அத்தியாயம் 15: மௌனத்தின் முடிவில் ஒரு பாடல்

ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் இருந்த ஒரு அமைதியான கேரள ஆயுர்வேத இல்லம். ரியா அவர்களை அங்கேதான் தங்க வைத்திருந்தாள். சுற்றிலும்  சவுக்கு  மரங்களும், ஆழ் கடலின் நீல நிற நீரும், சுற்றி இருந்த படகு சவாரியும் ஒரு சொர்க்கத்தைப் போல இருந்தன. ஆனால், அந்த அழகை விட ஆரியனுக்கு யாழினியின் அருகாமைதான் அதிக அமைதியைத் தந்தது. சிறு வயதில் இசை குரு சிவ நந்தர் கொடுத்த அமைதியின் நெருக்கத்தில் யாழினியும் வந்து சேர்ந்தாள். அவளோடு இருக்கும் ஆழ்ந்த உயிரோட்டமான உணர்வை அவனது டைரியில் ஒரு கவிதையாக  எழுதினான்.

“ எண்ணமே நீ எங்கே சென்றாய்?

எப்பொழுதும் நிறைந்திருக்கும்

யாழினுக்கு பதில் சொல்.

எண்ணமே நீ எங்கு சென்றாய்”

அவனது கவிதை முடிவில், ரியா வந்து நின்றாள்.

“இங்கு ஒரு வைத்தியர் இருக்கிறார், உன்னோட காது பிரச்னையை அவரிடம் சொல், ஒரு மாற்றம் கிடைக்கும்” என்றாள்.

ஆர்யனுக்கு கௌதம் நினைவு வந்தது, தனக்காக யோசிக்கும் ஒரு நண்பன் போல ரியா கூறிய வார்த்தைகள் நம்பிக்கை அளித்தது.

அங்கே இருந்த ஒரு முதிய ஆயுர்வேத வைத்தியர் ஆரியனைப் பரிசோதித்தார். “உன் நரம்புகள் செத்துப் போகவில்லை, அவை அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றன. தொடர்ச்சியான மூலிகை எண்ணெய் சிகிச்சையும் (Pizhichil), மன நிம்மதியும் இருந்தால் உன் செவித்திறன் மீள வாய்ப்புண்டு,” என்றார்.

கௌதம் ஒரு புறம், ஆர்யனை தேடி அவனது சுற்று வட்டாரத்தில் இருக்கும், நண்பர்களுக்கு தகவல் அனுப்பினான். உதவியாளர்களை கொண்டு நாளா புறமும் தேட செய்தான்.

சென்னையில் ஆர்யனின் ரசிகர்கள், ஆர்யனை காணாதது, ஆளுங்கட்சி செய்த சதி என்று ஒரு பக்கம் போராட்டம் செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று ஆர்யனுக்காக விரதம் இருந்து, மண் சோறு சாப்பிட்டு கடவுளிடம் ஆர்யனுக்காக வேண்டிக்கொண்டார்கள்.

இன்னொரு புறம் ஆர்யனுக்காக சிகிச்சை துவங்கியது. ஆயுர்வேத சிகிச்சையில் ஆர்யனின் செவித் திறன் மேம்பட ஆரம்பித்தது.

சிகிச்சையும், ரசிகர்களின் பிரார்த்தனையும் நன்றாக வேலை செய்தது.

ஒவ்வொரு நாளும் யாழினிதான் ஆரியனைச் கவனித்துக் கொண்டாள். அவன் ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவள் அவனது தலைமுடிக்கு மூலிகை எண்ணெயைத் தேய்த்துவிடுவாள். அவளது மென்மையான விரல்கள் அவனது தலையைத் தீண்டும்போது, ஆரியன் தன் உலகத்தையே மறந்துவிடுவான்.

அன்று மாலை, மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. ஆரியன் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே பெய்யும் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான். யாழினி அவனுக்குப் பின்னால் வந்து நின்று, அவனது தோள்களில் கைகளைப் போட்டாள். இருவருக்கும் முன் ஓயாமல் கரையை தொட்டு செல்லும் அலையின் அழகை ரசித்தபடி நின்றிருந்தனர்.

ஆரியன் அவளது கைகளைப் பிடித்து இழுத்து, அவளைத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான். யாழினி ஒரு விநாடி திடுக்கிட்டாலும், பின் அவனது கண்களில் தெரிந்த காதலைப் பார்த்து அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

ஆரியன் சைகையில் கேட்டான்: “உன் குரல்… இப்போ எப்படி இருக்கு?”

