சென்னையின் பரபரப்பான சூழலில், அந்தப் பண்ணை வீடு ஒரு தனித் தீவு போல இருந்தது. ஆர்யன் மீண்டும் தனது கிதாரைக் கையில் எடுத்திருந்தான். ஆனால், இந்த முறை அவனது நோக்கம் புகழுக்காக அல்ல; தன் காதலியின் நீதிக்காக.
யாழினி அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள். ஆர்யன் அவளிடம் ஒரு தாளை நீட்டினான். அதில் அவன் எழுதிய புதிய பாடலின் வரிகள் இருந்தன:
“கேட்காத ஒலியில் உன்னைப் பார்த்தேன்…
பேசாத மொழியில் உன்னை வாசித்தேன்…
நீங்காத நெருக்கத்தில் நீயும் என்னுடன்…
உன்னிடம் முழுமையாக சரணாலயம் ….”
வேண்டும் ஒரு நீதி… வேண்டும் ஒரு நீதி..
லாப வியாபாரம் ஒழித்து வழங்குவது சேவை…
நாட்டில் நடப்பது சேவை விற்கும் வியாபாரம்…
வேண்டும் ஒரு நீதி, வேண்டும் ஒரு நீதி…
வேண்டாம் அநீதி, பேராசை லாபத்தை
பேணிகாத்து மக்களின் சாபத்தை
உடன் சேர்த்து வாழ்வதா அரசியல்?
அதற்கு எதற்கு பொது வாழ்வு…
போதும் உன் அக வாழ்வு – இனி
வாழ வேண்டும் வாழாத மாமக்கள்…
ஊழல் தெரியாத பூ மக்கள்…
அடுத்தடுத்த ஆரியனின் வரிகள், எல்லாம் காதலோடு நடப்பு அரசியலை கண் குத்தும் வரிகளால் வாதம் செய்யும் போக்கு, யாழினுக்கு பிடித்திருந்தது. ஆர்யன் மீது இன்னும் ஒரு படி மரியாதை உயர்ந்தது. அவளது நோக்கமெல்லாம் இன்னும் எதற்கு இந்த பேராசை? சொந்த மக்களை சுரண்டும் அயோக்கியன், பெற்ற மகளை சமைத்து திண்ணும் அரக்கன். அந்த அரக்கனை அடியோடு அழிக்க அவதாரம் தேவையில்லை! பெயரளவில் வாழும் சதாசிவனோ, திருமாலோ, ராமனோ, கிருஷ்ணனோ, ஒரு வார்த்தை எதிர்த்து நியாயம் கேட்டால் போதுமானது. மனதிற்குள் ஒரு அசட்டு சிரிப்போடு எதிர்த்து கேட்க நேரம் இன்றி வெறும் பணம் எனும் ஒற்றை காகிதத்தை நோக்கி வாழும் வாழ்க்கை தான், மதிப்பு வாய்ந்தது! பணம் தான் எல்லாவற்றையும் மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் என எல்லாவற்றையும் கொண்டு சேர்க்கும் என எல்லோரும் நம்பியதால் வந்த விளைவு. ஆளாளுக்கு அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஏய்த்துக்கொண்டு வாழும் இவ்வாழ்வில் பெயரளவில் சதாசிவமோ, திருமாலோ, ராமனோ, கிருஷ்ணனோ தேவையில்லை மனதளவில் எல்லோரும் நம் மக்கள், உலக அளவில் இந்தியன் எனும் மக்கள் தனி மனித ஒழுக்கத்தில், நேர்மையில், மனித நேயத்தில் சிறந்த மக்கள். என நற்பெயர் பெற எவ்வளவு நேரம் ஆகும்?
