மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 12
“யாரு நீங்க…?” என்றவளின் கேள்வியில் அவனின் காதல் மனம் உடைந்தது.
இதுவரை வாய்விட்டுச் சொல்லப்படாத காதல் தான் என்றாலும் கூட ஏனோ அவளின் நீ யார் என்ற கேள்வி ஆடவனுக்கு உயிர்வரை வலிக்கத் தான் செய்தது.
“பட்டு, நான்…” என்றவனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்திருக்க மற்றவர்களைப் பார்வையால் உதவிக்கு அழைத்தான்.
ஆனால் மற்ற இருவரும் பார்வையாளர்களாய் மட்டும் தான் இருப்போம் என்பது போல் அமைதியாக அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
அவளோ அதற்கு மேலும் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்காமல் அவனையே அழுத்தமாய் பார்த்திருந்தாள்.
ஒரு நிலைக்கு மேல் அவளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறியவன் மெல்ல அவளருகில் வந்து அவளின் கரத்தைப் பிடிக்க வெடுக்கென அவனிடமிருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவள்,
“நீங்க எனக்கு யாருன்னு கேட்டேன்?” என்றாள் மீண்டும் அழுத்தமாக.
“நான் உன்னோட விவேகன் அத்தான் பட்டு…” என்றான் ஒரு முடிவுடன்.
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் நிச்சயம் அவளை இழந்துவிடுவோமோ என்ற பயமே அவனை அதற்கு மேலும் தடுமாறாமல் பேசச் செய்தது.
அவன் கூறியதைக் கேட்டவள் ஒரு வெற்று சிரிப்பைச் சிந்தி,
“ஸாரி சார், அப்படி யாரையும் எனக்குத் தெரியாது.” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“பட்டு, அது வந்து…” என்று அவளுக்குத் தன் நிலையை விளக்க முற்படும்போது அவனின் கரத்தைத் தடுத்தவள் அமுதாவிடம் திரும்பி,
“அமு, பசிக்குது.” என்றாள் பாவமாய்.
அவள் அப்படிக் கேட்டதும் உடனே படபடப்புடன்,
“இரு தங்கம், உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்.” என்று வேகமாய் வெளியே செல்ல முற்பட அப்போது பிரவீனோ,
“இருங்கம்மா… ஜூஸ் இப்போ வந்துடும்.” என்றான்.
அப்போது தான் அங்கே மூன்றாவதாய் ஒருவர் இருப்பதைக் கண்டவள் கேள்வியாய் அவனைப் பார்க்க அவனோ மெல்ல அவளருகில் வந்தவன்,
“ஹாய் ம்மா! என்னோட பேரு பிரவீன். நான் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ். என்னை ஒரு போலீஸா பாக்காம உன்னோட அண்ணனா கூடப் பாக்கலாம்.” என்றான் புன்னகையுடன்.
ஏனோ அவளுக்கு அவனைத் தவறாய் நினைக்கத் தோன்றவில்லை. அதேநேரம் உடனே நம்புவதற்கும் கொஞ்சம் பயமாய் தான் இருந்தது.
அவளுடைய பயம் அவளின் கண்ணிலே தெரிய அவன் ஏதோ சொல்ல வரும்போது அப்போது அந்தக் கதவைத் திறந்து உள்ளே வந்த காவலர் ஒருவர்,
“சார், நீங்கக் கேட்ட ஜூஸ்…” என்றபடி ஒரு கவரைக் கொடுத்துவிட்டுப் போக அதை வாங்கியவன் அமுதாவின் கரத்தில் கொடுத்து,
“பாப்பாக்கு முதல்ல குடுங்க…” என்றான்.
“தம்பி, டாக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு கொடுக்கலாமா?” என்றவளுக்கு இப்போது தான் அவளின் வயிற்றில் இருந்த விஷத்தை அகற்றினார்கள். இந்தச் சமயம் இதைக் கொடுக்கலாமா என்று புரியவில்லையே என்ற தவிப்பு தெரிந்தது.
அவரின் தவிப்பை உணர்ந்தவன் மெல்ல சிரித்தபடி,
“நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். டாக்டர் தான் லிக்விட் ஃபுட்டா குடுக்கச் சொன்னாரு… நான் பேசிட்டேன்மா.” என்றான் உறுதியாய்.
அதை வாங்கியவர் மெல்ல அருந்ததியின் பக்கத்தில் அமர்ந்து அவளைத் தன் நெஞ்சில் தாங்கி அந்த ஜூஸைக் குடிக்க வைக்க அவளோ அரை மயக்க நிலையிலேயே அதைக் குடித்து முடித்தாள்.
மொத்தத்தில் அங்கே யாரோ போல் இருந்தது விவேகன் தான்.
