தமிழ்நாடு, ஆந்திர நாளிதழ்களில் ஆர்யன் பற்றிய செய்தியும், அமைச்சர் ரத்னவேல் பற்றிய செய்திகளும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தன. அரசு என்ன செய்கிறது. ஒரு மக்களின் பிரதிநிதிக்கு இவ்வளவு அகங்காரமா? அந்த அமைச்சரை பதவியை பறித்து ஜெயிலில் அடையுங்கள். நாடு கடத்துங்கள், தூக்கில் போடுங்கள் என நெட்டிசன்கள் அவர்களின் பங்குக்கு ஆர்யனுக்கும், நீதியின் பக்கம் நின்றனர்.
கேரளாவின் காயங்கள் இன்னும் ஆறியிருக்கவில்லை, ஆனால் ஆரியனின் மன உறுதி இரும்பைப் போல உறுதியாகியிருந்தது. கௌதமின் உதவியுடன் அவர்கள் சென்னைக்கு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர். சென்னை இப்போது ஒரு எரிமலை போல இருந்தது; அமைச்சர் ரத்தினவேல் மீதான ஊழல் புகார்கள் மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்தன.
அவர்கள் தங்கியிருந்தது அடையாறில் உள்ள ஒரு பழைய, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பங்களா.
ஆரியன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனது தோள்பட்டைக் காயம் லேசாகத் துடித்தது. அவனது இடது காதில் இப்போது மெல்லிய சத்தங்கள்—கதவு மூடும் ஓசை, காற்றின் ரீங்காரம்—கேட்கத் தொடங்கியிருந்தன.
யாழினி அவனருகே வந்து அமர்ந்தாள். அவள் கையில் ஒரு லேப்டாப் இருந்தது.
“ஆரியன், நாம் இப்போ ஒரு பெரிய ரிஸ்க் எடுக்கப்போறோம். அமைச்சரைச் சட்டப்படி தண்டிக்கிறதுக்கு முன்னாடி, அவரை மனரீதியா உடைக்கணும். என்கிட்ட இருக்கிற அந்த ரகசிய ஃபைலோட பாஸ்வேர்டு இப்போதான் எனக்கு ஞாபகம் வந்திருக்கு,” என்று யாழினி சொன்னாள். அவளது குரல் இப்போது ஒரு போர்வாளைப் போலத் தெளிவாக இருந்தது.
ஆரியன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். “யாழினி, நீ அன்னைக்கு மேடையில பேசாமலேயே அவரை அதிர வச்சாய். இப்போ உன்னோட இந்தத் தைரியமான குரல் அவரை நிலைகுலைய வைக்கும். ஆனா, அவரை நாம நேரடியா சந்திக்கணும்,” என்று சைகையில் சொன்னான்.
யாழினி திடுக்கிட்டாள். “நேரடியாகவா? அது தற்கொலைக்குச் சமம் ஆரியன்!”
“இல்லை,” என்று ஆரியன் தன் போனில் எதையோ தட்டினான். “நாளைக்கு அவரோட கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கப்போகுது. பல்லாயிரம் பேர் முன்னாடி, நீயும் நானும் அங்கே போவோம். உலகம் பார்க்கிறப்போ அவர் நம்மைக் கொல்ல முடியாது.”
அன்று இரவு, அவர்கள் அந்த ஆபத்தான திட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். யாழினி ஆரியனுக்கு ஒரு ரகசிய மைக்ரோ-கேமராவை அவனது ஜாக்கெட்டில் பொருத்தினாள். அந்த நெருக்கத்தில், இருவருக்கும் இடையிலான காதல் மௌனமாகப் பேசியது.
கௌதம் பொதுக்குழு மேடையில் இருக்கும் LED TV- யை, தேவைப்படும் போது தங்களால் இயக்க முடியும் அளவிற்கு ஹேக் செய்து வைத்திருந்தான்.
அமைச்சர், செய்தியாளர்கள் முன்னிலையில்
“ எனக்கும், காசி என்ற நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை, வீணாக என் மீது பழி சுமர்த்தும் வேலை இது”
பத்திரிக்கையாளர், “ சார், music கன்சர்ட் ல, உங்க பேர், வீடியோ வெளி வந்ததில் இருந்து ஆர்யன் உயிருக்கு அச்சுறுத்தல் உங்களால அச்சுறுத்தல் இருக்குனு மக்கள் கிட்ட, கருத்து நிலவுதே”
“ அந்த செய்தியை நானும் பாத்தே, அது பத்தி விசாரணைக்கு வரட்டும், உண்மையை விளக்கி சொல்றே”
“அப்ப உங்கள பத்தி வந்த செய்தி எல்லாம் பொய்யுனு சொல்றீங்களா”
“அப்போ உண்மைனு நீங்க சொல்றீங்களா?”
