அத்தியாயம் 8

பிரதிக்ஷாவின் குடும்பத்தினர் பிரதிக்ஷாவிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி அவர்களின் வீட்டிற்கு பயணமாக அவர்களைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் பிரதிக்ஷா.

“அதான் எல்லாரும் போயிட்டாங்களே இன்னும் யாருக்காக நடிச்சுகிட்டு இருக்க? ” என்ற குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் பிரதிக்ஷா.

அங்கு, மனிஷாவும் ரஞ்சித்தும் நின்று கொண்டிருந்தாள். மனிஷாவை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் பக்கத்தில் நின்ற ரஞ்சித்தை மட்டும் பார்த்தாள் பிரதிக்ஷா.

மெதுவாக ரஞ்சித் நடந்து வந்து, ” விதுரன் பெயரை தப்பா பயன்படுத்தி நாடகமாடி   என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட போல!” என்று மெதுவாக கூறினான்.

அவனின் பேச்சைக் கேட்டு அலட்சியமாக புன்னகைத்தாள் பிரதிக்ஷா.

பெண்ணவளின் புன்னகை ரஞ்சித்தின் மனதில் இருந்த கோபத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

“என்னடி அலட்சியமா பாக்குற?” என்று அவளின் கையை பிடித்து முறுகினான் ரஞ்சித். ” ரஞ்சித் முதல்ல கையை விடு, வலிக்குது!” என்று வலியால் முகத்தை சுணக்கினாள் பெண்ணவள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க மனிஷா இவர்களின் பக்கத்தில் வந்து  கையை மட்டும் புடிச்சு முறுக்குனா  பத்தாது காலையும் நசுக்கனும்!” என்று சொல்லி ஹை ஹீல்ஸ் அணிந்திருந்த அவளின் காலால் பிரதிக்ஷாவின் காலை அழுத்த ஆரம்பித்தாள்.

அவள் போட்டிருந்த ஹீல்ஸின் நுனி பிரதிக்ஷாவின் காலில் காயத்தை ஏற்படுத்த வலியில் அம்மா என்று கத்த ஆரம்பித்தாள்  பிரதிக்ஷா.

“சொல்லு, விதுரன் மேல சும்மா தானே  பழியை போட்ட!” என்று மனிஷா கேட்க “அம்மா வலிக்குது” என்று மட்டும் கூறினாள் பிரதிக்ஷா.

“வலிக்குதுல அப்ப சொல்லு! நீ உண்மைய சொன்னா நான் உன்னைய விட்ருவேன்” என்று மனிஷா சொல்ல  எதுவும் சொல்லாமல் அமைதியாக வலியில் கண்கலங்கினாள் பிரதிக்ஷா.

இருவரும் பிரதிக்ஷாவிடம் வம்பு இழுத்துக் கொண்டிருக்க வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்தார் சரஸ்வதி .

சரஸ்வதியை பார்க்கவும் ரஞ்சித்தும் மனிஷாவும் பிரதிக்ஷாவை விட்டு ஓரடி தள்ளி நின்றனர்.

பிரதிக்ஷாவின் கண்கள் கலங்கி இருக்க அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு,” புதுசா கல்யாணம் முடிஞ்ச பொண்ணு வாசல்ல இப்படி நிக்க கூடாது! உங்க வீட்ல உள்ளவங்க எல்லாரும் போயிட்டாங்கல்ல! அப்புறம் எதுக்கு வாசல்லயே நிக்கிற! வீட்டுக்குள்ள போ” என்று கடுமையாக பிரதிக்ஷாவை பார்த்து கூறினார்.

இதுதான் சமயம் என்று பிரதிக்ஷாவும் அங்கிருந்து ஓடிவிட்டாள். அவளுக்கு பின்னால் சரஸ்வதியும்  வீட்டிற்குள் நுழைய,”எங்க கிட்ட இருந்து இப்ப வேணும்னா அவளை நீங்க காப்பாத்தி இருக்கலாம்! ஆனால் எல்லா நேரமும் காப்பாத்தலான்னு மட்டும் நினைக்காதீங்க! அது உங்க கனவுல கூட நடக்காது”என்று கண்கள் சிவக்க கூறினான் ரஞ்சித்.

ரஞ்சித் சொன்னது சரஸ்வதியின் காதில் தெளிவாக விழுந்தாலும் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள்.

“விதுரன  பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணுனேனு  அவ வாயாலேயே சொல்ல வச்சு ரெக்கார்ட் பண்ணி ஆதாரம் ரெடி பண்ணலாம்னு பார்த்தா, உங்க அம்மா குறுக்க வந்து கெடுத்துட்டாங்க!” என்று கோபப்பட்டாள்  மனிஷா.

” விடு பாத்துக்கலாம்! நம்ம அவகிட்ட நேரடியா மோதறத விட்டுட்டு விதுரன வச்சு நம்ம செய்ய வேண்டியதை எல்லாம் செய்யலாம்” என வன்மமாக புன்னகைத்தான் ரஞ்சித்.