அருந்ததி அந்த ஜூஸைக் குடித்து முடித்ததும் கேள்வியாய் அமுதாவைப் பார்க்க அவளின் கேள்வியின் பொருள் உணர்ந்து வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னவர் அவளைக் காப்பாற்றியது பிரவீன் என்பது வரை அனைத்தும் சொன்னார்.
இந்த நேரத்தில் கூடத் தன் குடும்பம் தன்னுடன் இல்லையே என்றவளுக்குத் தெரியாது இனி அவளின் நிழலைக் கூட யாரும் அவ்வளவு எளிதில் தீண்ட முடியாது என்று.
அதேநேரம் விவேகனை நோக்கி வெறுமையான பார்வையை தந்தவள் நன்றியுடன் பிரவீனை பார்த்தாள்.
“ரொம்பவே தேங்க்ஸ் சார். உங்களோட உதவியை என் உயிர் உள்ளவரை நான் மறக்கமாட்டேன் சார்.” என்று வாய் வார்த்தைகளாலும் கூறினாள்.
“பரவாயில்லைம்மா… என்னை உன் அண்ணன்போல நினைச்சிக்கோம்மா… இப்படி இதுபோல முட்டாள் தனமான வேலையைச் செய்யாத… பாவம், இவங்க ரொம்பவே தவிச்சு தான் போயிட்டாங்க…” என்று அமுதாவைக் காட்டிக் கூறியவன் விவேகனை வம்பிழுக்கவும் தவறவில்லை.
அவர்கள் மூவரும் ஒன்றாக ஆனதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வேகமாய் அருந்ததியிடம் வந்தவன்,
“பட்டு, இதோ பாரு என் மேல கோபம் இருந்தா அடிச்சிடு. அதைவிட்டுட்டு இப்படி பண்ணாத… நிச்சயம் நீ இப்படியொரு முடிவை எடுப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. அதுமட்டும் இல்ல அவங்க உன்னோட குடும்பம் தான் உனக்குத் தீங்கு செய்யமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க இந்த அளவுக்கு மோசமா இருப்பாங்கன்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கலைம்மா…” என்றான் படபடப்பாக.
ஆனால் அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் அவனின் கரத்தைத் தன் மேல் இருந்து விலக்கிக் கொண்டவள் அமுதாவைப் பார்த்து,
“அமு, எனக்குத் தூக்கம் வருது.” என்றவள் அப்படியே அமுதாவின் மடியிலேயே படுத்துக் கொண்டாள்.
ஏனோ அவளின் அந்தப் பாராமுகம் அவனுக்கு மிகவும் வலித்தது.
அதை அவனின் முகமும் காட்டிவிட அதை உணர்ந்த பிரவீன் அவனின் தோளில் கரத்தை அழுத்தி,
“பாப்பா, கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் பேசிக்கலாம். இப்போ கொஞ்சம் வெளியே போலாம் விவேகா…” என்றான் நண்பனை ஆறுதல்படுத்தி.
கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு படுத்திருந்தவளைக் காண்கையில் ஆடவனின் உள்ளம் வலித்தது.
இந்தப் பாராமுகத்தை தானே இத்தனை நாளாகத் தாமும் கொடுத்தோம் என்பதை அவனின் மூளை மறந்துவிட்டது போலும்.
நண்பனுடன் வெளியேறியவனைப் பார்த்தப் பெண்ணவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
‘ஏன் அத்தான் உங்களுக்கு என்னைப் பிடிக்கலை? இனிமே என்னோட தொல்லை உங்களுக்கு இருக்காது அத்தான்…’ என்று மனதோரம் நினைத்தவள் அப்படியே அமுதாவின் மடியிலேயே உறங்கிவிட்டாள்.
இங்கே வெளியே வந்தவர்கள் அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட விவேகனின் விழிகளோ தூரத்தே வெறித்திருந்தது.
“மச்சான், இங்கே பாரு. இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி இருக்க? நீ ஒரு கலெக்டர், அது உனக்கு நினைவுல இருக்கா? ஏன்டா இப்படி இருக்க?” என்றான் நண்பனைத் தேற்றும் விதமாக.
“நான் கொஞ்சமும் இதை எதிர்பார்க்கலை பிரவீன். நான் தான் இவங்களுக்கு ஆகாது. ஆனா இவ அவங்க பெத்த பொண்ணு தானே… எப்படி அவளுக்கே இவ்வளவு பெரிய அநியாயம் பண்ணப் பார்த்தாங்க? இத்தனை நாளா இவ இங்கே நிம்மதியா இருக்கான்னு நினைச்சு தான் நான் நிம்மதியா இருந்தேன். ஆனா இவ இங்கே…” அதற்கு மேலும் தொடர முடியாமல் வார்த்தை தடுமாறியது.
பிரவீனோ அவன் பேச வந்ததை முழுதாய் பேசி முடிக்கட்டும் என்று அமைதியாய் தன் நண்பனைப் பார்த்தான்.
