அத்தியாயம் 23: வசந்தத்தின் இசை வரி

மருத்துவமனையின் வாசனை மறைந்து, இப்போது ஆரியனின் வீட்டில் பாலாடையின் மணமும், குழந்தையின் மழலைச் சத்தமும் நிறைந்திருந்தது. யாழினி முழுமையாகக் குணமடைந்துவிட்டாள். அவள் குழந்தையைத் தாலாட்டும் போது பாடும் அந்த மெல்லிய ராகம், ஆரியனுக்கு உலகத்தையே மறக்கச் செய்தது.

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…

முத்தாரோ நீயோ, முல்லைப்பூ நீயோ…

பவளமே நீயோ, பாலே நீயோ…

ஆராரோ ஆரிரரோ…

அரிரரோ அரிரரோ …

அரிரரோ அரிரரோ …

ஆரடிச்சு நீயழுதாய்,

கண்மணியே கண்ணுறங்கு…

அவர்கள் தங்கள் மகளுக்கு ‘சங்கீதா’ என்று பெயரிட்டனர். ஆரியனின் இசையும், யாழினியின் குரலும் இணைந்த ஒரு காவியமாக அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.

அன்று காலை, ஆரியனுக்கு ஒரு அதிகாரப்பூர்வமான அழைப்பு வந்தது. இந்திய அரசாங்கம் அவனது கலைச் சேவையையும், அநீதிக்கு எதிராக அவன் காட்டிய துணிச்சலையும் பாராட்டி, அவருக்கு ‘தேசிய விருது’ (National Award) அறிவித்திருந்தது.

கௌதம் தன்னுடன் பணி புரியும் உதவியாளர்களுக்கு பெரிய ட்ரீட் ஏற்பாடு செய்திருந்தான். ஆர்யன் இசை குழுவில் உள்ள அனைவருக்கும் அது மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியாக இருந்தது.

யாழினியின் செல்ஃபோன் ஒலித்தது.

யாழினி போனை எடுத்ததும்.

“வாழ்த்துக்கள் யாழினி… குழந்தை பிறந்த செய்தி இப்போது தான் எனக்கு கௌதம் சொன்னார்,”

₹நன்றி ரியா…”

“அப்படியே ஆர்யனுக்கும் என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடு”

“இந்தாங்க நீங்களே சொல்லுங்க,”

என ஆர்யனிடம் ஃபோனை கொடுத்தாள் யாழினி, யார் என பாவனையில் கேட்ட ஆர்யனுக்கு “ரியா…”

“ சொல்லுங்க கமாண்டோ ஆஃபிஸர்,”

“ஒரே, டைம் ல, ரெண்டு விருது வாழ்த்துக்கள் இசையே”

“நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ரியா, நீங்க இல்லைனா இது எதுவுமே இல்லை”

“அது என்னோட கடமை ஆர்யன், சரி உடம்ப பாத்துக்கோங்க நா வைக்கிறேன்.”

“நன்றி, நன்றி”.

“யாழினி, இது எனக்குக் கிடைச்ச விருது இல்லை… உன்னோட காதலுக்கும், உன் அண்ணன் பிரகாஷோட தியாகத்துக்கும் கிடைச்ச வெற்றி,” என்றான் ஆரியன்.

யாழினி புன்னகைத்தாள். “நீங்க டெல்லிக்குப் போய் இந்த விருதை வாங்கிட்டு வரணும் ஆர்யன். நான் பாப்பாவைத் தனியா பார்த்துப்பேன். கௌதம் உங்க கூட வருவார்,” என்றாள்.

ஆரியனுக்கு அவளைப் பிரிந்து செல்ல மனமே இல்லை. “நீயும் பாப்பாவும் இல்லாம நான் எப்படி அங்க இருப்பேன்?” என்று அவளது மடியில் தலை சாய்த்துக் கேட்டான்.

“இது வெறும் மூணு நாள் பயணம் தான் ஆர்யன். நீங்க மேடையில அந்த விருதை வாங்குறதை நான் டிவில பார்த்து பெருமைப்படுவேன்,” என்று சொல்லி அவனது நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினாள்.

கௌதமும், ஆர்யனும் டெல்லிக்கு பயணப்பட்டனர்.

