அத்தியாயம் 22: வேலியைக் கடந்த வேங்கை

வீட்டிற்கு வெளியே ஆக்ரோஷமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த அந்தக் கும்பல், ஆரியனின் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தது. உள்ளே யாழினி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகள் ஆரியனின் இதயத்தைச் சுட்டன.

“ஆர்யன்… என்னால முடியல… வலி அதிகமா இருக்கு,” என்று யாழினி அவனது கையை இறுகப் பற்றினாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கோ, யாழினி. காரை ரெடி பண்ணிட்டு கிளம்பிடலாம்.”

ஆரியன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். சுமார் முப்பது பேர் வாசலை மறித்து நின்றனர். ஆரியன் தனது போனை எடுத்து கௌதமுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். பின், யாழினியை மெல்லத் தூக்கி சோபாவில் அமர வைத்தான்.

“யாழினி, கண்ணைத் திற… என்னை நம்பு. உனக்கும் நம்ம பாப்பாவுக்கும் எதுவும் ஆகாது. நான் இப்போ வெளியே போய் அவங்களை விலக்கிட்டு வரேன். நீ கதவை உள்ளே பூட்டிக்கோ,” என்றான் ஆரியன். அவனது குரலில் இப்போது ஒரு மரண அமைதி இருந்தது.

ஆரியன் வீட்டின் பிரதான கதவைத் திறந்து வெளியே வந்தான். ஒரு ராக் ஸ்டாராக மேடையில் ஆயிரக்கணக்கானோரைத் தன் இசையாலக் கட்டிப்போட்டவன், இன்று தன் குடும்பத்தைக் காக்க ஒரு போர்வீரனாக நின்றான்.

“விலகிப் போங்க! என் மனைவிக்கு உடம்பு சரியில்லை, அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்!” என்று ஆரியன் கர்ஜித்தான்.

அந்தக் கும்பலின் தலைவன் முன்னால் வந்து சிரித்தான். “ஏய் பாட்டுக்காரன்! நீ பண்ணின மோசடிக்கு இன்னைக்கு உன் வீட்டைத் தாண்ட முடியாது. வேணும்னா உன் பொண்டாட்டியை இங்கேயே பெத்துக்கச் சொல்லு,” என்று கேவலமாகப் பேசினான்.

ஆரியனின் கண்களில் அக்னிப் பிழம்பு தெறித்தது. அவன் பதில் பேசவில்லை. முதல் ஆள் அவன் சட்டையைப் பிடிக்க வந்தபோது, ஆரியன் மின்னல் வேகத்தில் அவனது கையைப் பிடித்துத் திருகினான். அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஒரு புயல் வீசியது.

ஆரியன் தன் ஆக்ரோஷத்தை முழுமையாக வெளிப்படுத்தினான். அவன் அடிக்கும் ஒவ்வொரு அடியிலும் யாழினியின் வலியும், அமைச்சரின் துரோகமும் எதிரொலித்தன. ஒவ்வொருத்தரையும் விரட்டி,விரட்டி தாக்கினான். பதில் தாக்குதல் நடத்த எவ்வளவு முயன்றும் ஆர்யன் மீது ஒரு அடி கூட விழாத வண்ணம், அவனது வேகம் எதிராளியை பந்தாடியது.   பத்து பேரைத் தரையில் வீழ்த்திய பிறகு, அந்தக் கும்பல் பின்வாங்கியது. சரியாக அந்த நேரத்தில் கௌதம் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்து சேர்ந்தான்.

ஆர்யா… நீ முதல யாழினியை கூட்டிட்டு வா, என காரை எடுத்து தயார் நிலையில் நின்றான். வந்திருந்த போலீஸ்காரர்கள் கலவர கும்பலை  அடித்து, வாகனத்தில் ஏற்றினர்.

காரில் அமர்ந்தபடி, “சார் புரோடெக்சன் கேட்டு, மனு கொடுத்திருக்கேன், இன்னும் எந்த ஆக்ஷன் எடுக்காம இருக்கிறது, எனக்கு சரியா படல, பாருங்க வீடு வரைக்கும் வந்துடாங்க”

“கௌதம், இந்த கும்பல் யாரு, என்னன்னு விசாரிக்காம, ரத்னவேல் மேல இருக்குற பகையை வச்சு, புரொடக்ஷன்க்கு அவசரப்படுத்தாதீங்க, எங்களுக்கு கமிஷனர் ஆபீஸில் இருந்து எந்த ஆர்டரும் வரல, பத்திரமா இருங்க ”  என்று ஆறுதல் மட்டுமே சொல்லிய காவலர் அங்கிருந்து கிளம்பினார். தலையை குனிந்த கௌதமிற்கு கோபம் தலைக்கு ஏறியது.