“அவங்களுக்கு இன்னும் என்னடா வேணும்? பெத்த புள்ளைங்க சந்தோஷத்தைவிட இந்தக் கௌரவமும் ஜாதியும் தான் முக்கியமா போயிடுச்சா என்ன? நினைக்க நினைக்க அவ்வளவு கோபம் வருதுடா… இவங்க எல்லாம் என்னடா மனுஷங்க? ஒரு உயிர் அவங்களுக்கு அவ்வளவு சுலபமா போயிடுச்சா என்ன? முன்னவே போன உயிருக்கு இன்னும் இவங்க பதில் தெரியலை. இதுல இன்னும் ஒரு உயிரா? நினைக்க நினைக்க நெஞ்சே நடுங்குதுடா… இவங்களை எல்லாம் எல்லையைக் காக்குற இடத்துல நிக்க வச்சி அங்கே நம்ம வீரர்கள் படற கஷ்டத்தைக் கண் முன்னாடி கொண்டு வரணும்டா. ஒவ்வொரு நாளும் அவங்க மரண தண்டனையைவிட மோசமா அனுபவிக்கணும்.” என்றவனுக்கு அந்த வீட்டின் மேல் இருந்த வெறுப்பு இன்னும் அதிகமாய் தான் ஆனது.
“சரி, கொஞ்சம் அமைதியா இரு. அதுதான் பாப்பா எழுந்துட்டா இல்ல, நீ போய் உன்னோட வேலையைப் பாரு. நான் இவங்களைப் பாத்துட்டு வீட்ல கொண்டு போய் விடறேன்.” என்று தன் நண்பனைச் சமாதானம் செய்தான்.
“இல்லடா, நான் இவங்க ரெண்டு பேரையும் அங்கே கூட்டிட்டுப் போயிடறேன். இனி பட்டு இங்கே இருக்க வேணாம்.” என்றான் முடிவாக.
“இல்ல விவேகா, அவங்க இங்க தான் இருக்கணும். அதேமாதிரி பாப்பா படிக்கவும் ஆரம்பிக்கணும். எல்லாமே இங்கே இருந்து அவங்க கண் முன்னாடி தான் நடக்கணும். நீ போய் உன்னோட வேலையைப் பாரு. நீதான் இன்னும் ரெண்டு வருஷத்துல இங்கே வந்துடப் போற இல்ல, அப்புறம் என்ன? நீ இருக்கேன்னு இங்கே இருக்குறவங்களுக்கு தெரியணும். அவங்க மறந்து மட்கிப் போன விஷயங்கள் இனி பூதமா அவங்க முன்னாடி நிக்கணும். அவங்க பண்ணின பாவங்கள் எவ்வளவுன்னு அவங்களுக்குத் தெரிய வைக்கணும். அதுதான் அவங்களுக்கான தண்டனை.” என்றான் உறுதியாய்.
தன் நண்பன் சொல்வதில் இருந்த உண்மை உறைக்க அவனுக்கும் அதுதான் சரி என்பதனால் அடுத்து என்ன செய்வது என்று இருவரும் கலந்து ஆலோசித்தனர்.
*
அதேநேரம் தன் வீட்டிலிருந்த கற்பகநாயகியின் அலைபேசிக்கு அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவரின் முகத்தில் வியர்வைத்துளிகள் பூக்க அடுத்த நொடியே, “மாணிக்கம்…” என்ற அலறலுடன் மயங்கிச் சரிந்தார்.
அப்போது தான் வீட்டின் உள்ளே நுழைந்த மாணிக்கம் தாயின் அலறலைக் கேட்டு வேகமாய் அங்கே வந்தார்.
அதற்குள்ளாகவே மாமியாரின் சத்தம் கேட்டுச் சகுந்தலாவும் வந்துவிட இருவரும் அவரைக் கண்டுப் பதட்டத்துடன் சகுந்தலா தண்ணீர் எடுத்து வரச் செல்ல மாணிக்கமோ தாயின் அருகில் அமர்ந்து,
“அம்மா, என்னாச்சு உங்களுக்கு?” என்றபடி தாயை மடியில் கிடத்திக் கன்னத்தில் தட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் அப்போதும் கண்களைத் திறக்காமல் இருந்த கற்பகநாயகியைக் கண்டு பயமடைந்தவர் அப்போது தான் காரை நிறுத்திய துருவனைக் கண்டு,
“துருவா, வண்டியை எடு. உன்னோட பாட்டி மயங்கி விழுந்துட்டாங்க…” என்றவர் காரில் கற்பகநாயகியைக் கிடத்தினார்.
அவசரம் புரிந்த துருவனும் வேகமாய் வண்டியை விரைவாக மருத்துவமனையை நோக்கிச் செலுத்தினான்.
அப்படி அந்த அலைபேசியில் வந்த செய்தி தான் என்னவோ? அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
