அலை 15
குவளை கண்களை உருட்டி வெட்கப்பட்டுக் கொண்டே, “பேசாமல் உணவருந்துங்கள்.” என்றாள்.
வீனஸ் மீண்டும் ஒரு கவளத்தை எடுத்து இம்முறை அவசரம் இல்லாமல் மெதுவாக உணவருந்திக் கொண்டே, “சிங்கா, நான் வேண்டும் என்றால் வெளியே போகவா?” என்றான்.
சிங்கன், “வேண்டாம் வேண்டாம்…” என்றான் வெட்கத்துடன்.
வீனஸிற்கு மயூரியின் நினைவு வந்தது.
***
பனித்துளி நடுங்கும் புலரி நேரம், இன்னும் முழுதாய் பிறக்கவில்லை விடியல். வானத்தின் மங்கல நீலம் குளத்தின் மேல் கரைந்திருந்தது. நீரின் முகம் அசையாத கண்ணாடிபோல இருந்த குளத்தில் மேகத் துண்டுகளும், மங்கும் நட்சத்திர ஒளியும் மெதுவாக மிதந்தன.
குளத்தின் ஓரம் பசும்புல் நுனிகளில் வாடைக் காற்றின் பனித்துளிகள் வெள்ளி மணியாகத் தொங்கின. காற்று வீசாததால் அவை விழவும் தயங்கின. அந்த அமைதியின் நடுவில் குளத்திலிருந்த எண்ணிலடங்கா நீலக்குவளை மலர்கள்
நீர்மேல் பிறந்த கதவுகள்போலத் திறந்திருந்தன.
கருநீல இதழ் மடல்கள் விடியலின் ஒளியை உள்ளே குடித்துக் கொண்டு, மடல்களின் நுனிகளில் பனித்துளியை ஆபரணமாக அணிந்திருந்தது. தண்டுகள் நீருக்குள் மறைந்து மலர் மட்டும் வெளிச்சத்தை நோக்கி உயர்ந்து நின்றது.
அப்போது குளத்து மீன் ஒன்று மேலே வந்து மலரின் நிழலைத் தொட்டுவிட்டு மீண்டும் ஆழம்வரை சென்றது. மீனின் இந்தத் தொடுகையால் அலைகள் வளையம் வளையமாகப் பரவி நீலக்குவளை மலர் மெதுவாக ஆடியது.
அந்தக் குளம் பார்க்கும் கண்களுக்கு உற்சாகத்தையும் காதல் கொண்ட உள்ளங்களுக்குக் களிப்பையும் கொடுக்கும்.
மயூரி மெதுவாகக் கண்களைத் திறந்தாள். பஞ்சணையின் மென்மை கூட அவளை உறுத்தியதால் தூக்கம் அவளைத் தழுவவே இல்லை. இரவு நாட்டியத்தின் சுவடு இன்னும் அங்கேயே இருந்தது. மணத்தூபம், மலர்த்தூள், சலங்கையின் மெல்லிய ஒலியின் நினைவு அனைத்தும் வந்தது.
மயூரி தனியாக அமர்ந்திருந்தாள். காலில் சலங்கை இல்லை. ஆனால் இதயத்தில் இன்னும் ஓசை நிற்கவே இல்லை. அவள் கால்விரல்கள் அவளை அறியாமலே தரையில் கோடு இழுத்தன.
இதைப் பார்த்துக் கொண்டே வந்த அம்பை, “மயூரி! வா, குளக்கரைக்குச் சென்று கூடல் இழைக்கலாம்.” என்றாள். மயூரியும், “ஆம், செல்ல வேண்டும்.” என்று எழுந்தாள்.
மயூரி, அம்பை, பணிப்பெண்கள் எல்லோரும் வீட்டின் பின்புறம் உள்ள இருபது பெரிய படிக்கட்டுகளுடன் கூடிய குளத்தை நோக்கிச் சென்றார்கள்.
வீட்டின் பின்புறம் பரந்த அமைதியில் அந்தக் குளம் விரிந்திருந்தது. அது சாதாரண குளம் அல்ல கல்லால் கட்டப்பட்டு இருபது பெரிய படிக்கட்டுகள் இறங்கும்
ஆழ்ந்த நீர்த் தொட்டி. ஒவ்வொரு படியும் அகலமாக, காலம் கடந்து மெருகேறிய கற்களுடன் பளபளத்தது.
