அத்தியாயம் 17: மழையின் மடியில் ஒரு ராகம்

அமைச்சரின் கைதுக்கு பிறகு தமிழகமே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஊடகங்கள் அனைத்தும் ஆர்யன் மற்றும் யாழினியின் வீரக்கதையைப் பாடிக் கொண்டிருந்தன.

“ மக்களே நம்ம  “நாளை தமிழ்நாடு” யூ ட்யூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுக்க, நாடே பேசும் இசைக்கலைஞன் ஆர்யன் அவருடைய மேலாளர், மற்றும் உற்ற நண்பர். முன்னாள் அமைச்சர் ரத்னவேலுவின் குற்றத்தை நிரூபிக்க திரைக்கு பின்னால் மிக தரமாக வேலை செய்த நம்ம அண்ணன் கௌதம் வந்திருக்காரு, அவர்கிட்ட  அரசியல், மற்றும் இசை நிகழ்சிகள் பற்றி நிறைய கேட்கலாம். நீங்களும் சப்கிரைப் பண்ணி வீடியோ பாருங்க, அப்படியே லைக், அண்ட் ஷேர் பண்ணினா, அடியேன் தொடர்ந்து வீடியோ போட ஒரு உற்சாகம் கிடைக்கும். வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம்.

“வணக்கம் அண்ணே”…

“வணக்கம்”

“எப்படி இருக்கீங்க? நாடே பாராட்டும் ஒரு புரட்சி செய்திட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி  ஒரு முகத்தை வைத்துக்கொண்டு எப்படி இருக்க முடியுது”

“ நா நல்லாருக்கே தம்பி. இந்த வேலை எதுவும் நாங்க யாரும் பண்ணல, இறைவனின் அருளால் எங்களுக்கு நாட்டின் குற்றவாளிகளை சுட்டிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதையே நாங்கள் செய்தோம். முக்கியமா  இந்த ஊழலால எல்லாத்தையும் இழந்து நிக்கிற யாழினிக்கு  தான் நாம எல்லாரும் சேர்ந்து நன்றி சொல்லணும்”

“நிச்சயமா அண்ணே. அவர்களை பற்றியும், அவர்களின் அண்ணன் பிரகாஷ் பற்றியும் நாங்க கேள்விப்பட்டு இருந்தோம். மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு! ஊழல் உண்மையை வெளிய கொண்டு வரதுக்கு அவங்க எடுத்துக்கொண்ட சிரமம், அதனால பாதித்த மனநிலை எல்லாவற்றுக்கும், இந்த நிகழ்ச்சி வாயிலாக எங்களுடைய இரங்கல் களையும், நாட்டு மக்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

யூ டியூபில் கௌதம் கொடுத்த பேட்டி, நாட்டு மாக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கௌதமும் ஆர்யனின், முகம் பதித்த டீ – சார்ட், தொப்பி, என மார்கெட்டில் ஆர்யனின் முகத்தை மக்களிடம் இன்னும்  நெருக்கமாக கொண்டு சேர்த்தான். கௌதமை விட்டால் ஆர்யனை முதல்வர் ஆக்க சொன்னக்கூட ஆகிவிடுவான் போல அப்படி தங்கள் குழுவிற்காக உழைத்துக்கொண்டு இருந்தான்.

ஆனால், அந்த புகழ் வெளிச்சம் எதற்கும் ஆர்யனும், யாழினியும் ஆசைப்படவில்லை. அவர்களுக்குத் தேவைப்பட்டது ஒரு நீண்ட அமைதி மற்றும் ஒருவரையொருவர் உணர ஒரு தனிமை.

சென்னை அலுவலகத்தில், கௌதம் காட்டிக்கொண்டிருந்த கணக்கு, வழக்குகளை பார்த்துக் கொண்டு இருந்த ஆர்யனை பார்த்த யாழினி! அமைதியாக நின்றாள்.

கௌதம் புரிந்துகொண்டு,

“சரி ஆர்யா மீதம் உள்ள கணக்கை உனக்கு மெயில் பண்ணி விடுறே! நீ பாத்துட்டு சொல்லு அப்பறம் டாக்ஸ் கட்டிரலாம்”

என அவ்விடத்தை விட்டு நகர, யாழினியை பார்த்த ஆர்யன்

“வா யாழினி இப்ப ஓகே வா, நீ”

யாழினி இல்லை என்பது போல தலையசைக்க,

“ ஓகே ஆக என்ன பண்ணனும்?”

யாழினி சோர்ந்த முகத்தோடு, “ கொடைக்கானல் போகலாமா”

ஆர்யன் சரி என்பது போல தலையசைக்க, கார் கொடைக்கானலை நோக்கி பயணப்பட்டது. ஒரு நீண்ட பயணத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் கொடைக்கானலின் அதே பழைய மலைக் குடிலுக்குத் திரும்பினர். ஆனால் இப்போது அந்த வீட்டின் சூழலே மாறியிருந்தது. கௌதம் ஏற்கெனவே ஆட்களை அனுப்பி சிதறி கிடந்தவற்றை எல்லாம் சரியாக அடுக்கி, முன்னாள் இருந்த அதே பூந்தோட்டம், மற்றும் பறவைகள் வந்து சாப்பிட திறந்தவெளி உணவுக்கூடம் என்று முன்பை விட இப்போது இன்னும் அழகாக இருந்தது. அது ஒரு போராட்டக்களத்தின் தஞ்சம் அல்ல; ஒரு காதல் மாளிகையின் வாசல்.