விமானத்தில், “ ஆர்யா உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. இப்பக் கூட, உன்ன முதல் முறை பார்த்த நினைவு அப்படியே இருக்கு”

“ ஆமாம் கௌதம். அந்த நாட்களில் எப்படிப்பட்ட வறுமையில் தயங்கி நின்னேன், ஆனா இப்ப பாரு” என விமானத்தை பார்த்தான்.

“ ஆனா ஆர்யா நீ வளர்ந்திருக்க உயரம் சாதாரணம், எல்லாருக்கும் நீ ஒரு உதாரணம்”

“ நல்ல நட்பு கிடைச்சா, எல்லாரும் வெற்றிக்கு உதாரணம் தான் மச்சி”

“ போட்டுட்டாண்டா ஐஸ் அணுகுண்டை”

என கலாய்த்தபடி கண்ணை மூடிக்கொண்டான்.

மறுநாள் குடியரசு தலைவர் மாளிகையில் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எல்லாம் மிடுக்காக நுழைந்த வண்ணம் இருந்தனர். டெல்லியில் நடந்த அந்த விழா பிரம்மாண்டமாக இருந்தது. ஜனாதிபதியின் கைகளில் இருந்து விருதைப் பெற்ற போது, அரங்கம் அதிரும் படி கைதட்டல்கள் எழுந்தன. ஆரியன் மைக்ரோபோன் முன்னால் நின்றான். அவன் பேசத் தொடங்கிய போது, அங்கிருந்த அனைவரும் மௌனமாயினர்.

“இந்த விருது ஒரு ஊமையான காதலுக்கும், கேளாத ஒரு இசைக்கும் சொந்தமானது. என் மனைவி யாழினி இல்லை என்றால், நான் இன்று இங்கே இல்லை. அவளது மௌனம் தான் எனக்கு இசையைக் மேம்பட கற்றுக்கொடுத்தது,” என்று அவன் நெகிழ்ச்சியுடன் பேசினான்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஆர்யனுக்கு வாழ்த்துக்களை கூறினர். ஆர்யன் மனம் நிலை கொள்ளவில்லை, அப்போது கௌதம், “ஆர்யா, கெட்ட பெயர் வந்தப்போ, தலை தெறிக்க ஓடின, தயாரிப்பாளர் எல்லாம் இப்ப, உனக்காக லைன்ல காத்துட்டு இருக்காங்க, நாளைக்கு காலையில “ஹோட்டல் சாம்ராட்” ல, ஒரு பார்டி ஒண்ணு  ரெடி பண்ணிருக்காங்கலாம், என்ன இருந்து நாளைக்கு சென்னை போகலாமா?”

“கௌதம், நீதான் எனக்கு மேனஜர் இது எல்லாத்தையும் நீயே பாத்துக்கோ, நீ யாருக்கு மியூசிக் பண்ண சொல்றியோ அவங்களுக்கு சூப்பரா பண்ணித்தாரே, எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு”

என்று நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறி அன்று இரவு, டெல்லியில் இருந்து திரும்பிய ஆரியன் யாழினிக்கு ஒரு ஆச்சரியம் கொடுக்க விரும்பினான். அவன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தான்.

அறைக்குள் மெல்லிய வெளிச்சம் இருந்தது. யாழினி சங்கீதாவைத் தூங்க வைத்துவிட்டு, ஆரியனின் பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது. ஆரியன் பின்னால் இருந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டான்.

யாழினி திடுக்கிட்டுத் திரும்பினாள். “ஆர்யன்! அதுக்குள்ள வந்துட்டீங்களா?”

“உன் நினைப்பு என்னைத் தூங்க விடல யாழினி. இந்த விருது, இந்தப் புகழ் எல்லாம் உன் ஒரு சொட்டு கண்ணீருக்குக் கூட ஈடாகாது,” என்றான் ஆரியன். அவன் தனது கோட்டில் இருந்த அந்தப் பதக்கத்தை (Medal) எடுத்து யாழினியின் கழுத்தில் அணிவித்தான்.

“இன்னைக்கு நீ தான் என் தேசத்தோட பெருமை,” என்று சொல்லி அவளை ஆழமாக முத்தமிட்டான்.