சங்க காலத்தை படித்துப்பாருங்கள், உலகளவில் நாம் தான் இலக்கியம், கலாச்சாரம், மென்மை பொருந்திய மாமக்கள் ஆனால் இன்று எதற்கு இந்த ஊழல், பேராசை என உள்ளுக்குள் உறுப்புகள் அனைத்தும் எரிமலை போல கொதித்தாலும், இயல்பு வாழ்க்கை அவளை அவள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் போதுமென்று ஓட்டிக்கொண்டு இருக்கிறாள். என்ன செய்ய, செய்ய வேண்டியவற்றை நிச்சயம் பெயரே இல்லாதா இறைவன் செய்வான். யாழினிக்கு ஆர்யனின் வரிகளைப் படித்தபோது அவளது கண்கள் கலங்கின. ஆர்யன் அவளது கைகளைப் பற்றி, அவளது விரல்களைத் தன் தொண்டையின் மீது வைத்தான்.
“யாழினி, நான் பாடும்போது ஏற்படும் அதிர்வுகளை நீ கவனி. நான் சுருதி தப்பினால், உன்னுடைய வலது கையை உயர்த்து. நான் வேகமாகக் கொண்டு சென்றால், இடது கையை அசைத்து என்னை மெதுவாக்கு. இனி என் இசையின் நடத்துனர் (Conductor) நீதான்,” என்றான் சைகையில்.
யார் இவன், எனக்காக இல்லை இந்த நாட்டிற்காக தன்னுயிரையும் பிணையம் வைத்து இப்போது வரை போராடிக்கொண்டு இருக்கும் காதல் கவிஞன், காதலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமென்றால் எனது முதல் காதல் என் தந்தையிடம் கூறியிருப்பேன், ஆனால் அவரும் பெண் பிள்ளையை பெற்று விட்டோம், நிறைய நகை, பணம் கொடுத்து கட்டிக்கொடுத்தால் தான் நமக்கு மரியாதை என்று பணம் பின்னால் சென்று விட்டார். அந்த அழுத்தமே அவரை கொன்றும் விட்டது. தனது சொந்த வாழ்க்கை வாழ யாருக்கு தான் துணிவு உள்ளது? எல்லோரும் யாருக்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் பெருமை, கிண்டல், கேலிக்கூத்து என உழன்று கொண்டிருக்கும் வாழ்வில், சுயநலம் மறந்து தன்னை வாழ வைத்த மக்களுக்கு ஒரு அநீதி நடக்கும் போது அதை தட்டிக்கேட்க வந்த இந்த ஆர்யன், யாழினுக்கு பெருமையாக தெரிந்தான்.
இருவரும் ஒரு சேர பயிற்சியைத் ஆரம்பித்தனர். அந்தப் பயிற்சி ஒரு தவம் போலத் தொடங்கியது. ஆர்யன் பாடத் தொடங்கினான். அவனது குரல் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த அறையில் எதிரொலித்தது. அவனுக்குத் தன் குரல் கேட்கவில்லை என்றாலும், யாழினியின் முகபாவனைகளை வைத்து அவன் பாடிக் கொண்டிருந்தான். யாழினி ஆர்யனையும், அவனது குரலையும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
கௌதம், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப், போஸ்டர், இடத்திற்கான தேர்வு, வரும் ரசிகர்களின் எண்ணிக்கை, சிறப்பு விருந்தினர், என எல்லாவற்றையும் திட்டம் தீட்டி அதற்கான வேலையில் இறங்கினான். பண்ணை வீட்டிற்கு கௌதம் உதவியாளர்கள் வந்து இறங்கினர். பண்ணை வீட்டை அலுவலகம் போல் மாற்றினான்.
