மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 13
தன் தாயை மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதித்த மாணிக்கத்திற்கு என்ன நடக்கிறது என்பது கொஞ்சமும் விளங்கவில்லை. இத்தனை நாளாய் தூணாய் குடும்பத்தை வழி நடத்திய தன் அம்மாவுக்கு இன்று அப்படி என்னவானது என்றும் புரியவில்லை.
காலையில் நன்றாகப் பார்த்து விட்டுச் சென்றேனே அப்போது ஏதோ யோசனையில் தானே இருந்தார். இப்பொழுது என்ன நடந்திருக்கும், இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் போக வேண்டிய காரணம் தான் என்ன? என்ற பல சிந்தனைகள் அவரின் மனதில் உதித்து நிம்மதியைக் குலைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி யோசனையில் இருக்கும் போதே உள்ளிருந்து வந்த மருத்துவரைக் கண்டவர் வேகமாய் அவரிடம் எழுந்து சென்று,
“டாக்டர், எங்க அம்மாவுக்கு என்னாச்சு? இப்போ எப்படி இருக்காங்க?” என்றான் படபடப்பாக.
“அவங்க இப்போ பரவாயில்லை சார், மருந்து குடுத்திருக்கோம். இன்னும் ஒரு மணி நேரத்துல எழுந்துடுவாங்க… அவங்க மனசை பாதிக்கிற மாறி ஏதோ அதிர்ச்சி தாக்கியிருக்கு. அதுதான் அவங்களோட இந்த நிலைக்குக் காரணம் சார். மே பி அவங்க கண் விழிச்சதுக்கு அப்புறம் உண்மையான காரணம் தெரிய வரலாம். பார்ப்போம் சார், அவங்க நல்லபடியா கண் முழிக்கட்டும்.” என்றபடி அங்கிருந்து சென்றார்.
மாணிக்கத்திற்கு ஒன்றுமே புரியாத நிலை தான் தற்போது. அவன் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட, துருவனும் சகுந்தலாவும் கண்ணாடி வழியாகக் கற்பகநாயகியைப் பார்த்து விட்டு வந்தனர்.
“ஏங்க, என்னாச்சு அத்தைக்கு? நல்லாத்தானே இருந்தாங்க… இப்போ என்னங்க பண்றது? எனக்கு ஒன்னுமே புரியலைங்க…” என்று புலம்பியபடி இருந்தவளைக் கண்டவர்,
“உன்கிட்ட எத்தனை முறை சொன்னேன், கொஞ்சம் பொறுமையா இருன்னு… ஆனா நீ கேட்டியா? உன் விருப்பத்துக்குத் தானே ஆடுன… எந்தக் குடும்பக் கௌரவத்துக்காக அம்மா எல்லாத்தையும் பாத்தாங்களோ இன்னைக்கு அதுவே இல்லைன்னு போனதுல நடந்த அதிர்ச்சி தான் அவங்களை இங்க வரைக்கும் கொண்டு வந்திருக்கு. கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இரு சகுந்தலா. எனக்கும் டென்ஷனை ஏத்தாதே…” என்று கத்திவிட்டார்.
சகுந்தலாவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
அந்த அறையின் வெளியே நடந்து கொண்டிருந்த துருவனுக்குக் கூடக் கொஞ்சம் பதற்றமாகத் தான் இருந்தது.
என்ன நடக்கிறது என்று கொஞ்சமும் புரியவில்லை. ஆனால் அதற்கு யாரிடமும் பதிலில்லை.
மூவரும் கற்பகாநாயகி எழும் நொடிகளுக்காகக் காத்திருந்தனர்.
*
விவேகனுக்கு இங்கிருந்து போகக் கொஞ்சமும் விருப்பமில்லை. பெண்ணவளும் அவனிடம் முகத்தைப் பார்த்து ஒரு வார்த்தைப் பேசவில்லை.
நொடிக்கு நொடி தன்னையே சுற்றி வந்த தன்னுடைய பட்டுவைத் தேடிக் களைத்துத் தான் போனான் ஆடவன்.
இவர்களுக்குள் நடக்கும் நாடகத்தை மற்ற இருவரும் கண்டும் காணாமலும் இருந்து கொண்டனர்.
பிரவீன் அவனைப் போகச் சொல்ல, “அவ வீட்டுக்குப் போனதும் போறேன்.” என்றவனை அதற்கு மேலும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான்.
தன் மனதில் உள்ள காதலை இரு காதல் கிளிகளும் மறைத்து வாழப் பழகியிருந்தன.
‘தான் அத்தனை முறை சொல்லியும் தனக்காக அவன் வரவில்லையே’ என்ற எண்ணமே பெண்ணின் மனதில் வேருன்றிப் போயிருந்தன.
