அலை கடல் பெண்ணவள்
அலை 13
கிழக்குக் காற்றால் குவிந்த மணல் திட்டுகளின் மேல் காலை ஒளி மெதுவாகப் பரவியது. தாழைப்பாக்கத்தின் குழந்தைகளும், பெண்களும் கடலிலும் கரையிலும் தங்கள் உறவினர்களுடன் எப்போதும் சேர்ந்தே விளையாடுவர்கள்.
பாக்கத்தின் ஒரு பகுதியில் பச்சைப் புன்னை மரங்கள் உயர்ந்து நின்றன. அந்த மரங்களின் வளைந்த கிளைகளிலும், ஆழமான வேர்களிலும் சேர்ப்பான் பருவப் பெண்களும், சிறார்களும் ஊஞ்சல் ஆடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். மெதுவாகக் கைகளைப் பிடித்துக் கிளைகளின் வளைந்த வேர்களைப் பயன்படுத்தி ஊஞ்சல் ஆடி மணலில் விழுந்தனர். இதைப் பார்த்த சிறார்கள் கொல்லென, “அக்கா, நீ கீழே விழுந்துட்ட” எனச் சிரித்துக் கொண்டும், ஏளனம் செய்தும், ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.
சில சிறார்கள் அவர்களின் கைக்கு எட்டிய தொலைவில் மேலே தொங்கிய வேர் ஊஞ்சலில் சிரித்து ஆடினார்கள். ஒரு சிறுமி கிளையிலிருந்து மேலே தள்ளிக் குமிழ்ந்ததும், வேர்கள் மெதுவாக அசைந்தன. அலைபோல் அசையும் வேர்கள், ஊஞ்சலின் திசையை மாற்றின.
காற்றின் சலசலப்பும், கடல் மணலும், புன்னை மரத்தின் இலை சலசலப்பும் சேர்ந்து விஷ் விஷ் என ஒலித்தது.
குவளை கடற்கரையிலிருந்து எழுந்து மெதுவாக நடக்க முயன்றாள். அந்த நேரம், மணலில் புதிய பாதச்சுவடு தோன்றியது.
அவள் வரைந்த வட்டங்களைத் தாண்டி ஒரு தடம் வந்தது. இதயம் படபடப்பாகத் துடித்தது, குவளை விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன.
நிமிர்ந்து பார்க்கத் தயக்கம், பார்க்காமல் நின்றால் அருகாமை நீளுமே! நிமிர்ந்து பார்த்தால் போய்விடுவானோ?
“வட்டம் சரியாக வந்ததுதானே?” என்ற குரல் பின்னாலிருந்து மெல்ல ஒலித்தது.
அவள் மெதுவாகத் திரும்பினாள். கடற்காற்றில் கூந்தல் சிதறி இருந்தவளின் எழில் அழகில் சொக்கிப் போய், அவளின் சோகமான முகத்தைக் கண்டு சிரிப்பை மறைக்க முயன்றான் சிங்கன்.
“நீ இன்னும் வட்டக்குறி பார்க்கிறாயா? யாருக்காகப் பார்க்கிறாய்? உன் அத்தானுக்காகவா? பாவம் துகிலன், நேற்று நீ நாட்டியத்திற்கு வரவில்லை என்ற கவலையுடன் மது குடித்த மந்தி போல் சுற்றி திரிகிறான் குவளை.” என்றான்.
அதுவரை ஏதோ நினைவில் காதலில் இருந்தவளுக்குக் கோபம் தலைக்கேறியது.
“ஓ… அப்படியா! அதைச் சொல்லத்தான் நீ கொற்கையிலிருநது இங்கு வந்தாயா? உனக்கு வேறு வேலை இல்லையா அரண்மனையில்?” என்றாள் சீறலுடன்.
சிங்கன் கீழே குனிந்து மணலில் இன்னொரு வட்டம் வரைந்தான். அதன் முனையை அவள் வரைந்த வட்டத்துடன் இணைத்தான். “இப்போது முழுக் கூடல்.” என்றான்.
“ஹ்ம்ம்… கவலைப்படாதே, உன் அத்தான் உன்னைப் பார்க்க வருவான்.” என்றான். அலை வந்து எல்லா வட்டங்களையும் அழித்தது.