“சார், டிக்கெட் ரேட், எவ்வளவுனு சொல்லல”
“ நல்லா கேளுங்க பாய்ஸ், இது லாப நோக்கத்திற்காக பண்ணல, இந்த இசை நிகழ்ச்சி நடந்தா நீயும், நானும், நம்ம குடும்பமும் நல்லா இருப்போம்னு நம்பிக்கையா வேலை செய்ங்க”
“எவ்ளோ பேர் வருவாங்கனு எதிர் பாக்குறீங்க”
“ லட்சம் பேர் எதிர்பாக்குரே, அதற்கேத்த குறைந்த விலையை நிர்ணயம் பண்ணுங்க! எல்லா மக்களும் எளிமையா கலந்துக்கணும்”
“சார் போன கான்சர்ட் ல, ஒரு டிக்கெட் 2000, இருந்து 10,000 வரைக்கு போயிருக்கு, இப்ப ஆர்யன் சார் கம் பேக் வேற, இப்ப டிக்கெட் விலையை குறைச்சா? சாரோட மார்க்கெட் அடிவாங்கும், அப்பறம் ஸ்பான்சருக்கு பதில் சொல்ல முடியாது”
“ ஸ்பான்சர், ஆர்யனோட மார்க்கெட் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இந்த நிகழ்ச்சி நடந்து முடிஞ்சதும் உங்களுக்கும் தெரிய வரும், ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தோம்னு ”
“ சரிங்க சார், நம்ம கம்பெனியோட தொழில் நுணுக்கம் நீங்க கத்து கொடுத்ததுதான், அது பாதிக்கக் கூடாதுனு நல்லெண்ணத்துல தான், நிறையா கேள்வி கேட்டுட்டேன். நல்ல விஷயம்னு சொல்றீங்க, நாங்க எல்லாரும் கூட இருக்கோம், எல்லா மக்களும் எளிமையா கலந்துக்குற மாதிரி டிக்கெட் விலையை வச்சிடுவோம்”
“முக்கியமா ஏழை மக்கள், மருத்துவ நோயாளிகள், முக்கியமா மாற்று திறனாளிகள் என எல்லாரும் நிச்சயமாக கலந்துக்கணும், அவங்களுக்கு சலுகை முறையில டிக்கெட் கொடுங்க”
சோஷியல் மீடியா, பற்றி எரிந்தது. ஆர்யன் காம்பேக், போஸ்டர் லட்சக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு வைரல் ஆனது.
ஒரு இளைஞன், அவனது நண்பர்களோடு பார்க்கில் அமர்ந்தபடி, செல்போனை பார்த்து
“மச்சான், ராக்ஸ்டார் ஆர்யன், திரும்ப வந்துட்டாரு டா…”
“ என்ன மச்சா, என்ன சொல்ற”
“ஆமா, மச்சா… புதுசா லைவ் கன்சர்ட் பண்ணப் போறாராம்”
“ மச்சி, டிக்கெட்ட இப்பையே புக் பண்ணுடா, அப்பறம் ரேட் கூடியிட்டே போகும்”
“ மச்சான் ஓபன் டிக்கெட் 200, ரூபாய் தான் எல்லாருக்கும், அருகில் ஐந்து நண்பர்களும் அதிர்ச்சியாகினர். அனைவரும் அவர்களின் போனை எடுத்து டிக்கெட் முன் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சென்னை, அன்னை மாற்று திறனாளி இல்லத்தில், மாற்று திறனாளி ஒருவர் முகநூல் பக்கத்தில் ஆர்யனின் இசை கச்சேரி விளம்பரத்தை பார்த்து,
“உலகை மாற்றும் மாற்று திறனாளிகளே, உங்களை மகிழ்விக்க ஒரு இசை கச்சேரி எல்லாரும் போகலாமா?
டிக்கெட் காசு உங்கப்பனா கொடுப்பான், என இன்னொருவன் எதிர் கேள்வி கேட்க!
“பத்து ரூபாய் இல்லியா உங்கிட்ட”
“ என்னது பத்து ரூபாய்க்கு மியூசிக் ஷோ வா, எல்லோரும் போவோம் பா”
“அப்பறம் என்ன கலைக்கு காசு தேவையில்லை, உண்மையான ரசிகர் இருந்தா போதும், அவன் பத்து ரூபாய் கொடுத்தாலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் கலைஞனுக்கு மதிப்பே இல்லை, நாம தர கைத்தட்டலும், பாராட்டும் தான் உண்மையான மதிப்பு அந்த ஆர்யனுக்கு என்ன எல்லாரும் போகலாமா?”