ஆனால் அவள் அறியாதது அவளுக்காக அவன் வரவில்லை தான் ஆனால் அவளுக்காக மட்டும் தான் தன் நண்பனை அந்த இடத்தில் அனுப்பி வைத்தான் என்பது அவள் அறியாதது தான்.
தன் பதவி மறந்து தன் ஆளுமை மறந்து தன்னவளின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தான் ஆண்மகன்.
ஆனால் அவளோ அவனைத் திரும்பியும் பாராது அவனுக்குத் தண்டனை வழங்கிக்கொண்டிருந்தாள்.
அன்று அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட, அவளோ மீண்டும் அந்த வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்க, மற்றவர்களுக்கு அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்றே புரியவில்லை.
அப்பொழுது தான் ஒரு ஆணும் பெண்ணுமாய் இருவர் அங்கே வந்தனர்.
அவர்களைக் கண்டதும் அமுதாவின் விழிகள் தெறித்து விழ, விவேகனும் அருந்ததியும் மட்டும் புரியாத பார்வை பார்த்திருந்தனர்.
அப்போது தான் உள்ளே வந்த பிரவீன் அவர்களைக் கண்டு,
“உங்களை நான் வெளியே தேடிட்டு வந்தா நீங்க இங்கே வந்துட்டீங்களா?” என்று அவர்களிடம் பேசியவன் மற்ற மூவரிடமும் திரும்பி,
“இவங்க தான் என்னோட அப்பா கைலாசநாதன் அம்மா சிவகாமி…” என்றான் பொதுவாய்.
அதில் மற்ற இருவரும் இயல்பாய் சிரிக்க, அமுதாவோ அதிர்ச்சியாய் பிரவீனைப் பார்த்தார்.
அவரின் அதிர்ச்சியைக் கண்டவன், “என்னாச்சு அமுதாம்மா ரொம்பவே அதிர்ச்சி ஆகிட்டீங்களா? இல்லை இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லையா? ஆனா இந்த உண்மை உங்க முதலாளியம்மா காதுக்குப் போய் அவங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க அது தெரியுமா?” என்றான் சிரிப்புடன்.
“தம்பி, அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியுமா?” என்ற அமுதாவின் விழிகளில் கண்ணீர் துளிகள் மினுமினுத்தது.
“எல்லாம் தெரிஞ்சதால தான் என்னைப் பெத்தவங்களுக்கான நியாயத்தை வாங்கிக் குடுக்க வந்தேன்.” என்றான் அழுத்தமாய்.
“பிரவீன், இங்கே என்ன நடக்குது? எனக்கு எதுவும் புரியலை…” என்ற விவேகனைப் பார்த்தவனுக்கு,
“அதை நான் சொல்றேன் விவேகன். என்னோட பேரு கைலாசநாதன். என்னோட அப்பா பேரு ராஜவேலு. என்னோட அம்மா கற்பகநாயகி. இவங்களோட மூத்த பிள்ளை நான்.” என்றார் இயல்பாய்.
மற்ற இருவரும் அதிர்ச்சியாக இருக்க, இது தனக்கு தெரிந்த விடயம் என்பது போல் அமைதியாய் இருந்தது அமுதா மட்டுமே.
விவேகனோ கேள்வியாய் பிரவீனைப் பார்க்க,
“என்ன விவேகா, அதிர்ச்சியா இருக்கா? அவங்க உனக்கு மட்டும் அநியாயம் பண்ணலை… எங்க அப்பாவுக்கும் தான் பண்ணிருக்காங்க…” என்றவன் தன் தந்தையைப் பார்க்க அவரோ கண் அசைக்க அது புரிந்தவன்,
“ராஜவேலு கற்பகநாயகிக்கு ரெண்டு பொண்ணுங்க ஒரு பையன் மட்டும் தான் அப்படிங்கிறது எல்லாருக்கும் தெரிந்த விசயம். ஆனா அவங்களோட இன்னொரு பையன் அதாவது மூத்த பையன் என்னோட அப்பா கைலாசநாதன் தான். ஏன் இவரு அவங்களோட பையன் அப்படிங்கிற அங்கீகாரத்தை அழிச்சிட்டாங்க. அதுக்குக் காரணம் என்னன்னு அமுதாம்மாவுக்கு நல்லாவே தெரியும்.” என்றான் அமுதாவை பார்த்தபடி.
“எனக்குப் புரியலை பிரவீன். தெளிவாச் சொல்லுடா…” என்றான் விவேகன் புரியாமல்.
“இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லத்தான் வந்தேன் விவேகா.” என்றவன் அருந்ததியிடம் திரும்பி,
“பாப்பா, இப்போ நான் சொல்றதைக் கேட்டு நீ அங்கே போகணுமா வேண்டாமான்னு முடிவெடுத்துக்கோ…” என்றவன்,
“அப்பா, அதை நான் சொல்றதை விட நீங்களே சொல்றது தான் சரியா இருக்கும்பா… சொல்றீங்களா?” என்று பிரவீன் கேட்க ஒரு தலையசைப்புடன் தன் கடந்த காலத்தைச் சொல்ல ஆரம்பித்தார் கைலாசநாதன்.