பார்ததுக் கொண்டிருந்த குவளைக்கு ஆத்திரம் தலைக்கேறியது. “யோவ்! என்னய்யா பண்ணுன? எதுக்கு என்னோட வட்டத்தை இணைச்ச, உனக்குத் தெரியுமா நான் எதுக்கு வரைஞ்சேன்னு?” என்று சிங்கனின் மேல் பாய்ந்து கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தாள்.
வேகமாகப் பெரிய அலை ஒன்று வந்து இவர்கள் இருவரையும் சேர்த்து வாரிக் கடலினுள் இழுத்து சென்றது. ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் இருவரும் சுழன்றாரகள். அடுத்த நிமிடம் அலை இருவரையும் தூக்கி வீசியது.
குவளை எழுந்து திரும்பிப் பார்த்தாள். சிங்கன் கரையில் கிடந்தான்.
“யோவ்! எழுந்திரு. இது என்ன உன்னோட வீடா? இங்கே வந்து தூங்குற எந்திரிய்யா” என்றாள் சப்தமாக.
சிங்கனிடம் ஒரு துளி அசைவு இல்லை. “என்னடா இது, இவனுக்கு நீச்சல் தெரியாது போல, ஊருக்குதான் பெரிய காவல் தலைவன், நீச்சல் கூடத் தெரியாது போல” என்றவள் அவன்மேல் கையை வைத்துக் கன்னத்தில் தட்டினாள். அசைவே இல்லை. “சரிதான், வீட்டுல குடிக்க வேண்டிய தண்ணிக்கு பதிலா உப்புத் தண்ணியைக் குடிச்சிட்டான் போல” என்று சொல்லிக் கொண்டே அவன் வயிற்றில் உள்ள தண்ணீரை எடுக்கக் கைகளை வைத்தாள். கைகளின் தூரம் சிறியதாக இருந்தது.
சுற்றிலும் பார்த்தாள். யாருமே இல்லை. வெயில் மணலில் இவர்கள் இருவர் மட்டுமே. “சரி போ, யாரும் இல்லை” என்று சொல்லிக் கொண்டே அவன் இடுப்பு பகுதியில் உட்கார்ந்து ஒரு குதி குதித்தாள். தண்ணீர் வாய் வழியே “சளக் அப்பக்” என்ற சப்தத்துடன் வெளிவந்தது.
குவளை கைகளைச் சிறிய குழந்தைபோல் தட்டிக் கொண்டே மறுபடியும் குதித்தாள். தண்ணீர் வந்தது அசைவே இல்லை.
“ஐயோ, இது என்ன வம்பாகப் போச்சு? இவனைக் காப்பாற்ற வேண்டுமே” என்ற பயத்துடன் சிங்கனின் கரிய பெரிய மீசைகளுக்கிடையே தெரியும் இதழ்களின் மேல் இதழ்களை வைத்துத் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்தாள்.
குவளைக்கு அப்போது மேனி முழுவதும் எதுவோ ஊறியது போல இருந்தது. உறிஞ்ச ஆரம்பித்தவளின் வதனத்தை சிங்கன் ரசித்துக்கொண்டிருந்தான். காரியமே கண்ணாக இருந்தவள் சட்டென அவனின் கண்களைக் கண்டாள் “அப்பாடா… இவனுக்கு உயிர் திரும்பி வந்துருச்சு” என்ற பெருமூச்சுடன், “யோவ், எமன்கிட்ட போன உயிரை உனக்கே திருப்பிக் கொடுத்துட்டேன்.” என்று கலகலவெனச் சிரித்து சிறிய குழந்தைபோல் கைகளைத் தட்டிக் குதித்தாள்.
“ஐயோ அம்மா…” என்றான் கதறலுடன்.
குவளை, “எதுக்கு கத்துற, அதன் நீ உயிரோடு இருக்கிறாயே?” என்றாள்.
“அம்மா தாயே, நீ குதி விளையாடு ஆனா இப்படி குதித்தாய் என்றால் பின்னால் உனக்குத் தான் பெரும் நஷ்டம்.” என்றான்.
“ஏன்… ஏன் எனக்கு எதுக்கு நஷ்டம்?” என்றாள்.
