மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 14
மலையூரின் ராஜவேலு வீட்டின் முன்பு அந்தக் கும்பல் கூடியிருந்தது. அவர்களுக்கு முன்னே கம்பீரமாய் மீசையை முறுக்கியபடி ராஜவேலு நிற்க, அவரின் பின்னே கைலாசநாதனும் மாணிக்கமும் நின்றிருந்தனர்.
“யாரு நீங்க, உங்களுக்கு என்ன வேணும்?” என்ற அதிகார வர்க்கத்தின் ஆளுமையான குரல் அந்த இடத்தில் நிரம்பியிருந்தது.
“சாமி வணக்கமுங்க, நாங்க தெக்கே இருந்து வரோமுங்க. எங்க ஊர்ல மாரி மழை வராம காஞ்சு வறண்ட பூமியா மாறிடுச்சிங்க. குடிக்க குடி தண்ணி இல்லைங்க. இதுல பஞ்சமும் பட்டினியும் தலைவிரிச்சாடுதுங்க. நாங்க நாற்பது குடும்பம் தானுங்க இருக்கோம். இதுல பட்டினியில் எங்க வீட்டுப் பொண்டு பொடுசுங்க நாலைஞ்சி பேரு செத்துட்டாங்க.
இருக்குறவங்களைக் காப்பாத்த நாங்க எங்க பூர்வீக ஊரை விட்டு வந்துட்டோமுங்க. உங்க கழனியில வேலை குடுத்து, தங்குறதுக்கு இந்த ஊர்ல குடிசை போட்டுக் குடுத்தீங்கன்னா கூடப் போதுங்க சாமி… நாங்க எங்க உயிரு இருக்குற வரைக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்போமுங்க…” என்றார் வயதான ஒருவர்.
அதேநேரம் அப்போது தான் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த வசுந்தராவின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழ இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்ததுதலுடன் தன் தந்தை அருகில் சென்று நின்றவள்,
“அப்பா, அவங்களுக்கு தங்குறதுக்கு குடிசையும், நம்ம தோட்டத்துல வேலையும் போட்டுக் குடுங்க.” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அங்கிருந்த மக்கள் அவளைத் தெய்வமாய் பார்க்க, கைலாசமும் தன் தங்கையின் குணத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டவன் தந்தை என்ன சொல்லப் போகிறாரோ என்ற எண்ணத்துடன் பார்த்திருந்தான்.
ஆனால் மாணிக்கத்தின் விழிகளோ அந்தக் கும்பலில் இருந்த பெண்களின் மீதே படிந்திருந்ததால் அங்கே நடந்த பேச்சு வார்த்தையைச் சுத்தமாய் கவனிக்கவில்லை என்பதை அவனின் அலைபாய்ந்த விழிகளே தெரிவித்தது.
அதேபோல் அங்கே நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த கற்பகநாயகியோ தன் கணவரை, “என்னங்க, கொஞ்சம் வந்துட்டு போங்க…” என்று உள்ளிருந்து அழைக்க, அங்கே நின்றவர்களை ஒரு பார்வை பார்த்தவர் தன் மனைவியைத் தேடி உள்ளே சென்றார்.
“என்ன கற்பகம், இப்போ என்ன பண்றது? இந்தச் சின்னக் குட்டி வேற இவங்களுக்கு எல்லாம் செய்யங்கன்னு உத்தரவு தந்துட்டு போறா… இவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு ஒன்னுமே புரியலை.” என்றார் யோசனையாய்.
“ஒன்னும் யோசிக்க வேணாம். அவங்க கேட்டதைச் செய்யுங்க.” என்றார் சிரித்தபடி.
“ஆனா, அதுல நமக்கு நிறைய நட்டமாகுமே கற்பகம்.” என்றார் அப்போதும் யோசனையாய்.
“அதுல எந்த நட்டமும் வராது. இப்போ இதை நீங்கச் செஞ்சா அவங்க எந்த விதமான கேள்வியும் கேட்காம எல்லா வேலையும் செய்வாங்க. அதுவும் நாம குடுக்குறது தான் அவங்களுக்கு சம்பளம். அதனால அவங்களை நம்மளோட கட்டுப்பாட்டுக்குள்ள சுலபமா கொண்டு வந்துடலாம். நம்ம மேல அவங்களுக்கு நன்றியுணர்ச்சியும் அதிகமா இருக்கும். போங்கப் போய் அவங்க என்ன கேட்குறாங்களோ அதைச் செய்யுங்க.” என்று மனைவி மந்திரியாய் உபதேசித்து அனுப்பினார்.
ஆனால் அவருக்குத் தெரியாது இது தான் தன் இரு பிள்ளைகளைத் தங்களிடமிருந்து பிரிக்கப் போகும் முதல் அஸ்திரம் என்று.
மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் ராஜவேலுவும் அங்கே இருந்த மக்களிடம் சென்று அவர்கள் கேட்டதைச் செய்வதாக வாக்குக் கொடுத்தவர் அன்றே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டார்.
அந்த மக்களும் தாங்கள் வந்து கேட்டதும் அனைத்தையும் செய்த அந்தக் குடும்பத்தின் மீது அதிக மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர்.
ராஜவேலு என்ன சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்தனர்.
அதுபோலக் கைலாசநாதனும், வசுந்தராவும் அவர்களுக்கு என்ன தேவை என்று அவ்வப்போது வந்து பார்த்துக் கேட்டுவிட்டுப் போக, அதற்காகவே அவர்களை அந்த மக்கள் ஆராதிக்க துவங்கியிருந்தனர்.
ராஜவேலு கற்பகநாயகிக்கு இருந்த மரியாதையை விடக் கைலாசநாதனுக்கும் வசுந்தராவிற்கும் கிடைத்த மரியாதை தான் அதிகம் இருந்தது.
அதுவே மாணிக்கத்திற்கு ஒரு விதமானப் பொறாமையைத் தோற்றுவித்தது. அந்த இடத்தில் பாசம் மறைந்து துவேஷம் தான் அதிகரித்தது.
அந்தச் சமயத்தில் தான் ஒரு முறை தன் தோப்புகளைச் சுத்தி வந்த மாணிக்கத்தின் கணணில் அவள் விழுந்தாள்.
தோட்டத்தில் உள்ள நெல்வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் கண்களுக்கு, அந்த வெயில் நேரத்தில் பொன்நிற தேகம் தங்கமாய் ஜொலிக்க அவனின் விழிகளில் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற பேராசை தான் மின்னியது.
ஆனால் அது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. அவள் அந்தக் குழுமத்தின் தலைவரின் பெண். அவ்வளவு எளிதில் அவளை நெருங்க முடியாது என்பதை உணர்ந்தவனுக்கு ஆத்திரம் தான் தோன்றியது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கைகளைக் கட்டியாக வேண்டிய சூழ்நிலை தான் அவனின் நிலை.
கைலாசநாதன் அன்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்க அப்போது அழகாய் ஒரு குயில் கானம் இசைத்தது.
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டுக் கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு
அது கேக்…கா…தா?
அத கேட்டுக் கேட்டு
நெஞ்சம் பா…டா…தா?
பாடும் பாட்டு
அது கேக்…கா…தா?
அத கேட்டுக் கேட்டு
நெஞ்சம் பா…டா…தா?
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டுக் கட்டி
பாடுதடி சில்லு வண்டு…
அந்தக் குயிலின் கானத்தில் தன்னை மறந்தவன் அந்தக் குரல் வந்த திசை நோக்கிச் சென்றான்.
அங்கே மற்ற பெண்களுடன் தேவதையாய் ஒரு இளம்பெண் பாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்தின் கரையில் மரத்தில் தூளி கட்டி தொங்கவிடப்பட்டிருந்த குழந்தைகளுக்கானதாய் அவளின் பாடல் இருந்தது.
அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவனின் மனம் உந்த அவளையே பார்த்திருந்தவனின் விழிகளுக்கு அவள் தேவதையாய் தெரிந்தாள்.
அச்சு வெல்லம்
பச்சரிசி
கட்டி வச்சதா…ரோ…?
அத்தை மகன்
சுத்தி வர
பொட்டு வச்சதா…ரோ…?
அச்ச வெல்லம்
பச்சரிசி
கட்டி வச்சதா…ரோ…?
அத்தை மகன்
சுத்தி வர
பொட்டு வச்சதா…ரோ…?
ஒத்தையிலே நிக்கையிலே
தொட்டது யாரடியோ…?
தொட்ட கைச்சுட்டதை போல விட்டது யாரடியோ…?
ரோட்டோரம் ரோசாப் பூ
ஆத்தோரம் தாழம் பூ
எல்லோரும் கொண்டாடும் பெண் பூ…
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டுக் கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு
அது கேக்…கா…தா?
அத கேட்டுக் கேட்டு
நெஞ்சம் பா…டா…தா?
ஏனோ அந்தப் பாடலோடு அவனின் மனமும் சேர்ந்தே பிணைக்கப்பட்டது போல் இருந்தது.
அப்போதே அப்பெண்ணவள் அவனின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள்.