காலைப் பனியால் சில படிகள் ஈரமாக இருந்தன. மேல்படிகளில் சூரிய ஒளி தங்க நிறம் பூசியது. கீழ்படிகளில் நீல நிழல் தங்கி இருந்தது. காலை வெப்பம் தொடங்கிய மாற்றத்தால் குளத்தின் நீர் உள்ளே அசையாத பச்சை நீலமாகவும், அதில் வானம் பாதி, மர நிழல் பாதியாகவும், இருபுறமும் தாழை, புன்னை, குருந்த மரங்கள் கிளைகளை நீட்டி நீரைத் தொட்டு வளர்ந்திருந்தன. மரத்திலிருந்து சில இலைகள் விழுந்து நீர்மேல் மெதுவாகச் சுற்றின.
அந்த நேரம் மயூரி மேல்படியில் நின்றாள். அவள் பின்னால் அம்பை, கைகளில் கூளங்களுடன் இரண்டு பணிப்பெண்களுடன் வந்தாள்.
அம்பைச் சிரித்தாள். “இவ்வளவு பெரிய குளம் இருந்தும் ஒவ்வொரு காலையிலும் இது புதியதாகத் தோன்றுகிறது இல்லை மயூரி?” என்றாள்.
மயூரி, “ஆமாம்” என்று தலையசைத்து மெதுவாக இறங்கினாள்.
ஒவ்வொரு படியும் நீரை நோக்கிச் செல்லும் ஒரு அமைதி போல இருந்தது. பத்தாவது படியில் குளிர் தென்றலாகவும், பதினைந்தாவது படியில் நீர் மணம் போலவும், இருபதாம் படியைத் தொட்டவுடன் குளிர்ந்த நீர் மயூரியின் பாதங்களைச் சுற்றியது. குளம் அசைந்தது.
அவள் சிறிது நடுங்கினாள். ஆனால் முகத்தில் மென்மையான அமைதி. அம்பை மேல்படியிலிருந்து கூடையை நீட்டினாள். குளத்தின் நீர்மேல் நீலப்புள்ளிகள் போலப் பரவியிருந்த மலர்களின் பக்கம் கை நீட்டி, “மயூரி, அதோ நடுக்குளத்தில்தான் பெரிய குவளை மலர்ந்திருக்கிறது. அதைக் கொய்ய வேண்டும்.”
நீலக்குவளை மலர்கள் சில முழுதாய் திறந்தும், இன்னும் சில பூக்கள் விழி திறக்கக் காத்துக் கொண்டிருந்தன.
அம்பையும், மயூரியும் பணிப்பெண்கள் பக்கமாக இறங்கி நீரை அசைக்காமல் நீந்தினர். அலை எழுந்தால் இதழ்கள் நசுங்கும். அது அவர்களுக்குத் தெரிந்த வேலைதான்.
மயூரி ஒரு மலரருகே நின்றாள். அந்த மலரை உடனே பறிக்கவில்லை. முதலில் விரலால் நீரைத் தழுவினாள். ‘மலரை அழைத்துப் பறிக்கணும்’ என்ற மார்கழியின் சொல் நினைவில் எழுந்தது. தண்டை மெதுவாகத் தடவினாள். சிறு திருப்பில் மலர் அவள் கையில் வந்து அமர்ந்தது. அந்த நீல நிறம் அவள் விரல்களுக்கு நடுவே ஒளிந்தது.
அம்பைச் சிரித்தாள்.
“கோவிலுக்குப் போகும் மாலைதானே? இல்லை…” என்று இழுத்துக் கொண்டே மயூரியை மெதுவாகப் பார்த்தாள்.
“ஆ…ஆமாம். ஆனால் எல்லா மாலையும் ஒரே தெய்வத்துக்குப் போகாது தானே அம்பை?” என்றாள்.
அம்பைப் புருவம் உயர்த்தினாள்.
“அப்படியென்றால் யாருக்குப் போகும்?” என்றாள்.
மயூரி பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் பறித்த மலர்கள் அவளைப் பார்த்துக் கேட்டது ‘நான் யாருக்கு என்று?’
அம்பைக் கூடை ஏந்தி முன்னால் நடந்தாள். மயூரி நீரில் மெதுவாக நீந்திச் சென்று மலர் கொய்யத் தொடங்கினாள்.
கோவிலுக்குப் பெரிய மாலை வேண்டுமென்று சொன்னார்கள்.” என்றாள் அம்பை.