சிங்கன், “என் வயிற்றின் மீது ஏறி இத்தனை குதி குதித்தாள் என்னவாகும்?” என்றான்.
அப்போதுதான் குவளைக்கு அவன்மீது அதுவும் எந்த இடத்தில் தான் உட்கார்ந்து இருக்கிறோம் என்ற நினைவு வந்தவுடன் பளீரென வெட்கம் தாங்காமல் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு அந்த நிலையிலேயே மார்பில் படுத்து விட்டாள்.
சிங்கனுக்கு காதல் இன்பப்பெருக்கு எடுத்து ஓடியது. ஆண்மையின் கர்வம் காதலால் பெருகியது. குவளையை இறுக அணைத்துக் கொண்டே,
“குவளை, உன் அத்தான் மது உண்ட மந்தி அல்ல, நான்தான்… மது அல்ல குவளை மதுத்தேன் குடித்த அந்த மந்தி நான் தான்…” என்றான்.
அப்போது அலை ஒன்று வந்து படுத்துக் கொண்டிருந்த இருவர்மீது நீரலைகளை ‘ஹோவ்’ என்ற சப்தத்துடன் வீசிச் சென்றது.
சிங்கன் குவளையை நிமிர்த்தித் தனது முதல் காதல் முத்திரையை ஆழமாகப் பதித்தான். இவர்களின் காதல் சங்கமத்தை அலைகள் ரசித்துப் பார்த்தன.
அந்த நேரம், “ஓ… ஓ… ஓ…” தூரத்தில் படகு போகும்போது பாடும் பாடல் சப்தம் கேட்டது. அந்தப் பாடலின் சப்தம் இருவரின் நிலையைக் கலைத்தது.
குவளை வேகமாக எழுந்து சிரித்துக் கொண்டே ஓடினாள். சிங்கன் பெருமையுடன் எழுந்து அவள் மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தான்.
வீனஸும், துகிலனும் மதிய வெயிலில் பாக்கம் வந்து சேர்ந்தனர். தூரத்துக் கடற்கறையில் சிங்கன் நிற்பதைப் பார்த்த துகிலன் வீனஸிடம், “அதோ அங்கே நிற்கிறான் சிங்கன்.” என்றான்.
வீனஸும் பார்த்தான்.
துகிலன், “எதற்காக இவர் உச்சி வெயிலில் துறைமுகத்தில் நிற்காமல் இங்கே நிற்கிறார்?” என்றான்.
வீனஸும், “ஆம், ஏன்?” என்றான்.
“அதுதான் தெரியவில்லை. ஒரு பெண் வேறு ஓடினாள்.” என்றான் துகிலன்.
ஆ… வென வாயைப் பிளந்த வீனஸ், “நானும் நீயும் ஒன்றாகத் தானே வந்தோம் துகிலா, நான் பார்க்கவில்லையே?” என்றான்.
துகிலன் சிரித்துக்கொண்டே, “ஒரு கண்ணசைவுப் பொழுதில் கடந்து விட்டது, நீங்கள் தவறவிட்டீர்கள் நான் தவறவிடவில்லை.” என்றான்.
“சரி வாருங்கள், எனக்கு வயிற்றுப் பசி உயிர் போகிறது முடியவில்லை. நான் சீக்கிரமாக உணவு அருந்தவில்லை என்றால் இந்தக் கடலில் உள்ள எல்லா மீன்களையும் உயிருடன் தின்றுவிடுவேன். அவரிடம் போவோம் வாருங்கள்.” என்றான்.
“யாருக்குக் கிடைக்கும்? என் மாமா பெண் சமைத்து விட்டுக் காத்து இருப்பாள். இதோ கைக்கு எட்டுகிறது வாய்க்குத் தான் இன்னும் எட்டவில்லை.” என்று புலம்பிக் கொண்டே சிங்கனிடம் வந்தனர்.
சிங்கன் இருவரையும் பார்த்து, “என்ன இருவரும் இங்கே? நான் துறைமுகம்தானே வரச் சொன்னேன்.” என்றான்.
துகிலன், “ஓ… எங்களை அங்கே வரச் சொல்லிவிட்டு நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள், அலைகளை எண்ணுகிறீர்களா?” என்றான்.
