கொடைக்கானலின் பனிமூட்டம் அன்று ஏனோ ஒரு எச்சரிக்கையைச் சுமந்து வருவது போலிருந்தது. அவ்விடத்தின் காற்று கூட இடம் பார்த்து தடம் பார்த்தே வீசியது .ஆர்யனின் மனதிலும் கூட இருள் காற்று அவனை பல குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது
கௌதம் கிளம்பிச் சென்ற பிறகு, ஆர்யனின் மனதில் ஒரு இனம் புரியாத பயம் குடிகொண்டது. யாழினி… இல்லை, ‘அஞ்சலி’. அவளது உண்மையான அடையாளம் தெரிந்த பிறகு, அவளைப் பார்க்கும்போது ஆர்யனுக்குள் ஒரு புதிய மதிப்பும், அதே சமயம் அவளை இழந்துவிடுவோமோ என்ற கவலையும் மேலோங்கியது.
அன்று இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். ஆர்யனுக்குத் தூக்கம் வரவில்லை. காது கேட்காததால், மற்றவர்களுக்குத் தெரியும் சிறு ஒலிகள் கூட அவனுக்குத் தெரியாது/கேட்காது . ஆனால், அவனது கண்கள் இருட்டிலும் கூர்மையாக இருந்தன. உறக்கம் என்பது அவனை நெருங்கவும் கூட இல்லாமல், பல சிந்தனைகளை மனதில் போட்டு குழப்பி கொண்டு இருந்தான் ஆர்யன்.
எதற்சயாய் ஜன்னல் வழியாக யாழினியின் வீட்டைப் பார்த்தான்.அங்கே மூன்று நிழல்கள் வேலித் தாண்டி உள்ளே நுழைவதைக் கண்டான். யார் என்பது சரியாய் தெரியாத இரவு நேரம் ஆனாலும்,யாரோ அவளை தாக்க தான் அத்து மீறி உள்ளே நுழைகிறார்கள் என்பது மட்டும் அவனுக்கு நன்கு புரிந்தது
ஆர்யனின் இதயம் தாறுமாறாகத் துடித்தது. அவன் ஒரு விநாடி கூட யோசிக்கவில்லை. கையில் ஒரு கனமான இரும்பு ராடை எடுத்துக்கொண்டு, தன் வீட்டின் கொல்லைப்புற வழியாக யாழினியின் வீட்டை நோக்கி ஓடினான்.
யாழினி காது கேட்கும் திறன் கொண்டவள் என்பதால், யாரோ கதவை உடைக்க முயற்சிப்பதைக் கேட்டு விழித்துக் கொண்டாள். அவள் பயத்தில் அறைக்குள் முடங்கிப் போனாள். அவளது கைகள் நடுங்கின. தன் கையில் இருந்த அந்தப் பென் டிரைவை ஒரு சிறிய லாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.
கதவு உடைக்கப்பட்டு அந்த மூன்று நபர்களும் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்த மூவருக்குமே யாழினியை தாக்குவது தான் முதல் வேலையாய் இருந்தது.ஒருவன் யாழினியின் முடியைப் பிடித்து இழுத்தான். அவள் அலற முயன்றாள், ஆனால் அதிர்ச்சியில் அவளது குரல் எழவில்லை.
சரியாக அந்த நேரத்தில் ஆர்யன் உள்ளே புகுந்தான். அவன் கையில் இருந்த இரும்பு ராடால் ஒருவனை ஓங்கித் தாக்கினான். ஆர்யனுக்குச் சத்தம் கேட்காது என்பதால், அவனது தாக்குதல்கள் அனைத்தும் அவனது பார்வையின் வேகத்திலேயே இருந்தன.
“விடு அவளை!” என்று அவன் கத்தினான். அவனது குரல் அவனுக்கே கேட்கவில்லை என்றாலும், அதில் இருந்த ஆக்ரோஷம் அந்த வில்லன்களை மிரள வைத்தது.
இருவருக்கும் இடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. ஆர்யன் ஒரு பாடகன், சண்டைக்காரன் அல்ல. ஆனால் தன் காதலியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அந்த வேட்கை அவனை ஒரு சிங்கமாக மாற்றியது.
அவன் பலத்த காயமடைந்தான்; அவனது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. ஆனாலும் அவன் பின்வாங்கவில்லை.