“நீங்க எல்லாம் நினைக்குற மாறி உன் தாத்தா பாட்டிக்கு மூணு பசங்க இல்லை, நாலு பசங்க. அதில் நான் தான் அந்த வீட்டுக்கு முதல் பையன் அதுக்கு அப்புறம் தான் அருந்ததியோட அப்பா, அதுக்கு அப்புறம் தான் பரிமளம், கடைசி தான் உங்க அம்மா வசுந்தரா.
உங்க அம்மாவுக்கு அவங்களோட பெரிய அண்ணனை ரொம்பவே புடிக்கும். ஏன் மாணிக்கத்தை விட இவரைத் தான் அதிகம் பிடிக்கும். வீட்ல கடைசிப் பொண்ணு, எல்லாருக்குமே செல்லம். அதனால அவ என்ன செஞ்சாலும் யாரும் கேட்கமாட்டோம். அதுமட்டும் இல்லாம அவ தப்பா எதுவும் செய்யமாட்டா, ஆனா நியாயம் செய்யணும்னு பார்ப்பா… அது எங்க குடும்பத்துல யாருக்கும் பிடிக்காது.
ஆனாலும் அவ மேல எல்லாருக்குமே பாசம் அதிகம். அதனால பெருசா அவளைக் கண்டிக்க மாட்டாங்க. அதுபோல எனக்குமே மனசுக்குப் பிடிக்கலை அப்படின்னா அதைத் தடுத்து நிறுத்தத் தான் பார்ப்பேன்.
ஆனா மாணிக்கம் அப்படி இல்லை, அப்பா அம்மா என்ன சொன்னாலும் அப்படியே தட்டாம செய்வான். ஆனா அவனுக்கும் சில கெட்டப் பழக்க வழக்கங்கள் இருந்துச்சு. அதுமட்டும் இல்லாம பெண்கள் சகவாசம், குடி இப்படி வீட்ல தெரிஞ்சாலும் அப்பா அம்மா யாரும் எதுவும் சொல்லலை. அவனைக் கண்டிக்கவும் இல்லை. பரிமளம் எப்பவுமே பாசமா இருந்தாலும் சுயநலம் அவளுக்குக் கொஞ்சம் அதிகம். என்ன நடந்தாலும் பெருசா அதைக் கண்டுக்கமாட்டா.
ஆனா உன் அம்மா அப்படி இல்லை. இயல்பிலேயே தைரியமானவ. பிடிவாதம் பிடிச்சு பக்கத்து டவுன்ல இருந்த காலேஜுக்குப் போய்ப் படிச்சா. அதனாலேயே அவளுக்கு முன்னாடி தப்பு நடந்தா அதைக் கண்டும் காணாமலும் போக முடியாது.
மாணிக்கம் அவகிட்ட மட்டும் தான் பயப்படுவான். மத்தவங்க மாறி அவகிட்ட அலட்சியமா இருக்க முடியாது. அவ கேட்குற கேள்விக்குச் சரியான பதில் வராதவரைக்கும் அவ விடமாட்டா.
மாணிக்கம் என்ன தப்பு செஞ்சாலும் அவ முன்னாடி கைகட்டி தான் நிற்பான். அதுக்கு காரணம் பயம் இல்லை. அவன் அவ மேல வச்ச பாசம். எங்க எல்லாரையும் விட அவனுக்கு அவளை ரொம்பவே புடிக்கும்.
அதுக்கு முதல் காரணம் நம்ம குடும்பத்துல யாருகிட்டேயும் இல்லாத துணிச்சல் அவகிட்ட இருந்தது. அந்தத் துணிச்சலும் தைரியமும் அவனுக்கு ரொம்பவே புடிக்கும். அதனால அவ முன்னாடி மட்டும் அமைதியா தான் இருப்பான்.
எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்தது. அந்த நாள் வர வரைக்கும்…” என்றவரின் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது.
அதேநேரம் இங்கே கண் விழித்த கற்பகநாயகியும் தன் மகன் மாணிக்கத்திடம்,
“பண்ணுன பாவத்துக்குத் தண்டனை தரக் காலம் தயாராயிடுச்சு மாணிக்கம். இனி அதை அனுபவிக்க தான் வேணும். இனி எதிலிருந்தும் நம்மால தப்பிக்க முடியாது.” என்று விரக்தியாய் சொன்னவர் தன் கடந்த காலத்தை நோக்கிச் சென்றார் தன் நினைவுகளில்.
அப்படி என்ன தான் நடந்திருக்குமோ? அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