“ சார், உங்க முகம், உங்க குரல் இதுக்கு என்ன சொல்றீங்க”
“பத்திரிகை நண்பர்களே, நவீன தொழில்நுட்பத்தை வைத்து இது போல உருவாக்குவது மிக எளிது வீணாக வதந்தியை நம்ப வேண்டாம். நன்றி வணக்கம்.”
அமைச்சர் ரத்னவேல், எத்தனை வருட அரசியலை பார்த்து இருப்பார். வந்த குற்றசாட்டுக்கு குறையே இல்லாமல் குழப்பி விட்டிருந்தார். ஆனால் உண்மையை எத்தனை நாளுக்கு குழப்ப முடியும், ஒரு நாள் உண்மை தெளியும் போது உலகிற்கு ஊழல் வாதிகள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
யாழினி ஆரியனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். “ஆரியன், எனக்குப் பயமா இருக்கு. என் அண்ணனைப் போல உன்னையும் நான் இழந்துடக் கூடாது,” என்று விம்மினாள்.
ஆரியன் அவளை மென்மையாகத் தூக்கி, அவளது கண்களைப் பார்த்தான். “யாழினி, மரணம் ஒருமுறைதான் வரும். ஆனா காதல் ஒவ்வொரு விநாடியும் பிறக்கும். உன் அண்ணனோட தியாகம் வீண் போகாது. நான் உன் கூடவே இருப்பேன்,” என்று சைகை செய்தான்.
அவன் அவளது உதடுகளில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தான். அந்த முத்தத்தில் பயம் இல்லை, ஒரு மாபெரும் புரட்சிக்கான உறுதி இருந்தது. அவர்கள் இருவரும் அந்த நள்ளிரவில் ஒரு புதிய உடன்படிக்கை செய்துகொண்டனர்—வெற்றி அல்லது வீரமரணம்.
அப்போது கௌதமிற்கு ஒரு கால் (call) வந்தது. அதில் ஆர்யனுக்கு லண்டனில் நடக்கும் இசை திருவிழாவிற்கு வரவேற்க பட்டிருப்பதாகவும், சமீப காலமாக சமூக சார்ந்த செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கௌதமிற்கு அது பெருமையாக இருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் எப்படி இதை ஆர்யனிடம் எப்படி வெளிப்படுத்துவது, என யோசித்தான். ஆர்யனும், யாழியினியும் நாளை அமைச்சரை உரிய ஆதாரங்களை அவர்கள் கட்சியினர் முன்னே வெளிப்படுத்தி குற்றத்தை நிரூபிக்க வேண்டிய முக்கியமான பணியில் இருக்கும் பொழுது, இது போன்ற வெளி நாட்டு நிகழ்ச்சிகளை பற்றி கூறினாலும் ஆர்யன் கேட்கப் போவது இல்லை, ஆனால் ஆர்யன் போல இசை கலைஞர்களுக்கு இது மாபெரும் ஒரு வாய்ப்பு. லண்டன் ஸ்டேடியத்தில் சிம்பொனி இசையை ஆர்யன் இசைத்தாள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தான். அந்த காட்சி அற்புதமாகவே இருந்தது. இருந்தும் என்ன செய்ய சமூக நோக்கம் ஒரு முடிவுக்கு வந்தால் தான் இது பற்றி யோசிக்க முடியும் என யோசித்து வைத்தான்.
மறுநாள் காலை சூரியன் ஆரம்பமே அதிக வெப்பத்தை உமிழ்ந்தவாறு விடிந்தது.
ரியா, ஒரு பக்கம் யாழினியிடம் இருந்த ஆதாரத்தை ஒரு நகல் எடுத்துக்கொண்டு தலைமை அதிகாரியை ராணுவ அலுவலகத்தில் சந்திக்க காத்து இருந்தாள்.
சி,மா,மூ,க கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தொண்டர்கள் சாரை, சாரையாக வந்துகொண்டு இருந்தனர். சென்னை ஜி.என். செட்டி சாலையில் அமைச்சரின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தொடங்கிவிட்டது. ஆர்யனும் யாழினியும் மாறுவேடத்தில் அந்தக் கூட்டத்திற்குள் ஊடுருவினார்கள். ஆர்யன் பாதுகாப்பிற்கு ஒரு இரும்பு சங்கிலியை எடுத்துக்கொண்டான்.