“ஏண்டா… வந்தவன் அமைச்சர் ஆளுனு விசாரிச்சுத் தான் தெரியனுமா? என கத்தினான். ஆனால் அதற்குள் போலீஸ் வாகனம் புறப்பட்டு சென்றிருந்தது.

ஆரியன் நேராக உள்ளே ஓடினான். யாழினி மயக்க நிலையில் இருந்தாள். அவள் உடலிலிருந்து ரத்தம் கசிவதைக் கண்டு ஆரியன் பதறினான். அவளை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு தனது காரில் ஏற்றினான்.

“வேகமாப் போ கௌதம்!” என்று கத்தினான்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஆரியன் யாழினியின் தலையைத் தன் மடியில் வைத்துக்கொண்டான். அவளது நாடித் துடிப்பு பலவீனமாக இருந்தது. “யாழினி… முழிச்சுப் பாரு… ப்ளீஸ்… நாம இவ்வளவு தூரம் வந்தது இதுக்காக இல்ல,” என்று அழுதுகொண்டே அவளது கன்னங்களைத் தட்டினான். அப்போது ஒரு கோவில் கடந்து செல்ல…. இறைவா என மனதார பிராத்தனை செய்துகொண்டான்.

மருத்துவமனை வந்தடைந்ததும், மருத்துவர்கள் அவளைத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) அழைத்துச் சென்றனர்.

“மிஸ்டர் ஆரியன், அவங்களுக்கு ‘ப்ரீ-மெச்யூர் லேபர்’ (Pre-mature labour) ஆகுது. அதுமட்டும் இல்லாம மன அழுத்தத்தால ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாயிருக்கு. நாங்க குழந்தையையோ இல்ல தாயையோ தான் காப்பாத்த முடியும்ங்கிற நிலை வரலாம். தயாரா இருங்க,” என்று டாக்டர் சொன்னார்.

ஆரியன் அப்படியே தரையில் சரிந்தான். உலகத்தையே தன் இசையால் வென்றவனுக்கு, இன்று தன் மனைவியையும் குழந்தையையும் காக்க முடியாதோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது. அவன் அங்கே இருந்த சிறிய பிரார்த்தனை அறையில் மண்டியிட்டான்.

“கடவுளே… என் குரலை வாங்கிக்கோ, என் செவித்திறனை வாங்கிக்கோ… ஆனா என் யாழினியையும் என் குழந்தையையும் எனக்குக் குடுத்துடு, எனக்காக இருப்பவள் அவள் மட்டுமே” என்று கதறினான்.

அப்போது ஒரு செவிலியர் ஓடி வந்தார். “மிஸ்டர் ஆரியன்… சீக்கிரம் உள்ளே வாங்க!”

ஆரியன் இடிந்து போய் அமர்ந்திருந்த அந்தத் தருணத்தில், செவிலியரின் அழைப்பு அவனது இதயத் துடிப்பை நிறுத்தியது. அவன் ஓடிச் சென்று ஐசியூ (ICU) கதவருகே நின்றான். உள்ளே மருத்துவர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். கண்ணாடிச் சுவருக்கு அப்பால் யாழினி அசைவற்று கிடந்தாள்.

என்ன, இறைவா இப்படி ஒரு சூழலுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்? இதற்காகவா அத்தனை வேண்டுதல்கள் தங்களிடம் வைத்தேன். இவள் எனக்கானவள் இல்லை என்றாள், எதற்கு என் கண்ணில் பட செய்தீர்கள்? உயிருக்கு உயிராக நேசிக்க செய்தீர்கள்?  என்னோடு இத்தனை நாள் வாழ செய்தீர்கள்? என்ன இரவா? என்று இறைவனிடம் சொற் போரில் சொல்லாடிக்கொண்டுக் இருந்தான்.

திடீரென்று, அந்த அமைதியான மருத்துவமனை வளாகத்தையே அதிரச் செய்யும் வகையில் ஒரு சத்தம் கேட்டது. அது ஒரு குழந்தையின் அழுகுரல்!

ஆரியனின் உடல் சிலிர்த்தது. அவனது காதுகள் அந்தச் சத்தத்தை ஒரு தெய்வீக சங்கீதம் போல உள்வாங்கின. உலகிலேயே மிகச்சிறந்த இசை எது என்று கேட்டால், இப்போது அவன் இந்தக் குரலைத்தான் சொல்வான். எத்தனையோ தாளத்தில் பாடியவனுக்கு இந்த மழலை குரல் புது மெட்டில் புதிய ராகத்தை படைத்ததை உணர்ந்தான்.