சக மாற்று திறனாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, போவோமா…. ஊர்க்கோலம், என பாட்டு பாட, அன்னை மாற்று திறனாளிகள் இல்லம். ஆனந்தம் பாடும் பூஞ்சோலையாக மாறியது.
மக்களிடையே ஆர்யன் கன்சர்ட் மிக எளிமையாக போய் சேர்ந்தது. டிக்கெட் சில மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்தது. பொதுமக்களும் ஆர்யனை பாராட்டி பொது இடங்களில் பேசிக்கொண்டு இருந்தனர்.
கோவை பூ மார்கெட்டில், ஒருவர்.
தம்பி ஆர்யன், எப்போ கண்ணு கொடிசியால கச்சேரி வைக்கப்போறிங்க? நாங்களும் உங்க பாட்ட கேட்க ஆர்வமா இருக்கோம்!
என ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார்.
மதுரையில் ஒரு இளைஞன்,
“அண்ணே… இது தான் தமுக்கம் மைதானம், ஒரு தடவ இங்க வாங்க. மதுரை மல்லி பூ மாதிரி, அவ்வளவு வாசமா, பாசமா வரவேற்க உறுத்தா நாங்க இருக்கோம், கெத்தா நீங்க வாங்க”
என்று ஒவ்வொரு ஊரிலில், ஆர்யனுக்கு வரவேற்பு கொடி கட்டி பறந்தது.
ஏழைக்கொரு கீதம், நோய் தீர்க்கும் மாமருந்து, அனைவரும் சங்கீதமே, என தலைப்பு ஒவ்வொன்றும் இசைத்துறையைத் திரும்பி பார்க்க வைத்தது. சக இசைக் கலைஞர்களுக்கும் ஒரு பீதியையும், அப்படி என்ன தான் செய்ய போகிறார் என்ற ஆர்வத்தையும் தந்தது.
கார்பரேட் கம்பெனிகள், எல்லாம் மளிகை கடை வியாபாரம் போல இசைத்துறையை கொண்டு போகிறார். என நய்யாண்டி செய்தனர்.
யார், யார் கிண்டல் செய்தார்களோ அவர்களின் வலை தளம், இசை கோப்புகள் உள்ள செயலி (APP) எல்லாம் விற்பனையில் சரிவை எட்டியது.
மக்கள் ஆர்யன் பக்கம், என்று உண்மையை புரிந்து கொண்ட கம்பெனிகள், ஆர்யனுக்கு ஜால்ரா அடிக்கத் தொடங்கியது.
இப்போது தான், கௌதம் உதவியாளர்களுக்கு, கௌதமின் வியாபார யுக்தி புரிந்தது. அன்று ஒரு நாளுக்கு மட்டும் கௌதம் யோசிக்கவில்லை, அடுத்த ஐந்து வருடத்திற்கு மக்களிடையே போய் சேர யோசித்து இருக்கிறார். இந்த மலிவு விலை டிக்கெட்டால் ஆர்யனின் புகழ் மக்களிடையே மேலும் ஒரு படி எகிறி சென்றது. மக்கள் தொடர்ந்து ஆர்யனை கொண்டாடிக்கொண்டு இருக்க, இசை கம்பெனிகள் புது, புது கன்சார்ட்டுக்கு புக் செய்ய போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். சில கம்பெனிகள் விளம்பரத்தில் ஆர்யனை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
“ கௌதம் சார், நாங்க ‘மால்’ கூல் டிரிங்ஸ் கம்பெனியில இருந்து பேசுறோம்.”