தனிமையில் அவளின் நினைவுகளில் அதிகமாய் தொலைந்தவனின் அதரங்களில் அவனறியாமல் புன்னகை துளிர்க்க, அது அவ்வப்போது தன் தமையனையே கண்டு கொண்டிருந்த வசுந்தராவின் கண்களில் விழ அன்று பார்த்துத் தங்கையும் தமையனும் ஒன்றாகவே தோப்புக்குள் நடக்க அடிக்கடி தன் தமையனையே பார்த்துக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.
அதைக் கண்ட கைலாசநாதனோ, “என்னாச்சுடா வசு குட்டி… அண்ணனை இப்படி பாத்துட்டு வர?” என்றான் கேள்வியாய்.
“இல்ல… என் அண்ணனோட முகத்துல இப்பல்லாம் புதுசா ஒரு தேஜஸ் தெரியுதே… அது தான் என்னன்னு பாத்துட்டு வந்தேன். ஒருவேளை ஏதாவது மோகினி வந்துடுச்சோ?” என்றாள் கிண்டலாய்.
வசுந்தரா இரண்டு அண்ணன்களிடமும் பல நேரங்களில் கிண்டலாய் பேசியது உண்டு. அவர்களுக்கும் தங்கைமேல் உள்ள பாசம் அதை ரசிக்கத்தான் வைத்திருந்தது.
இன்றும் தன் தங்கையின் கிண்டலை ரசித்து வந்தவனின் பார்வையில் விழுந்தாள் அவனின் தேவதை.
அவளைக் கண்டவனின் கண்கள் பிரகாசத்தில் மின்ன அதைக் கண்ட தங்கையின் பார்வையும் அண்ணனின் பார்வை இருந்த திசை நோக்கிச் சென்றது.
அங்கே இருந்த பெண்ணைக் கண்டவளுக்கு,
“ஏண்ணா, அந்தப் பொண்ணு அந்தக் கூட்டத்தோட தலைவரோட பொண்ணு தானே?” என்றவளின் கேள்விக்கு மெல்ல தலையசைத்தவனின் பார்வை அவளிடமிருந்து கொஞ்சமும் விலகவில்லை.
“அண்ணா இந்தாங்க…” என்றபடி தனது ஷாலை எடுத்துத் தன் தமையனின் முன்னே நீட்டியவளைக் கேள்வியாய் பார்த்தவன்,
“இல்லைன்னா கீழே தண்ணியா போகுது, அதுதான் கொஞ்சம் துடைச்சிக்கோங்கன்னு சொன்னேன்.” என்ற தங்கையின் நக்கலில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் பொய்யாய் முறைத்தான்.
அதைக் கண்டு மெல்லச் சிரித்தவள், “சரி விடுங்க, அந்தப் பொண்ணை தான் உங்களுக்குப் பிடிச்சிருக்கு இல்ல, நேர்ல போய்ப் பேசலாம் இல்ல?” என்றாள் கேள்வியாய்.
“இல்ல வசு, அது தப்பு. ஒரு வயசு பொண்ணுகிட்ட அப்படிப் போய்ப் பேசக்கூடாதும்மா. அதுவும் அவங்க நம்மளோட பாதுகாப்புல இருக்காங்க.” என்றவனின் பதிலில் மெல்லிய கர்வம் கொண்டாள் நங்கையவள்.
இவனைப் போன்ற ஒருவன் தன் தமையன் என்று சொல்வதில் பெண்ணாய் பெருமை கொண்டாள் தங்கையானவள்.
“சரி, எப்படித்தான் உன் காதலை சொல்லப்போற?” என்ற தங்கையின் கேள்விக்கு,
“தெரியலை, நாங்க சேரணுங்கிற விதி இருந்தா சேருவோம். பாத்துக்கலாம் விடும்மா.” என்றவனைப் பார்த்தவளுக்கு எப்படியேனும் இவனின் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்ற உறுதி அவளின் மனதில் வந்து போனது.
“சரி அண்ணா, அவங்க பேரு என்ன?” என்றவளின் கேள்விக்குத் தெரியவில்லை என்று தலையாட்டினான்.
“என்ன அண்ணா சொல்ற? இத்தனை நாளுல அவங்க பேரு கூடக் கேட்டுக்கலையா நீ?” என்ற தங்கையின் கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தவனின் மேல் கோபம் தான் வந்தது.
“என்ன விதமான காதல் இது?” என்றவளுக்கு விடை தான் தெரியவில்லை.
ஒரு முடிவுடன் நிமிர்ந்தவள், “சரி அண்ணா, நீ போ. நான் போய் அண்ணிகிட்ட பேசிட்டு வரேன்.” என்றபடி அவளைத் தேடிப் போனாள் கைலாசம் தடுக்க தடுக்க.
“உன் பேரு என்ன?” என்று அதிகாரமாய் விழுந்த கேள்விக்கு அழுகையுடனே,
“அமுதா…” என்று பதிலளித்தாள் அவள்.
அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