மேடையில் அமைச்சர் ரத்தினவேல் கர்ஜித்துக் கொண்டிருந்தார்: “எந்த ஆதாரமும் இல்லாத என் மீது சிலர் பழி சுமத்துகிறார்கள்…அந்த அநீதியை அகற்ற அனைவரும் அணியாய் ஒன்று திரள்வோம். நாம் பொதுவாழ்விற்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றது. இதுவரை எத்தனை அவதூறு வழக்குகளை கடந்து வந்திருப்பேன், அதற்கு கட்சி எப்பொழுதும் துணை நின்று நீதியை, உண்மையை, நியாயத்தை மக்கள் முன்னால் நிரூபித்தது. இப்போதும் அதை கட்சி நிச்சயம் செய்யும் என நம்புகிறேன்.”
அதே நேரம் டெல்லியில் இராணுவ தலைமை அலுவகத்தில், இராணுவ தலைமை அதிகாரி ராஜீவ் சிங், அமைச்சர் ரத்னவேலுவின் ஊழல் அடங்கிய வீடியோவை பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார்.
உள்துறை அமைச்சருக்கு தகவல் அனுப்பினார். அவரும் வீடியோவின் உள்ள உண்மை தன்மை அறிய உத்தரவிட்டார்.
உள் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் வீடியோ, உண்மையா என்பதை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் உண்மை என தெரியவர, உள் துறை அமைச்சர் சி,மா,மூ, கட்சி தலைவருக்கு செய்தி அனுப்பினார்.
சரியாக அந்தத் தருணத்தில், கூட்டத்திற்கு நடுவிலிருந்து ஒரு கம்பீரமான குரல் கேட்டது.
“ஆதாரம் இதோ இருக்கிறது! இனி கட்சியும் சரி, அந்த கடவுளே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது. உன் அராஜக ஆட்சி முடிவுக்கு வந்தது”
பல்லாயிரம் தலைகள் திரும்பின. அங்கே ஆர்யன் நின்றிருந்தான், அவனது கையைப் பிடித்துக்கொண்டு யாழினி நின்றிருந்தாள். மௌனம் கலைந்து, அநீதிக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
மேடையில் அமைச்சர் ரத்தினவேல் ஒரு கணம் உறைந்து போனார். பல்லாயிரம் கண்கள் அவர் மீது நிலைத்திருக்க, கூட்டத்தின் நடுவே ஒரு எரிமலைக் குழம்பைப் போல ஆர்யனும் யாழினியும் நின்று கொண்டிருந்தனர்.
கட்சி தலைவர் முல்லை வேந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை, அவரும் என்ன நடக்கப்போகிறது என பதற்ற நிலைமையில் இருந்தார்.
ஆர்யனின் ஜாக்கெட்டில் இருந்த மைக்ரோ கேமரா, அங்கிருந்த பிரம்மாண்ட எல்.இ.டி (LED) திரையுடன் கௌதமால் ரகசியமாக இணைக்கப்பட்டிருந்தது. மேடையில் இருந்த அமைச்சரின் முகம் இப்போது திரையில் மிகப் பெரியதாகத் தெரிந்தது; அதில் தெரிந்த நடுக்கம் ஒட்டுமொத்தத் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.
“இவர்கள் யார்? இவர்களை வெளியே தள்ளுங்கள்!” என்று அமைச்சர் கத்தினார்.
ஆனால் யாழினி முன்னே வந்தாள். அவள் கையில் ஒரு மைக் இருந்தது. அவள் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த காற்று கூட ஒரு நிமிடம் நின்றது போலிருந்தது.
“அமைச்சர் அவர்களே… நான் அஞ்சலி. ஆறு மாதங்களுக்கு முன்னால் என் அண்ணன் பிரகாஷைக் கொன்று, என் குரலை மௌனமாக்கினீர்களே… அதே அஞ்சலி தான் இன்று யாழினியாக உங்கள் முன்னால் நிற்கிறேன்! இனி உங்களால் நீதியை கொல்ல முடியாது. தர்மத்தின் முன் தோற்றே ஆக வேண்டும் அது தான் அநீதிக்கு ஒரு முற்றுப் புள்ளி”
அவளது குரல் அந்த மைதானம் முழுவதும் எதிரொலித்தது. யாழினியின் கண்கள் நெருப்பைக் கக்கின. இத்தனை மாதம் இதற்கு தானே காத்துக்கிடந்தேன் என்ற பெருங் கோபத்தை கொட்டித் தீர்த்தாள். மதுரையை எரிக்க வந்த கண்ணகி போல நின்றிருப்பதை கண்ட கட்சித்தலைவர் அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருப்பது உண்மைதான் போல என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஆர்யன் அவள் பின்னால் ஒரு மலை போல நின்றிருந்தான். அவனது இடது காதில் இப்போது மக்களின் சலசலப்பு ஒரு இரைச்சலாக விழத் தொடங்கியது. ஆம், அவனது செவித்திறன் 40% மீண்டுவிட்டது!