ரஞ்சித்தும், மனிஷாவும்  பிரதிக்ஷாவிடம் நடந்து கொண்டதை யாரிடமும் தெரிவிக்க மனதில்லாமல்  அவளை முதலில் அழைத்துச் சென்ற அறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து சில வினாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்த அவளின் கால் அதிகமாக வலித்தது.  பிரதிக்ஷா சேலையை சற்று தூக்கி தன்னுடைய காலை பார்க்க,

ஹீல்ஸின் நுனிப்பகுதி அவளுடைய காலில் அழுத்தமாக பதிந்து அங்கங்கு ரத்தம் வந்திருந்தது.

அவர்கள் இருவரிடம் பேசிவிட்டு சரஸ்வதி பிரதிக்ஷாவின் அறைக்குள் நுழைய டக்கென்று தன்னுடைய சேலையால் தன் காலை மறைத்தாள் பிரதிக்ஷா.

அவளின் நடவடிக்கைகளை அறைக்குள் நுழையும் போதே குறிப்பாக பார்த்த சரஸ்வதி கட்டிலில்  அமர்ந்திருந்த அவளின் கீழே குனிந்து லேசாக அவளின் காலை பார்த்துவிட்டு பிரதிக்ஷாவை பார்த்தார்.

“அது ஒன்னும் இல்ல தடுக்கி விழுந்துட்டேன்” என்று பிரதிக்ஷா சொல்ல, சரஸ்வதி எதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

‘என்ன வந்தாங்க, பார்த்தாங்க எதுவும் சொல்லாம அவங்க வெளியில போயிட்டாங்க, இந்த ரேணு வேற நான் உங்களை பார்த்திருக்கிறேன்னு சொல்லிட்டு போறா? என்ன நடக்குதுன்னு தெரியல! நம்ம தான் விதுரன பிளான் பண்ணி கல்யாணம் பண்னுனோம்னு’ நெனச்சால்  இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தா நம்ம தான் சிக்கி இருக்கிற மாதிரி இருக்கு’ என்று  யோசித்துக் கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.

வெளியே சென்ற சரஸ்வதி சில நிமிடத்திற்குள் கையில் முதலுதவி பெட்டியோடு அவளின் அறைக்குள் வந்திருந்தாள்.

அந்தப் பெட்டியை திறந்து அதில் இருந்த ஆயில் மண்டை எடுத்து பிரதிக்ஷாவின் காலில் போட்டு விட, ” அத்தை விடுங்க நான் போட்டுக்குறேன் நீங்க என் கால புடிச்சுகிட்டு!” என்று கூறி  தடுத்தாள்.

சரஸ்வதி எதுவும் சொல்லாமல் பிரதிக்ஷாவை பார்த்து முறைக்க, அவரின் பார்வையிலேயே தடுமாறி அமைதியாக இருந்தாள்  பெண்ணவள்.

ஆயில்மெண்டை பிரதிக்ஷாவின் கால்களில் நன்றாக அப்ளை செய்துவிட்டு, “மருந்து போட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வலி சரியாகும்.ஒரு வேளை வலி 

குறையலைனால் சொல்லு ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோம்!” என்று கூறினார் சரஸ்வதி.

“சரிங்க அத்தை “என்று  பிரதிக்ஷா சொல்ல எதுவும் சொல்லாமல் தான் கொண்டு வந்த முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு, ” உனக்கு ஏதாவதுனா அம்பிகா கிட்ட கேளு, உனக்கு தேவையானதை அவ செய்வா!” என்று கூறிவிட்டு பிரதிக்ஷாவின் அறையை விட்டு வெளியேற,

“ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா அத்தை?” என்று கேட்டாள் பிரதிக்ஷா.

சரஸ்வதி திரும்பி பார்த்து “என்ன கேட்க போற!”என்று கேட்க,

“அது ஒன்னும் இல்ல, விதுரனுக்கும் எனக்கும் எந்த சூழ்நிலையில கல்யாணம் முடிஞ்சுச்சுன்னு தெரிஞ்சிருந்தும் அம்பிகா அத்தையோ ரேணுவோ, ஏன் நீங்க கூட அதை பத்தி பெருசாவே எடுக்கலையே, ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க,

சிரித்துக் கொண்டே, “தெரிஞ்சுக்கலாம் ஆனால் அதுக்கு முன்னாடி ஏன் விதுரன் மேலே இப்படி ஒரு பழியை போட்டு கல்யாணம் பண்னுனேன்னு சொல்லு! அதுக்கப்புறம்  நாங்க ஏன் எதுவும் பெருசு பண்ணாம இருக்கிறோம்னு  பதில் சொல்றேன்!” என்று சொல்ல அப்படியே ஆடிப் போனாள்  பிரதிக்ஷா.