அந்த இரவு, அவர்கள் மீண்டும் தங்களை ஒரு புதிய காதலர்களாக உணர்ந்தனர். ஆனால், சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ரத்தினவேல் தனது இறுதி அஸ்திரத்தை ஏவத் தயாராகிவிட்டார். அவர் தனது அடியாளிடம் சொன்னார்: “விருது வாங்கிய அந்த மேடையிலேயே அவன் வீழ வேண்டும் என்று நினைத்தேன்… ஆனால் பரவாயில்லை, அவனது சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காது.”

டெல்லி பயணத்திற்குப் பிறகு ஆரியனின் புகழ் எல்லை கடந்து பரவியிருந்தது. ஆனால், அந்தப் புகழைக் கொண்டாட அவனுக்கு நேரமில்லை. சின்னஞ்சிறு சங்கீதாவின் சிரிப்பும், யாழினியின் மென்மையான காதலும் மட்டுமே அவனது உலகம்.

புதிதாக வந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, மனம் போல இசை அமைத்துக்கொடுத்தான்.

ஆர்யனின் புதிய பாடல் ஒன்று யூ டியூபில் வெளியாக ஒரு மணி நேரத்தில் பத்து லட்சம் பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் கலக்கிக் கொண்டு இருந்தது.

ஆர்யனின் இசைக்காக, நடிகர்களும் காத்து இருந்தனர். முன்பு விலகி சென்ற தயாரிப்பாளர்களும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், ஆர்யனின் முகத்தை பார்த்து  சிரித்தபடி தங்களது திரைப்படத்திற்கும் இசை அமைத்து தர வேண்டினர். ஆர்யன் பழையது எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளவில்லை  எல்லாரிடமும் ஒரே மலர்ந்த முகத்தோடு பழகினான். இசையும் அமைத்துக்கொடுத்தான்.

“ஆர்யன்  சார். சந்தானம் சார், உங்கள பாக்க வந்திருக்காரு!”

“யாரு ஆக்டர் சந்தானம் சாரா”

“ ஆமா சார்.”

ஆக்டர் சந்தானம், அவருக்கே உண்டான நக்கல், நய்யாண்டி உடன்,

“ என்ன ஆரி, ஆக்டர் சூரி மாதிரி சூப்பரா வளர்ந்து நிக்குற”

ஆர்யன்,  இசை புகழுக்கு முன், கல்யாண கச்சேரிக்கு வாசிக்க செல்வது வழக்கம், அப்போது ஒரு கல்யாணத்தில் நடிகர் சந்தானம், இவனை கவனித்து திறமையை பாராட்டி சென்றார். அப்போது எப்படி பேசினாரோ அதே தோரணை இன்னும் மாறவில்லை.

“ எல்லாம் இறைவன் செயல் சார்”

“பார்ரா, அப்ப பாத்த மாதிரியே, இவ்வளவு  வளர்ந்தும் இன்னும் நெஞ்ச நிமித்தமா, தன்னடகத்தோட இருக்குற உன்னோட தனி குணம், தமிழ் நாட்டுக்கு ரொம்ப பிடிக்கும், சரி “ சரக்கா, முறுக்கா” அப்டின்னு ஒரு படம் பண்ண போறேன். சார் எப்படி பிசியா”

“ சார் நீங்க கேட்டா, ஓசி ல, கூட ட்யூன் போட்டு தரேன் சார்”

“ பார்ரா, காமெடி கூட உனக்கு வருமா? ஓசியெல்லாம் வேணாம். இந்தா ரெண்டு லஞ்சம், ரெண்டு நாள்ல சூட்டிங் போக போறோம், டைரக்டர் வருவாரு, அவரே பாட்டும் எழுதுவாறு. ஓகே வா”

“ சரிங்க சார், நான் பாத்துக்கிறேன்.”

கௌதம், புது, புது கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு, அவர்களின் வியாபார யுக்தியை புரிந்துகொண்டு  நாமளே ஒரு புதிய ஆடியோ நிறுவனத்தை உருவாக்கலாம் என்ற முயற்சியில் தீவிரமா இருந்தான்.