“இதோ பாருங்கள்… இந்த நாடு பார்க்கட்டும்!” என்று யாழினி கத்தினாள்.
அடுத்த விநாடி, திரையில் ஒரு வீடியோ ஓடியது. அமைச்சரின் ஆட்கள் யாழினியின் அண்ணனைத் தாக்கும் காட்சிகளும், முக்கியமாக தனக்கும் காசிக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னவர், காசி அந்த வீடியோவில் பிரகாஷை கொடூரமாக தாக்கும் காட்சிகளை கட்சித் தொண்டர்களே பார்த்து அனுதாபப் பட்டனர். அமைச்சர் ஒரு பெரும் தொகையைப் பேரம் பேசும் ரகசியக் காட்சிகளும் அதில் இருந்தன. சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். ஏற்கெனவே அமைச்சர் கோபத்தில் இருந்த ஆர்யனின் ரசிகர்கள், மற்றும் மக்கள் கூட்டம் ஆத்திரத்தில் கொதித்தது.
அமைச்சருக்கு எதிரான ரீல்ஸ், ஹேஸ்டேக், ட்ரெண்ட் ஆகியது. தமிழக அரசியலில் ஒரு பெரும் அதிர்வை ஆர்யனும், யாழினியும் ஏற்படுத்தி இருந்தனர்.
அதே நேரம், மத்திய அமைச்சரவையில் இது போன்று ஒரு அமைச்சர் செய்து இருப்பது அவமானத்திற்கு உரியது. என கண்டனங்கள் தெரிவிப்பட்டது.
“பிடியுங்கள் அவர்களை!” என்று அமைச்சர் தன் அடியாட்களுக்கு கண்ணசைவில் உத்தரவிட்டார்.
மேடையின் கீழே இருந்த குண்டர்கள் ஆர்யனையும் யாழினியையும் தாக்கப் பாய்ந்தனர். ஆனால் ஆர்யன் இன்று ஒரு போர்வீரனாக இருந்தான். அவன் யாழினியைத் தன் பின்னால் இழுத்துக்கொண்டான். தன் கையில் இருந்த ஒரு இரும்புச் சங்கிலியைக் கொண்டு, தன்னை நோக்கி வந்தவர்களை அடித்துத் துவைத்தான்.
துப்பாக்கிக் குண்டுகள் காற்றில் பறந்தன. ஒரு குண்டு ஆர்யனின் காதுக்கு மிக அருகில் உரசிக்கொண்டு சென்றது. அந்த அதிர்வில் அவனது காதுக்குள் இருந்த அடைப்பு முழுமையாக நீங்கியது போலிருந்தது. திடீரென்று… அவனுக்கு எல்லாம் கேட்டது! மக்களின் அலறல், துப்பாக்கிச் சத்தம், யாழினியின் மூச்சிரைப்பு… அனைத்தும்!
“ஆர்யன்… கவனமாக இரு!” என்று யாழினி கத்தினாள்.
ஆர்யன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “யாழினி… எனக்குக் கேட்கிறது! உன்னோட குரல் எனக்குக் கேட்கிறது!” என்று அவன் கத்தினான்.
அந்த மரணப் போராட்டத்திலும் அவர்களுக்குள் ஒரு மின்னல் போன்ற காதல் ஓடியது. ஆர்யன் அவளைத் தூக்கி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயன்றபோது, அமைச்சரின் வலது கை காசி ஒரு கத்தியுடன் யாழினியை நோக்கிப் பாய்ந்தான். காசியை பார்த்ததும், ஆர்யன் அதிர்ச்சியாகிப் போனான்,
“ என்னடா ஆர்யா…. அதிர்ச்சியா இருக்க உன்னையும், அவளையும் போடுற வரைக்கும் என்ன அடைச்சு வைக்க ஜெயிலே கிடையாது.
ஆர்யன் அதைத் தன் கைகளாலேயே தடுத்தான். கத்தி ஆர்யனின் மேல் தோலை மட்டும் சீவ, ரத்தம் பீறிட்டது. ஆனால் அவன் காசியின் முகத்தில் ஒரு பலமான குத்து விட்டான்.