டாக்டர் வெளியே வந்தார். அவனது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. “வாழ்த்துகள் ஆரியன்! அழகான பெண் குழந்தை.

உலகில் ஆண் மகனுக்கு கிடைக்கும் முதல் ஆனந்தம்,தந்தையாகும் நிகரற்ற உணர்வு தான், அந்த உணர்வில் மெய்மறக்கும் முன் டாக்டர் “ஆனா…” என்று வார்த்தையை இழுத்தார்.

“ஆனா என்ன டாக்டர்? யாழினி எப்படி இருக்கா?” ஆரியனின் குரல் நடுங்கியது.

“யாழினி ரொம்ப பலவீனமா இருக்காங்க. குழந்தை ஏழு மாசத்துலேயே பிறந்துட்டதால, குழந்தையை இன்குபேட்டர்ல (Incubator) வைக்கணும். யாழினிக்கு இன்னும் நினைவு வரல. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்,” என்றார் டாக்டர்.

என்ன ஒரு சத்திய சோதனை, இருவரும் என்னவர்கள், ஒரு உயிர் புதிதாய் பிறந்து இருக்க, மற்றொரு உயிர்,  துடித்துக்கொண்டிருப்பது எப்படி தாங்க முடியும், ஆர்யன் தளர்ந்து போய் மெல்ல நடிக்க முடியாமல்  நடந்தான். அவனது நடையிலே இடிந்து போயிருப்பதை உணர்ந்த டாக்டர், “ஆர்யன் நீங்க குழந்தையை பார்க்கலாம்” என்றார்.  

ஆரியன் முதலில் தன் மகளைப் பார்க்கச் சென்றான். ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள், மிகச் சிறிய உருவமாக அவனது மகள் இருந்தாள். அவளது குட்டி விரல்கள் காற்றில் அசைந்தன. ஆரியன் கண்ணாடியைத் தொட்டான். அவனது கண்ணீர் அந்தக் கண்ணாடியில் வழிந்தது.

“உன் அம்மாவைப் போலவே நீயும் ஒரு போராளிதான், பிறக்கும் போதே எவ்வளவு போராட்டம், பத்து மாதம் கருவறையில் தங்காமல் ஏழு மாதத்தில் வந்த ரகசியம் என்னவோ” என்று அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

வெளியே ஆர்யனுக்கு, கௌதம் ஆறுதலாக தோளைத் தொட்டு மனச விட்டுறாத நண்பா… ஆர்யனுக்கு கௌதம் சொன்ன வார்த்தையை விட யாழினி ஞாபகம் தான் அதிகம் இருந்தது.

அவன் யாழினியின் அறைக்குச் சென்றான். அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான். “யாழினி… முழிச்சுப் பாரு… நம்ம பாப்பா வந்துட்டா. உன்னைப் போலவே அழகா இருக்கா. நீ இல்லாம நாங்க எப்படி இருப்போம்? சீக்கிரம் எழுந்து வா,” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான். அவனது அன்பின் புலம்பல் நிச்சயமா யாழினி ஆன்மாவை தொட்டிருக்கும், நமக்காக ஒரு ஜீவன் உயிர்த் துடிப்புடன் இருக்கும் பொழுது, நாம் வாழாமல் எப்படி மரணத்தை தொட முடியும்?

மருத்துவமனையில் ஒரு உருவம், சந்தேகத்திற்கு உரிய உடல்மொழியுடன் சுற்றித் திரிந்தது. அந்த உருவம் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டது.

அன்று நள்ளிரவு. மருத்துவமனையில் அமைதி நிலவியது. ஆரியன் யாழினியின் அருகிலேயே தூங்கிப்போயிருந்தான். திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஆரியனின் செவித்திறன் இப்போது மிகக் கூர்மையாக இருந்தது. அவன் மனம் விழித்துக்கொண்டான், ஆனால் கண்களைத் திறக்கவில்லை.

ஒருவன் மெதுவாக யாழினியின் மருந்து ஏற்றும் குழாயைத் (IV Drip) துண்டிக்க முயன்றான். ஆரியன் சட்டென்று அவனது கையைப் பிடித்துத் திருகினான். அவன் அமைச்சரின் ஆள்!