யாழினி மெல்ல மூச்சை இழுத்துவிட்டாள். அவள் இத்தனை நாட்களாகப் பேசாமல் இருந்ததற்குக் காரணம் பயம் மட்டுமல்ல, தன் அண்ணனின் மரணத்தால் ஏற்பட்ட ஒரு ஆழ்ந்த மன அழுத்தமும் கூட. இப்போது ஆரியனின் அசைக்க முடியாத காதல் அவளுக்கு ஒரு பாதுகாப்பைத் தந்தது.

அவள் ஆரியனின் முகத்தை ஏந்திக் கொண்டு, அவனது காதுக்கு மிக அருகில் சென்று மெதுவாகச் சொன்னாள்:

“ஆ…ரி…யன்… உ…ன்னை… கா…தலிக்கிறேன்…”

ஆரியனுக்கு அந்தச் சத்தம் கேட்கவில்லை. ஆனால், அவளது இதழ்கள் தன் காதோரம் படுவதையும், அவளது மூச்சுக்காற்றின் கதகதப்பையும் அவன் உணர்ந்தான். அந்த வார்த்தைகள் அவனது இதயத்திற்குள் ஒரு மின்னலைப் போலப் பாய்ந்தன.

அவன் அவளது கண்களைப் பார்த்தான். அந்தக் கண்கள் காதலில் நனைந்திருந்தன. அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். “நீ பேசிட்ட யாழினி! உன் குரல்… அதை என்னால கேட்க முடியலனாலும், என் இதயத்தால உணர முடியுது,” என்று அவன் சைகையில் சொன்னான்.

அவன் உணர்ச்சிவசப்பட்டு அவளது இதழ்களில் முத்தமிட்டான். அந்த முத்தம் நீண்ட நேரம் நீடித்தது. மழையின் சத்தமும், சவுக்கு மரங்களின் அசைவும் அவர்களுக்குப் பின்னணி இசையாக இருந்தன.

சரியாக அந்தத் தருணத்தில், ஆரியனின் இடது காதுக்குள் ஒரு மெல்லிய ‘கிளிக்’ என்ற சத்தம் கேட்டது. அது ஒரு சிறிய அதிர்வு. அவன் திடுக்கிட்டு யாழினியைப் பார்த்தான்.

“யாழினி… ஏதோ ஒரு சத்தம்… லேசா கேட்டது போல இருக்கு…” என்று அவன் சைகையில் சொன்னான்.

யாழினி அதிர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் அவனைப் பார்த்தாள். அவள் கைகளைத் தட்டிப் பார்த்தாள். ஆரியன் தன் இடது காதைத் திருப்பி, அந்த அதிர்வை உணர முயன்றான். அவனது செவித்திறன் மீளத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி அது!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வரிகளைப் போல,

“ உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்,

அவள் கூட உன்னை விரும்பி விட்டால்,

இனி பறக்கலாம்”

என்பது போல ஆர்யன் செவி திறன் உணர்ந்த மகிழ்வில் இறக்கை இன்றி காதல் வானில் பறந்து கொண்டு  தான் இருந்தான். யாழினுக்கு தனக்கு பேச்சில் ஒரு முன்னேற்றம், ஆர்யனுக்கும் செவித் திறனில் முன்னேற்றம் என இருவருக்கும் நீடித்த மகிழ்ச்சியைத் தந்தது நெல்லூர். இருவரும் அந்த மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு ஆனந்தமாக கண்ணீர் விட்டு அழுதனர். மௌனம் விடைபெறத் தொடங்கியிருந்தது. அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் நிறைந்து இருக்கும் என்பது போல்,  ரியா உள்ளே ஓடி வந்தாள். அவளது முகம் பதற்றமாக இருந்தது.

“அஞ்சலி, ஆர்யன்… நம்ம லொகேஷனை அவங்க டிரேஸ் (Trace) பண்ணிட்டாங்க. இன்னும் அரை மணி நேரத்துல அமைச்சரோட ஆளுங்க இங்க வந்துடுவாங்க. உடனே கிளம்பணும்!”

யாழினுக்கு  எப்பொழுதெல்லாம் மகிழ்ச்சி உருவாகிறதோ அப்போதெல்லாம் அதை மறக்கச் செய்யும் அளவிற்கு துன்பமும் வந்து சேர்கிறது.  இனி மகிழ்வே வேண்டாம் என்னும் நிலைக்கு சென்றிருந்தாள்.

அதே நேரம் கௌதம் தேடிய தேடலுக்கு விடை கிடைத்தது போல, ஆந்திர காவல் துறையில் இருந்த ஆர்யனின் ரசிகர் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் ஆர்யன், மற்றும் யாழினி ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. கௌதம் உடனடியாக ஆந்திராவை நோக்கி காரை எடுத்துக்கொண்டு பயணப்பட்டான்.