“ ஆர்யா, இந்த மியூசிக் கம்பெனி எல்லாம், ரைட்ஸ்னு உழைப்புல பாதி எடுத்துக்கிறாங்க! இதனால நம்ம கம்பெனிக்கு வருமானம் குறையுது, ஆனா உழைப்பு கூடுது. ஆடியோ வாங்கி அதை செல்போன் கம்பெனிக்கு காலர் ட்யூன் ல, இருந்து கண்களில்லாம இருக்குற வெப்சைட் வரைக்கும் நல்லாவே சேல் பண்றானுங்க, ஆனா நம்மகிட்ட லாபத்துல பாதினு சொல்லிட்டு, அடுத்த ஆல்பத்துல சேர்த்து  தர்றோம்னு ரெண்டு, மூணு ஆல்பத்தை காசு கொடுக்காமலே கல்லா கட்டிட்டு இருக்கானுங்க”

“சரி இப்ப என்ன முடிவு பண்ணிருக்க?”

“நாமளே ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்” நாமளே சேல் பண்ணலாம், லண்டன் சிம்பொனிக்கு அப்பறம் உலகம் முழுக்க உனக்கு ரசிகர்கள் இருக்காங்க, அவங்கள நம்பி ஆரம்பிப்போம்”

“ சரி கௌதம், எனக்கு ஓகே தான்”

“ அப்பறம் என்ன? வேலையை இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்”

கௌதமிற்கு ஆர்யன் மீது, மதிப்பு ஒரு படி கூடியிருந்தது.  தாம் என்ன சொன்னாலும் சிறிதும் சந்தேகமின்றி உறுதியாக நம்பும் அவனது நட்பிற்கு என்று நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்க விரும்பினான்.

குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்ததால், யாழினிக்கு உதவியாக ஒரு செவிலியர் தேவைப்பட்டார். அப்போதுதான் ‘மலர்’ என்ற பெண் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தாள். அமைதியான முகம், அடக்கமான பேச்சு – அவளைப் பார்த்த யாழினிக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.

“ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா ஆர்யன். பாப்பாவை அவ்வளவு அன்பா பார்த்துக்கிறா,” என்றாள் யாழினி.

ஆர்யன் அவளைக் கூர்ந்து கவனித்தான். ஆர்யனின் செவித்திறன் மீண்டிருந்தாலும், மனிதர்களின் முகபாவனைகளை வாசிப்பதில் அவன் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தேர்ந்த கலைஞனாகவே இருந்தான். மலரின் கண்களில் ஒருவிதமான இறுக்கம் இருப்பதை அவன் உணர்ந்தான், ஆனால் அதை யாழினியிடம் சொல்லி அவளது நிம்மதியைக் குலைக்க விரும்பவில்லை.

மலர் உண்மையில் அமைச்சரின் விசுவாசியான ஒருவரின் தங்கை. பழிவாங்கும் வெறியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தாள். முன்னாள் அமைச்சர் எவ்வளவு அடி வாங்கினாலும், ஆர்யனை பழி தீர்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அவரே அவரைத் தள்ளிக்கொண்டார். மேலும் அவரது எடுபிடிகள் ஒருவர் பின் ஒருவர் வந்து ஆர்யனிடம் அடிவாங்கி திரும்ப செல்ல காத்துக்கொண்டு இருந்தனர். அதில் கடைசி சொட்டு, இந்த மலர்தான்.  

அன்று இரவு, ஆர்யன் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள  ஸ்டுடியோவில் ஒரு புதிய மெட்டை அமைத்துக் கொண்டிருந்தான். யாழினி பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள். மலர் மெல்லச் சமையலறைக்குள் நுழைந்தாள். ஆர்யனுக்கு ஏதோ பொறி தட்டியது போல ஒரு உள்ளுணர்வு, அவள் கையில் ஒரு சிறிய விஷக் குப்பி இருந்தது. யாழினி தினமும் குடிக்கும் பாலில் அதைச் சொட்டுச் சொட்டாகக் கலக்க  முயற்சி செய்ய வந்திருக்கிறாள். அதை ஏதோ ஒரு இடத்தில் மறைவாக வைக்க இடம் தேடினாள். அவள் கண்கள் சமையலறை முழுதும் சுற்றி வரும் பொழுது ஆர்யன் ஒரு பக்கம் நின்று அவளையே முறைத்து பார்த்துகொண்டு இருந்தான்.

திடீரென்று ஆர்யன் அவளுக்கு முன் வந்து நின்றான்.

மலருக்கு தூக்கி வாரிப்போட்டது. பொறியில் சிக்கி எலி போல எங்கு பார்ப்பது என தெரியாமல் எல்லா இடத்திலும் கண்கள் பதற்றத்தில் துடி, துடித்தது. ஆர்யன் எல்லாம் புரிந்தது போனது. நாம் சந்தேகப்பட்டது சரிதான். இவள் தவறானவள் என்பதை உணர்ந்து கொண்டான்.