இதற்கிடையில் யாழினி சுதாரித்துக் கொண்டாள். அங்கிருந்த ஒரு கனமான பூச்சாடியை எடுத்து மற்றொருவனின் தலையில் அடித்தாள். ஆர்யன் அவளைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். அவர்கள் இருவரும் அந்த இருண்ட மலைச்சரிவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
பனிப்பாறைகளுக்கு இடையே மறைந்து நின்றபோது, ஆர்யன் மூச்சிரைக்க அவளைப் பார்த்தான். அவனது ரத்தத்தை யாழினி தன் துப்பட்டாவால் துடைத்தாள். அவளது கண்கள் இப்போது காதலைத் தாண்டி ஒரு நன்றியையும், குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தின.யாழினி மெல்ல ஆர்யனின் முகத்தை ஏந்தினாள். அவளது இதழ்கள் துடித்தன. முதல் முறையாக, அவள் தன் குரலில் எதையோ சொல்ல முயன்றாள்.
“ஆ… ஆர்… யன்…”
மிக மெல்லிய, உடைந்த குரலில் அவனது பெயர் வெளிவந்தது. ஆர்யன் அதிர்ந்து போனான். அவனது காதுகளுக்கு அந்தச் சத்தம் கேட்கவில்லை என்றாலும், அவளது இதழசைவை வைத்து அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவன் உணர்ந்தான். அவனது கண்கள் கலங்கின.
அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“நீ பேச வேண்டாம் யாழினி… உன் மௌனமே எனக்குப் போதும். இப்போ அமைதியா இரு.ஆனா உன் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்,” என்று சைகையில் சொன்னான்.
அவர்கள் அந்த இரவை ஒரு குகைக்குள் கழித்தனர். ஆர்யன் அவளது மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தான். அவனது காயங்கள் வலித்தன, ஆனால் அவளது அருகாமை அந்த வலியை மறக்கச் செய்தது.இரவு முழுதும் ஓரு துளி உறக்கம் வராமல்,
“அவுங்க என்னை கண்டுபிடிச்சிட்டாகளே!இப்போ என்ன பண்றது? ஆர்யன் வேற என்னால இதுக்குள்ள மாட்டிக்கிட்டானே ..என்ன ஆனாலும் ஆரியனுக்கு எதுவும் ஆகிட கூடாது“ மனதில் திடமாய் நினைத்து கொண்டாள் யாழினி
மறுபுறம் ஆர்யானோ, அப்படி என்ன ஆபத்து இவளுக்கு? இவளை தாக்க யார் முயற்சி செய்யுறாங்க? அப்படி என்ன ரகசியம் அவ கிட்ட இருந்து வாங்க முயற்சி பன்றாங்க..என்ன ஆனாலும் யாழினிக்கு எதுவும் ஆக கூடாது.என் உயிரே போனாலும் அவளை நான் விட மாட்டேன்“ திடமாய் நினைத்து கொண்டவன் சில நொடிகள் கண்கள் உறங்கியும் போனான் ஆர்யன்
மறுநாள் காலை, அந்த மலைப் பகுதியில் போலீஸ் ஜீப் சத்தம் கேட்டது. யாழினியை தான் தனிடம் இருந்து பிரித்து செல்ல அந்த வில்லன் குருப் தான் போலீசுடன் வந்து இருப்பாங்களோ” என்ற எண்ணமே அவனுள் பயத்தை உருவாக்கி,யாழினியை இருக்க தன்னுள் பாதுகாத்து கொண்டான் ஆர்யன்
ஆனால் போலீஸ் ஜீப் விட்டு கெளதம் இறங்கியதும் தான் ஆர்யானுக்கு உயிரே வந்தது.கௌதம் தான் போலீஸை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். ஆர்யனும் யாழினியும் பத்திரமாக மீட்கவே வந்து இருந்தான் என்பதை உணர்ந்த பின்னர் தான் நிம்மதி பிறந்தது இருவருக்கும்.
வழி நெடுக்க எதோ தீவிர சிந்தனையில் இருந்த யாழினி,ஜீப் விட்டு இறங்கியதும்,ஆர்யனிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள்.அதில்
“ஆர்யன், நான் மௌனமாக இருந்தது என்னை ஒளித்துக்கொள்ள அல்ல… என் உயிரைப் பாதுகாக்க. ஆனால் இப்போ என் உயிர் உன்னிடம் இருக்கிறது. இனி நான் ஒளிந்து கொள்ள மாட்டேன். எனக்காகவும், என் அண்ணனுக்காகவும் நான் போராடப் போகிறேன். நீ என் கூட இருப்பாயா?” கேட்டு இருந்தாள் மனதில் சிறு தயக்கத்துடனே
ஆர்யன் அவள் கைகளைப் பிடித்து முத்தமிட்டான். “கடைசி வரை…” என்றான் நம்பிக்கையாக
யாழினி விரும்பியது போல இறுதியில் ஆர்யனை கை பிடிப்பாளா? இல்லை அவனையும் தவறாவிடுவாளா என்பதே இருவர் மனதிலும் இருக்கும் பயமாக மாறி போய் இருந்தது