 

‘திருமணம் முடிந்ததிலிருந்து நம்ம மேல இவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு’ என்று சரஸ்வதியை பற்றி யோசித்துக் கொண்டிருக்க அவர், பிரதிக்ஷா பொய் சொல்லி தான் திருமணம் செய்திருக்கிறாள் என்பதை அழுத்தமாக சரஸ்வதி  பதிவு செய்ய அப்படியே அதிர்ந்து நின்றாள்.

 

“அது வந்து…” என்று பிரதிக்ஷா தடுமாற, பிரதிக்ஷாவை பார்த்து சிரித்தார் சரஸ்வதி.

“இப்போதைக்கு உன்கிட்ட எதுவும் சொல்ல நான் விரும்பல, நீ நெனச்ச மாதிரி எல்லாம் உன்னோட வாழ்க்கை சுமூகமா இருக்காது.அது உனக்கும் தெரியும்! வாசல்ல நடந்தது சின்ன விஷயம் தான். இனிமேல்தான்  பிரச்சனைகளையும் கஷ்டத்தையும் நீ  தாங்க வேண்டியது வரும். பயமா இருந்தால் இப்பவே  வீட்டு வாசல் கதவு 

திறந்து இருக்கு. போய்கிட்டே இரு இல்ல எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி நீ நெனச்சத சாதித்து காட்டுவேனா  நீ இங்கேயே இருக்கலாம்!” என்று கூறினார் சரஸ்வதி.

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பரவால்ல கஷ்டம் வரும்னு தெரிஞ்சு தான்  நான் இந்தத் திட்டத்தை போட்டேன்! நான் எடுத்த எந்த விஷயத்திலும் இதுவரை பின்வாங்கி போனது கிடையாது! கண்டிப்பா நான் நெனச்ச தான் நடத்தி காட்டுவேன்! என்று ஆணித்தனமாக  பதில் கூறினாள் பிரதிக்ஷா.

“அதையும் பார்க்கலாம்! அப்போ முதல் இரவுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றேன்!” என்று சொல்லிவிட்டு சரஸ்வதி வெளியில் செல்ல அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டாள் பிரதிக்ஷா.

சரஸ்வதி பேசி விட்டு சென்ற பின் முழுவதும் குழம்பி விட்டாள் பிரதிக்ஷா. ‘இங்கே என்ன நடக்குதுன்னு தெரியல  நான் நெனச்சது தான் இங்கே நடந்திருக்கா இல்ல யாரோ விரிச்ச வலையில நான் சிக்கிட்டேனா? முதல் இரவுக்கு தயாரா இருன்னு சாதாரணமா சொல்லிட்டு போறாங்க’ என்று அவளின் மனம் யோசிக்க தொடங்கியது!

வக்கீல் ஆயிற்றே! அவளின் மூளை சும்மா இருக்குமா? தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆராய தொடங்கினாள்.

“அண்ணி உள்ள வரலாமா?” என்று அவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக சத்தம் கேட்டது, யார் என்று பார்க்க ரேணு தான் கையில் ஜூஸ்ஸோடு நின்று கொண்டிருந்தாள்.

“அண்ணி அம்மா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க, இத குடிங்க!” என்று சொல்ல பிரதிக்ஷாவும் எதுவும் சொல்லாமல் அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

பிரதிக்ஷா குடிப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேணு, ” நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் நீ உண்மைய சொல்லணும்!” என்று பிரதிக்ஷா கூறினாள். “கேளுங்க அண்ணி, உங்கள  எப்படி தெரியும்னு மட்டும் கேக்காதீங்க அந்த கேள்விக்கு இப்ப நான் பதில் சொல்ல மாட்டேன் வேற எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்றேன்!” என்று  கண்ணடித்தாள் ரேணு.

பிரதிக்ஷா அந்த கேள்வியை தான் கேட்க நினைத்திருக்க ரேணு சொல்லவும், அதைக் கேட்காது தன் மனதில் எழும்பிய வேறொரு சந்தேகத்தை கேட்டாள்.

“இல்ல நான் வந்ததிலிருந்து பாக்குறேன். உங்க அம்மாவும் விதுரனும் எதுவும் பேசவே இல்ல! உங்க அம்மாவ விட சரஸ்வதி அத்தை எது சொன்னாலும் விதுரன் கேட்கிறாரே, பெத்த அம்மாவை விட, வளர்ப்பு அம்மா பெருசா இருக்க முடியுமா?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்  பிரதிக்ஷா.

“அண்ணி அது வந்து…” என்று ரேணு சொல்ல வர, ” ரேணு நீ இங்க இருந்து போ உன் அண்ணி கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்!” என்ற குரல் கேட்க அதிர்ச்சியில் இருவரும் பார்க்க அங்கே சரஸ்வதி நின்று கொண்டிருந்தார்.

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
979 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page