“அதற்குப் போதுமா இவ்வளவு?” என்று கேட்டு மயூரி சிரித்தாள்.
“கோவிலுக்கு மட்டும் அல்ல, இன்னொரு மாலையும் இழைக்கணும்.”
அம்பைச் சிரித்தபடி கண்களைச் சுருக்கினாள். கோவில் அர்ச்சனைக்காக நாற்பத்து எட்டு குவளை மாலை இழைக்கப் பதினாறு முழு மலர்களை அவர்கள் எண்ணிக்கையோடு கொய்தனர்.
குறி பார்க்க மயூரி தனியாக வைத்தது ஒரு மலர். மொத்தம் அறுபத்து ஐந்து குவளை மலர்கள். கூடை நிரம்பியதும் அம்பைச் சொன்னாள்.
“குளம் பாதியாகிப் போயிற்று. ஆனால் யாரோ ஒருவர் மனது மட்டும் இப்போ தான் நிரம்ப ஆரம்பித்திருக்கிறது.”
குளத்தின் பெரிய படிக்கட்டின் நடுப்பகுதியில் அவர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர். ஈரத்தன்மை இன்னும் கல்லில் இருந்தது. மயூரி தன் மடியில் நீளமான நார் நூலை நீட்டி வைத்தாள்.
அம்பை மெதுவாகக் கற்றுக்கொடுத்தாள். “மலரைக் குத்தாதே, தண்டைப் பேச வைத்து உள்ளே கொண்டு வா, அப்போதுதான் மாலை நீளும்.”
மயூரி ஒரு குவளையை எடுத்தாள். அதன் நீல இதழ்கள் விரல்களுக்கு நடுவே குளிராகத் தொட்டன. நூலில் நுழைத்தாள், சிறிய முடிச்சுப் போட்டாள். முதலில் மலர் பிறகு முடிச்சு பிறகு மலர் முடிச்சிட்டாள்.
அம்பை மயூரியிடம், “மாலை இவ்வளவு நீளமாகக் கோவிலுக்கா, இல்லை நாதனின் கழுத்திற்கா?” என்றாள்.
மயூரி தலைகுனிந்து சிரித்துக் கொண்டே, “கோவிலுக்குத்தான்.” என்றாள். ஆனால் முடிச்சுப் போட்ட விரல்கள் வேகமாயின.
“அப்படியென்றால் ஏன் ஒவ்வொரு மலரையும் பார்த்துச் சிரிக்கிறாய்?” என்றாள்.
மயூரி பதில் சொல்லவில்லை.
அம்பை ஒரு குவளை இதழை அவள் நாசியருகே கொண்டு வந்து நீட்டினாள்.
“இது நீர் வாசனை இல்லை நினைவு வாசனை!” என்றாள் காதருகே.
அந்த நேரம் குளத்திலிருந்து ஒரு மீன் துள்ளி விழுந்தது. தண்ணீர் சிதறியது. அம்பைச் சிரித்துக் கொண்டே, “மயூரி, பார் குளத்திற்கே ரகசியம் தெரிந்திருக்கிறது.”
மாலை மெதுவாக நீள்ந்தது அதில் குவளை மட்டும் இல்லை… காத்திருப்பு, வெட்கம், சொல்லாத காதல் மூன்றும் பின்னியிருந்தது.
குளக்கரையின் அமைதி இன்னும் கலைக்கப்படவில்லை. குவளை மலர்கள் மாலையாகிக் குவிந்திருந்தாலும், ஒரு மலரை மட்டும் மயூரி தனியாகப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
அவள் அதை மடியில் வைத்தாள். அம்பைக்குத் தெரியாமல் ஒரு இதழை மெதுவாகப் பறித்தாள்.
“வருவார்…”
அடுத்த இதழ்
“தாமதிப்பார்…”
மூன்றாவது
“நினைப்பார்…”
அவள் குரல் வெளியில் கேட்கவில்லை. உதடு மட்டும் அசைந்தது. ஒவ்வொரு இதழும் பறிக்கப்படும்போது இதயத்தின் துடிப்பு கூடிக் கொண்டே போனது.
பக்கத்திலிருந்த பெண்கள் மாலை இழைப்பதில் மூழ்கியிருந்தனர். ஆனால் அம்பை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள் மயூரியை.
