித்து பார்த்தாள்.
கோபத்தில் அவன் உரிமையாக ” டி ” என்று கூறிய வார்த்தை அவளுக்கு பிடிக்கவே செய்தது.
” டி ” என்று கூறும் பொழுது அந்த வார்த்தையில் அன்பை உணர்ந்தாள் அபிராமி.
ஆனால் அவனிடம் கேட்டால் தான் தெரியும். அன்பாக கூறினானா இல்லை திட்டும் பொழுது அவனை அறியாமல் வெளி வந்ததா என்று.
இதோ அவன் கருவிழிகளை உருட்டினான். அபிராமி சட்டென்று பார்வையை திருப்பி குட்டி பாலகனை பெட்டின் நடுவில் படுக்க வைத்து அவனுக்கு இரு புறமும் தலையணை வைத்து அவன் கீழே விழாமல் இருக்க செய்து விட்டு தான் கொண்டு வந்த ட்ராலியில் இருந்து அவளுக்கு தேவையான உடைகளை எடுத்து குளிக்க சென்றாள்.
கருவிழிகளை உருட்டிய அஸ்வந்த் கண் திறக்கும் போது அபிராமி அந்த அறையில் இல்லை.
தலையை நெட்டி முறித்து எழுந்த அஸ்வந்த் தன் மகனை பார்த்தான்.
பாதுகாப்பாக உறங்கி கொண்டிருந்த மகனின் அருகில் சென்று அவனின் பட்டு கன்னத்தில் முத்தம் வைத்து அவனின் அருகில் படுத்து கண் மூடினான்.
அபிராமி ஷவ்வரை ஆன் செய்து அதில் இருந்து முத்து முத்தாக சிதறிய துளிகளில் நீராடினாள்.
இது போல் அவள் குளித்ததில்லை. அபிராமியின் வீடும் அவர்கள் நால்வருக்கும் அரண்மனை தான். ஆனால், அங்கு ஷவர் இல்லை.
ஆனால் அவளின் புகுந்த வீட்டில் ஒரு ஊரே தங்கி கொள்ளலாம் என்பது போல் கந்தர்வக்கோட்டை சமஸ்தானமாக இருந்தது.
குளியலறை நல்ல வீதியாக இருக்க அங்கு வைத்தே புடவையை கட்டிக் கொண்டாள் அபிராமி.
நன்றாக விடிந்து விட்டதை காட்ட கதிரவன் தன் கதிர்களை அஸ்வந்த்தின் அறைக்குள் சன்னல் வழியாக படர விட்டார்.
சூரிய ஒளி தன் மேல் பட்டதும் கண்களை திறந்த அஸ்வந்த் தன் கண் முன் தங்க சிலை ஒன்று நிற்பதை பார்த்து வியந்து போனான்.
நேற்று திருமணம் ஆனது நன்றாகவே ஞாபகம் இருந்தது அவனுக்கு.
ட்ரெஸ்ஸிங் டேபில் முன் நின்று தன்னுடைய ஆறடி கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தாள் அபிராமி.
சின்ன சின்ன முத்து போன்ற நீர் துளிகள் கூந்தலில் இருந்து வழிந்து அபிராமியின் கழுத்து வளைவில் இறங்கின.
கழுத்தில் பயணத்தை தொடங்கிய நீர் துளிகளை இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த்.
கூந்தலை நன்றாக உலர்த்தி விட்டு தன் முன் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகம் பார்த்த அபிராமி லேசான அதிர்ச்சியை அவள் முகத்தில் காட்டினாள்.
தொடரும்.