“இங்கேயும் வந்துட்டீங்களா?” என்று ஆரியன் ஆத்திரத்தில் கத்தினான். அங்கே நடந்த சிறு மோதலில், ஆரியன் அவனை அடித்து வீழ்த்தினான். ஆனால், வந்தவன் அடங்காமல் எப்படியாவது யாழினியை கொலை செய்யும் முயற்சியிலே தொடர்ந்து ஆர்யனை நெருங்கினான். எவ்வளவு அடித்தும் அடங்காத அந்த உருவத்தை கௌதம் நுழைந்து அப்படியே தூக்கி சென்று வெளியே வீசினான். அந்த கலவரச் சத்தத்தில் யாழினியின் கண்கள் மெல்லத் திறந்தன.

அவளது பார்வை ஆரியன் மீது நிலைத்தது. “ஆ… ரி… யன்… பா…ப்பா…” என்று மிக மெல்லிய குரலில் கேட்டாள்.

ஆரியன் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான். “பாப்பா நல்லா இருக்கா யாழினி… நீயும் மீண்டு வந்துட்ட! இனி யாராலயும் நம்மளைத் தொட முடியாது,” என்று கதறி அழுதான்.

“ அழாத ஆர்யா…. எனக்கொன்னும் இல்ல,”

என ஆர்யனின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

மறுநாள் காலை, அமைச்சரின் அந்த ஆள் போலீஸில் கௌதம் ஒப்படைத்தான். “ என்ன சார், நடக்குது இங்க, ஏற்கெனவே பல தடவ, அந்த ரத்ன வேல் ஆட்கள், எங்கள கொல்ல முயற்சி பண்றாங்கள்னு, ஊருக்கே தெரியும், இந்த நிலைமையில முந்தா நாள் நைட்டு வீட்டுக்கு வந்து பிரச்சினை பண்ணானாங்க, அதையும் கண்டுக்கல, இப்ப ஹாஸ்பிடல் வரைக்கும் வந்துட்டாங்க, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்னு எத்தன முறை  சொல்லியாச்சி ஆனா எதையும் பெரிசா எடுத்துகிடாம இருந்தா என்ன சார் அர்த்தம்”

காவலர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக நின்றனர். கௌதம் பிடித்து வாங்கியதில் அவமானப்பட்ட போலீஸ், அமைச்சரின் ஆளை அடித்து துவைத்தனர். அவன் கொடுத்த வாக்குமூலம் அமைச்சருக்கு எதிரான இறுதி ஆணியாக அமைந்தது. ஏற்கனவே ஊழல் வழக்கில் இருந்த அமைச்சருக்கு இப்போது ‘கொலை முயற்சி’ வழக்கும் சேர்ந்துகொண்டது.

யாழினி மெல்லக் குணமடையத் தொடங்கினாள். சில நாட்களுக்குப் பிறகு, அவள் தனது மகளை முதன்முதலாகக் கையில் ஏந்தினாள். ஆரியன் அந்த இரு பேரழகிகளையும் பார்த்தபடி நின்றான்.

“இந்த ரெண்டு கண்ணும் உன்ன மாதிரியே  இருக்கு யாழினி”

“நல்லா பாரு, உன்னோட கண்ணு மாதிரி தான் இருக்கு”

“இல்ல யாழினி, மூக்கு கூட உன்ன மாதிரி தான் இருக்கு”

“ஆர்யா சொல்லிட்டே, அது உன்னோட பீரங்கி மூக்கு”

“அட உதடு கூட, உன்ன உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு”

“ சத்தியமா இல்ல, அது உன்னோட உதடு மாதிரி இருக்கு”

அப்போது மழலை மொழியில் பேச, “ பாரு, பாரு குரல் கூட உன்னோட குரல் தான், என்று ஆர்யன் யாழினியையும், குழந்தையையும் ஒன்றாக கருதி புகழ்ந்து தள்ளினான்.

“ ஆர்யா,,, இது நம்ம குழந்தை நம்மள மாதிரி தான் இருக்கும், எதுக்கு நீ, நான்னு பேசிட்டு நம்மள மாதிரி இருக்குன்னு சொல்லிடு நான் ஓத்துகிறேன்”

“ஆமாண்டி பாப்பா நம்மள மாதிரியே இருக்கு”

‘ஆர்யன் இப்படி பேச யாழினி முதல் முறையாக கேட்கிறாள், ஒரு ஆண் அப்பன் ஸ்தானத்திற்கு வந்ததும், குழந்தையாகிவிடுகிறான்.’

அவனது மௌன ராகம் இப்போது ஒரு முழுமையான குடும்பப் பாடலாக மாறியிருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page