ஆந்திராவின்  அந்த அமைதியான இரவு மீண்டும் ஒரு போர்க்களமாக மாறத் தொடங்கியது. காசி தனது ஆட்களுடன் ஆயுர்வேதா சிகிச்சை மையத்தை நோக்கி படகில் வந்து கொண்டிருந்தான்.

நெல்லூரின் அந்த அமைதியான இரவு, இப்போது இன்ஜின்களின் இரைச்சலால் அதிரத் தொடங்கியது. அமைச்சரின் ஆட்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் அதிநவீன படகுகளுடன் அந்த ஆயுர்வேத இல்லத்தைச் சூழ்ந்து கொண்டனர்.

ரியா சொன்ன அந்த “அரை மணி நேரம்” என்பது பத்தே நிமிடங்களாகக் குறைந்தது. “ஆர்யன், யாழினி… சீக்கிரம் இந்தப் படகுல ஏறுங்க!” என்று ரியா ஒரு சிறிய மோட்டார் படகைக் காட்டினாள்.

இருவரும் படகில் ஏறிக்கொண்டனர். ஆர்யன் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டான். அவனது இடது காதில் இன்னும் அந்த மெல்லிய ‘ரிங்’ என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. முழுமையாகக் கேட்கவில்லை என்றாலும், ஆபத்து மிக அருகில் இருப்பதை அவனது உள்ளுணர்வு சொல்லியது.

“ஆர்யன், வேகமாப் போ!” என்று யாழினி கத்தினாள். அவளது குரல் இப்போது இன்னும் தெளிவாக வெளிவந்தது. ஆபத்திலும் ஒரு ஆனந்தம் என்பது போல யாழினி தெளிவாகப் பேசியது ஒரு ஆறுதலை தந்தது.

ஆர்யன் படகை முடுக்கினான். நிலவொளியில் அந்த நீலநிற நீர் வெள்ளி நிறத்தில் மின்னியது. பின்னால் மூன்று ஸ்பீடு போட்கள் (Speed boats) இடி மின்னலைப் போல அவர்களைத் துரத்தி வந்தன. அமைச்சரின் ஆட்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தோட்டாக்கள் தண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சத்தம் யாழினியின் காதுகளைத் துளைத்தது.

ஆர்யன் படகை வளைத்து நெளித்து ஓட்டினான்.  கடற்கரை ஓரம் முக துவாரம் பகுதியில் ஒரு குறுகிய கால்வாய்க்குள் படகு நுழைந்தது. அங்கே இருபுறமும் தென்னை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. சரியான பொறியில் மாட்டிய எலி போல அந்த குறுகிய கால்வாயில் ஆர்யனின் போட்டை, அமைச்சரின் ஆட்கள் வெகு சிக்கிரமாக நெருங்கி வந்தனர். ஆர்யன் எவ்வளவு வேகத்தில் போட்டை செலுத்தினாலும் அவர்கள் நெருங்கி வருவதை தடுக்க முடியாமல், தத்தளித்தான். அடியாட்கள் துப்பாக்கியை கையில் எடுத்து ஆர்யனை குறி வைத்தனர்.

திடீரென்று, ஒரு துப்பாக்கிக் குண்டு ஆர்யனின் தோள்பட்டையை உரசிக் கொண்டு சென்றது. ஆர்யன் வலியால் துடித்தான். படகு கட்டுப்பாட்டை இழந்து ஒரு கரையில் மோதியது. படகு  மோதிய வேகத்தில் இருவரும் கரையோர மணலில் தூக்கி எறியப்பட்டனர்.

யாழினி அடிபட்டு கிடந்த ஆர்யன் அருகில் தவந்தோடி வந்து, “ஆர்யன்!” என்று அலறியபடி யாழினி அவனைப் பற்றிக் கொண்டாள். ஆர்யனின் சட்டையில் ரத்தம் கசியத் தொடங்கியது.

“பயப்படாதே யாழினி… நான் நல்லா இருக்கேன்,” என்று ஆர்யன் சைகையில் சொன்னான். அவனது முகம் வலியால் சுருங்கியிருந்தது, ஆனால் அவனது கண்களில் இருந்த உறுதி குறையவில்லை. அந்த வேதனையிலும் யாழினிக்கு ஆறுதல் சொல்லியது. காதலின் உயரத்தை யாழினிக்கு உணர்த்தியது.

 அமைச்சரின் ஆட்கள் படகை விட்டு இறங்கி கொடூர ஆயுதங்களை எடுக்கத் துவங்குமுன், காதலர்கள் அருகில் இருந்த  தென்னந்தோப்புக்குள் ஓடினார்கள். ஆனால், எதிரிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். முன்னால் அமைச்சரின் வலது கை என்று சொல்லப்படும் ‘காசி’ நின்றான். அவனது கையில் ஒரு பெரிய கத்தி இருந்தது.