சிங்கன் சிறிது தடுமாறிவிட்டு, “ஆமாம் ஆமாம், அலைகளை எண்ணுகிறேன்.” என்று உளறினான்.
அவனின் முகமாற்றத்தைக் கண்ட துகிலன், “அது நமது அரசாங்கப் பணியில் இல்லையே? ஒருவேளை வேந்தனிடமிருந்து வந்த கட்டளையா ஐயா, அதற்காகத்தான் எங்களையும் வரச் சொன்னீர்களோ? இதுவரை எத்தனை அலைகள் வந்து இருக்கிறது உங்களின் எண்ணிக்கையில்?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவனைப் பார்த்த சிங்கன் ‘நேற்று நான் செய்த சிறிய தவறுக்கு இப்படிக் கேள்விகளைக் கேட்டுத் தண்டனை கொடுக்கிறானே இந்தப் புத்திசாலி, இதோ சற்று நேரத்திற்கு முன் இருந்த காமக்களிப்பையே தன் பேச்சினால் மறக்கடித்து விட்டானே இவன்’ என்று நினைத்தவனை,
மீண்டும் துகிலன், “ஐயா, நீங்கள் சொல்லும் இந்தப் பணிகளைக் கவனிப்பேன். ஆனால் நான் கொடூரப் பசியில் இருக்கிறேன். காந்தாரி கொடுத்த பழையக் கூழை உதாசீனப்படுத்திவிட்டு என் மாமன் பெண்ணின் கைமணத்தை ருசிபார்த்து விட்டு வந்து என் பணியைச் செவ்வனே செய்வேன் இல்லையென்றால் நாளைக் கடலில் மீன்களைப் பிடிக்க முடியாது. என் வயிற்று கடலில் தான் மீன்களைப் பிடிக்க முடியும், பார்த்துக் கொள்ளுங்கள்.” என்றவனின் பேச்சைக் கேட்ட வீனஸ் வயிற்றை பிடித்துக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிங்கன் மாமா பெண் என்றவுடனே மற்றவை அனைத்தும் கேட்க மறந்து விட்டான்.
‘ஆஹா! குவளையை மீண்டுமா பார்க்கப் போகிறோம்’ என்ற குதூகலம் வந்தது. வெட்கத்துடன், “போகலாமா துகிலா?” என்றான்.
துகிலன், “சிங்கா, எங்கே போகலாம்?” என்றான்.
சிங்கன், “உன் மாமா பெண் வீட்டிற்கு” என்றான்.
“ஆமா, நான்தானே என் மாமா பெண் வீட்டிற்குப் போகிறேன் என்றேன். நீங்கள் எதற்கு?” என்ற கேள்வியில் சிங்கன் சற்று தெளிந்து,
“அது ஒன்றுமில்லை வீனஸிற்கு தாழைப்பாக்கத்தை காட்டிவிட்டு உன் மாமா பெண்ணையும் காட்டலாமே என்று கூறினேன்” என்றான்.
துகிலன், “தாழைப்பாக்கத்திற்கு கூடச் செல்லலாம் சரி, ஆனால் என் மாமா பெண்ணை எதற்கு வீனஸிற்கு காட்ட வேண்டும்?” என்றான்.
சிங்கனுக்கு ‘ஐயோ எக்குத் தப்பாக மாட்டிக்கொள்கிறேனே, என்ன சொல்வது?’ என்று முழித்தான்.
துகிலன், “நீங்கள் இங்கே நின்றபோது ஒரு மோகினி ஓடியது.” என்றவுடன்,
சிங்கன், “என்ன?” என்றான் பெரிதாக.
‘இவனின் கண்ணில் பட்டு விட்டாளா? போச்சு போச்சு… சரி வேறு வழி இல்லை சரணாகதிதான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவனை,
“மோகினி உங்களை அடித்து விட்டது போல் எனக்குத் தெரிகிறது.” என்றான்.
“உஷ்ஷ்…ஹப்பா… நீ பார்த்தாயா துகிலா?” என்றான்.
“ஆமாம், ஒரு நொடியில் அது மறைந்து விட்டது.” என்றான்.
அலை வருடும்…