கட்சியின் தலைவர் முல்லை வேந்தன். நடப்பதை கண்டு ஆத்திரத்தில் கொதித்தார். அப்போது முல்லைவேந்தன் உதவியாளர் ஓடி வந்து டெல்லியில் இருந்து வந்த செய்தியை காண்பித்தார். அதைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
“ என்னய்யா நடக்குது இங்க?” என மைக்கை பிடித்து சத்தமிட கலவரங்கள் கட்டுக்குள் வந்தது. அமைச்சர் ரத்னவேலுவை பார்த்து, கடுங்கோபத்தில் …
“ நீயெல்லாம் மனுஷனாயா, உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி டெல்லிக்கே போயிடுச்சு இதோ பார் டெல்லியில் இருந்து ஆட்சியை கலைக்குற வரைக்கு உன் ஊழல் அரங்கேறி இருக்கு.”
கட்சி தொண்டர்கள், அமைச்சர் ஆட்கள், கட்சி தலைவர் பேசிய பேச்சில் அடங்கி ஒடுங்கினர்.
“ ஆதாரம் உண்மையில்லை, பெயருக்கு கலங்கம் சுமத்துராங்கணு என்ன பாட்டு, பாடின, இப்போ இந்த வீடியோவுல காசு வாங்கினது நீயா…? இல்ல ‘AI’ யா? அப்பாவி மக்களை கொன்னுட்டு, அதுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி என்ன ஒரு பேச்சு…? இப்படி ஒரு சங்கடம் நடந்ததுக்கு மக்கள் கிட்ட மன்னிப்பு கேட்டுகுறே! ரத்னவேலுவை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்றேன். இனி கட்சிக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. அவன் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை நீதி மன்றம் கொடுத்தாலும் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்”
சரியாக அந்த நேரத்தில், கமிஷனர் தலைமையிலான ஒரு போலீஸ் படை மேடையை முற்றுகையிட்டது. திரையில் தெரிந்த ஆதாரங்கள் அமைச்சரைத் தப்பிக்க முடியாதபடி செய்திருந்தன. அமைச்சர் ரத்தினவேல் அதே மேடையில் கைது செய்யப்பட்டார். அமைச்சர் ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்பி வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர்.
“ என்னய்யா ரத்னா….. மக்களே கொள்ளையடிச்சே பாரத ரத்னா வாங்கிக் காட்டுறேன் சவால் விட்ட, இப்ப என்ன பண்ணப் போற?”
இன்னொருவன் “ கலி காலத்தில நியாயம், தர்மம், செல்லாது. இருக்குற வரைக்கும் ஊர அடிச்சு உழையிலை போட வேண்டியது தான் சொன்னியே, இப்ப ஒன்ன அடிச்சு எங்க போடப் போறாங்கனு தெரியலையே” என நக்கலாக சிரிக்க.
ரத்னவேலுவுக்கு, முகத்தில் மலத்தை அடித்தது போல, வெட்கித் தலைகுனிந்தான்.
கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால் ஆர்யன் எதையும் கவனிக்கவில்லை. அவன் ரத்தம் வழியும் கையுடன் யாழினியின் முன்னால் மண்டியிட்டான். யாழினி அழுதுகொண்டே அவனது காயத்தைப் பற்றிக்கொண்டாள்.
“நாம ஜெயிச்சிட்டோம் ஆர்யன்… ஆனா உனக்குக் காயம்…”
ஆர்யன் அவளது கன்னங்களைத் தொட்டான். “இந்தக் காயம் ஒண்ணுமே இல்லை யாழினி. இத்தனை நாள் உன்னோட மௌனத்தைப் பார்த்த நான், இன்னைக்கு உன்னோட வீரத்தைப் பார்க்கிறேன். உன்னோட குரலைவிட அழகான இசை இந்த உலகத்துல எதுவுமே இல்லை,” என்றான்.
இருவரும் அந்தப் பெரும் கூட்டத்திற்கு நடுவே, ரத்தமும் வியர்வையும் கலந்த நிலையில் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டனர். நீதியின் வெற்றி காதலின் முத்தத்தால் முத்திரையிடப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் பரபரப்பு செய்தியாக, ரத்ன வேலுவின் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டது, மருத்துவ முதலாளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது, ஆர்யன், யாழினிக்கு நாட்டின் பிரதமர் பாராட்டி வாழ்த்தியது போன்ற செய்திகள் மக்களை சற்று சாந்தப்படுத்தியது.