“இந்த மௌனப் போராட்டத்தை இதோட முடிச்சுக்கலாம் அஞ்சலி. அந்தப் பென் டிரைவை என்கிட்ட கொடுத்துடு,” என்று காசி கர்ஜித்தான்.

யாழினி ஆர்யனின் பின்னால் மறைந்து கொள்ளவில்லை. மாறாக, அவள் முன்னால் வந்தாள். அவளது கண்கள் சிவந்திருந்தன.

“இந்தா… உனக்கு இதுதானே வேணும்?” என்று தன் கழுத்தில் இருந்த லாக்கெட்டைக் காட்டினாள். “ஆனா இதுக்கு முன்னாடி, என் அண்ணனைக் கொன்னதுக்காக நீ அனுபவிக்கப் போற தண்டனையை நினைச்சுப் பாரு!”

“நான் அனுபவிப்பது இருக்கட்டும், நீங்க தலைவர்கிட்ட மாட்டுனா! என்ன கதி ஆகப்போறீங்கனு நினைக்கும் போது”

காசி  நக்கலாக சிரிக்க முயன்றபோது, ஆர்யன் ஒரு மின்னலைப் போல அவன் மீது பாய்ந்தான். தன் தோள்பட்டை வலியை மறந்து, அவன் காசியின் கையைப் பிடித்துத் திருகினான். ஆர்யன் பிடித்த பிடியில் காசி கையில் இருந்த கத்தி கீழே நழுவி விழுந்தது. காசியின் முகத்தில் ஆர்யன் குத்திய குத்துக்களை பார்த்த போது யாழினிக்கு உள்ளூர சந்தோசம் நிறைந்தது. இருவருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலை தென்னை மரங்கள் வேடிக்கை பார்த்தன,  காசி மிக மோசமாக தாக்கப்பட்டுக் கிடந்தான். கையில் கத்தியோடு ஆர்யன் அவனை முழுவதுமாக வதம் செய்ய ஓடி வந்தான். அப்போது காசியின் ஆட்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தியபோது, யாழினி அவனுக்கு முன் நின்று தைரியமாக எதிராளியை எதிர்த்து நின்றாள்.  

அதே நேரம், ஆற்றில் இருந்து ஒரு பெரிய படகு (Houseboat) வேகமாக வந்தது. அதில் இருந்து கௌதமும், ரியா, சில உண்மையான போலீஸ் அதிகாரிகளும் குதித்தனர். கௌதம் எப்படியோ ஆந்திர போலீஸின் உதவியை நாடிச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.

ஒரு நீண்ட துப்பாக்கி சண்டைக்குப் பிறகு, காசி மற்றும் அவனது ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் தரையில் அமர்ந்து மூச்சு வாங்கினான். யாழினி ஓடி வந்து அவனது காயத்தைப் பார்த்தாள். அவள் தன் துப்பட்டாவைக் கிழித்து அவனது தோளில் கட்டினாள். அவளது கண்ணீர் அவனது தோளில்  விழுந்தபோது, ஆர்யன் மெல்ல அவளது முகத்தை நிமிர்த்தினான்.

“நீ பேசிட்ட யாழினி… உன்னோட அந்த தைரியமான குரலை நான் இப்போ பார்க்கிறேன்,” என்று ஆர்யன் சைகையில் சொன்னான்.

யாழினி குனிந்து அவனது காயத்தின் மீது ஒரு மென்மையான முத்தமிட்டாள். “இனி நான் உன் நிழலா மட்டும் இருக்க மாட்டேன் ஆர்யன்… உன்னைப் பாதுகாக்கிற கேடயமா இருப்பேன்,” என்று அவள் திக்காமல் பேசினாள்.

இருவரும் அந்த நள்ளிரவில், காயங்களுடன் இருந்தாலும், ஒரு பெரும் வெற்றியை அடைந்த திருப்தியில் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர். ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருந்தனர்.

ஆர்யன் யாழினியை பார்த்து, “எப்படி அவ்வளவு தைரியமா, துப்பாக்கி முன்னாடி நின்ன?”

“ எனக்குனு இருந்த அண்ணன நா இழந்துட்டே, இப்ப எனக்காகவே இருக்கிற உன்ன என்னால இழக்க முடியாது.  அதுக்கு நா செத்தாலும் பரவாயில்லை, ஒன்ன இழக்க மாட்டே, ஆர்யா”

ஆர்யனுக்கு அவளை பேச வைத்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது. அவளது பேச்சில் இருந்த காதல், அக்கறை, பாசம், வார்த்தையில் விளக்க முடியாது என்பதை ஆர்யன் அறிந்திருந்தான், ஆற்று நீர் அமைதியாக கடலில் ஓடிக்கொண்டிருந்தது, அவர்களின் காதலைப் போலவே.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page