அவள் சற்று மயூரியின் அருகே நழுவி வந்தாள். எதுவும் சொல்லவில்லை. மயூரியின் விரல்கள் இதழ்களை எண்ணும் முறை கண்களில் ஒளியும் பயமும் கலந்த பார்வை எல்லாம் பார்த்தாள்.
திடீரென்று கேட்டாள்.
“கோவிலுக்கான மாலையா அது? அல்லது மனசுக்கான குறியா?”
மயூரி திடுக்கிட்டாள். கையில் இருந்த கடைசி இதழ் விழுந்தது. மயூரி சிரித்தாள்.
“இதழ் எண்ணுகின்ற பெண் காதலை எண்ணிக்கொண்டு தான் இருப்பாள். குவளை குறி பார்த்தால் கண்கள் சொல்வது வேறு கதையம்மா!” என்றாள்.
மயூரியின் முகம் சிவந்தது.
“நான் அப்படியொன்றும்…” இழுத்தவள், “சரி சரி…” என்று மயூரி கிசுகிசுத்தாள்.
அம்பை, “கடைசி இதழ் என்ன சொன்னது?” என்றாள்.
மயூரி, “மெதுவாக வருவார்” என்றாள்.
மயூரி அவள் கையை விட்டு நழுவிய மாலையை இறுக்கமாகப் பிடித்தாள். பெரியதாக மூச்சை விட்டாள்.
அம்பை, “அப்படியென்றால் மாலை தயாராக வை. காதலும் தாமதிக்காது.” என்றாள்.
மயூரியைப் பார்த்த அம்பை, “இப்போது விளையாடலாம்.” என்றாள்.
“குளம் அமைதியாக இருக்கிறது ஆனால் உள்ளே ஆழம் இருக்கிறது.” என்றாள் அம்பை.
“சில மனங்களும் அப்படிதான்.” என்று மயூரி மெதுவாகச் சொன்னாள். அவர்கள் இருவரும் ஒன்றாக நீரில் இறங்கினர்.
இந்த முறை விளையாட்டு இல்லை மிதமான நீச்சல். நீர் உடலைத் தாங்க, அவர்கள் மெதுவாக முன்னேறினர். அம்பை நீரில் மூழ்கி மீண்டும் மேலே வந்தாள். கையில் ஒரு நீலக் குவளை.
“நீ குறி பார்த்த பூ இதுதானே?” என்று சிரித்தாள்.
மயூரி சற்றே வெட்கப்பட்டாள். அதைப் பிடிக்க முயன்றாள்.
அம்பை மீண்டும் தண்ணீருக்குள் சென்று மயூரியைத் தவிர்த்தாள்.
“மயூரி நீ பிடித்தால் உன் எண்ணம் நிறைவேறும்.” என்றவுடன்,
மயூரி விரைந்து நீந்தினாள். அம்பையைப் பிடிக்கப் பாய்ந்தாள். இருவரும் மீன்களைப் போல் நீரை வெட்டி வெட்டிப் போகும் சப்தம் மட்டும் குளம் எங்கும் ஒலித்தது.
இருவரும் சிரித்துக் கொண்டே வட்டமிட்டு நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடைசியில் அம்பை மலரை மயூரியின் கையில் வைத்தாள்.
“சரி… இப்போது நீ ஜெயித்துவிட்டாய்.” என்றாள்.
ஆசையாகக் கைகளில் வாங்கிய மலரைத் தன் மார்பில் அணைத்தாள் மயூரி. மலர்கண்களை மூடினாள். இதயத்தில் இணந்தது மலரும், அவனும்.
நீரிலிருந்து மேலேறிய மயூரி, பாதத்தைத் தொட்ட நீரில் நனைந்த கூந்தலை கீழே பின்னோக்கிச் சொருகினாள்.
அம்பை இன்னும் படிக்கட்டின் கீழ் நீரைத் தெளித்துக் கொண்டே விளையாடிக்கொண்டிருந்தாள்.
மயூரியின் கையில் அந்த நீலக் குவளை ஆடியது. அதை அவள் மெதுவாக மார்பின் மீது தழுவிப் பிடித்தாள்.
“ஏன் மலரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறாய்?” என்று அம்பைக் கேட்டாள்.
அந்தத் தருணத்தில் மலரின் குளிர் இதழ்கள் தொடும் இடம் மட்டும் சூடாக இருந்தது மயூரிக்கு.
அலை வருடும்…