“பேசுங்க”
“ எங்க கம்பெனி விளம்பரத்தில் நடிக்க, கேட்டு கால் பண்ணிருக்கோம் சார் பேமென்ட் எவ்ளோ எதிர்பாக்கிறாரு, கால்சீட் டேட் சொன்னா புக் பண்ணிடலாம்”
“ சார் கண்டிப்பா உங்க விளம்பரத்தில் நடிப்பாரு,”
எதிர்முனையில், கவர்ச்சி புன்னகை, உதிர்க்க.
“ஆனால் நீங்க உங்க புரொடக்ல என்னென்ன சேர்க்குறீங்க, அது மக்கள் உடலுக்கு நல்லதா, கெட்டதா அப்படிங்கிற எல்லா விவரத்தையும் ஒரு காப்பி கொடுத்தா நடிக்கிறத பத்தி பேசலாம்”
என்றதும், எதிர்முனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
“ மால் என்ன இப்படி திவாலாயிட்டான்”.
கௌதம் ஒரு நல்ல நண்பனாக மட்டும் இல்லாமல், புத்திசாலித் தனமான மேலாளர், சமூகப் பொறுப்புள்ள குடிமகன் என எல்லா விதத்திலும் சரியானவற்றையே தேர்வு செய்தான்.
ஆர்யன் எப்பொழுதும் போல, அவனது இசை மீதே கவனத்தை செலுத்தினான். அவனுக்கு இசை இப்போது சேர்ந்த புதிய பொறுப்பு, தன்னுடைய இசையில், யாழினியின் சமூக பொறுப்பும் உடன் சேர்ந்து கொள்ள இசை இப்பொழுது இனிமையான சமூக செயலாக மாறியது.
இரவு நேரம் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு புதிய பிணைப்பு உருவானது. இசைக்கும் காதலுக்கும் மொழி தேவையில்லை என்பதற்கு அவர்கள் ஒரு நேரடி உதாரணமானார்கள். ஒரு கட்டத்தில், ஆர்யன் பாடுவதை நிறுத்திவிட்டு யாழினியை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான்.
அவளது நெற்றியில் முத்தமிட்டு, “உன்னோட இந்தக் கண்கள் தான் எனக்கு இப்போ எல்லாமே. உன்னோட அசைவுகள் தான் என் இசை,” என்று கிசுகிசுத்தான். யாழினி பதில் பேசவில்லை என்றாலும், அவளது இதயம் துடிக்கும் வேகம் ஆர்யனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்த மௌனமான அணைப்பில் ஓராயிரம் கவிதைகள் மறைந்திருந்தன.
ஆனால், வெளியே ஆபத்து நெருங்கிக் கொண்டிருந்தது. அமைச்சரின் அடியாட்கள் அந்தப் பண்ணை வீட்டின் ரகசிய முகவரியைக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அதே நேரம், கௌதம் பதற்றத்துடன் உள்ளே வந்தான். “ஆர்யன், கன்சர்ட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் ரெடி. ஆனா போலீஸ் பாதுகாப்பு கிடைக்கிறது கஷ்டம் போல இருக்கு. அமைச்சர் எல்லா பக்கமும் நெருக்கடி கொடுக்கிறான்,” என்றான்.
“சரி, கௌதம். காவல் துறை பாதுகாப்பு கொடுக்காமல் எப்படி கன்சர்ட் நடத்த?”
“ கூட்டத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்து ஒழுங்கு செய்ய, காவல் துறை பாதுகாப்பு கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க”
“ஏன் அப்படி”
“நம்ம, எளிய விலையில் டிக்கெட் கொடுத்தது, ஒரு காரணம். அப்பறம் அவங்களுக்கு அதே நேரம் அமைச்சர் கட்சி இளைஞர் அணி மாநாடு நடத்த அனுமதி வாங்கியிருக்காங்க, நம்ம கன்சர்ட் ஒரு பெரிய விஷயமா கண்டுக்கல,”
“ இதுல ஒரு சதி இருக்கு”
“ நிச்சயமா, ஆர்யா… கூட்டத்துல எவனாவது சாவான், அந்த பழியை நம்ம மேலே போட்டு, கச்சேரிய நடத்த விடாம, பண்றதுக்கான சூழ்ச்சி தான் இது”
“ நம்ம மக்கள் கிட்டேயே, சொல்வோம். கலையை நேசித்து வருபவர்கள் எவரும், அடித்து பிடித்து சண்டையிட மாட்டார்கள். அதையே போஸ்டரா போட்டு, வரும் ரசிகர்கள் அமைதியுடன் வர வலியுறுத்துவோம்,”
“ அமைச்சர் ஆட்களே வந்தால்?”