“மலர்… இந்த நேரத்துல இங்கே என்ன பண்றீங்க?” ஆர்யனின் குரல் அதிகாரமாகவும், சந்தேகமாகவும் ஒலித்தது.

மலர் திடுக்கிட்டாள். அவள் சாமர்த்தியமாக விஷக் குப்பையைத் தனது சேலைத் தலைப்பிற்குள் மறைத்தாள். “அது… பாப்பாவுக்குத் தண்ணி சூடு பண்ண வந்தேன் சார்,” என்று திக்கித் திக்கிச் சொன்னாள்.

ஆர்யன் அவளை ஒரு நிமிடம் ஊடுருவிப் பார்த்தான். “சரி, சீக்கிரம் முடிச்சிட்டுப் போய் தூங்குங்க,” என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால் அவனது மனம் அமைதியடையவில்லை. அவன் கௌதமுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான்: “மலர்… இவளோட பின்னணியைச் செக் பண்ணு.”

மறுநாள் காலை, கௌதம் பதற்றத்துடன் ஆரியனின் வீட்டிற்கு வந்தான். “ஆர்யன்! நீ நினைச்சது சரிதான். மலரோட அண்ணன் அமைச்சரோட பர்ச்னல் டிரைவரா இருந்தவன். இப்போ அவன் ஜெயில்ல இருக்கான். இவ ஏதோ ஒரு திட்டத்தோட தான் இங்கே வந்திருக்கா!”

ஆர்யன் அதிர்ந்து போனான். அவன் அறைக்குள் ஓடினான். அங்கே யாழினி அந்தப் பாலைக் குடிக்கத் தயாராக இருந்தாள்.

“யாழினி! குடிக்காதே!” என்று கத்தினான் ஆர்யன்.

அவன் ஓடிச் சென்று யாழினியின் கையில் இருந்த கிளாஸைத் தட்டிவிட்டான். பால் தரை எங்கும் சிந்தியது. அதிலிருந்து ஒருவிதமான விசித்திரமான மணம் வீசியது.

யாழினி மிரண்டு போனாள். “ஆர்யன்… என்னாச்சு? ஏன் இப்படிப் பண்றீங்க?”

ஆர்யன் மலரை நோக்கித் திரும்பினான். மலர் தப்பிக்க முயன்றாள், ஆனால் ஆர்யன் அவளது வழியை மறித்தான். “உன் அண்ணனுக்காகப் பழிவாங்கத் துணியுற நீ, ஒரு பச்சைக் குழந்தையையும், ஒரு தாயையும் கொல்லத் துணிஞ்சிட்டயே… நீ எல்லாம் ஒரு பொண்ணா?” என்று ஆவேசமாகக் கேட்டான்.

மலர் தரையில் விழுந்து அழுதாள். “எங்க குடும்பமே தெருவுல நிக்குது சார்… அமைச்சர் தான் எனக்குப் பணம் கொடுத்து இதைச் செய்யச் சொன்னார், இதை செய்யலன்னா, ஜெயில் இருக்குற அண்ணன கடைசி வரைக்கும் வெளியே வரமாட்டான்னு சொல்லி மிரட்டினார் சார்” என்று உண்மையை ஒப்புக்கொண்டாள்.

யாழினி அதிர்ச்சியில் உறைந்து போனாள். “இன்னும் இந்த மனுஷன் அடங்கலையா ஆர்யன்? நாம என்ன பாவம் பண்ணோம்?” என்று விம்மினாள்.

ஆர்யன் அவளை அணைத்துக் கொண்டான். “இனி நாம தற்காப்புல இருக்கக் கூடாது யாழினி. இந்த நச்சுப் பாம்பைத் தலை தூக்க விடாம நசுக்கணும். இதோ இப்போவே கிளம்புறேன்,” என்றான் உறுதியுடன்.

அவன் மலரைப் போலீஸில் ஒப்படைத்தான். ஆனால், ஆர்யனின் மனதில் ஒரு புதிய திட்டம் உருவானது. அமைச்சரைச் சிறைக்குள் வைத்தே சிதைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் சொன்ன வார்த்தை அவரையே சேரட்டும். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page