கௌதம் சிலரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பாதுகாப்பு, மற்றும் தேவையானவற்றை செய்து தரும்படி சொல்லியிருக்க அவர்களும் ஆர்யன் மற்றும் யாழினியின் ஆணைக்காக காத்திருந்தனர்.

ஆர்யன் கௌதமின் இருந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் மாபெரும் திறமையை எண்ணி ஒரு கணம் வியந்து போனான்.

அன்று இரவு கொடைக்கானலில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் மழைத்துளிகள் தாளமிட்டன. ஆர்யன் இப்போது தன் செவித்திறனை 80% மீட்டுவிட்டான். அவனுக்கு அந்த மழையின் சத்தம் ஒரு தெய்வீக இசையாகக் கேட்டது.

அவன் ஒரு மென்மையான மெட்டைத் தன் கிதாரில் மீட்டினான். யாழினி பின்னால் இருந்து வந்து அவனது தோளில் தலைசாய்த்தாள்.

“ஆர்யன்… இந்தப் பாட்டு ரொம்ப அழகா இருக்கு,” என்றாள் யாழினி. அவளது குரல் இப்போது முழுமையாக மீண்டு, ஒரு தேன் துளியைப் போல இனிமையாக இருந்தது.

ஆர்யன் கிதாரை நிறுத்திவிட்டுத் திரும்பினான். “உன் குரலை விடவா யாழினி? இத்தனை நாள் மௌனமா இருந்தப்போ உன்னோட கண்ணுங்க பேசின மொழியைவிட, இப்போ நீ பேசுற இந்தத் தமிழ் எனக்குப் பிடிச்சிருக்கு,” என்றான். அவன் அவளது கைகளைப் பற்றித் தன் இதழ்களோடு ஒற்றிக்கொண்டான்.

யாழினி மெல்லச் சிரித்தாள். “உங்களுக்குத் தெரியுமா ஆர்யன்? நான் மௌனமா இருந்த அந்த நாட்கள்ல, நீங்க மீட்டின ஒவ்வொரு நரம்பும் என் ஆன்மாவைத் தொட்டுச்சு. வார்த்தைகள் இல்லாத காதலுக்குத் தான் ஆழம் அதிகம்னு நினைச்சேன். ஆனா இப்போ, உங்ககிட்ட இருந்து ‘உன்னை காதலிக்கிறேன்’கிற அந்த வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்கணும்னு என் இதயம் துடிக்குது.”

ஆர்யன் அவளை மெல்லத் தூக்கி அருகில் இருந்த  மரப் பலகையில் அமர வைத்தான். அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டும் நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

“யாழினி… நான் உன்னை வெறும் காதலிக்கல, உன்னை சுவாசிக்கிறேன். இனி என் உலகத்துல இசை மட்டும் இருக்காது, நீயும் உன் குரலும் தான் என் சங்கீதம்,” என்று சொல்லி அவளது நெற்றியில், கண்களில், கன்னங்களில் மென்மையாக முத்தமிட்டான்.

யாழினி அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அந்தப் பனி படர்ந்த இரவில், மழையின் சத்தத்திற்கு நடுவே இரு இதயங்கள் ஒன்றிணைந்தன. அவர்களின் காதல் இப்போது ஒரு முழுமையான கவிதை போல மாறியிருந்தது.

மறுநாள் காலை, கௌதமிடம் இருந்து ஒரு போன் வந்தது. “ஆர்யன்! உனக்கு ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பு வந்திருக்கு. லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (London Symphony Orchestra) கூட சேர்ந்து நீ ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணனும். அதுவும் ‘மௌனத்தின் வலி’ங்கிற தலைப்புல. இது உன் லைஃப்லேயே பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும்!”

ஆர்யன் யாழினியைப் பார்த்தான். அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள். “போங்க ஆர்யன்… உங்க திறமையை இந்த உலகம் மீண்டும் கொண்டாடணும். ஆனா இந்த முறை, நான் உங்க நிழலா மட்டும் இல்ல, உங்க இசையோட ஒரு பகுதியா இருப்பேன்,” என்றாள்.

ஆர்யன் ஒரு முடிவுக்கு வந்தான். “அந்த ஆல்பத்துல நான் மட்டும் பாடப்போறது இல்ல கௌதம். என்னோட சேர்ந்து யாழினியும் பாடுவாள். இது எங்க ரெண்டு பேரோட மௌனம் பாடுற பாட்டு!”

அப்பாடா, எப்போ ஒரு விஷயத்தை சொன்னால் அது வேலைக்கு ஆகும். என சரியாக கணித்திருந்த கௌதம் ஆர்யன் நல்ல மனநிலையில் இருக்கும் போது முன்பு வந்த வாய்ப்பை இப்போது வந்தது போல சொல்லி ஆர்யனை சம்மதிக்கவும், சம்பாதிக்கவும் வைத்து விட்டான். இதை முன்பு சொல்லியிருந்தால் யாழினி மீது உள்ள காதல், நாட்டின் மீது உள்ள தேசப்பற்று, மேலும் ஊழல் மீது வெறுப்பு காரணமாக நிச்சயம் வந்த வாய்ப்பை வேண்டாம் என்று  சொல்லியிருப்பான்.  

இப்போது புதிய பயணம் தொடங்கத் தயாரானது. ஆனால், லண்டன் பயணத்திற்கு முன்னால் அவர்கள் ஒரு சிறிய ரகசியத் திட்டத்தைச் செய்ய நினைத்தனர். அது என்ன?

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page