“ அதற்கு நம்ம ஆட்களை பாதுகாப்புக்கு வைப்போம். ரசிகர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம். தன்னார்வலர்களை வரவேற்பு செய்வோம். போலீஸ் செய்ய வேண்டிய வேலையை தன்னார்வர்களை வைத்து நாமே நம் மக்களை பாதுகாப்போம்”
“ சரியான யோசனை, ஆர்யா. அதை அப்படியே செய்றேன். நீயும், யாழினியும் பயிற்சி மீது மட்டும் கவனம் செலுத்துங்கள், மற்றதை நான் பாத்துக்கிறேன்.”
கௌதம் புதிய போஸ்டர்களை தயார் செய்ய ஏற்பாடு செய்தான். தன்னார்வலர்களை வரவேற்கும் ஆர்யன் என்ற பெயரில் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அதிக மக்களால் விரும்பப்பட்டது.
யாழினி கவலைப்படத் தொடங்கினாள். ஆர்யன் அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
“யார் தடை போட வந்தாலும் யாழினி. நம்ம காதலும், உண்மையும் மட்டும் போதும். அந்த மேடை தான் உனக்கான நீதி மேடை,”
“ எனக்காக நீ எடுக்குற சிரமம், அதற்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துப்போறேன்” என பாவனையில் கண் கலங்கினாள்.
“ இது உன் அண்ணன் உயிர் தியாகத்திற்கு, மேலும் அப்பாவி மக்களின் உயிருக்கு நீதி வேண்டாமா? நீ தேவையில்லாத நெனச்சு கவலைப் படாத, நீயும், நானும். வேற,வேற இல்லை. ஒத்த உயிர் தான். உனக்கே நீயே நன்றி சொல்வியா? இல்ல நன்றிக்கடனா நெனச்சு மனச தாழ்வாக்கி உன்னை நீயே சோர்வாக்குவியா? எல்லாம் நன்மைக்கே. மக்களுக்கு உண்மை தெரிஞ்சு அந்த அமைச்சர் ரத்னவேலுக்கு தூக்கு தண்டனை கிடைச்சத் தான். மக்களுக்கு அரசாங்கத்து மேல நம்பிக்கை வரும். நாம ஓட்டுபோட்டவங்க நம்மள ஏமாத்தலைனு நிம்மதி வரும். அடுத்து வர ஒவ்வொருத்தனும் எளிமையானவங்க மேல கை வைக்க பயம் வரும். நாட்டுல ஜனநாயகம் நினைச்சு நிக்கும். அதுக்கு நீயும், நானும் பாக்குற வேலை ரொம்ப முக்கியமானது. வரலாற்றுல அரசாங்கம் தவறு செய்தால், அடிப்படை மக்கள் அடிக்க தயங்க மாடாங்கனு ஒரு நம்பிக்கை இருக்கும்” என்றான் உறுதியாக.
ஆர்யனை வியந்து பார்த்த யாழினி, ஆர்யன் ஆக்ஷன் ஹீரோ மட்டும் இல்லை, சூப்பர் ஹீரோ என பெருமை கொண்டாள்.
இருவரும், ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொள்ள, காதல் தீபம் அங்கு ஒளிர்ந்தது.
பண்ணை வீடு பரபரப்பு சற்று குறைந்து ஆசுவசமானது.
இரவின் நிலவும் மேகத்திற்கு பின்னால் ஓய்வெடுக்க சென்றது.
